Saturday, October 21, 2017

கிருஷ்ணபகவானின் தீபாவளி ‘அருள்பாலிப்பு’ இதுதானா? காற்று மாசு-தீ விபத்துகள்-நீரில் மூழ்கிச் சாவு



சென்னை, அக்.20 இந்து மதப் பண்டிகையான தீபாவளியன்று பட்டாசு வெடிப்பால் தீ விபத்துகள், வேறு எப்பொழுதும் இல்லாத அளவுக்குக் காற்றில் மாசு அளவு அதிகம், ‘புனித’ நீராடச் சென்றவர்கள் சாவு என்று இழப்புகளும், தீங்கு களும் போட்டிப் போட்டுள்ளன. தீமைகளை அழிப் பதுதான் தீபாவளியின் தத்துவம் என்போர், தீபாவளியால் ஏற்பட்ட இந்தக் கேடுகளுக்கு, இழப்புகளுக்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறார்கள்?
பட்டாசு வெடித்து 302 தீ விபத்துகள்,
329 பேர் காயம்
தமிழகம் முழுவதும் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்து 302 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. 329 பேர் தீக்காயம் அடைந்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் கூறியதாவது: தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்ததில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 302 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் 164 தீ விபத்துகள் ராக்கெட் பட்டாசு களால் ஏற்பட்டவை. அதிகபட்சமாக சென்னையில் 28 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன.
காஞ்சிபுரம் -2, திருவள்ளூர் -1, திருவண்ணாமலை- 2, நாகப்பட்டினம் -8, புதுக்கோட்டை -8, கடலூர்- 12, கோவை-4, திருப்பூர்- 4, ஈரோடு- 5, சேலம்- 1, திண்டுக்கல்- 4, நாமக்கல் -2, மதுரை- 18, தேனி -2, ராமநாதபுரம் -4, சிவகங்கை -8, விருதுநகர் -10, தூத்துக்குடி-1, திருநெல்வேலி -17, கன்னியா குமரி -6, கரூர்- 10, தஞ்சாவூர்- 12, திருவாரூர் -21 இடங்களில் என பட்டாசுகளால் தீ விபத்துகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு தீபாவளியின்போது 836 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டிருந்தது.
தீ விபத்துகள் அதிகம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும் ராக்கெட் பட்டாசுகளை திறந்த வெளிகளில் மட்டுமே வைத்து வெடிக்க வேண்டும். இதைப் பலர் பின்பற்றுவதில்லை என்றார்.|
சிகிச்சை அளிக்க சிறப்பு வசதிகள்


தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்கும்போது தீக் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சைப் பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழு வதும் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் அடைந்ததாக 329 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள் ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 26 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் 17 பேர் லேசான காயத்துடன் வந்து சிகிச்சை பெற்று திரும்பிச் சென்றனர். 9 பேர் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் வசந்தாமணி கூறும்போது, பட்டாசு வெடித்து தீக்காயம் அடைந்து 26 பேர் சிகிச்சை பெற்றனர். இதில் 9 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். 2 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 42 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர் என்றார்.
சென்னையில் 80 டன் பட்டாசு கழிவுகள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உருவான 80 டன் பட்டாசுக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகம் நேற்று அகற்றியது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5,300 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணியில் 19,000 துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 80 டன் பட்டாசுக் கழிவுகள் நேற்று அகற்றப்பட்டன. அவை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தலின்படி, கும்மிடி பூண்டி அருகில் உள்ள அபாயகரமான கழிவுகளை சேகரிக் கும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
23 விமானங்கள் தாமதம்
தீபாவளி பட்டாசால் சென்னை விமான நிலையத்தைச் சுற்றி கடும் புகைமூட்டம் காணப்பட்டது. இதனால், 23 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகத்தில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்து இருந்தனர்.
எனினும்  புதன் நள்ளிரவுவரை பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதேபோல் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள ஆலந்தூர், பொழிச்சலூர், பல்லாவரம், பம்மல், மணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு வரை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் சென்னை விமான நிலையத்தைச் சுற்றி கடும் புகை மூட்டம் உருவானது. விமானங்களின் ஓடு பாதை யிலும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து இரவு 10.30 மணியளவில் அய்தராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தை தரை இறக்க முடியாத சூழ்நிலை உருவானது.
நீண்ட நேரத்துக்கு பின்னர் அந்த விமானம் பெங்களூ ருவுக்கு திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து புகை மூட்ட மாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய், ஹாங்காங், தோகா, கத்தார், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு புறப்படும் விமானங்களும் மற்றும் டில்லி, மும்பை, கொல்கத்தாவுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதிகாலை 2.30 மணி வரை புகைமூட்டம் இருந்தது. பின்னரே நிலைமை சீரானது. இதைத் தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்குப் பின்னர் ஒவ்வொரு விமானமாக புறப்பட்டுச் சென்றன. புகைமூட்டத்தால் 23 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
காற்று மாசு 8 மடங்கு அதிகம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் புகை காற்று மண்டலத்தின் இயல்புநிலையை தாக்குகிறது. இதனால் வளிமண்டலத்தில் தாக்கம் ஏற்பட்டு, பொதுமக்களின் உடல்நலத்துக்கும் தீங்கு ஏற்படுகிறது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன், 125 டெசி பெல்லுக்கு அதிகமான ஒலி உண்டாக்கும் பட்டாசுகளை வெடிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மாசுக் கட்டுப்பாடு வாரியங்களும் தீபாவளி பண்டிகை காலங்களில் ஏற்படும் காற்று மாசு அளவை கண்காணிக்க மத்திய மாசு கட்டுப் பாடு வாரியத்தின் வழிகாட்டுதலின்படியும் மற்றும் ஒலி மாசு அளவை கண்காணிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத் தலின்படியும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் மூலமாக தீபாவளிக்கு முந்தைய வாரம் மற்றும் தீபாவளி நாளன்று 24 மணி நேர காற்று தர ஆய்வும், 6 மணி நேர ஒலி அளவு சோதனையும் செய்து பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தாக்கத்தை கண்டறிந்து வருகிறது.
இதன்படி 12- ஆம் தேதி மற்றும் 18- ஆம்  தேதிகளில் (தீபாவளி) ஆய்வுகள் செய்யப்பட்டு, வளிமண்டலத்தில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் காற்று மாசு காரணிகளான மிதக்கும் துகள்கள், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றின் அளவு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளியின்போது அதிக அளவிலேயே காணப்பட்டது.
இதற்குக் காரணம் தீபாவளி நாளன்று மழை, வெயில், காற்று இல்லாமல் இதமான காலநிலை நிலவியதால் காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் பரவாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டன. இதனால் அதிக அளவு காற்றில் மாசு கண்டறியப்பட்டது.
குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம் ஆகிய குடியிருப்பு பகுதிகள், சவுகார் பேட்டை வர்த்தகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள், தியாக ராயர் நகர் வர்த்தக பகுதிகளில் 18 ஆம் தேதி, தீபாவளிக்கு முந்தைய வாரமான 12- ஆம் தேதிகளில் காற்று மாசு ஆய்வு செய்யப்பட்டது. இதில் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவான 80 மைக்ரோ கிராமுக்கு உட்பட்டதாகவே 2 நாள்களும் இருந்தன.
ஆனால், ஆய்வு செய்யப்பட்ட 5 இடங்களிலும் மிதக் கும் துகள்கள் 100 மைக்ரோ கிராம் அளவை விட தீபாவளி அன்று அதிகமாகக் காணப்பட்டது. குறிப்பாக சவுகார் பேட்டையில் 8 மடங்கு மாசு அதிகம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆற்றில் மூழ்கி அறுவர் சாவு
திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரை சேர்ந்தவர்கள் ஆண்ட்ரூஸ் (வயது 29), இஸ்மாயில் (19). இவர்களது நண்பர்கள் சதாம் உசேன் (23), சிவகுரு (24) உள்பட 12 பேர் தீபாவளியை முன்னிட்டு திருச்சி அருகே திருவளர்ச் சோலை பொன்னுரங்கபுரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.
மதியம் 2 மணியளவில் 4 பேர் அங்கு குளிக்க ஆற்றில் இறங்கினர். மற்ற நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் செல்லவில்லை.
அந்தப் பகுதி மணல் குவாரி என்பதால் சில இடங்களில் புதைகுழிகள் இருந்துள்ளன. இதனை அறியாத அவர்கள் ஆற்றில் இறங்கிய போது சுமார் 20 அடி ஆழத்தில் மூழ்கத் தொடங்கினர். முதலில் ஆண்ட்ரூஸ், இஸ்மாயில், சிவகுரு ஆகியோர் தண்ணீருக்குள் மூழ்கியபடி சுழலில் சிக்கி நீந்த முடியாமல் மூச்சுத் திணறினர்.
மேலும் தங்களை காப்பாற்றும்படி 3 பேரும் அபய குரல் எழுப்பினர். அருகில் இருந்த சதாம் உசேன் அவர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் அந்த சுழலில் சிக்கிக்கொண்டார். சிறிது நேரத்தில் 4 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
நண்பர்கள் 4 பேரும் நீண்ட நேரமாகியும் கரைக்கு வராததால் சந்தேகம் அடைந்த மற்ற நண்பர்கள் குளிக்க சென்ற இடத்தில் தேடினர். ஆனால் 4 பேரையும் காணாததால் திடுக்கிட்டனர். இந்த சம்பவம் மதியம் 3.30 மணிக்கு நடந்துள்ளது.
அதன்பிறகு இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ள கிராமத்தினருக்கு தகவல் தெரிந்தது. கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். சிறீரங்கம் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மூழ்கி 4 பேரின் உடல்களையும் தேடினர்.
இரவு 7 மணியளவில் ஆண்ட்ரூஸ் மற்றும் இஸ்மாயில் ஆகியோரது உடல்கள் மட்டும் மீட்கப்பட்டன. போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் அவர்கள் மூழ்கிய இடத்தில் பாதுகாப்பு வசதியுடன் தீயணைப்பு வீரர்கள் உடல்களைத் தேடினர்.
இதில் நேற்று காலை 7 மணிக்கு சிவகுரு உடல் மீட்கப்பட்டது. சதாம் உசேன் உடல் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிறீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பலியானவர்கள் உள்பட நண்பர்கள் அனைவரும் ஒர்க் ஷாப், பிளம்பிங் போன்ற தொழில்கள் செய்து வந்தனர்.
ஆற்றில் குளிக்கச் சென்ற நண்பர்கள் 12 பேரும் எப்போதும் ஒன்றாக இருப்பது வழக்கம். எனவே தீபாவளியை முன்னிட்டு அனைவரும் ஒரே வண்ணத்தில் உடையணிந்து காவிரி ஆற்றுக்குச் சென்றுள்ளனர். அங்கு ஆற்றில் இறங்கி குளித்தபோது 4 பேர் பலியானது அவர்களது குடும்பத்தினரை மட்டுமின்றி திருச்சியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்...
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்டது கொடையூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). இவர் காலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து குழந்தைகளுடன் கொண்டாடினார்.
தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மகள் கார்த்திகா (9), மகன் கதிரேசன் (7) ஆகியோருடன் குளிப்பதற்காக சென்றார். கிராமத்தையொட்டிய காவிரியின் கிளையான அமராவதி ஆற்றின் படித்துறையில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார்.
முதலில் மகன் கதிரேசன் ஆற்றில் இறங்கினான். அப்போது ஆற்றின் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. இதில் கதிரேசன் இழுத்துச் செல்லப்பட்டான். அவனது அலறல் சத்தம் கேட்டு மகனை மீட்க ஆற்றில் இறங்கிய தந்தை சக்திவேல் புதை மணலில் சிக்கிக் கொண்டார்.
இதைப்பார்த்த கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சக்திவேலின் மகள் கார்த்திகா செய்வதறியாமல் தவித்தார். தந்தையும், தம்பியும் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதை கண்டு உரக்க கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் அங்கு ஓடிவந்தனர்.
அவர்கள் ஆற்றில் குதித்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சக்திவேல், கதிரேசன் இருவரையும் பிணமாக மீட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த அரவக்குறிச்சி காவல்துறையிரன் 2 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
தீபாவளி பண்டிகையன்று தந்தை, மகன் ஆற்றில் மூழ்கி பலியானது அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒடிசா: பட்டாசு கடையில் தீ விபத்து: ஒருவர் பலி, சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பொருட்சேதம்    

ஒடிசா மாநிலத்தின் ரூர்கெலா பகுதியில் உள்ள சந்தையில் செயல்பட்டுவந்த பட்டாசு கடையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் பலியானார்.

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள பட்டாசு கடையில் தீபாவளியை ஒட்டி இரவில் விற்பனை நடந்து முடிந்தது. இதனையடுத்து,  எஞ்சிய பட்டாசுகள் கடைகளில் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு கடையில் நேற்று அதிகாலை திடீர் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. இதனால், ஏற்பட்ட தீ விபத்தில் வெடித்துச் சிதறிய பட்டாசுகள் அடுத்தடுத்த கடைகளுக்கும் தீயைப் பரவச் செய்தன. தீவிபத்தில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தீவிபத்தில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...