பொ. நடராசன்
நீதிபதி (பணி நிறைவு)
செயலாளர், வழக்குரைஞரணி,
திராவிடர் கழக சட்டத்துறை.
மோடியின் மத்திய அரசு 23.05.2017 முதல் மாடுகள் இறைச்சிக்காக விற்கப்படுவதை தடை செய்து மிருகவதை தடுப்பு (கால் நடை சந்தைகளை) ஒழுங்குபடுத்துதல் விதிகள் 2017 (The Prevention of Cruelty to Animals (Regulation of Livestock Markets) Rules 2017)அறிவித்திருக்கிறது. மேற்கண்ட விதிகள் 22(b) (iii) இன்படி ஒருவர் தனது கால்நடையை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரும் போது, அக்கால்நடை இறைச்சிக்காக விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை என எழுத்து பூர்வமான விளம்புதல் செய்யவேண்டும்.
விதி 22 (e) (i) கால்நடையை வாங்குபவர் அதை மேற்கொண்டு இறைச்சிக்காக விற்பதை தடை செய்கிறது. இவ்விதிகள் பிரதான சட்டமான மிருகவதை, தடுப்புச் சட்டம் 1960 இன் பிரிவு 38 (1) இன் கீழ் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ளன. எந்த ஒரு விதியும் பிரதான சட்டத்திற்கு விரோதமாக, எதிராக இருக்ககூடாது என்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது விதியாகும்.
ஆனால் இந்த மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை செய்யும் விதிகள் பிரதான சட்டமான ‘‘மிருகவதைத் தடுப்புச் சட்டம்’’, 1960 க்கு புறம்பானது, எதிரானதாகும். மிருகவதைத் தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 11 மனிதர்களின் உணவுக்காக மிருகங்கள் அழிக்கப்படுவதற்கு விதி விலக்கு அளிக்கிறது. அதே நேரத்தில் அப்படி அழிக்கும் போது தேவையில்லாத வலியோ, இம்சையோ கூடாது (not accompanied by unnecessary pain and suffering)என்றும் அப்பிரிவு வலியுறுத்துகிறது.
எனவே, மிருகவதை தடுப்புச் சட்டம், 1960 மிருகங்களை உணவுக்காக கொல்வதை அனுமதிக்கிறது என்பது தெளிவான விசயமாகும். ஒரு பிரதான சட்டம் உண வுக்காக மிருகங்கள் கொல்லப்படுவதை அனுமதிக்கும் போது அச்சட்டத்தின் கீழ் உருவான விதிகள் (Rules) எவ்வாறு அச்சட்டத்திற்கு எதிராக இருக்க முடியும் என்பதே சட்டம் படித்த அனைவரின் கேள்வியாகும்.
இப்போது,இயற்றப்பட்டஇவ்விதிகள்பிரதான சட்டத்தையே செல்லாததாக்கிவிடுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மையாகும். பிரதான சட்டத்திற்கே எதிரான விதிகள் செல்லத்தக்கதல்ல, நடைமுறைப்படுத்த முடியாதவை என்பதும் சட்ட நியதியாகும்.
அதோடு மட்டுமல்லாது ‘‘கால்நடை சந்தைகள்’’ என்பது விதி 2(b) இல் விளக்கப்பட்டிருக்கிறது. அதில் சந்தைக்கு அல்லது ஆடு மாடுகள் வெட்டுமிடத்திற்கு அருகில் கால்நடைகளை தங்க வைக்கும் இடமும் (Lairage) ‘‘சந்தைகள்’’ எனக் கருதப்படும் என விளக்கப்பட்டிருக்கிறது.
இந்த விளக்கத்தில் தான் குறும்பான அயோக் கியத்தனம் அடங்கியுள்ளது. கால்நடைகள் வெட்டு மிடத்திற்கு அருகில் கால்நடைகளை தங்க வைத்தாலே அது ‘‘கால்நடைச்சந்தை’’ என்றே ஆகிவிடும். ஒரு கால்நடையை அங்கு தங்க வைத்தாலே அது ‘‘கால்நடைச்சந்தை’’ என்றே ஆகிவிடும்.
‘‘அகில இந்திய மாட்டிறைச்சி மற்றும் கால்நடை ஏற்றுமதியாளர்கள் சங்கம்’’ கால்நடை சந்தையின் மூலம் 9% விற்பனை நடைபெற்று வருகிறது என்றும், 1% மட்டுமே விவசாயிகள் நேரடியான விற்பனையில் நடைபெறுகிறது என அறிவித்திருக்கிறது. எனவே இது கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கின்ற முயற்சியே ஆகும். இறைச்சி விற்பனையைத் தடை செய்ய தனியாக சட்டமியற்றலாமே தவிர விதிகள் மூலம் தடை செய்ய முயலுவது சட்டப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
அப்படியே தனிச்சட்டம் வந்தாலும் அரசியல் சட்டபிரிவு19(1) (g) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள வர்த்தகம் மற்றும் வியாபாரம் செய்வதற்கான ஒருவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும். மேலும் ஒருவரது உணவை தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது அரசியல் சட்டப் பிரிவு 21-க்கு விரோதமானது. இதை Hinsa Virodhak Sangh vs Mizapur Moti Kuresh Jamat (2008) 5 SCC 33, and In Re Ramlila Incident (2012) 5 SCC 1
வழக்குத் தீர்ப்புகள் தெளிவாக விளக்கியுள்ளன.
வழக்குத் தீர்ப்புகள் தெளிவாக விளக்கியுள்ளன.
எனவே இத்தடையானது மனிதர்களுக்கு அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது. ஆனால் அவ்வாறு அரசியல் சட்டத்தால் அடிப்படை உரிமைகள் ஏதும் வழங்கப்படாத கால் நடைகளைக் காப்பாற்றுகிறது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (5)
- பேராசிரியர் ந. சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (4)
- பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (3)
- பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (2)
- பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு
No comments:
Post a Comment