Wednesday, November 16, 2016

ஆப்பதனை அசைத்துவிட்ட மந்திபோல...!

கருப்புப் பணம் ஒழிப்பு என்ற பெயரில் கடந்த 8 ஆம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தாணீர்.  அதனை வரவேற்றவர்கள்கூட உரிய போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால்வெகுமக்கள்அவதிப்படுவதுகண்டு சினம் கொண்டு எழுந்துள்ளனர். இந்த முன்னேற் பாடில்லாத நடவடிக்கையால், ஏற்பட்டுள்ள இழப்பு பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, ஏறக் குறைய ரூ.14.18 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் உள்ளதாக தெரியவந்துள்ளது.  இந்த ரூபாயில் முக்கால் பாகம் வங்கியிடம் உள்ளது. அதாவது ரூ.10 லட்சம் கோடி. மீதமுள்ள ரூ.4 லட்சம் கோடி பணம்தான் மக்களிடம் புழக்கத்தில் இருக்கும். மக்களிடமுள்ள இந்த ரூ.4 லட்சம் கோடிக்குள் தான்  கள்ள நோட்டு, கருப்புப் பணம், நேர்மையாக உழைத்த பணம் என்று எல்லாமே அடங்கும்  இந்த ரூ. நான்கு லட்சம் கோடிக்குள் பொது மக்களின் சிறுசேமிப்பு மற்றும் கையிருப்பு போன்றவை கணக்கில் எடுத்தால், ஒரு லட்சம் கோடிக்குள் வந்து விடும் (இன்று வரை 70,000 கோடி ரூபாய் வரை மக்களிடமிருந்து வங்கிக்கு சென்றுள்ளது).
அரசின் நடவடிக்கையால், இந்தியப் பங்குச்சந்தை தொடங்கிய 15 நிமிடத்தில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் அச்சடிக்க ரூ.20,000 கோடி செலவு ஆகிறது.  இந்தியாவில் ஒரு நாள் வியாபார பணப் பரிவர்த்தனை ஒரு லட்சம் கோடி என இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கணக்கிட்டுக் கூறியுள்ளது. அதில் சராசரியாக 25 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கணக்கிட்டாலும், இன்னும் சில நாள்களில், ஏற்படும் இழப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு வந்துவிடும்.
இந்த இழப்புகள் ஒரு புறமிருக்க ஏடிஎம்  இயந் திரங்களை புதிய ரூபாய் நோட்டுக்கு ஏற்றவாறு மாற்ற தனி மென்பொருள் அமைக்கும் செலவுகள், வங்கி ஊழியர்களின் பகுதி நேர பணிக்கான செலவுகள் (ஓவர் டைம்). இதையெல்லாம் கணக்கிட்டால் ரூபாய் பத்தாயிரம் கோடியாவது வரும். மோடியின் அதிரடி என்னும் விளம்பர அறிவிப்பால் சில மணித்துளிகளில் பல லட்சம் கோடி ரூபாய் விரயம் ஏற்பட்டுள்ளது.  இவை மட்டுமல்லாமல் தனிப்பட்ட நபர்களின் உழைப்பு, அவர் களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், நேரம் ஒதுக்குதல் போன்றவற்றை  இதோடு ஒப்பிட்டால், மோடி கூறியுள்ள  கள்ள நோட்டுகளின் மதிப்பு என்பது சொற்பமே ஆகும், மோடி தன்னுடைய அரசியல் மற்றும் தனிநபர் எதேச்சதிகார முடிவினால் ஒட்டு மொத்த இந்தியாவின் பொருளாதாரத்தை நேரடியாக அசைத்துப் பார்த்து இருக்கிறார். இனி வரும் காலங்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கும், ஆக அரசின் நிலைமை, புலிவால் பிடித்த கதையாகப் போகிறது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, கோவா வில் பிரதமர் மோடி முழங்கியிருக்கிறார். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், கோடானுகோடி ஏழை மக்கள் நிம்மதியாக தூங்கச் செல்லுகின்றனர்என்றும்,ஊழல்வாதிகள்தான்தூக்க மாத்திரைக்காக அலைகின்றனர் என்றும் சொல்லியி ருப்பது, வெகுமக்களின் வாழ்க்கை நிலைக்கும், மோடி யின் சிந்தனைக்குமிடையே மிகப்பெரிய இடைவெளி விழுந்திருப்பதை அறிய முடிகிறது.
மோடியின் இந்தப் பேச்சை படித்த வெகுமக்கள் - வங்கிகளின் முன் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள், இந்தியப் பிரதமரை எப்படியெல்லாம் வசைபாடியிருப் பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். பழைய காலத்து நீரோ மன்னனின் பேச்சுக் கவிச்சி மோடியின் வார்த்தைகளில் வீசுகிறதா இல்லையா?
மூன்று நாள், அய்ந்து நாள், ஒரு வாரம் பொறுத்திடுக - விடியல் பிறக்கும் என்று சொன்னவர்கள் இப்பொழுது டிசம்பருக்கு கைகாட்டுகிறார்கள்.
நீங்கள் சொல்லுகிற காலம்வரை எங்கள் வயிற்றுப் பசியைப் போக்க என்ன வழி என்று மக்கள் கேட்க மாட்டார்களா?
பசிக்கிறது என்றால் ரொட்டி சாப்பிடுங்கள் என்று சொன்ன நீரோ மன்னன்களின் பட்டியலில் இடம்பிடிக்க மோடி அரசு முயற்சி செய்கிறதா? எலிக்கறி சாப்பிடுங்கள் என்று உணவமைச்சர் கே.எம்.முன்ஷி ஒருமுறை சொல்லவில்லையா?
அன்றாடம்வேலைக்குச்சென்றுஅதன்மூலம் கிடைக் கும் கூலியைக் கொண்டு வந்து வயிற்றைக் கழுவும் மக்கள் செல்லாத நோட்டுகளை வைத்து என்ன செய்வார்கள்?
வங்கியின்முன் வரிசையில் நிற்க நேரிட்டால் அன்றைய கூலி நட்டம்தான். ‘டெபிட் கார்டு’, ‘கிரெடிட் கார்டு’ நோக்கி நாடு செல்லவேண்டுமாம். வக்கணைப் பேசுகிறார்கள் சில மே(ல்)தாவிகள் தொலைக்காட்சிகளில்.
மக்களுக்கு வரும் கோபத்துக்கு அளவேயில்லை. பணக்காரர்களும், பார்ப்பனர்களும், மேல்தட்டு ஊடகக் காரர்களும் மக்களை மக்கலாகப் பார்க்கிறார்கள் - பொறுமைக்கும் ஓர் அளவு வேண்டும். ஏழை - எளிய மக்களைச் சீண்ட வேண்டாம் - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...