Saturday, August 12, 2017

என்னுடைய வாழ்நாளில் மிக மகிழ்ச்சியாக இருக்கின்ற நாள்கள் இந்த நாள்கள்தான்! பெரியார் கொள்கை உலகம் முழுவதும் பாய்கிற பாய்ச்சலுக்கு இது ஒரு முதல் பாய்ச்சல்!

ஜெர்மனியில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டில் தமிழர் தலைவர்



‘‘இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் புரட்டிப் போட்டு, ஏடு ஏடாய் புரட்டிப் பார்த்தாலும், அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையை சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.’’
கொலோன், ஆக. 11- என்னுடைய வாழ்நாளில் மிக மகிழ்ச்சியாக இருக்கின்ற நாள்கள் என்று சொன்னால், இந்த நாள்கள்தான். இவ்வளவு மகிழ்ச்சியாக என்றைக்கும் இருந்தது கிடையாது என்றும், பெரியார் கொள்கை உலகம் முழுவதும் பாய்கிற பாய்ச்சலுக்கு இம்மாநாடு ஒரு முதல் பாய்ச்சல்  என்றும் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜூலை 27, 28, 29 ஆகிய நாள்களில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் இரண்டாம் நாளான 28.7.2017 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
தமிழிலும் நடைபெறவேண்டும் என்ற உணர்வோடு...
மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக் கூடிய பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக் கழக வளாகத்தில், பேராசிரியர்  டாக்டர் உல்ரிக் நிக்லஸ் அம்மையார் அவர் களை வரவேற்புக் குழுத் தலைவராகக் கொண்டு சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டினை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் உரை நிகழ்த்த என்னை அழைத்தி ருக்கிறார்கள்.
நேற்றும், இன்றும் நாளையும்கூட  ஆங்கிலத்தில் நிகழ்வுகள் நடைபெறுகின்ற சூழ்நிலையில், தமிழிலும் நடைபெறவேண்டும் என்ற உணர்வோடு இங்கே சிறப்பாகத் தொடங்கி வைத்த நம்முடைய
திராவிடர் கழக துணைத் தலைவர் மானமிகு கலி.பூங்குன்றன் அவர்களே,
நிகழ்வினை ஒருங்கிணைத்து சிறப்பாக செய்து கொண்டிருக்கக்கூடிய பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே,
இந்நிகழ்வில் இன்றைக்கு ஏராளமான கருத்துரைகளை வழங்கியுள்ள,  கருத்துரைகளைப் படைத்து விவாதித்துள்ள அருமை அறிஞர் பெருமக்களே,
கேள்விகளை வினாக்களாகத் தொடுத்து, நல்ல கருத்துரை - விளக்கங்களையெல்லாம் பெற்றிருக்கக்கூடிய அருமை பேராளர்களான பெருமக்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்!
சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்தைப்பற்றி இங்கே சொன்னார்கள். இந்த இயக்கம், அது செய்கின்ற பணி என்பது இருக்கிறதே - அது நன்றி எதிர்பார்க்காத பணியாகும்.
எல்லா மக்களுக்கும் சுயமரியாதை வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்
நாங்கள் கல்லைத் தூக்கி எறிகிறவர்களைப்பற்றி கவ லைப்படுவதில்லை. எங்களுடைய பணி நன்றி பாராட்டாத பணி. அதைவிட மிக முக்கியம் - எல்லா மக்களுக்கும் சுயமரியாதை வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு'' என்று சுட்டிக்காட்டிய தந்தை பெரியார், இந்த இயக்கப் பணியைச் செய்கின்றபொழுது நாங்கள் மானம் பாராத தொண்டர்கள் என்று  மகிழ்ச்சி கொண்டார்கள்.
உலகத்தில் வேறு எந்த இயக்கத்திலும் இல்லாத -  நன்றி பாராட்டாத பணி. புகழை எதிர்நோக்காத பணி - மிக ஆழமான பணி. பெரியார் அவர்கள் ஒரு வித்தியாசமான தலைவர்.
பாதை இல்லாத ஊர்களுக்கெல்லாம் பாதை போடுவதுதான் ஈரோட்டுப் பாதை
சுயமரியாதை இயக்கத்தைக் கொண்டு செல்லவேண்டும் என்றால்,  ஈரோட்டுப் பாதையை வகுக்கிறார். பாதை இல் லாத ஊர்களுக்கெல்லாம் பாதை போடுவதுதான் ஈரோட் டுப் பாதை. ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சிறப்பான வகை யில், அதனை அவர்கள் செய்துகொண்டு போகின்ற நேரத்தில், உலகளாவிய இயக்கமாக என்னுடைய இயக்கம் இருக்கும் என்று அவர்கள் நல்ல அளவிற்கு முன்னோட் டமாக மிக ஆழமாக சொல்லியிருக்கிறார்.
இங்கே ஒரு பகுதியை மட்டும் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.
சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு...
1930 ஆம் ஆண்டில் ஈரோட்டில் தந்தை பெரியார் பேசியதைக் கேட்போம்.
‘‘இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் புரட்டிப் போட்டு, ஏடு ஏடாய் புரட்டிப் பார்த்தாலும், அழ கும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையை சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.’’
இந்த வார்த்தையானது நமது நண்பர்களிலேயே, கொள்கையெல்லாம் நமக்குப் பிடிக்கிறது. ஆனால், சுயமரி யாதை என்கிற சொல் மாத்திரம் பிடிக்கவில்லை என்று சொல்லும் மேதாவிகளுக்குத் தக்க பதிலாகும்.
நானே அச்சடிப்பேன், நானே படிப்பேன்!
யார் என் பின்னால் வருகிறார்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.
‘குடிஅரசு’ பத்திரிகை நடத்துகிறார் தந்தை பெரியார். அவரிடம் சென்ற ஒருவர் சொல்கிறார், ‘‘அய்யா இந்தப் பத்திரிகை நட்டத்தில் நடைபெறுகிறது. நிறைய பேர் வாங்க மாட்டேன் என்கிறார்கள்; இந்தப் பத்திரிகையைப் பார்த்த வுடன் பயப்படுகிறார்கள் - நாம் பத்திரிகையை நிறுத்தி விடலாம்'' என்கிறார்.
உடனே பெரியார் அவர்கள், ‘‘நான் என்னுடைய பணியை தொடங்கிவிட்டேன். நான் ஒரே ஆள் எழுது வேன். யாரும் வாங்கவில்லை என்றாலும்,  நானே அச்சடிப் பேன், நானே படிப்பேன், நானே அதனை மடித்து வைப்பேன் - நான் அதனை விடமாட்டேன்'' என்றார்.

பெரியாருக்கும், வள்ளலாருக்குமுள்ள வேறுபாடு!
பெரியாருக்கும், வள்ளலாருக்கும் ஒரு வேறுபாடு என்னவென்றால்,
கடை விரித்தோம் கொள்வாரில்லை

கட்டிவிட்டோம் என்றார் வள்ளலார்.

பெரியார் என்ன சொன்னார் என்றால்,
கடை விரித்தேன், நீங்கள் கொள்ளும் வரை கடையை மூடமாட்டேன் என்றார்.
அந்தக் கடை இப்பொழுது ஜெர்மனிக்கு வந்திருக்கிறது. அந்தக் கடை அமெரிக்காவில் இருக்கிறது; அந்தக் கடை பர்மாவில் இருக்கிறது. அந்தக் கடை உலகம் முழுவதும் சென்றிருக்கிறது.
பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட்
பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட். சாதாரணக் கடைக்கும், சூப்பர் மார்க்கெட்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால், சூப்பர் மார்க்கெட்டில் எல்லா பொருள்களும் கிடைக்கும். சாதாரண கடைகளில் எல்லா பொருள்களும் கிடைக்காது.
ஒரு சிலருக்கு சில பொருள்கள் பிடிக்கும்; அதனை சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவார்கள்; சில பொருள் பிடிக் காது, அதனை வேறொரு இடத்தில் வாங்குவார்கள். அது போன்று பெரியாருடைய கொள்கைகள் ஒரு பேரங்காடி. பிடித்தவர்கள் அதனை வாங்கட்டும். இது தரமானதாக இருக்கும்; போலியாக இருக்காது; சரக்கு மிகவும் வித்தி யாசமாக இருக்கும் என்று சொல்லக்கூடியது.
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு - அவர்தாம் பெரியார் பார் என்று சொன்னார்.
சுயமரியாதை இயக்கம் பேதத்தை ஒழிக்கின்ற இயக்கமாகும்
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய அந்த சிந்தனையில் சொல்கிறார்,
இந்த இயக்கமானது, இன்றைய தினம் மதத்தையும், பார்ப்பனரையும், சாமியையும் (கடவுளையும்), பண்டிதர் களையும் வைது கொண்டு (எதிர்த்துக்கொண்டு), மூடப் பழக்கவழக்கங்களை எதிர்த்துக் கொண்டு, மக்களைப் பரிகாசம் செய்துகொண்டிருப்பது போலவே, என்றைக்கும் இருக்கும் என்றோ, அல்லது இவைகள் ஒழிந்தவுடன், இவ்வியக்கத்திற்கு வேலை இல்லாமல் போய்விடும் என்றோ யாரும் கருதக்கூடாது.
மேற்சொன்னவைகளில், ஆதிக்கங்கள் ஒழிவதோடு, ஒருவன் உழைப்பில், ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கிற தன்மை இருக்கும் வரையில், ஒருவன் தினமும் ஒரு வேளை கஞ்சிக்கு வழியின்றி பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் அய்ந்து வேளை சாப்பிட்டுவிட்டு, வயிற் றைத் தடவிக்கொண்டு, சாய்மான நாற்காலியில் சாய்ந்துகொண்டு இருக்கும் தன்மை இருக்கும் வரையிலும்,

ஒருவன் இடுப்புக்கு வேஷ்டியில்லாமல் திண்டாடு வதும், மற்றொருவன் மூன்று வேஷ்டிப் போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிவதுமாய் இருக்கின்ற நிலை உள்ள வரை,
பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுவதும், தங்கள் சுயவாழ்வுக்கே என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற வரையிலும், சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும். மேற்கொண்டவைகள்  தன்மைகள் ஒழியும் வரையில், இந்த இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது.
அதனால், பேதமற்ற வாழ்வே பெருவாழ்வு! அதனை அழகாகச் சொன்னார் பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கம் பேதத்தை ஒழிக்கின்ற இயக்கமாகும்.
குலதர்மத்திற்கு எதிரானது சமதர்மம்
சமதர்மம் என்றால் என்னவென்று கேட்டார்கள், இருப் பதை எல்லோரும் பகிர்ந்துகொள்வதுதான் சமதர்மம். குலதர்மத்திற்கு எதிரானது சமதர்மம் என்றார்.
இரண்டு கைகள் இருக்கின்றன - அது நன்றாகப் பயன் பட வேண்டும்; மூன்றாவது கை முதுகில் முளைத்தால், நன்றாகத்தான் இருக்கும் சொரிந்து கொள்வதற்கு. யாரும் மூன்றாவது கை முளைக்கவில்லையே என்று வருத்தப்பட மாட்டார்கள் - இருக்கின்ற கைகள் நன்றாக இயங்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.
இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள் இருக்கும்பொழுது, ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வை - ஒரு காதுக்கு மட்டும் கேட்கும் தன்மை, ஒரு கை மட்டும் இயங்கும் தன்மை, ஒரு கால் மட்டும் இயங்கினால் போதும் என்று நினைப்போமா?
அதுபோன்று, ஆண் - பெண் இருவரும் சரி சமமாக இயங்கினால்தான் உலகம் - அதுதான் சமூகம். ஒன்றைப் பயன்படுத்தி, இன்னொன்றை இயங்கக் கூடாத நிலையில் வைத்திருக்கிறார்களே. மக்களில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்களை அடிமைகளாக வைத்திருக்கிறார்களே - அவர்களுக்குத் தடை போட்டு வைத்திருக்கிறார்களே! இதனைத் தட்டிக் கேட்டவர் தந்தை பெரியார்.
‘‘கடை விரித்தேன், கொள்ளும்வரை விடமாட்டேன்'' என்றார்!
இதற்குமுன் பாரதியார்  சொல்லியிருக்கிறார்; ராமலிங்க அடிகளார் அதற்கு முன் பேசியிருக்கிறார்; சித்தர்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள் - பாடி விட்டுப் போய் விட்டார்கள் - எழுதி விட்டுப் போய்விட்டார்கள்.
பெரியார் ஒருவர்தான், கடை விரித்தேன், கொள்ளும் வரை விடமாட்டேன் என்றார்.
இப்பொழுது அந்த சரக்கு ஏற்றுமதி ஆகிக்கொண்டி ருக்கிறது. இது நல்ல சரக்கு என்கிறார்கள். அமெரிக்காவில் இந்த சரக்கு - இப்பொழுது மிகவும் தேவையாய் இருக்கிறது. மற்ற இடங்களில் தேவை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கிறது என்றால், பெரியார் ஒரு தொலை நோக்காளர் என்று யுனெஸ்கோ சொன்னது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஆகவே, நண்பர்கள் இங்கே உரையாற்றும்பொழுது லதாராணி அவர்கள், கவிஞர் அவர்கள் செங்கல்பட்டு மாநாட்டுத் தீர்மானத்தைப்பற்றி சொன்னார்கள்.
1929 ஆம் ஆண்டு, நம்மில் பலர் பிறந்திருக்காத நிலையில், ஒரு சில மூத்தவர்களைத் தவிர, 92 வயது 94 வயதில் இங்கே வந்திருக்கிறார்களே,  அந்த இளைஞர்கள், அவர்கள் எல்லாம் இளைஞரணியினர். அப்படிப்பட்ட வர்கள் வேண்டுமானால், அவர்கள் சிறு பிள்ளையாக இருந்தபொழுது கேள்விப்பட்டிருக்கலாம், அல்லது மாநாட் டிற்குச் சென்றிருக்கலாம்.
மாநாட்டு விளம்பரம்!
அந்த மாநாட்டிற்கான விளம்பரத்தை பெரியார் எப்படி செய்தார் என்றால்,
பள்ளர்களும், பறையர்கள் என்ற தாழ்த்தப்பட்டவர் களும், ஒதுக்கி வைக்கப்பட்டவர்களும், கீழ்ஜாதி என்று அடைமொழிக் கொடுக்கப்பட்டிருப்பவர்களும், தாலி அறுத்தவர்கள், விதவைகள் என்று அவமானப்படுத்தப்படக் கூடியவர்களும், தாசிகளும் இந்த மாநாட்டிற்குக் கட்டாயம் வரவேண்டும்.
இப்படி ஒரு விளம்பரத்தைப் போடுபவர்கள் வேறு யாராவது உண்டா? என்பதை நன்றாக நீங்கள்  நினைத்துப் பார்க்கவேண்டும்.

எல்லோரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடவேண்டும் என்று சொன்னார்.
‘‘மலம் கழிக்கும்பொழுது ஒன்றாக இருக்கிறான்; சாப்பிடும்பொழுது பொழுது தனியாக இருக்கிறானே!’’
தமிழகத்திலே பெரியார் போன்று ஒரு பச்சையான உதாரணத்தை சொல்பவர்கள் வேறு யாரும் கிடையாது.
மலம் கழிக்கப் போகின்ற இடத்தில் வரிசையாக உட் கார்ந்து கொண்டிருக்கிறான். ஒருவன் சுருட்டுப் பற்ற வைத்தான் என்றால்,  வரிசையாக செயின் போன்று வத்திப் பெட்டியை வாங்கிக்கொள்கிறார்களே. ஆனால், சாப்பிடும் போது மட்டும் தனித்தனியாக சாப்பிடுகிறார்களே!
சாப்பிடும்பொழுது ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் - மலம் கழிக்கும்பொழுது தனியாக இருக்க வேண்டும். ஆனால், மலம் கழிக்கும்பொழுது ஒன்றாக இருக்கிறான்; சாப்பிடும்பொழுது பொழுது தனியாக இருக்கிறானே இது நியாயமா? என்று கேட்டவர் தந்தை பெரியார்.
சமுதாய சிந்தனைகள் என்பது சாதாரணமானதல்ல. எளிய உதாரணத்தை - மிக முக்கியமான உதாரணத்தை சொல்வார் தந்தை பெரியார் அவர்கள்.
சிதம்பரத்தில் ஒருவர் கேட்கிறார், ‘‘நாயக்கரே, நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள்;  நீங்கள் சொல்வதெல்லாம் சரியாக இருக்கிறது: கடவுளைப் போய் கல்லுன்னு சொல்கிறீர்களே, இது நியாயமா?'' என்கிறார்.
அதற்காக அய்யா பெரியார் வாதம் செய்யவில்லை. வாங்க சிதம்பரம் நடராஜன் கோவிலுக்குப் போவோம்; கையில் தடி இருக்கிறது, தட்டி காட்டுகிறேன், கல்லா, இல்லையா என்பது உங்களுக்குப் புரியும் என்றார்.
இப்படிப்பட்ட பதிலை கேள்வி கேட்டவர் எதிர்பார்க்க வில்லை. கொஞ்சம் சமாளித்துக்கொண்டு அவர் என்ன சொன்னார் என்றால், ‘‘கல்லுதான், ஆனால், எல்லா கல்லு மாதிரியும் அது கிடையாது. அது கடவுள் - மந்திரத்தை உள்ளே விட்டிருக்கிறது'' என்று சொன்னார்.
கல்லினுள் மந்திரம் போகும்பொழுது, மனிதனுக்குள் போகாதா?
அப்படியா, உங்கள் மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது; கல்லை கடவுளாக்கும் சக்தி என்றால், அதே மந்திரத்தை எங்களுடைய சகோதரர்களான தாழ்த்தப்பட்ட வன்,  பறையன், பள்ளன், கீழ்ஜாதி, தொடாத ஜாதி என்று சொல்கிறீர்களே, அவர்களிடம் விட்டு, அவர்களை மேல் ஜாதி ஆக்கவேண்டியதுதானே. கல்லினுள் மந்திரம் போகும்பொழுது, மனிதனுக்குள் போகாதா?'' என்றார்.
கேள்வி கேட்டவர், எதுவும் சொல்லாமல், பேசாமல் அமர்ந்துவிட்டார்.
பெரியார் போன்று பளிச்சென்று பதில் சொல்லி, சிந்தனையைத் தூண்டியவர்கள் வேறு யாரும் கிடையாது.
வஞ்சகர், வந்தவர், தமிழால் செழித்தார்!
வாழ்வினில் உயர்ந்தபின், தமிழையே பழித்தார்!
நம்செயல், ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம் இந்நாள், அவரஞ்சி விழித்தார்!
என்றார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.
பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி!
அப்படிப்பட்ட ஒரு கால சூழ்நிலையில், மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், ஒரு பெரிய மகிழ்ச்சியான, ஒரு திருப்பமாக இதனை முன்னெடுக்கவேண்டும்.
விஞ்ஞானத்தைப் பரப்புவதுபோன்று, சுயமரியாதை தத்துவம் என்பது இருக்கிறது, அது ஒரு சமூக விஞ்ஞானம்.  பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி. அந்த சமூக விஞ்ஞானத்தை யாராலும் தடுக்க முடியாது. எதிர்ப்புகள் வரும் - அதனைப்பற்றி பெரியார் அவர்கள் கவலைப்படமாட்டார். நாங்களும் எதிர்ப்புகளைப்பற்றி கவலைப்படாமல்தான் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். எதிர்நீச்சல் அடிக்கும் பொழுதுதான், வீரமே இருக்கிறது.
ஈரோடு போனவன்; நீரோடு போகமாட்டான்!
கலைஞர் அவர்கள்கூட, ‘‘மானமிகு சுயமரியாதைக் காரன்'' என்று தன்னை வர்ணித்துக் கொண்ட கலைஞர் அவர்களிடம், நெருக்கடி காலத்தில் இப்படி எதிர்த்து நிற்கிறீர்களே; தேசிய நீரோட்டத்தில் கலந்துகொள்ள வில்லையே என்று கேட்டார்கள்.

அதற்குக் கலைஞர் அவர்கள் பட்டென்று பதில் சொன்னார். ஈரோடு போனவன்; நீரோடு போகமாட்டான் என்றார்.
இன்றைக்கு எதிர்நீச்சல் அடிப்பதுதான் மிக முக்கியம். அன்று முதல் இன்றுவரை நாளை வரை இந்த இயக்கம் எதிர்நீச்சல் அடிக்கும் - அடித்து கரை சேரும். வெற்றி பெறும். மூழ்குகிறவர்களையெல்லாம் கைதூக்கி விட்டு கரை சேர்க்கும்.
85 வயதினராக வந்தோம்; 25 வயதினராகத் திரும்புகிறோம்!

எனவே, இந்த இயக்கம் இன்றைக்கு ஜெர்மனியில், 85 ஆண்டுகளுக்கு முன் பெரியார் அவர்கள் வந்ததைப்பற்றி கவிஞர் அவர்கள் இங்கே சொன்னார். இன்றைக்கு அவருடைய தொண்டனாகிய நான், 85 வயதில் இங்கே வந்து, உங்களையெல்லாம் பார்த்து, 25 வயதோடு திரும்பிப் போகிறேன். நாங்கள் வரும்பொழுது எங்களுக்கு வயது 85; திரும்பும்பொழுது 25 வயது.
ஏனென்றால், இதுபோன்ற முயற்சிகள் வேண்டும். எந்த ஒரு கொள்கைத் தத்துவவாதியாக இருந்தாலும், அவர் எவ்வளவு சிறந்த தத்துவங்களை சொன்னாலும், அந்தத் தத்துவங்களை அவர் மட்டுமே பரப்பிவிட முடியாது. அவருடைய தொண்டர்கள்தான் பரப்பவேண்டும். அந்தத் தொண்டர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதுபற்றி அவர் சொன்னார்.
‘‘என்னுடைய தொண்டர்கள் எல்லாம் வருவதற்கு முன் நன்றாக யோசிப்பவர்களாக, பகுத்தறிவாளர்களாக இருக்க வேண்டும். இயக்கத்திற்கு வந்த பிறகு, இராணுவக் கட்டுப் பாடோடு செயல்படவேண்டும்'' என்றார்.
நான் பெரியாருடைய வாழ்நாள் மாணவன். நான் அடிக்கடி ஒரு கருத்தை சொல்லும்பொழுது, என்னை கேலி செய்தார்கள்.
‘‘எனக்கு சொந்த புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தி போதும்'' என்றேன்.
இவர் என்ன பகுத்தறிவுவாதி; சொந்த புத்தி தேவையில்லை என்கிறாரே என்று.
இதனை ஒருவர் என்னிடம் கேள்வியாகவே கேட்டார்.
பெரியார் தந்த புத்தி போதும்!
ஆமாம். நான் என்ன சொன்னேன், சொந்தப் புத்தி தேவையில்லை என்று சொன்னதோடு நிறுத்தவில்லை; பெரியார் தந்த புத்தி போதும் என்று சொல்லியிருக்கிறேனே என்றேன்.
சொந்த புத்திக்கு பலகீனம் உண்டு
சொந்த புத்திக்கு ஆசாபாசம் உண்டு
சொந்த புத்திக்கு சுயநலம் உண்டு.
பெரியார் தந்த புத்திக்கு பலகீனம் கிடையாது;
பெரியார் தந்த புத்திக்கு ஆசாபாசம் கிடையாது
பெரியார் தந்த புத்தி நன்றியை எதிர்பார்க்காது.
அந்த உணர்ச்சியில் இந்தத் தொண்டர்கள் தயாராக இருக்கின்ற காரணத்தினால்தான், நாம் எதற்கும் தயார் என்று சொல்லக்கூடிய அந்த உணர்ச்சியை நாம் பெற்றிருக் கிறோம். ஆகவே, அருமையாக இந்த உணர்வுகளை அம்மையார் அவர்கள், அவரைச் சார்ந்தவர்கள் இங்கே ஏற்பாடு செய்துள்ளனர். நல்ல அருமையான தத்துவங்கள். என்னுடைய வாழ்நாளில் மிக மகிழ்ச்சியாக இருக்கின்ற நாள்கள் என்று சொன்னால், இந்த நாள்கள்தான். இவ்வளவு மகிழ்ச்சியாக என்றைக்கும் இருந்தது கிடையாது. இனிமேல் எதைப்பற்றியும் கவலை கிடையாது.
பெரியார் தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள்!

தன்னுடைய தொண்டர்களைப்பற்றி பெரியார் சொல் கிறார்,

‘‘எனது தொண்டர்கள்  துறவிக்கும் மேலானவர்கள்'' என்று சொன்னார்.
ஆனால், இன்றைக்குத் துறவி என்றால், வேறு அர்த்தம் - சாமியார் எல்லாம் அய்டெக் சாமியார்கள்; கார்ப்பரெட் சாமியார்கள். இந்தியாவில் ஒரு வகையான சாமியார்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். சாமியார் ராஜ்ஜியம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சாமியார்கள் தான் இன்றைக்கு இருக்கிறார்கள்.
உண்மையான துறவிகள் என்றால், நம்முடைய குன்றக் குடி அடிகளார் போன்று, காலையில் இங்கே வந்தாரே இம்மானுவேல் பாதிரியார் போன்றவர்கள்தான்.
துறவிகளுக்கும் மேலானவர்கள் என்னுடைய தொண்டர்கள் என்று சொல்லிவிட்டு, அதற்கு விளக்கமும் சொன்னார்.
துறவிகளிடம் சென்று, ஏன் நீங்கள் இல்லறத்தைவிட்டு, துறவறத்திற்கு வந்தீர்கள் என்று கேட்டால், அவர்கள் என்ன சொல்வார்கள்?
இது நிலையாமை - இது சிற்றின்பம். மேலே சென்றால், பேரின்பம்.  அங்கே ரம்பை, திலோத்தமை, ஊர்வசி எல்லாம்  டான்ஸ் ஆடுவார்கள். தனியாக சமைக்கவேண்டிய அவசியம் கிடையாது. அண்டா அண்டாவாக சாம்பார் இருக்கும்; பாயாசம் இருக்கும்; எப்பொழுது வேண்டு மானாலும் சாப்பிடலாம்; வேலை செய்யவேண்டிய அவசியமில்லை. அங்கேயே அமர்ந்து டான்ஸ் பார்க்கலாம்; சினிமா ஸ்டாரைவிட அழகாக இருப்பார்கள் என்று சொல் லக்கூடிய அளவிற்கு - மோட்சத்திற்குப் போவதற்காகத்தான் நான் சாமியாராகிவிட்டேன் என்பார்கள்.
மோட்சம், நரகம் பித்தலாட்டம் என்று சொல்பவர்கள் நாங்கள்!
துறவிகளாவது, எதையோ எதிர்பார்த்து துறவிகளா கிறார்கள். ஆனால், எங்களுடைய தொண்டர்கள், மோட் சம், நரகத்தைப் பித்தலாட்டம் என்று சொல்பவர்கள். துறவிக்கும் மேலானவர்கள், எதையும் எதிர்பார்க்காதவர்கள் என்று சொன்னார்.
எனவே, அப்படிப்பட்ட தொண்டர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களுடைய சொந்த செலவில் வந்ததைப்பற்றி இங்கே தெளிவாக சொன்னார்கள். நிறைய பேர் வருவதற்கு இருந்தார்கள் - இவர்களை மீண்டும் கொண்டு போய் பத்திரமாக சேர்க்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
எவ்வளவு உணர்ச்சிபூர்வமானவர்கள் இங்கே வந் திருக்கிறார்கள். ஒன்றை நான் சொல்லியாகவேண்டும் - இந்த இயக்கம் எவ்வளவு பெரியவர்களை தயாரித் திருக்கிறது என்று சொன்னால்,
இங்கே வருவதற்கான ஏற்பாட்டினை தோழர் கும ரேசன் அவர்கள் செய்தார். பயணச்சீட்டு, விசா போன்றவை கிடைக்கவேண்டும் - அனைவருக்கும் ஒன்றாகக் கிடைக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்.
தடைகற்கள் ஆயிரம் என்றாலும்,
தாங்கும் தடந்தோள்கள் உண்டு.
கழகத் தோழர்களின் உணர்ச்சிபூர்வமான
ஒரு கடிதம்!
திடீரென்று இரண்டு பேர் வந்திருந்தார்கள். தங்கமணி - தனலட்சுமி ஆகியோர் 26 ஆண்டுகளாக வாழ் விணையர். அந்த அம்மையார் அரசாங்க அதிகாரியாக இருக்கிறார். ஒரு நாள் என்னுடைய அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தார்.
என்னம்மா, புறப்படுவதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா? என்று நான் அவர்களைப் பார்த்து கேட்டேன்.
இல்லீங்க அய்யா, எல்லாம் தயாராக இருக்கிறது. உங்களிடம் ஒரு கடிதத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக நிற்கிறோம் என்றார்கள்.
மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு சூழல். அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்தேன். அதில்,
நாங்கள் ஜெர்மனி மாநாட்டிற்குச் செல்கிறோம். நாங்கள் மாநாட்டிற்குச் சென்றுவிட்டு வரும்பொழுது ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது எங்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எங்கள் சொத்து முழுவதும் இந்த இயக்கத் திற்கு நாங்கள் எழுதி வைத்திருக்கிறோம் என்று இருந்தது.
மானத்தை, மரியாதையை, உரிமையை வழங்கிய இயக்கம்
இதுபோன்ற ஓர் இயக்கத்தைக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? இந்த இயக்கம் அவர்களுக்குப் பதவி வழங்கவில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, மானத்தை, மரியாதையை, உரிமையை வழங்கிய இயக்கம்.
நன்றி பாராட்டாத ஓர் இயக்கத்தில், நன்றி காட்டக்கூடிய தொண்டர்கள்.
புகழை எதிர்பார்க்காத ஓர் இடத்தில், அற்புதமான தோழர்கள்.
உலக வரலாற்றில் ஜெர்மனி மாநாடு இடம்பெறும்!
ஆகவே, அம்மையார் உல்ரிக் அவர்களும், அவரைச் சார்ந்த கிளாடியா அவர்களும், பேராசிரியர் அவர்களும், மற்றவர்களும் இங்கே வந்து இவ்வளவு பேரை தயார் செய்திருக்கிறார்கள். என்ன லாபம் என்றால், நாமெல்லாம் அறிவு பெற்றோம், மானம் பெற்றோம் என்பதுதான். இது வரலாறு. நாளைய வரலாறை எழுதும்பொழுது, ஜெர்மனி மாநாடு முதலிடம் பெறப் போகிறது என்பதுதான் மிக முக்கியம்.
வளமையாகத் திரும்பவில்லை நாங்கள் - இளமையாகத் திரும்புகிறோம்!
ஆகவே, உங்களுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துகின்றோம். நாங்கள் வயதானவர்களாக வந்திருக் கலாம்; பெரும்பாலானவர்கள் அப்படித்தான். ஆனால், திரும்பும்பொழுது, இளமைத் துடிப்போடு திரும்புகிறோம். அது உங்களால்!
வளமையாகத் திரும்பவில்லை நாங்கள் - இளமையாகத் திரும்புகிறோம். கொள்கையில் வளமை - வாழ்வில் இளமை - தொடர்ந்த தொண்டு. நம்முடைய அய்யா செல்வநாயகம் போன்றவர்கள், சோம.இளங்கோவன் போன்றவர்கள், டாக்டர் இலக்குவன் தமிழ் போன்றவர்கள், பெரியார் பன்னாட்டமைப்பு வைத்து,  குவைத்தில் இருக்கக்கூடிய எதையும் கருதாத ஓர் எடுத்துக்காட்டான தொண்டராய் இருக்கக்கூடிய நம்முடைய செல்லபெருமாள் போன்றவர்கள், அவருடைய பேராளராக, பிரதிநிதியாகத் தான் லதாராணி அவர்கள் கலந்துகொண்டார்கள். நாளைக்கும் நிகழ்ச்சிகள் இருக்கிறது.
பெரியார் அவர்களுக்கு எதிர்ப்பு வந்தபொழுது, பெரியாருடைய தொண்டர்கள் என்ன சொல்வார்கள் என்றால்,
வீட்டிலிருந்து புறப்படும்பொழுது, செலவு கணக்கில் தான் எழுதி விட்டு வந்தோம்.  திரும்பிப் போனால்தான், மறுபடியும் வரவு என்று, இதோ இங்கே வந்திருக்கிறார்களே!
புது குடும்பங்கள் இணைந்திருக்கின்றன
பணியாற்றுவதற்கு எங்களைப் போன்றவர்கள் குடும் பம் குடும்பமாக இருக்கிறார்கள். அதுதான் மிகவும் முக்கியம். சுயமரியாதைக் குடும்பங்களை உருவாக்குவதில், எங்களுக்குப் புது குடும்பங்கள் இணைந்திருக்கின்றன - ஜெர்மனியில், அமெரிக்காவில், உலகளவில்.
எனவே, குடும்ப உறவுகள் - நீரினும் ரத்தம் வலிமையானது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், ரத்தத்தைவிட வலிமையான ஒன்று உண்டு. அதுதான் கொள்கை உறவு. அதுதான் சுய மரியாதை. அந்த சுயமரியாதை வெல்லட்டும்! சுயமரியாதை வாழ்க்கை சிறந்து மிளிரட்டும்.
பெரியார் கொள்கைகள் உலகம் முழுவதும் பாய்கின்ற பாய்ச்சலுக்கு முதல் பாய்ச்சல்!
இங்கு முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம். நேற்று நான் சொன்னேன், நிலவில் இறங்கிய மனிதன் சொன்னான், இது மனிதனுடைய காலடி என்று நினைக்காதீர்கள். மனித குலத்தின் பாய்ச்சல் என்று சொன்னார்கள். அதுபோல, இந்த மாநாடு இன்றைக்கு ஒரு சிறிய அறையில் நடை பெறுவதாக இருந்தாலும், நாளைக்கு இதுதான் பெரியார் கொள்கைகள் உலகம் முழுவதும் பாய்கின்ற பாய்ச்சலுக்கு முதல் பாய்ச்சல் என்று சொல்லி, நன்றி, நன்றி, நன்றி! என்று கூறி முடிக்கிறேன்.
வாழ்க பெரியார்!  வளர்க சுயமரியாதை!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...