Saturday, August 12, 2017

இரவில் பெண்கள் நடக்கக் கூடாதா?

காரில் சென்று கொண்டிருந்த அரியானா மாநிலத் தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு, பாஜக பிரமுகரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், இரவு நேரங்களில் இந்தியாவில் பெண்களுக்கு பாது காப்பு இருக்கிறதா என்பது குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.

அரியானா மாநில அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளான பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா என்பவரின் மகனான விகாஷ் பராலா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டி யளித்த மாநில பாஜக பிரமுகரான ராம்வீர் பாக்டி, `பாதிக்கப்பட்டதாக நாடகமாடும்  அந்தப் பெண் ஏன் இரவு 12 மணிக்கு மேல் வெளியில் வர வேண்டும்? தனது மகள் இரவு வீட்டிற்கு வந்துவிட்டாரா அல்லது வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை அல்லவா' என்று வினா தொடுத்துள்ளார்.
பாக்டியின் இந்த கருத்துக்கு பெண்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரவு நேரத்தில் பெண் கள் வெளியில் செல்வது அவர்களின் உரிமை, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்பது போன்ற கருத்துகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பதிவிடப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் மக்களவை முன்னாள் உறுப்பினர் ரம்யா, இரவு நேரத்தில் தான் வெளியில் செல்லும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் வெளி இடங்களில் தாங்கள் இருக்கக் கூடிய புகைப்படங்களை பல பெண்கள் பதிவிடத் தொடங்கினர். மேலும் இரவு நேரங்களில் வெளியிடங்களுக்குச் செல்வது, பெண்களின் உரிமை என்பதை பிரதிபலிக்கும் பல கருத்துகளும் சமூக வலைத்தள பக்கங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
"ஏன் பெண்கள் நள்ளிரவுக்கு மேல் வெளியில் செல்லக்கூடாது? நாங்கள் வெளி இடங்களுக்குச் செல்லக்கூடாது எனத் தடை போட இவர்கள் யார்? இதெல்லாம் ஒரு பிற்போக்கான மனநிலை" என பெண்ணியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியல் தலைவர்கள் சிலர் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என வெளியிடும் கருத்துகள் எல்லாம்  அவர்களின் ஆணாதிக்க மனோபாவத்தைக் காட்டுகின்றன.
சமீப காலமாக பாலியல் தொல்லைகள் குறித்த பிரச்சினை எழும்போதெல்லாம், யாராவது சிலர் பெண்கள்தான் ஆண்களை தூண்டுகிறார்கள் என கருத்து சொல்வது வழக்கமாகிவிட்டது. இந்த நாட்டில் 8 வயது சிறுமிகூடப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்கிறதே! அப்படி யென்றால் அந்தப் பெண் குழந்தை ஆண்களைத் தூண்டிவிட்டது எனக் கூற முடியுமா? அரியானா இளம்பெண்ணிற்கு நடைபெற்றுள்ள அநீதி வெட்கித் தலைகுனிய வேண்டியதாகும். நாட்டில் பெண்களுக்கு இன்னும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
பாலியல் தொல்லை குறித்த சம்பவங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், அதற்காக இயற்றப்பட்ட சட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதில்லை என்பதே பல பெண்ணுரிமை ஆர்வலர்களின் ஆதங்க மாக உள்ளது. சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான சட்பிர் பேடி, பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து 69 சதவீத பெண்கள் புகார் அளிப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பணியிடங்கள் மட்டுமல்லாது பொது இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களும் காவல்துறையில் புகார் அளிக்கத் தயங்குவதாக கூறும் பெண்ணுரிமை ஆர்வலர் சுதா ரகுராமன், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சூழலை எப்படி எதிர்கொள்ளலாம்? என்பது குறித்தும் சில ஆலோசனைகளை அளித்துள்ளார்.
பெரும்பாலும் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள், காவல்துறையில் புகார் அளிக்க தயங்கு கின்றனர் அல்லது பயப்படுகின்றனர். ஒருவேளை அவர்கள் அச்சமின்றி புகார் அளிக்க காவல்நிலையம் சென்றாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் அக்கறை காட்டுவதில்லை.
சரிகா ஷா சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், ஒவ்வொரு கல்லூரியிலும் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து, பெயர் குறிப்பிடாமல் மாணவிகள் புகார் அளிக்க பெட்டிகள் வைக்கப்பட்டன. ஆனால் தற்போது அந்த திட்டம் நடைமுறையில் இல்லை. இணையதளம் வழியாக கூட பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் புகார் அளிக்க முடியும். ஆனால் அதில் எத்தனை வழக்குகளில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
திராவிடர் கழகத் தலைவர் சொன்னதுபோல பெண் களுக்குத் துப்பாக்கிக் கொடுத்துப் பார்க்கலாமே!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...