Saturday, June 3, 2017

மானமிகு கலைஞருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!

ஈரோட்டுக் குருகுல நாயகருக்கு வயது 94
கலைஞர் தயாரித்த படைக்கலன்கள் இன்றும் தேவையே!
அவர் விரும்பிய இலட்சியப் பணியைத் தொடருவோம்!
மானமிகு கலைஞருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!
94 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களுக்கு  பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மானமிகு சுயமரியாதைக்காரருக்கு பிறந்த நாள் வாழ்த்து!
‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னைப் பற்றிய ஒரு வரி விமர்சித்துக்கொண்ட திராவிடர் இயக்கத் திண்தோள் வீரர் - வித்தகர் - நம்முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நாளை (3.6.2017) 94 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்!
அவருடன் அன்பொழுக, பாசம் பொங்க, ஆரத் தழுவி, தாய்க்கழகத்தின் தலைதாழா சுயமரியாதை வாழ்த்தினை நேரில் அளிக்க அவரது உடல்நலம் இடந்தரவில்லை என்பது ஓரளவுக்கு வருத்தத்தையும், வேதனையையும் தந்தாலும், அவர் நம்முடன் இருக்கிறார் என்பது, விரைவில் நலம்பெற்று வழமைபோல் நாட்டிற்கு வழிகாட்டுவார்; திராவிடர் இயக்கத்தின் உரிமைப் போரில் பேரிகை முழக்குவார் என்ற நன்னம்பிக்கை நமக்குத் தெம்பூட்டுகிறது!
14 வயதில் தொடங்கிய பயணம்
தனது 14 ஆவது வயதில் ‘‘ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த நாடிதல்லவே’’ - பாவலர் பாலசுந்தரத்தின் கொள்கை முழக்கத்தை முரசொலித்தவர் நமது தளநாயகர் இந்த மானமிகு சுயமரியாதைக்காரர்!
மாணவப் பருவம் தொட்டு, முதுமையிலும் கடும் உழைப்புக்குப் பின்வாங்கா இந்த பெம்மான் பொதுவாழ்விலேயே ‘ஆயிரம் பிறைகண்டு’ அதற்கு அப்பாலும் காணுபவர். (80 ஆண்டு பொதுவாழ்வு அல்லவா?)
எமது 70 ஆண்டுகால கொள்கை நட்பு இன் றும், நாளையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பதில்தான் எத்துணைப் பெருமிதம்!
ஈரோட்டுக் குருகுலத்தின் இணையற்ற தயாரிப்பு அவர்; காஞ்சி அரசியல் பாசறையின் கச்சிதமான தனி வார்ப்பு அவர்!
அதுமட்டுமா?
அவர் ஓர் பன்முக வித்தகர்; பல்கலைக் கொள் கலன்!
எழுத்து, பேச்சு, நாடகம், அரசியல், ஆற்றல், அரசை நடத்தி வரலாறு படைத்த குன்றா அனுபவம் - திரை உலகில் திராவிடப் புரட்சியை கொணர்ந்த தீரர் - எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை ஆளாக்கிய தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும், தனக்கு என்றென்றும் இரத்த ஓட்டமாய் உள்ள கொள்கை உடன் பிறப்புகளையும் நாளும் பேச்சு, எழுத்துமூலம் சந்திக்கத் தவறா நன்றிப் பெருக்கின் நாயகம் அவர்!
செயல்பட ஆயத்தமாவோம்!
அவர் வகுத்திட்ட வியூகங்களும், தயாரித்த அரசி யல் படைக்கலன்களும், நடத்திட்ட போராட்டங்களும், துணிச்சலின் துள்ளல் மட்டுமல்ல; தொய்வில்லா தொடர்பணிகள் ஆகும்.
முன்பு எப்போதும் தேவைப்பட்டதுபோல், இப்போது இன்னும் அதிகம் தேவைப்படுகிறது.
நாம் செயல்பட ஆயத்தமாக வேண்டும்.
செய்ய நினைப்பதை, செய்து முடிப்போம் என்ற சூளுரையை மேற்கொள்வோம்; நம் லட்சியப் பயணங்கள் முடிவதில்லை.
வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!!  வாழ்க கலைஞர்!!!

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.


சென்னை 
2.6.2017

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...