திருப்பூர், அக். 27 மழையிலும் கொள்கை உறுதியோடு திருப்பூரில் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பகுத்தறிவுப் பகலவன்,உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 139ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட,மாநகர திராவிடர் கழகம் சார்பில் 17.9.2017 அன்று மாலை 6 மணியளவில் திருப்பூர் வெள்ளியங்காடு, நான்கு சாலை பகுதியில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் யாழ்.ஆறுச்சாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர கழக தலைவர் இல.பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
இரா.சுப்பையன்( திருப்பூர் 50ஆவது வட்ட மதிமுக செயலாளர்) அ.செந்தில்குமார் (50ஆவது வட்ட கிளை செயலாளர் சிபிஅய்), கோ.பொம்முதுரை (தெற்கு மாநகர குழு உறுப்பினர் சிபிஅய்(எம்), கே.சிவாச்சல மூர்த்தி (திராவிட இயக்கத் தமிழர் பேரவை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரா.ஆறுமுகம் (மாவட்ட தலைவர்), மு.நந்த கோபால் (50ஆவது வட்ட செயலாளர், திமுக), தம்பி சுப்பிரமணி (முன்னாள் 50ஆவது வட்ட செயலாளர், அஇஅதிமுக) வழக்குரைஞர் எ.ந .கந்தசாமி (மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர், மதிமுக), நா.சேகர் (மாவட்ட குழு உறுப்பினர், சிபிஅய்), சு.சுந்தரம் (மாவட்ட குழு உறுப்பினர், சிபிஅய் (எம்), மு.கண்ணன் (மாவட்ட செயலாளர், பகுஜன் சமாஜ் கட்சி), துரை. தண்டபாணி (மாநகர செயலாளர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை), அனுப்பட்டி. பிரகாஷ் (மாவட்ட செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), அங்ககுமார் (பெரியார் தொண்டர்) ஆகியோர் உரை யாற்றினார்கள். ச.மணிகண்டன் (கோவை மண்டல கழக இளைஞரணி செயலாளர்) இணைப்புரை வழங்கினார்.
திருப்பூர் விநாயகா குழுமத்தைச் சார்ந்த தொழில் அதிபர் நா.செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
இரா.பெரியார் செல்வன் உரை:
நிகழ்வில் சிறப்புரையாளராகப் பங்கேற்ற கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வம் அவர்கள் உரை யாற்றியதாவது: இங்கே உரையாற்றிய அனைத்து அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் "தமிழ்நாடு தந்தை பெரியாருக்கு பட்டா போடப்பட்ட மண்" என்பதை பதிவு செய்துவிட்டு அமர்ந்திருக்கிறார்கள்.
பெரியார் பிறவாமலிருந்தால் என்ன நடந்திருக்கும்? நாம் தெருவில் நடக்க முடியுமா? தோளில் துண்டு தான் போடமுடியுமா? பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்,
"ஒரு சமூகத்தை புரட்டிப் போட்ட புரட்சியாளர் பெரியார்". எந்தத் தலைவருக்கும் இல்லாத சிறப்பு பெரியாருக்கு உண்டு! ஒரு கொள்கையை உருவாக்கி, அதற்கு இயக்கத்தை ஏற்படுத்தி, தலைவர் பொறுப்பேற்று, பிரச்சாரம் செய்து தான் ஏற்படுத்திய கொள்கை தன் வாழ்நாளிலேயே வெற்றி பெறுவதை பார்த்த தலைவர் உலகத்திலேயே பெரியார் ஒருவர் தான்! வர்ண பேதத்தால் பார்ப்பனர்கள் மத்தியில் காந்திக்கும், வ.உ.சி.க்கும் ஏற்பட்டிருந்த இழிவையே ஒழித்து அவர்களுக்கு மனிதன் என்ற உரிமையைப் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பெற்றுத் தந்தது!
தற்போது மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு சாதித்தது என்ன? எந்தத் துறையில் முன்னேற்றம் பட்டியல் போட முடியுமா? வளர்ச்சிக்கு முன் உதாரணமாக சொல்லப் படுகின்ற பிஜேபி ஆளும் குஜராத்தில் 1500க்கும் மேற் பட்ட கிராமங்களில் சாலை வசதி,மின்சார வசதி, கழிப்பறைகள் இல்லாததோடு குடிசை வீடுகளே அதிகம் என்ற நிலையே உள்ளது.பொய்யை உண்மை என்று சொல்லி ஓட்டைப் பெற்றார்கள்! இந்திய வரலாற்றிலேயே விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொண்டி ருக்கின்ற ஆட்சி மோடி ஆட்சி!
அனிதாவின் சுடர் பிஜேபியின் அடிப்பீடத்தை ஆட்டியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாண வர்கள் மருத்துவர்களாக வரவே கூடாது என்பதற்குத் தானே நீட் தேர்வு! இந்த அநீதியை தமிழகத்திற்குள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதித்தாரா? நுழையவிட்டாரா? தமிழ்நாட்டை ஆளும் தற்போதைய அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களின் அடிப்படையில் மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? எந்த மாநிலம் நுழைவுத் தேர்விலிருந்து விலக்குக் கேட்கிறதோ அம்மாநிலத்திற்கு விலக்குக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவிக்கிறதே, அப்படியிருந்தும் "நீட்" தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசு முன் வராதது ஏன்? அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது மத்திய பிஜேபி அரசும் , தமிழ்நாடு அரசும் தான் !தற்போது பேரபாயமாக "நவோதயா" பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் வந்திருக்கிறது.
ஆகவே வெகுமக்களே நாங்கள் உங்களை பணிவோடு கேட்டுக் கொள்வது என்னவென்றால் நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும்,எந்த அமைப்பில் வேண்டு மானலும் இருங்கள்! ஆனால் இது பெரியார் பிறந்த மண்! பெரியார் பண்படுத்திய மண்! சமூக நீதிக்கு வித்திட்ட மண்! இங்கு மதவாத தன்மைக்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது! நம்மிடையே வண்ணங்கள் வேறுபட்டாலும், எண்ணங்கள் ஒன்றுபட்டுள்ளது! பசுவதை என்ற பெயரில் சிறுபான்மை மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒடுக்க பிஜபி அரசு சதி வலைகளைப் பின்னிக்கொண்டிருக்கிறது.
எனவே இதையெல்லாம் முறியடித்து இம்மண்ணின் மகத்துவத்தை பாதுகாக்க இளைஞர்களே, மாணவர்களே நமக்கு ஒரே வழிகாட்டி, ஒரே தலைவர்,நாம் கையிலேந்தி புறப்படவேண்டிய ஒரே அறிவுச்சுடர் தந்தை பெரியார்! தந்தை பெரியார் அவர்கள் தன் இறுதிக் காலத்தில் நீரிழிவு நோயினால் அவதியுற்ற போதிலும் தமிழர்களே உங்களை சூத்திரர்களாக, பஞ்சமர்களாக விட்டுவிட்டு சாகமாட்டேன் என்று இந்த மக்களின் மீது சுமத்தப் பட்டுள்ள இழிவுத் தன்மைகளை ஒழிக்கப் போராடினார். எனவே தந்தை பெரியாரின் லட்சியப்பணி தொடர்ந்திட இந்தத் தமிழ்ச் சமுதாயம் புறப்படவேண்டும்! ஆர்ப் பரிக்க வேண்டும்! பார்ப்பன கூடாரங்கள் தவிடு பொடி யாக்கப்படவேண்டும்! இளைஞர்களும், மாணவர்களும் மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும், சமத்துவத்தை யும், மனிதநேயத்தையும் உருவாக்கவேண்டும்! மதவெறி மாய்க்கப்படவேண்டும்! மனிதநேயம் பாதுகாக்கப் படவேண்டும்! இதையே தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்த நாளில் அனைவரும் சூளுரையாக ஏற்க வேண்டும்! கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன் என்று பெரியார் செல்வன் உரையாற்றினார்.
பறை இசை நிகழ்வு
கூட்டத்தின் துவக்கத்தில் பெரியார் இயக்கக் கூட்டமைப்பைச் சார்ந்த தோழர்கள் அரங்கேற்றிக் காட்டிய "பறை இசை நிகழ்ச்சி" இனமான முழக்கமாக அமைந்தது.
பல வண்ணம்! ஒரே எண்ணம்
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது உரையில் "தமிழ்நாட்டில் காவிக் கூட்டத்திற்கு இட மில்லை" என்று முழங்கிய வீராவேச முழக்கம் உறுதி யாக டில்லியை எட்டியிருக்கும் என்பதில் அய்ய மில்லை! திருப்பூரில் நடைபெற்ற கூட்டங்களிலேயே பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் என்ற பெருமையை தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் பெறுகிறது.
திருப்பூர் மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு பணியாற்றுவது போல் தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டப் பணிகள் நடைபெறுவதற்கு பலவகையிலும் உதவிகரமாக இருந்தார்கள்.
கலந்து கொண்டோர்
கோட்டை முபாரக் (மாவட்ட பொதுச் செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்),வே.இளங்கோவன் (மேற்கு மண்டல செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) துரைவளவன் (மாநில துணை செயலாளர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை), பா.சிவராஜ் (த.மா.கா), சி.என்.லோக நாதன் (எம்.ஜி.ஆர் பேரவை), ஆட்டோ. தங்கவேல் (திருப்பூர் மாநகர துணை தலைவர்), ப.ராமேஸ்வரன் (மாநகர திராவிடர் கழகம்), குளத்துப்பாளையம் ப. அண்ணாதுரை (மாநகர கழக இளைஞரணி அமைப்பாளர்), கரு.மைனர் (பெரியார் புத்தக நிலையம்), "ஒரத்தநாடு" ராசப்பன், ஈஸ்வரி ஆறுச்சாமி (கழக மகளிரணி), கமலவேணி வேலுச்சாமி (கழக மகளிரணி), நா.வேலுச்சாமி (தி.தொ.ச), பா.சதீஸ்குமார் (கழக இளை ஞரணி), சு.மகேந்திரன் (கழக இளைஞரணி), வேலு.வீரக்குமார் (கழக மாணவரணி), வேலு.தமிழ்ச்செல்வன் (கழக மாணவரணி), "தையற்கலைஞர்" வெள்ளியங்காடு. ராமகிருஷ்ணன் மற்றும் திமுக, அஇஅதிமுக, மதிமுக, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, சிபிஅய், சிபிஅய் (எம்) ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், வெகு மக்கள் பலரும் மழையினால் ஏற்பட்ட இடையூறை பெரிதெனக் கருதாமல் கடைகளில் நின்றபடியே கழகச் சொற்பொழிவாளரின் கொள்கைச் சொற்பெருக்கை கூர்ந்து கவனித்தனர்.
பொதுக்கூட்ட முடிவில் திருப்பூர் மாநகர கழக செயலாளர் பா.மா.கருணாகரன் நன்றி கூறினார்.a
No comments:
Post a Comment