Saturday, August 20, 2016

அன்னமளித்தால் புண்ணியமா?



30.6.1929- குடிஅரசிலிருந்து....
ஒரு அடியாருக்கு அன்னமளித்தால் இவ்வளவு புண்ணியம் என்று கணக்கு வாரியாக அதன் பலனாய் இவ்வளவு காலத்திற்கு மோட்சத்திலிருக்கலாமென்று வகுத்தெழுதி யிருக்கிறார்கள். இதைக் கேட்ட பிறகு, இத்தகைய தர்மம் சம்பந்தமான எண்ணம் வரு கிறதே தவிர வேறல்ல. இம்மாதிரியான காரியங்களினால் உண்மையான பரோபகாரமான காரியங்களுக்குக் குந்தகமேற் படுகின்ற தென்பதை நீங்கள் நன்றாய்க் கவனிக்க வேண்டும். இவற்றால் தான் நாடு முன்னுக்கு வருங்காரி யங்கள் தடைப் படுகின்றன.
எந்த தேசத்திலும் தர்மமில்லாமலிருக்கவில்லை. வெள்ளைக்காரன் தேசத்தின் தர்மம் நம்நாட்டுத் தர்மத்தைவிட பன்மடங்கு உத்தமமாயும் தேசத்திற்கும் சமூகத்திற்கும் உண்மை யான நன்மையளிப்பதாயுமிருக்கின்றது. வெள்ளைக் காரன் நாட்டு தர்மம் கிணறு நிரம்பி வழிவது போல அவன் ராஜ்யம் நிரம்பி நம் நாட்டிலும் வழிந்தோடு கின்றது.
அத்தகைய தர்மம் நிறைந்த நாட்டில் என்னவழக்க மென்றால் ஒருவன் தெருவில் பிச்சைக்கு வந்தால் உடனே போலீஸ்காரன் பிடித்துக் கொண்டு போவான். அங்கு பிச்சையிடுவது சோம்பேறிகளை வளர்க்கும் முறை என்பதை நன் கறிந்து கொண்டார்கள்.
வெள்ளைக் காரன் நாட்டில் படிக் காதவன் என்றால் அவன் வெட்கித்தலை குனிந்துவிடுவான். நம்நாட்டிலோ தர்மம் என்று வந்தால் நமக்கென்ன? நம்மாலான சாப்பாடு போட்டு விடுவோம். பிறகு அவன் தலைவிதி போலாகிறது. சரஸ்வதி நாக்கிலிருந்தால் எப்படியும் படித்துவிடுவார் என்ற தர்மந்தான் நமக்குக் கற்பிக்கப் பட்டிருக் கின்றது.
அவர்கள் முன்னேறும்போது நாம் இக்கதிக்களாக்கியிருக்கக் காரணமென்ன? நமது மதங்கள், தர்மங்கள் என்ற பலத்தத்துவங்கள்தான் நம்மை இந்நிலையில் வைத்திருக்கின்றன. அவர்கள் முன்னேற்றத்திற்குப் பலமும் பீரங்கியும் மட்டும் காரணமல்ல. சென்னை மாகாணத்தில் உயர்ந்த குஷ்டரோக சயரோக, மருத்துவ ஆஸ்பத்திரிகளும் உயர்ந்த கலா சாலைகளும், கல்லூரிகளும் அவர்களுடையதாகத் தானிருக்க காண்கின்றோம்!
தப்பான வழிகளில் பிள்ளைகளைப் பெற்று பள்ளியில் போட்டுவிட்டால் அவற்றை எடுத்து வளர்த்து சம்ரட்சிக்கும் அனாதை ஆசிரமங்களும் அவர்களுடையதாகத் தானிருக்கின்றன. தெருவிலும் நடக்கக்கூடாது அருகிலும் வரக்கூடாதென்று மிருகங்களிலும் கேவலமாய் நம்மால் நடத்தப் படுபவர்களையும் அவர்கள் சேர்த்துக் கல்வி அளித்து சமத்துவம் பாராட்டி மாக்களெனக் கருதப்பட்ட வர்களை அவர்கள் மக்களாக்கி வருவதைக் காண்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் எளிதில் மறக்க முடியாது அல்லது மறைக்கவும் முடியாது.
அவர்கள் நொண்டி, முடம், குருடர்களைக் கொன்று விடுகிறார்களா? அத்தகைய வர்களுக்கும் தம்சுய உதவியினால் எவ்வளவுக்கு ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு உதவிபுரிந்து வழிகாட்டி வருகின்றார்கள். இதனால் வெள்ளைக்காரன் தான் புத்திசாலியா? நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? என்ற கேள்வியும் கிளம்பக் கூடும் இதற்காக நாம் நமது முன்னோர்கள் வேரிலும் சுலபமாகக் குற்றம் சொல்லிவிட முடியாது. எந்தக் கொள்கை நீதியும், தர்மமும் காலத்திற்கும் இடத்திற்கும் சந்தர்ப்பதிற்கும் ஏற்றவாறு தானிருக்கும்.
ராமேசுவரத்தில் ஒரு செட்டியார் தர்மம் செய்வதற்காகக் சாணியும், பாலும் சுக்கு மட்டும் கொடுக்கிறார் என்றால் அதுபோல நாமும் இங்குச் சாணியை குவியலாய்க் கொட்டிக் கொண்டு வாரிக் கொடுப்பது தகுதியாகுமா? அந்தவிடத்திற்கு அவசியத்திற் கேற்றவாறு அது முக்கிய தர்மமாகவிருக்கலாம். அதற்காக நாம் அந்த செட்டியார் மீது குறை சொல்ல முடியுமா? முந்நூறு நானூறு வருடங்களுக்கு முந்திய காலத்துத் தர்மமென்ற காரியங்கள் இப்போது செய்ய முடியாதவைகளாகத்தானிருக்கும். அப்போது அவை அவசியமாக செய்யவேண்டியவைகளாகத் தானிருந்திருக்கும்.
அக்காலத்தில் தற்போதிருப்பது போன்ற துரிதமான போக்கு வரத்து சாதனங்களோ மற்றவசதிகளோ கிடையாது. அவ்வந்த நாட்டு மக்களுக்கு அவ்வந்த ஊரே சுவர்க்கம். அக்காலத்தில் அவர்கள் கிணற்றுத் தவளைகளை போலத் தானிருந்திருக்க முடியும். அப்பேர்பட்டவர் களுக்கு விளைச்சலும் அபரிமிதமாய் விளைந்து கொண்டிருந்தது. அக்காலத்தில் மழை பெய்வதற்கு அவசியமான காடு முதலியவை அடர்ந்திருந்ததால் பருவ மழைகள் தப்புவதில்லை.
இதனால் உழுதாலும் உழாமல் விட்டாலும் அறுவடைக்குக் குறைவில்லை. அப்போது அதிகமாக விளைந்தாலும் தற் போதைப் போல விளைந்த தானியம்  முழுதும் வெளி  ஊருக்குக் கொண்டு போகப் படாமல் பெரும் குழிகள் வெட்டி அவற்றில் புதைத்து வைப்பதும் வழக்கமாயிருந்து வந்தது.
அன்றியும், அக்காலத்தில் பிச்சைக்காரர்களும் மிக அரி தென்றே சொல்லலாம். எவ்வளவு விளைந்தாலும் வாரி வெளிநாட்டுக்கு அனுப்புவது என்ற முறை அக்காலத்தில் கிடையாது.  அதற்கு சாதனமும் கிடையாது.
அதனால்தான் இவ்வளவு பேருக்கு அன்னமிட்டால் இவ்வளவு புண்ணியமென்றும் எழுதிவைக்க இடமிருந்தது, அதனால் நம் நாட்டில் காலக்கிரமத்தில் பிச்சை எடுக்கும் சாதிகளென்றே பல ஜாதிகளும் தோன்றிவிட்டன. ஏதோ சாம்பலையும் மண்ணையும் பூசிக்கொண்டு வந்தாலும் சாமி என்று விழுந்து கும்பிடும் முட்டாள்கள் அதிகமிருக்கின்றார்கள் என்பதையறிந்து தான் பிச்சைக்காரர்களும் நாளுக்கு நாள் விருத்தியாகி கொண்டு வருகின்றனர். இத்தனைக் கோயில்களிருக்கையில் இன்னும் புதிதாகக் கோயில் கட்டுவது அவசியமாவென்று கேட்டால் பாவி தடுக்கின்றான். அவன் சொல்லைக் கேட்ட காதை லோஷன் போட்டுக் கழுவ வேண்டுமென்கிறார்கள்.
அக்காலத்தில் செல்வமிகுதியினால் செலவிடுவதற்கு வழியின்றி இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். தங்கள் விளைபொருள்களுக்குச் செலவு வேண்டுமென்ற முறையில் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு மேன்மேலும் தர்மம் என்னும் பெயரால் பலவாறு செலவிட்டு வந்தார்கள்.
அக்காலத்தில் எத்தனைக் கடவுளிருந்தாலும் பூசை போட்டு எவ்வளவு பேர் வந்தாலும் சோறு போடும் செல்வமும் செழிப்பு மிருந்தது. அதனால்தான் இவ்வளவு கடவுள்களும் அடியார் களும் ஏற்பட இடமிருந்தது. ஆனால் இப்போதைய கொள் கையும் மதக்கோட்பாடுகளும் கால தேசவர்த்த மானத்திற்கு ஏற்றபடியும் மனிதன் அறிவுக்கும் தன்மைக்கும் ஏற்றவாறுமிருக்க வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...