Wednesday, May 31, 2017

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலை மகளிர் உள்ளந்தோறும் சென்றடைய உழைப்பீர்!

திருச்சி: பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநில மாநாடு மகத்தான வெற்றி!
அரும்பாடுபட்ட கழக வீராங்கனைகள் அனைவருக்கும் பாராட்டு
தந்தை பெரியார் படத்தை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்பீர்!
‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலை மகளிர் உள்ளந்தோறும் சென்றடைய உழைப்பீர்!
தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
பிஜேபி ஆட்சியின் மதவாத இந்துத்துவா போக்கை எதிர்த்து, கண்டித்து  மே 30 மாலை சென்னை பெரியார் திடலில் மாபெரும் பொதுக் கூட்டம்
கடந்த சனியன்று (மே 27) திருச்சியில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பில் நடத்தப்பட்ட ‘‘பெண் ணுரிமைப் பாதுகாப்பு மாநாடு’’ வெற்றிகரமான மாநாடு, கழகத்தின் எதிர்காலம் ஒளிமிகுந்ததாகும் என்பதை எடுத்துக்காட்டும் மாநாடு என்றும் குறிப்பிட்டு, இல்லந்தோறும் தந்தை பெரியார் படம் இடம்பெறவேண்டும்; தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ எனும் நூல் உள்ளந்தோறும் சென்றடையவேண்டும் என்றும், அதற்காக கழக மகளிரணி யினர், பாசறையினர் பாடுபடவேண்டும் என்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
கழகத்தின் எதிர்காலம் வெகுவாக ஒளிமிகுந்ததாகும்
திருச்சியில் கழக மகளிரணியும், திராவிடர் மகளிர் பாசறையும் இணைந்து, கடந்த சில மாதங்களாக எடுத்த தொடர்முயற்சிகள் காரணமாக, இவ்வாண்டு பிப்ரவரியில் திருவாரூரில் துவங்கிய எழுச்சி, திருச்சியில் 27.5.2017 நடைபெற்ற மாநில மகளிரணி கலந்துரையாடலிலும் சரி, அன்று மாலை திருச்சி உழவர் சந்தையில் ‘‘பஞ்சப்பட்டி சாவித்திரி’’ அம்மாள் நினைவரங்கத்தில் நடைபெற்ற ‘‘பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாடு - கருத் தரங்க’’த்திலும் சரி, 1200 கழக மகளிர் - பெரிதும் இளைய தலை முறை, நடுத்தர வயதினர் (மூத்தோர் எண்ணிக்கைக் குறை வாகவே இருந்தது) கலந்துகொண்டது ஒரு புத்தாக்கத்தையும், கழகத்தின் எதிர்காலம் வெகுவாக ஒளிமிகுந்ததாகும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாகவும் அமைந்தது! இது மிகையல்ல; யதார்த்தமான அனுபவ உண்மை.
பெண்களின் ஈடுபாடும், ஆதரவும்தான் என்பதை எவரே மறுக்க முடியும்?
எந்த அமைப்பானாலும், ஏன் கலைத்துறை போன்றவற்றில் கூட, அவை பரவலாகி, மக்களை ஈர்த்து வேர்ப்பிடித்து - எளிதில் வீழ்த்திட முடியாத அளவுக்குப் பிடிப்புடன் இருப்பதற்கான அடிக்கட்டுமானத்தின் பெரும்பகுதி பெண்களின் ஈடுபாடும், ஆதரவும்தான் என்பதை எவரே மறுக்க முடியும்?
திருச்சியில் வந்தவர்கள் அனைவரும் கொள்கைத் தங்கங்கள்; போராட்டக் களத்திலும், புது முறுக்கோடு இறங்கிட என்றும் தயாராக உள்ள வீராங்கனைகள் ஆவார்கள்!
காலையில் பெரியார் கொள்கைகளை வீச்சுடன் எடுத்து விளக்கி 35 முதல் 40 பேர் பேசினார்கள்!ஒவ்வொரு பேச்சும் ‘நறுக்குத் தெறித்த’ நல்ல சொல் அம்புகளாகப் பாய்ந்தன!
அவர்களின் தெளிவும், துணிவும் - உரை வீச்சில் பளிச்சிட்டது; அனைவரையும் வியக்க வைத்தது!
‘இல்லந்தோறும் பெரியார்!’
‘உள்ளந்தோறும் பெரியார்!’
தந்தை பெரியார் படம் ‘இல்லந்தோறும் பெரியார்!’ மக்கள் குறிப்பாக மகளிர் ‘உள்ளந்தோறும் பெரியார்’ என்ற ஒரு தனித்த முயற்சிதான் அவர்களின் தொடர் ஓட்டத்தின் தொய்வில்லா அடுத்த பணியாகும்!
‘பெரியார் தம் அருட்கொடை
அனைத்தும் மக்களுக்கே!’
‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலும், ‘பெண்களுக்குப் பெரியார் அறிவுரை’ நூலும், அழகுற - பெண்ணுரிமை பேணியத் தந்தை பெரியாருக்கு 1938 இல் ‘‘பெரியார்’’ பட்டமளித்தபோது கூறப்பட்ட காரண விளக்க வாசகம் கருத்துரைகள் - அழகுமிகு தந்தை பெரியார் படத்தையும் வீட்டுக்கு வீடு, அது கிராமம், நகரம், மாநகரம் என்றெல்லாம் பேதமிலா விநியோகத்தை - எளிய நன்கொடைகளைப் பெற்று, ஒருவகையான திண்ணைப் பிரச்சாரத் திட்டம் - ‘பெரியார் தம் அருட்கொடை அனைத்தும் மக்களுக்கே’ என்று தந்து சென்ற ஒப்பாரும் மிக்காருமிலாத தலைவர் அவர் என்ற கருத்தினை வலியுறுத்தி விளக்கிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பகுதிகளில் இப்பணி அரும்பணியாகிட வேண்டும்!
தொண்டறத்தைப்போல உற்சாகமளிக்கும் மாமருந்து வாழ்வில் எதுவுமே இல்லை என்பதை அப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்களால் மட்டுமே உணர்ந்திட முடியும்!
வற்றாத மகிழ்ச்சிதான், அதனால் நாம் பெறும் விளைச்சல்!
திராவிடர் மகளிர் பாசறை, மகளிரணி பொறுப்பாளர்களான மானமிகு செயல்வீராங்கனைகளான தோழர்கள் கலைச்செல்வி, செந்தமிழ்ச்செல்வி, உமா, இன்பக்கனி, தகடூர் தமிழ்ச்செல்வி, கிரேசி போன்றவர்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்த அனைத்துக் கழக கொள்கைத் தோழர்களான மகளிரணிப் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டு உள்ளடங்கிய ஒன்றுதான் என்பதைக் கூறத்தான் வேண்டுமா?
ஒவ்வொரு பகுதியிலும் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை முளைத்துக் கொண்டும், கிளைத்துக் கொண்டும் இருக்கவேண்டும்!
மாநாட்டு வெற்றிக்கு ஒத்துழைத்த திருச்சி மாவட்ட, நகர தோழர்களுக்குப் பாராட்டுகள்!
பிரச்சார களத்தையும், போராட்டக் களத்தையும் இரண்டு தளங்களாக்கி
‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’ என்ற பெருமிதத் துடன் பிரச்சார களத்தையும், போராட்டக் களத்தையும் இரண்டு தளங்களாக்கி விரைந்து இலக்கை நோக்கிய பயணத்தை இன்னும் வேகமாக முடுக்கி விடுங்கள் - மகளிரணித் தோழர்களே!
நெஞ்சம் வழியும் பாராட்டுகள்!
உங்களுக்கு எங்கள் நெஞ்சம் வழியும் பாராட்டுகள்! வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வாழ்த்துகள்!
அணிவகுப்பீர்!
பணி முடிப்பீர்!!
உங்கள் தோழன்,

கி.வீரமணி 
தலைவர்,    திராவிடர் கழகம்.
சென்னை
30.5.2017
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...