Wednesday, February 22, 2017

ஊன்றிப் படித்து உண்மையை உணர்க!
நிகழ்கால நடப்புகளும் - நமது நிலைப்பாடும்!

கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராகவிருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின் (5.12.2016) தமிழ் நாட்டின் அரசியல் அரங்கிலும், ஆட்சி மன்றத்திலும் பல்வேறு வகைகளிலும் வேக வேகமாகக் காய்கள் நகர்த்தப்படுகின்றன.
குறிப்பாக ஜெயலலிதா என்ற பார்ப்பன அம்மையார் மறைந்த நிலையில், மறுபடியும் முதலமைச்சர் என்ற ஆட்சி அதிகார பீடத்தில் அமர்வதற்கு இன் னொரு பார்ப்பனர் அமைய வாய்ப்பற்றுப் போன நிலையில், பார்ப்பன சக்திகள், பார்ப்பன ஊடகங்கள் அ.இ.அ.தி.மு.க.வில் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டன. ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு விளம்பரத் தோள்களைக் கொடுத்துத் தூக்கி நிறுத்துகின்றன. பாரதீய ஜனதா என்ற பார்ப்பனக் கட்சியோ, திராவிட இயக்கங்களுக்குத் தாங்கள்தான் மாற்று என்று கரிசனம் காட்டத் தொடங்கிற்று. அ.இ.அ.தி.மு.க. - பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்று என்று மத்திய அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு கசிந்துருகிக் கருத்தும் தெரிவித்தார்.
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி தாய்க்கழகத்தின் தலைவர் என்ற முறையில் திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வாயிலாக (‘விடுதலை’, 8.12.2016) அ.இ.அ.தி.மு.க.வினருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றினை விடுவித்தார்.
‘‘அ.தி.மு.க. சகோதரர்களே, எச்சரிக்கை! சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம் - அளவற்ற ஆதரவு தருவதுபோல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். அக்கட்சியின் கட்டுக்கோப்பை - கட்டுப்பாட்டை மற வாதீர்!’’ என்று திராவிடர் இயக்க உணர்வோடு எச்சரித்தார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆட்சி என்பது தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இயக்கக் கட்சிகளிடம்தான் கடந்த 1967 முதல் தொடர்ந்து இருந்து வருகிறது. இதில் ஒன்றை பலகீனப்படுத்தி, அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பி.ஜே.பி. கருதித்தான் தன் சித்து வேலையையும் நடத்தியது. பி.ஜே.பி.க்கு அதற்கான சக்தி தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், அ.இ.அ.தி.மு.க.வுக்குள் ஒரு பிளவை ஏற் படுத்தி, ஒன்றைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு மறைமுக ஆட்சியை நடத்தலாம் என்பதுதான் பி.ஜே.பி.யின் திட்டம். இந்த நிலையை கழகத் தலைவர் வெளிப்படுத்தினார்.
அதன்பிறகு 27.12.2016 அன்று மற்றொரு அறிக்கையினையும் கழகத் தலைவர் வெளியிட்டார்.
‘‘தமிழ்நாட்டில் ஏதோ ‘சூன்யம்‘ ஏற்பட்டு விட்ட தாகவும், அதை நிரப்பத் தங்களால்தான் முடியும்; அதற் காகவே புது ‘அவதாரம்‘ எடுத்துள்ளவர்கள் போலும் நித்தம் நித்தம் சிலர் உளறுவதும், அதை ஏதோ பிர கடனம் போல ஆசைக் கனவுகளை பகலிலே கண்டு அறிவித்து மகிழுவதுமாக உள்ளனர்’’ என்று கூறியதுடன்,
தந்தை பெரியார் சொல்லும் ஒரு கருத்தினையும் நினைவூட்டினார். ‘‘இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. அரசியல் பெயரில், போர்வைக்குள் நடைபெற்றவை அத் தனையும் ஆரிய - திராவிட இனப்போராட்டமே!’’ என்று தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு பொருத்தமாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தது அவ்வறிக்கையில்.
‘‘(அந்தக் கனவுகளை) அப்பட்டமாக ஆரிய ஏடுகளும், மக்கள் ஆதரவைப் பெற்று இந்தப் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத நிலையில் குறுக்கு வழி அரசியலில், லாட்டரியில் பரிசு விழாதா என்று கனவு காணும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கட்சிகளும் தலையிடுகின்றன - பிரச்சினையாக்க முயலுகின்றன’’ என்றும் இரண்டாவது அறிக்கையிலும் முக்கியமாக வலியுறுத்தியுள்ளார்.
தொடக்கம் முதல் இன்றுவரை பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். மத்திய அரசுகளின் திரைமறைவு நடவடிக்கையை அடையாளப்படுத்தி, எச்சரிக்கை எச்சரிக்கை என்று வலியுறுத்தி வந்துள்ளார் ஆசிரியர்.
தொடக்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தெரிவித்த கருத்துகளை மேலோட்டமாகப் பார்த்தவர் கள்கூட, பிறகு அதனை வழிமொழிகிற வகையில் கருத்துகளை வெளியிட ஆரம்பித்தனர் என்பதுதான் உண்மை. போகப் போகப் புரியும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கழகத் தலைவர். அதுதான் இப்பொழுது நடந்தும் வருகிறது!
இந்தப் பிரச்சினையில் தி.மு.க.மீது எந்தவித உரசலோ, விமர்சனமோ வைக்கவில்லை - திரா விடர் கழகத் தலைவர். இன்னும் சொல்லப்போனால், இந்தக் காலகட்டத்தில் தி.மு.க. நடந்துகொண்டுவரும் - மேற்கொள்ளும் அணுகுமுறையை மிகவும் உயர்வாகப் பாராட்டி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 27 ஆம் தேதி அறிக்கையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது.
‘‘தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான தி.மு.க. மிகுந்த முதிர்ச்சியுடன் - குறுக்கு வழிகளில் எதற்கும் ஆசைப்படாமல் கண்ணியத்துடன் அரசி யல் நடத்துவது - பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சி என்ற முறையில் உரிய அளவு - தன் கருத்துகளை வெளியிட்டு வருகிறது.
கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம் வீழ்ந்த துண்ணா திறக்கும்
வானகம் கையுறினும் வேண்டாம் விழுமியோர்
மானம் மழுங்கா வரின் (நாலடியார்)
என்ற பழைய பாட்டு நியதிப்படி -
இடப்பக்கம் வேட்டையில் வீழ்ந்தால் புலி அதனை உண்ணாதாம்; வலப்பக்கம் வீழ்ந்தால்தான் உண்ணும் என்பது எப்படியோ - வேட்டையில் கூட ஒரு நியதி உண்டு.
குறுக்கு வழியில் எந்த முயற்சியும் தேவை என்று எண்ணாத திண்மைதான் உண்மையான ஜனநாயகவாதிகள் என்பதை உலகுக்கு அவர் களை அடையாளம் காட்டும்.
ஆக்கபூர்வ எதிர்க்கட்சி பணியை அந்த இயக் கம் - தனது கடமை வழுவாது - அதன் பண்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறது.’’ (‘விடுதலை’, 27.12.2016)
உண்மை நிலை இவ்வாறு இருக்க - தி.மு.க.வுக்கு இதில் என்ன பிரச்சினை? என்ன சங்கடம்?
பெரியார் மண்ணில் திராவிட இயக்கம் தவிர்த்த மூன்றாவது சக்தியாக காவிகள் காலூன்றக் கூடாது என்பதில் தி.மு.க.வுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாதே - இருக்கவும் கூடாதே!
இன்னும் சொல்லப்போனால் தி.மு.க.வே கூட இந்தக் கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தால், அதன் திராவிட இயக்க உணர்வுக்காக  பொதுத் தளத்தில் அது சிறப்பாகவே உயர்ந்திருக்கும்.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு, ஆளுநர் எப்படியெல்லாம் நடந்து வருகின்றனர் - அதைப்பற்றிய கருத்துகளைக் கூற தி.மு.க. ஏன் தயங்கவேண்டும்?
அப்படியொரு கருத்தை முன்வைக்க முன்வரா விட்டாலும், தாய்க்கழகமான திராவிடர் கழகத் தலைவர் அந்தக் கருத்தை வலியுறுத்தியது கண்டு மகிழ்ந்திருக்க வேண்டும்.
ஆனால், நடந்தது என்ன? திராவிடர் கழகத்தைச் சங்கடப்படுத்தவேண்டும் என்று நினைத்துக் கொண்டு கழகத்தால் விலக்கப்பட்ட சிலரை அழைத்துக் கூட்டம் நடத்தியதை நினைக்கும்பொழுது இப்பொழுதுகூட ‘‘சிரிப்புதான்’’ வருகிறது!
இது என்ன சிறு குழந்தை விளையாட்டு!
எவ்வளவோ நிலைக்கு உயர வேண்டியவர்கள் இப்படி ஒரு சிந்தனைக்கும், செயலுக்கும் ஆளாகி விட்டார்களே என்ற வருத்தம் - அவர்மீது கொண்ட அக்கறையின் காரணமாகவே திராவிடர் கழகத் தலைவருக்கு ஏற்பட்டது என்பதுதான் உண்மை.
கடந்த 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடை பெற்ற அமளி - துமளிகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் சட்டம் அறிந்தவர் என்ற முறையில் தம் கருத்தினைத் தெரிவித்தார்.
சட்டப்பேரவைக்குள் சபாநாயகரின் முடிவுதான் இறுதியானது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே! எந்த முறையில் வாக்கெடுப்பு என்பது எல்லாம் அவரின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பது பலமுறை சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு, அமைச்சர்களாக இருந்தவர்களுக்குத் தெரியாததா?
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதில்லை - தேர்தல்மூலம்தான் அதனை ஈடேற்ற விருப்பம் என்பதில் தி.மு.க.வுக்கு தெளிவு இருக்கும்பொழுது தேவையில்லாமல் தி.முக.. இதில் அதீதமாக ஏன் நடந்துகொள்ளவேண்டும்? அதனால் தி.மு.க.வுக்கு என்ன லாபம்? லாபமில்லாததோடு மட்டுமல்லாமல், வீணான கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டது தானே மிச்சம்.
வேடிக்கைப் பார்த்துக் கொண்டல்லவா - சம்பந்தப் பட்டவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) இருந்தனர்!
பொதுவானவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை அலட்சியப்படுத்திவிட முடியாதே! நாமாகத் தேடிக்கொண்ட வீண் பழி இது!
வடநாட்டு தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் தி.மு.க.வைப்பற்றித் தூற்றித் தூற்றி செய்திகளையும், கருத்துகளையும் வெளியிடும் நிலைக்கு நாம் ஏன் ஆளாகவேண்டும்?
இதற்குமுன் சட்டமன்றத்தில் பலமுறை அமளிகள் நடந்ததுண்டு. குறிப்பாக 1988 இல் இந்த முறை அதற்கு நேர்மாறானது என்ற அடிப்படையில் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டும் தலைமைப் பண்பைப்பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார் (‘விடுதலை’, 18.2.2017).
1988 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜானகி அணிக்கும், ஜெயலலிதா அணிக்கும் பலப்பரீட்சை நடந்தபோது கலைஞர் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? அந்தப் பொருளில்தான் திராவிடர் கழகத் தலைவர் தம் அறிக்கையில் இப்பொழுது சுட்டிக்காட்டியிருந்தார்.
இப்பொழுது தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைவர் எப்படி அறிக்கை வெளியிட்டுள்ளாரோ - அதே முறையில்தான் அன்றைக்கும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். சபாநாயகருக்குரிய உரிமை குறித்தும் தெளிவுபடுத்தி இருந்தார் (‘விடுதலை’, 8.1.1988).
செய்தியாளர்கள் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் பாராட்டத்தகுந்ததுதானா?
செய்தியாளர்: நீங்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும், திராவிட கட்சிகளுக்கு தாய் கட்சியாக உள்ள தி.க.வின் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைவர் கலைஞர் வழி நடத்தாததே சட்டசபையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று தெரிவித்து இருக்கிறாரே?
மு.க.ஸ்டாலின்: திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் ஒரு மூத்த தலைவர். அவரை தலைவர் கலைஞர் மட்டுமல்ல, தலைவரைப் பின்பற்றி நடக்கும் நாங்களும் மிகவும் மதிக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டுபற்றி நான் விமர்சித்து அவருக்குரிய மதிப்பை குறைக்க விரும்பவில்லை (‘முரசொலி’, 21.2.2017, பக்கம் 4).
திராவிடர் கழகத் தலைவர் வைத்த குற்றச்சாட்டு சரியானதல்ல என்ற சொல்லி, அதற்கான காரணத்தையும் விளக்குவதுதான் சரியான விமர்சன முறை. அப்படி செய்திருந்தால், அதன்மூலம் திராவிடர் கழகத் தலைவரின் மதிப்பு எப்படி குறைந்து போகும்?
நாங்கள் மதிக்கும் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் -  நாங்கள் மதிக்கும் ஒரு மூத்த தலைவர் - நான் விமர்சித்து அவருக்குரிய மதிப்பை குறைக்க விரும்பவில்லை என்றால் என்ன பொருள்?
பதில் கருத்தைச் சொல்லியிருந்தால் கண்டிப்பாக திராவிடர் கழகத் தலைவரின் மதிப்புக் குறையப் போவதில்லை. மாறாக மதிப்புக் குறையும் என்றால், மதிப்பில்லா முறையில் வார்த்தைகளை கருத்துகளைக் கையாள நேரிடும் என்பதுதானே அதன் பொருள்.
மாறுபட்ட கருத்தைச் சொன்னால், அதனை ஏற்கும் பக்குவம் உள்ளவர்தான் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதுபோன்ற மூத்த தலைவர் அய்யா வீரமணி.
ஆனால், அவர் சொன்ன பதிலில்தான் சுற்றி வளைத்து, திராவிடர் கழகத் தலைவரை அவமதிக்கும் பொருள் பொதிந்திருக்கிறது என்பது வருத்தமான ஒன்றாகும்.
திராவிடர் கழகம் ஒரு சமுதாய புரட்சி இயக்கம் - தி.மு.க. தேர்தலில் போட்டியிடும் அரசியல் அமைப்பு. இந்த நிலையில், ஒரு சில நேரங்களில் கருத்து மாறுபாடு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததுதான்!
இதற்கு முன்பும் பல நேரங்களில் நிகழ்ந்ததுண்டு. விமர்சனங்கள் கடுமையாகக்கூட இருந்திருக்கின்றன. அதேநேரத்தில், மதிப்பைக் குறைக்கும் பேச்சுக்கே, வார்த்தைக்கே இடமில்லை.
அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுகூட தொழிற்கல்லூரிகளுக்கு மனு போடும் தகுதி மார்க்கை 50 சதவிகிதத்திலிருந்து 55 சதவிகிதமாக உயர்த்தியபோது, அதனைக் கண்டித்து ‘விடுதலை’யில் தலையங்கம் தீட்டினார் ஆசிரியர் கி.வீரமணி.
அதனை ஏற்றுக்கொண்டு, ஏற்கெனவே விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு இருந்தும், அவற்றையெல்லாம் அழித்து விட்டு, புது விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன என்பது எதைக் காட்டுகிறது?
தவறு என்று சுட்டிக்காட்டுவது தாய்க்கழகத்தின் கடமையல்லவா! அண்ணாவை ஏற்போர் இதனையும் ஏற்க வேண்டாமா?
‘‘வீரமணி எங்கு இருந்தாலும் பெரியார் கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டார்.’’ (‘குமுதம்‘ இதழ் பேட்டி, 3.12.1998).
‘‘பா.ஜ.க.வை ஆதரித்தால்கூட வீரமணி எங்களை மன்னித்து விடுவார். ஏனெனில், ஏற்கெனவே அவர் அ.தி.மு.க.வை மன்னித்திருக்கிறார்.’’ (‘முரசொலி’, 14.4.1998, முதற்பக்கம்).
இப்படிப் பேட்டி கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள்தான்.
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்மீது பற்றும், அவர்தம் எதிர்காலத்தைப்பற்றிய நல் விருப்பமும் கொண்டவர் திராவிடர் கழகத் தலைவர் என்பது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
தி.மு.க. தலைமைப் பொறுப்புக்கு மு.க.ஸ்டாலினை நான் முன்மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று, ‘‘கலைஞர் அறிவிப்பு - காலச் சிலாசாசனம்!’’ என்று அறிக்கை கொடுத்து உச்சி மோந்தவர் திராவிடர் கழகத் தலைவர் (‘விடுதலை’, 8.1.2013).
இப்படி தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியதற்காக - அவரின் சகோதரரால்  ‘‘அரசியல் விபச்சாரம் செய்கிறார் வீரமணி’’ என்ற அசிங்கமான கூடா விமர்சனத்துக்கு ஆளானவர்தான் அய்யா வீரமணி. அதற்கு எதிர்வினையாக எந்த ஒரு சொல்லையும் சொல்லவில்லை தமிழர் தலைவர் - அது அவருடைய பெருந்தன்மை.
அதெல்லாம் தெரிந்திருந்துமா ஆசிரியர் அவர்களின்மீது ஆத்திரமும், அவமதிக்கும் மறைமுக சொல்லாடல்களும்?
முகநூலிலும், வாட்ஸ் அப்-களிலும் அசிங்க அசிங்கமாக மலத்தைத் தோய்த்து பதிவு செய்பவர்கள் யார்? யார்? அவர்கள் ‘‘உறவு முறையில்’’  - யார் யாருக்குச் சொந்தம் - எத்தகையவர்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?
தி.மு.க. என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார் ஆசிரியர் வீரமணி, பகுத்தறிவுக் கொள்கைகளைப்பற்றி எல்லாம் நாராசமான நடையில் எழுதப்படுவதெல்லாம் தி.மு.க. தலைமைக்குத் தெரியாதா?
இழிவுகளையும், வசவுகளையும் சந்தித்து சந்தித்து, அவற்றை எருவாக்கி வளர்ந்ததுதான் திராவிடர் இயக்கம்!  தந்தை பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்களுக்கும் அவை எல்லாம் சந்தனமாலைகளே! தோழர்கள் கோபத்தோடு தலைவரிடம் இவற்றைக் கூறும்போதுகூட, ‘‘பந்தை அடியுங்கள் - காலை அடிக்கவேண்டாம்‘’ என்ற அறவுரை அறிவுரையைத்தான் கூறுகிறார் தமிழர் தலைவர்.
இப்பொழுதுகூட எங்கள் நிலை என்ன தெரியுமா? அ.தி.மு.க.வா - பி.ஜே.பி.யா? என்று கேட்டால், அ.தி.மு.க.தான்; தி.மு.க.வா - அ.தி.மு.க.வா? என்று கேட்டால், எங்கள் ஆதரவும், அரவணைப்பும் தி.மு.க.வுக்குத்தான்!  திராவிடர் கழகம் - கிளைக் கழகமல்ல: தாய்க்கழகம்!
தமிழ்நாட்டு உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வலிமை வாய்ந்த தி.மு.க. தவறான அணுகுமுறைத் தடத்தில் கால் வைத்து தேவையில்லாத கெட்ட பெயரை விலைக்கு வாங்குகிறதே - இதுவரை சம்பாதித்து வைத்துள்ள மக்களின் நல்லபிப்பிராயத்தை இழக்கிறதே என்ற வலியின் அடிப்படையில்தான் தாய்க்கழகம் ‘தவிப்பு’ உணர்வோடு ‘கடிந்து’ கொள்கிறது. இதனைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டாமா?
இன்னொன்றும் முக்கியம் - திராவிர் கழகம் தனித்தன்மையான சமூகப் புரட்சி இயக்கம்! தனது கருத்தைத் தனித்தன்மையோடு கூறும் தகைமை கொண்டது.
‘குடிஅரசு’ முதல் இதழ் தலையங்கத்தில் (2.5.1925) தந்தை பெரியார் குறிப்பிட்டார்களே,
‘‘நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற் சென்றிடித்தற் பொருட்டு’’ என்ற கருத்துதான் எங்களின் என்றென்றுமான நிலைப்பாடு! ஆறுவது சினம்!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...