Friday, June 10, 2016

மதச் சார்பற்ற இந்தியத் துணைக் கண்டத்தில் இந்துத்துவா கல்வித் திட்டம் அரங்கேற்றமா?


தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் முறியடிக்கும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தேர்தல் முடிவுகள்  - திராவிட கட்சிகளுக்கு மாற்று ஏதுமில்லை என்பதற்கான நிரூபணம்!  அதிமுக வெற்றி மிகப் பெரியது என்றோ - தி.மு.க. தோல்வி பரிதாபமானது என்றோ சொல்லுவதற்கு இடமேதுமில்லை
வேதக் கல்வித் திட்டத்தை இந்தியா முழுமையும் செயல்படுத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதிரானியின் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அந்தத் திட்டத்தை தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் எதிர்த்து முறியடிக்கும் என்று எச்சரித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதிரானி விஜயவாடாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து, கோணிப்பைக்குள்ளிருந்து பூனைக் குட்டி வெளிவந்து விட்டது என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

அபாயகரமான அறிவிப்பு


இம்மாதம் (ஜூன்) 16 முதல் கல்விக் கூடங்களில் வேதப் பாடத்திற்குத் தனித் துறை துவக்க இருப்பதாக ஓர் அபாயகரமான அறிவிப்பைக் கொடுத்துள்ளார். நமது பழைய கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் வாய் நீளம் காட்டியுள்ளார்.

இப்படி ஓர் ஆபத்து வருகிறது என்பதை விடுதலை இன்றைக்கு 5 மாதங்களுக்கு முன்பே எச்சரித்திருந்தது (30-1-2016).

கடந்த ஜனவரியிலேயே கொடுக்கப்பட்ட திட்டம்

இந்தியாவிற்குப் புதிய கல்வி என்ற ஒரு திட்டத்தை காவி அமைப்புகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் அளித்தன.
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு (26.1.2016) அதனை விரிவாகவே வெளியிட்டிருந்தது - அதன் விவரம் இதோ:
குலக்கல்வி 
  • பெருநகரங்களில் உள்ள பள்ளிகள் 12 மணிநேரம் செயல்படவேண்டும், இரு பகுதிகளாக பிரித்து முதல்பாதி படிப்பும், அடுத்த பாதி தொழில் கல்வியும் வழங்கவேண்டும்.
  • முக்கியமாக பெற்றோர்கள் எந்த தொழில் செய்கிறார்களோ அந்தத் தொழிலில் ஆர்வமாக உள்ள குழந்தைகளுக்கு அந்தத் தொழிலை நவீன மயமாக்கும் முறையை கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • இருபால் மாணவர்கள் கல்விமுறை நமது கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல, ஆகவே நாடு முழுவதும் உள்ள இருபாலர்கள் கல்விபயிலும் பள்ளிகளை மூடிவிட்டு மாணவர்/மாணவி களுக்கு என்று தனித்தனி பள்ளிகளைத் துவக்கவேண்டும்.
  • அந்த மாநில மொழிகளில் மட்டுமே பாடங்கள் இருக்கவேண்டும். மேலும் இந்தியா முழுவதும் கல்வியில் சமஸ்கிருதம் முக்கியப் பாடமாக இருக்க வேண்டும்.
  • நாடு முழுவதும் அங்கன்வாடிகளில் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  • குழந்தைகளுக்கு சமஸ்கிருத உச்சரிப்புகள் மிகவும் எளிமை யாக இருக்கும்.
  • ஆகவே சமஸ்கிருத எழுத்துக்கள் மற்றும் வாக்கியங்களை குழந்தைகள் பேச கற்றுக் கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி பாடமாக அமைய வேண்டும்.
  • நாடு முழுவதும் இந்தி பொதுமொழியாக உள்ளது, ஆகவே இந்தியை அனைத்து மாநிலப் பள்ளிகளில் கற்றுத்தரும் போது வேறு மாநிலங்களுக்குச் சென்று பயிலவிரும்பும் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும்.
  • தேர்வு முறை என்பது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும், தேர்ச்சி பெறுவதற்கு தற்போதுள்ள முறையை மாற்றி 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்களே தேர்ச்சி பெற்றவர்கள் என்ற முறை வரவேண்டும்.
  • அனைத்துப் பள்ளிகளிலும் நவீன வருகைப் பதிவேடு மற்றும் கண் காணிப்புச் சாதனங்கள் அமைய வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் காலையில் ஆன்மீக வகுப்புகள் கட்டாயம் இருக்கவேண்டும்,

என்று அந்தப் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 26.1.2016)

மனுதர்மக் கொடியை பறக்க விடத் திட்டம்!


பச்சையாக பார்ப்பனீய - இந்துத்துவா வர்ணாசிரம - மனுதர்மக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான திட்டம் தானே இது?
மத்தியில் பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர வைத்தால் மீண்டும் ஆரியக் கொடிதான் பறக்கும், மனுதர்மம் தான் கோலோச்சும் என்று திராவிடர் கழகம் எச்சரித்ததே - அதுதானே இப்பொழுது நடக்கிறது.

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே..

அடல்பிஹாரி வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்தபோது மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவிருந்த முரளி மனோகர் ஜோஷி என்ற வைதிக வெறி கொண்ட பார்ப்பனர் 1998ஆம் ஆண்டில் மாநாடு ஒன்றை டில்லியில் ஏற்பாடு செய்தார். அந்தக் கூட்டத்தில் சரஸ்வதி வந்தனா பாடப்பட்டது. அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்ற கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் வெளி நடப்பு செய்தார் (23.10.1998) புதுச்சேரி, கேரளா, கருநாடகா, மே. வங்காளம், திரிபுரா, பிகார், பஞ்சாப், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

அந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கல்வியாளரான சிட்டியாங்லியா ஒரு பாடத் திட்டத்தைத் தயாரித்துக் கொடுத்தார். இப்பொழுது கொண்டு வரப்பட உத்தேசித்துள்ள புதிய கல்வித் திட்டம் என்பதும் அதுவும் கிட்டத்திட்ட ஒன்றேதான்!

முரளி மனோகர் ஜோஷி பல்கலைக் கழகங்களில் ஜோதிடம், வேத கணிதம் முறையையும் திணித்தார்.
மதச் சார்பின்மைக்கு விரோதமானது

மதச் சார்பற்ற அரசு என்பதை மறந்தும், மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையைக் காலில் போட்டு மிதித்தும், மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பிற்போக்குத்தனமான ஒரு கல்விக் கொள்கையை செயல்படுத்திட முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது. தேதியைக்கூட அறிவித்தும் விட்டார்.
இதற்கு எதிரொலி எப்படி இருக்கும் என்றும்  ஆழம் பார்க்கிறார். கட்சி, மாநிலங்களை மறந்து மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு இந்த கட்டத்திலேயே கடுமையாக எதிர்த்து முறியடித்தாக வேண்டும்.

தந்தை பெரியார் பிறந்த மண் முன்னெடுக்கும்!

இந்து ராஜ்ஜியம் அமைப்போம், ராம ராஜ்ஜியம் ஏற்படுத்துவோம் என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்துக்கு ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்து விட்டது என்ற தைரியத்தில், இத்தகு பிற்போக்குத்தனமான பழம் குப்பைகளைக் கொலுவேற்றத் துடிக்கிறது.

ஒன்றுபட்டு எதிர் கொள்வோம். அதற்குத் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் தான் துவக்கத்தைக் கொடுக்கும், முறியடிக்கும்.

விரைவில் இதற்கான  முயற்சியில் திராவிடர் கழகம் ஈடுபடும்! ஈடுபடும்!! ஈடுபட்டே தீரும்!!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


.

 1

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...