அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இந்திய பொறியாளர் கவுன்சில் இணைந்து மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான விசுவகர்மா விருது வழங்கும் விழா டில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மனிதவளத் துறை இணை அமைச்சர் சத்யபால் சிங், ‘‘இந்தியாவில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் புராணங்களைப்பற்றியும், அதிலுள்ள பல அறிவியல் நுட்பங்கள் பற்றியும் கற்பிக்கவேண்டும்; புராணத்தில் கூறப்படும் தொழில் நுட்பங்களுக்கு ஈடாக எந்த வெளிநாட்டுக் கண்டுபிடிப்பும் இல்லை. ராமாயணத்தில் புஷ்பக விமானத்தைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புஷ்பக விமானத்தைக் கண்டுபிடித்து அதில் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளனர். இதை குறிப்பாகக் கொண்டுதான் மகாராட்டிராவில் ஷிவாகர் தால்படே என்பவர் விமானத்தைத் தயாரித்தார். ரைட் சகோ தரர்கள் விமானத்தைக் கண்டறியும் முன்பே தால்படே விமானத்தைக் கண்டுபிடித்து அதை மும்பை கடற்கரைப் பகுதியில் பறக்கவும் விட்டார். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் ஷிவாகர் தால்படே பற்றியும், அவரது விமான தொழில்நுட்பம் பற்றியும் சொல்லிக் கொடுப்பதில்லை. அதற்கு மாறாக ரைட் சகோதரர்கள் பற்றியே சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம், மகாபாரதத்தில் வரும் ஆயுதங்கள் குறித்து நாம் படிக்கவேண்டும். அதுகுறித்த ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். இந்திய அய்.அய்.டி.க்களில் இது குறித்து தனிப்பிரிவு தொடங்கி, அதன்மூலம் பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.
தற்போது இந்தியா ஆராய்ச்சிகளிலும், புதுக்
கண்டு பிடிப்புகளிலும் பின் தங்கி உள்ளது. நமது மூதாதையர் பற்றியும்,
அவர்களுடைய கண்டுபிடிப்புகள்பற்றியும் பாடத் திட்டத்தில் சேர்ப்பதன்மூலம்
மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு மேம்படும்‘’ எனக் கூறி உள்ளார்.
சமீபத்தில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட
அமைச்சரவையில் சேர்ந்த சத்யபால் சிங், வேதியல் துறையில் பட்டதாரியாவார்.
இவர் அய்.பி.எஸ். முடித்து மும்பை நகர காவல்துறை ஆணையராக சில காலம்
பதவியில் இருந்தார். இவர் மும்பை நகர காவல்துறை ஆணையராக இருந்தபோது,
விநாயகர் சதுர்த்தியின் போது 10 நாள்கள் பிள்ளையார் சிலைகளை வைக்கும்
மண்டல்களுக்கு சிறப்பு காவல்பிரிவை உருவாக்கி பாதுகாப்பு வழங்கியவர் ஆவார்.
பாஜக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததில்
இருந்தே அதன் அனைத்து மட்டத் தலைவர்களும் அறிவியலுக்கு ஒவ்வாத குப்பைகளை
வாரித் தலையில் கொட்டிக்கொண்டு உளறி வருகின்றனர். மும்பையில் அம்பானி
மருத்துவமனையில் நடந்த ஒரு விழாவில் பேசிய மோடி, ‘‘பிள்ளையாருக்கு நடந்த
உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைதான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி’’
என்று பேசியிருந்தார். அதேபோல் ராஜ்நாத்சிங்கும் ராமாயணத்தில் வரும் புஷ்பக
விமானம் குறித்து ஆய்வு செய்யவேண்டும் என்று பேசியிருந்தார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜவர்தன்
ராத்தோட், அரியானா மாநிலம் பானிபட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்
போது, ‘‘பீமன் தான் மிகச்சிறந்த வீரன், விளையாட்டு வீரர்கள் அவரது வாழ்க்கை
வரலாற்றைப் படிக்கவேண்டும்‘’ என்று கூறியிருந்தார். மேலும் விளையாட்டு
வீரர்கள் ராமரின் பெயரைத் தொடர்ந்து உச்சரிக்கவேண்டும் என்றும், ஆழ்மனதில்
ராம நாமத்தை ஜெபித்தால் உள்ளத்தில் உறுதி பெற்று விளையாட்டில்
வெற்றிபெறுவது உறுதி’’ என்றும் கூறியிருந்தார்.
இராமன் எத்தகைய வீரன் என்று தெரியாதா? மரத்தின் பின்னால் மறைந்திருந்துதானே வாலிமீது அம்பெய்தினான்.
மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ-எச்) கூறுகிறது. ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் வலியுறுத்துகிறது.
மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ-எச்) கூறுகிறது. ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் வலியுறுத்துகிறது.
இந்த நிலையில், அரசமைப்புச்
சட்டத்தின்மீது சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் சட்டத்திற்குப்
புறம்பாக, மூடநம்பிக்கையின் மொத்த குத்தகைத்தாரர்களாகப் பேசுவது -
செயல்படுவது பச்சையான சட்ட விரோதமாகும். பூமியைப் பாயாக சுருட்டிக்கொண்டு
இரண்யாட்சதன் கடலில் விழுந்தான் என்கிறது புராணம். இதனை
ஏற்றுக்கொள்கிறார்களா பி.ஜே.பி. அமைச்சர்கள்?
மூடநம்பிக்கையில் இலயித்துப்போனவர்கள் ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்தால், நாடு எப்படி முன்னேறும் - வளர்ச்சிப் பாதையில் செல்லும்? வெட்கக்கேடு!
மூடநம்பிக்கையில் இலயித்துப்போனவர்கள் ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்தால், நாடு எப்படி முன்னேறும் - வளர்ச்சிப் பாதையில் செல்லும்? வெட்கக்கேடு!
No comments:
Post a Comment