அய்யங்கோட்டை துவக்கப் பள்ளி 1941ல் துவங்கியது என்பதற்கான அடையாளம் இது. பள்ளிச் சுவரில் எப்போதோ வெள்ளை பூசப்பட்ட தூணில் இந்த எண்கள் மட்டும் கடந்த காலத்தை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன,திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் சத்துணவுக் கூடமாக மாற்றப்பட்டுள்ள துவக்கப் பள்ளி (படங்கள் ம.ஹரிகரன்)
தமிழகத்தில் கணக்கிலேயே வராமல் எண்ணற்ற அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; பாழடைந்த கட்டிடங்களில் குழந்தைகள் படித்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், பள்ளிக்கல்வியின் தரம் மேலும் உயர வழிவகை செய்யப்படும் வகையில் நடப்பாண்டில் 5 புதியதொடக்கப்பள்ளிகள் தொடங்கப் படும் என்று விதி 110 ன் கீழ் முதல்வர்ஜெயலலிதா அறிவித்தார்.“ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டதால் தொடக்கப்பள்ளி வசதி சதவீதம் 98.30 ஆகவும், நடுநிலைப்பள்ளி வசதி90சதவீதமாகவும் உள்ளது.
இதைமேலும் மேம்படுத்தும் வகையில் நடப்பு கல்வியாண்டில் 5 புதியதொடக்கப்பள்ளிகள் தொடங்கப் படும். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 19 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளுக்கு 10 இடைநிலை ஆசிரியர்பணியிடங்களும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு 95 ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும்.
மேலும் இப்பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வகுப்பறைகள், கழிவறைகள், சமையலறைகள், குடிநீர் வசதிகள் போன்றவை ஏற் படுத்தித் தரப்படும். இதற்காக 28 கோடியே 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அவர்அறிவித்தார். பள்ளி கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர், சமையலறை, அறிவியல் ஆய்வகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளங்கள் கலை மற்றும் கைத்தொழில் அறைகள், கணினி அறைகள், நூலக அறைகள் மற்றும் பழுது சரிபார்த்தல் போன்றவற்றிற்காக 60 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத் தப்படும்; சென்னை மாநகரத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் வீடுகள் இழந்த மக்களுக்குமாற்று குடியிருப்பு வசதிகள் செய்யப் பட்டுள்ளது.
எழில் நகர்ப்பகுதியிலும் பெரும்பாலான பகுதியிலும் இரு தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும்.மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப்பதிவு கையாள்வதில் புதிய தொட்டுணர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத் தப்படும் என விரிவான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.இந்த அறிவிப்புகள் தொடக்கக் கல்வியில் தன்னிறைவை பெற்றது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிகின்றது.
முதல்வர் முன்வைத்துள்ள தொடக்கக்கல்வி குறித்தஇந்த கூற்று உண்மைதானா? உண்மையில் தமிழக தொடக்கக் கல்வியின் இன்றைய நிலையை அரசு மூடி மறைக்கிறது. பள்ளிக் கல்வி குறித்த ‘மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பள்ளி கல்வியின் முழுமையான நிலை குறித்த விபரங்களை வெளிப்படைத் தன்மையோடு அரசு முன்வைக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக புள்ளி விபரங்களின் அடிப்படையில் மிகைப்படுத்தப்பட்ட மோசடி விபரங்களையே அரசு அளித்து வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.
உண்மை நிலை என்ன?
தமிழகத்திலுள்ள 23,928 அரசு தொடக்கப் பள்ளிகள்; 5,053 உதவி பெறும்தொடக்கப்பள்ளிகள் மற்றும் 7,260அரசு நடுநிலைப்பள்ளிகள்; 1656 அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 37, 797 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 1,26,000 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
அதேநேரத்தில் 7130 சுயநிதி நர்சரி மற்றும்நடுநிலைப்பள்ளிகளில் 67,785 ஆசிரியர்கள் உள்ளனர் என்ற புள்ளிவிபரம் தெரிய வருகின்றது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகப்பெருமளவில் குறைந்துள்ளது. 18,000 அரசுதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 1000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. ஓராசிரியர் - ஈராசிரியர் மட்டுமே கொண்டுள்ள இப்பள்ளிகளில் எப்படி தரமான ஆரம்பக் கல்வியை கொடுக்க முடியும்? ஓராசிரியர் பள்ளியில் கற்பித்தல் நிலைமை மிகவும் பரிதாபம்.
விரயமாகும் பணி நேரம்
ஓராண்டுக்கு 220 நாட்கள் வேலை நாட்களாக உள்ளன. இதில்14 வகையான இலவசத் திட் டங்களை செயல்படுத்துவதற்காக கல்வித்துறை அலுவலகத்திற்கு செல்வதற்கும் அதுகுறித்த பதிவேடுகளை பராமரிக்கவும், மாதம்ஒருமுறை தலைமையாசிரியர் ஆய்வு கூட்டங்களுக்கு சென்றுவரவும், ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்ப்பு, ஆடு, மாடுகள், கோழிகள் கணக்கெடுப்பு மற்றும் சமூக நல திட்டங் களை செயல்படுத்தவும் மற்றும் பள்ளியின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் என ஒரு ஆசிரியரின் பணிநேரம் முழுமையும் விரயமாகி விடுகிறது. ஒரு ஆசிரியர் மட்டுமே 5 வகுப்புகளுக்கும் அனைத்துப் பாடங்களுக்கும் எப்படி வகுப்பெடுக்க முடியும் என்பதற்கான விளக்கத்தையும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கலாம் என ஆசிரியர் இயக்கங் கள் விமர்சிக்கின்றன.
பாழடைந்த கட்டிடங்களில் பச்சிளங்குழந்தைகள்
அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் அடிப்படைகட்டமைப்பு வசதிகளும் மிக மோசமான நிலையிலேயே உள்ளன. மாநிலம் முழுவதும் 10,000 த்திற்கும்மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பாழடைந்து இடியும் நிலையில் கட்டிடங்களும் வகுப்பறைகளும் உள்ளன. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செங்குத்தாக சரிந்து வருவதை தடுப்பதற்காக தனியார் பள்ளிகள் போன்று ஆங்கில வழி வகுப்புகளை துவங்கி வகுப்பறைகளிலிருந்து தாய்மொழியை விரட்டும் பணியை மேற்கொண்ட பெருமையும் முதல்வர் ஜெயலலிதாவையே சேரும். ஆனாலும் அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்தபாடில்லை.
ஆரம்பக்கல்வி தாய்மொழி வழிக்கல்வியாகத்தான் இருக்க வேண்டுமென்ற அறிவியல் பூர்வமான உலக நாடுகளின் நடைமுறைக்கு எதிரான இத்தகைய அணுகுமுறை எதிர்கால தலைமுறையை சுய சிந்தனை அற்றவர்களாக உருவாக்கிடவே வழிவகுக்கும்.அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கொடுப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கட்டமைப்பினையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் இதைச் செய்யாமல், இலவசத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சாதனை படைத்துவிட்டோம் என்று பேசுவதில் எவ்வித பயனும் இல்லை. 14 வகையான இலவச பொருட்கள் மற்றும்உபகரணங்களை வழங்கி வருவதால் அரசு பள்ளிகள் மேம்பட்டு விட்டனவா? மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர்ந்து விட்டதா? இது எதுவும் நிகழவில்லையே ஏன்? மாறாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் கல்வி வணிகமும் பெருகி வருகின்றது.
மூடப்படும் அரசுப்பள்ளிகள்
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால்அரசு உண்மை விபரத்தை வெளியிட மறுத்துவருகிறது. தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒற்றைப்படையில்தான் மாணவர் சேர்க்கை இருப்பதாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஒரே மாவட்டத்தில் 70 பள்ளிகள் மூடல்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருஒன்றியத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து தொடக்கப் பள்ளிகள் வீதம் மொத்தம் 14 ஒன்றியத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 70 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்று அரசுப்பள்ளி ஆசிரியர்களே கூறுகின்றனர்.புதிதாக திறக்கப்பட்ட பள்ளிகள், ‘தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் என ஒவ்வொரு ஆண்டும் அரசுஅறிவிப்பு வெளியிடுகிறது. ஆனால்ஏற்கெனவே தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் இன்றைய நிலையை கல்வி அதிகாரிகள் வெளிப் படையாக கூற மறுக்கின்றனர்.“திருவள்ளூர் மாவட்டம் கொல்லமதுராபுரத்தில் செயல் பட்டுவந்த தொடக்கப்பள்ளி சிலஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டதால் வேலன் கண்டிகை தொடக்கப் பள்ளிக்குத்தான் எங்கள் கிராமத்தைசேர்ந்த குழந்தைகள் செல்ல வேண்டியுள்ளது.
ஏரிக்கரை மீது இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். மழைக்காலத்தில் குழந்தைகளை எப்படி அனுப்ப முடியும். பெற்றோர்கள் கூடவே செல்லவும் முடியாது. ஆகவே உள்ளூரில்மீண்டும் பள்ளியை திறந்து செயல் பட வைத்தால் எங்களுக்கு பெரும் நிம்மதி” என்று அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூறுகின்றனர்.அதேபோன்று திண்டுக்கல்மாவட்டம் ஆத்தூர் தொகுதிக் குட்பட்ட அய்யங்கோட்டை தொடக்கப்பள்ளி மூடப்பட்டுவிட்டது. மேலும் அய்யங்கோட்டை புதூர் தொடக்கப்பள்ளியும் மற்றும்சிறுமலை தொடக்கப்பள்ளியும் மூடப்பட்டு விட்டன. அய்யங் கோட்டை துவக்கப்பள்ளியில் தற்போது பால்வாடி நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள அடைய கருங்குளத்தில் தனியார் மூலம் 1934ல் தொடங்கப்பட்ட பள்ளி பின்னர் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது.
இப்பள்ளியை சுற்றி புதிய புதியதனியார் பள்ளிகள் திறக்கப்பட்டதாலும் ஆசிரியர் எண்ணிக்கை இப்பள்ளியில் குறைந்ததாலும் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து இந்தாண்டு 2 மாணவர்கள் மட்டுமேபயின்றதாகவும் அம்மாணவர் களும் வேறு பள்ளிக்கு மாற்றப் பட்ட நிலையில் அப்பள்ளி நடப்பாண்டு மூடப்பட்டுள்ளது என்று கருங்குளம் கிராமத்து பொதுமக்கள் கூறுகின்றனர். இப்படி கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிமுகவும்- திமுகவும் போட்டி போட்டு மூடியுள்ளன.கல்வி வணிகமயத்தை ஊக்குவிக்கவும், தனியார் கல்வி முதலாளிகளை பாதுகாக்கவும் வேண்டும்என்பதே அரசின் திட்டம்.
அந்ததிட்டத்தை மிக சரியாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஜெயலலிதா அரசு. அரசுப் பள்ளிகள் பாதுகாப்பு குறித்து திமுக கேள்விகேட்டால், திமுகவை சேர்ந்த கல்வி முதலாளிகளுக்கு பிரச்சனையாகி விடுமல் லவா? ஆகையால் இரண்டு கட்சிகளும் இப்பிரச்சனையில் வாய்திறப்பதில்லை என்பதே ஊரறிந்த ரகசியம் என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் இயக்கத்தின் மூத்த ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
- நன்றி : தீக்கதிர் - 06-09-2016
No comments:
Post a Comment