Monday, May 30, 2016

தமிழக அரசின் செயல்பாடுகள்-பிரச்சினைகள்அடிப்படையில் திராவிடர் கழகத்தின் ஆதரவும்,எதிர்ப்பும் இருக்கும்!

ஜூலையில் - திராவிடர் கழக கிராமப்புற பிரச்சார திட்டம்
நுழைவுத் தேர்வை நிரந்தரமாக தடை செய்க!
மத்திய பிஜேபி அரசின் ஈராண்டு ஆட்சி தோல்வி மயமே!
மத்திய அரசின் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் கமிட்டியின்  புதிய கல்விக் கொள்கைக்குக் கண்டனம்
தமிழக அரசின் செயல்பாடுகள்-பிரச்சினைகள்அடிப்படையில் திராவிடர் கழகத்தின் ஆதரவும்,எதிர்ப்பும் இருக்கும்!
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்
சென்னை மே 30 - திராவிடர் கழகத்தின் ஆதரவும், எதிர்ப்பும் ஆட்சியைப் பொறுத்தவரை  பிரச்சினைகளின் அடிப்படையில் இருக்கும் என்று திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலையில் கிராமப்புற பிரச்சார திட்டம் முடுக்கி விடப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
30.5.2016 திங்கள் காலை, சென்னை பெரியார் திடல் துரை.சக்கரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம் (2ஆம் பக்கம் பார்க்க) 

தீர்மானம் 2: 

ஆட்சியும் - கழகத்தின் அணுகுமுறையும்

தமிழ்நாட்டில் நடைபெற்ற 15ஆவது சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
சட்டமன்றம், ஜனநாயகப் பண்புகளுடன் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணக்கத்துடன் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்று இச்செயற்குழு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது.

தேர்தலில் போட்டியிட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் வரைதான் அரசியல் மாறுபாடுகளாகும்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் கட்சி, வாக்கு அளித்தவர்களுக்கும், வாக்கு அளிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி என்பது பொதுவான இலக்கணமாகும். எதிலும் அரசியல், காழ்ப்புணர்ச்சி அணுகுமுறைகளுக்கு இடமில்லாமல் தமிழக அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

அரசியல் கட்சியல்லாத சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், ஆட்சியாளரின் மக்கள் நலச் செயல்பாடுகளுக்கு ஆதரவையும், மாறான பணிகளுக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் என்றும், வாதாட வேண்டியவைகளுக்காக வாதாடும், பாராட்ட வேண்டியவைகளைப் பாராட்டும், போராட வேண்டியவைகளுக்குப் போராடும் என்ற வழக்கமான அணுகுமுறையை, முன்பு எப்பொழுதும் கடைபிடித்து வந்ததுபோலவே, இம்முறையும் பின்பற்றும் என்றும் கழக செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 3:
கிராமப்புற பிரச்சாரத் திட்டம்

மக்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கை, ஜாதி உணர்வு, கலாச்சாரச் சீர்கேடுகள், மதவெறி இவற்றிற்கு எதிராக அறிவியல் முறையில் அணுகி, மக்களிடத்தில் விழிப்புணர்வுப் பகுத்தறிவுப் பிரச்சாரம், மதுவிலக்கு, சமூகநீதி பற்றிய விளக்கம், அதன் தேவைகள் பற்றிய இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் - இவற்றை உள்ளடக்கிய; கிராமப்புற பிரச்சார திட்டத்தை ஜூலை முதல் தொடங்கி நடத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 4: 
கழக அமைப்புப் பணிகள்

திராவிடர் கழகத்தில் உட்பிரிவுகளான மகளிரணி, மகளிர் பாசறை, திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி அமைப்புகளை மேலும் வலுவாகக் கட்டி, கடைகோடி மக்களுக்கும் இயக்கப் பணிகள் போய்ச் சேரும் வகையில் அமைப்புப் பணிகளில் தேவையான மாற்றங்களைச் செய்து புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது!
(அ)    பொறுப்பாளர்கள் மாற்றம்.
(ஆ)    உறுப்பினர் சேர்க்கை.
(இ)    இலக்குகள் நிர்ணயம்.
(ஈ)    நூல்கள் விற்பனை, துண்டு அறிக்கைகள் விநியோகம்.
(உ) கரும்பலகைப் பிரச்சாரம்.
(ஊ)    பெரியார் பேசுகிறார் திட்டம் விரி வாக்கம், பெரியார் பயிற்சிப் பட்டறைகள்.
தேவைப்படும்போது ஜூலை மாதத்தில் கழகத் தலைவர் தலைமையில் தலைமைக் கழக குழுவே மாவட்டங்களுக்குச் சென்று கலந்துரையாடல் நடத்துவர்.

தீர்மானம் 5.(அ): 

மருத்துவ நுழைவுத் தேர்வை
நிரந்தரமாக நீக்குக!


மருத்துவக் கல்வி, பல் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு என்ற முறை சமூகநீதிக்கு எதிரானது. நீண்டகாலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்டு, சமீபகால மாகத்தான் கல்வி வாய்ப்புகள் அளிக்கப் பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள் நுழைவுத் தேர்வு மூலம் கடுமை யாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு என்பது சட்டரீதியாக தடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வைத் திணிப்பது சட்டவிரோதமானதுமாகும். நுழைவுத் தேர்வுதான் தகுதிக்கான அளவு என்றால் +2 தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெற்றது தகுதிக்கான அளவுகோல் இல்லையா என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லாத நிலையில், நுழைவுத் தேர்வைக் கண்மூடித்தனமாக திணிப்பது என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இச்செயற்குழு திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் நுழைவுத் தேர்வு கிடையாது என்பதை மாற்றி, நிரந்தரமாகவே நுழைவுத் தேர்வு கிடையாது என்பதை உறுதிப்படுத்த வேண் டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நுழைவுத் தேர்வுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டின் குரலை மதித்து, நுழைவுத் தேர்வுக்கு நிரந்தரத் தடையை ஏற்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. இது தொடர்பாக தனித் தீர்மானம் ஒன்றைத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5(ஆ) : 

டாக்டர்கள் ஓய்வு வயதை உயர்த்தக் கூடாது!


மாநில, மத்திய அரசின்கீழ் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 65 வயதாக உயர்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதானது - பல்லாயிரக்கணக்கான இளம் மருத்துவர் களுக்கான அரசுப் பணியைத் தடை செய்வதாகும்.

மண்டல்குழுப் பரிந்துரையின்கீழ் 27 சதவீத அடிப்படையில் மருத்துவர்களாக பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும்; தாழ்த்தப் பட்டவர்களுக்கான வாய்ப்பும் பறிபோவ தால் இந்த முடிவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
இல்லையெனில் உரிய வகையில் போராட்டத்தில் இறங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6: 
மத்திய அரசின் புதிய கல்விக்
கொள்கைக்குக் கண்டனம்


மத்திய அரசால் நியமிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டுள்ள டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் கமிட்டியின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கியமான ஆபத்துகளில் ஒன்று - இந்தியா முழு மைக்குமான புதிய இந்தியக் கல்விப் பணி சர்வீஸ் - (All India Educational Service) ஒன்றைத் துவக்கி, அதிக தகுதி யும், திறமையும் வாய்ந்தவர்கள் தேர்வு என்று கூறி, பொத்தாம் பொதுவில், தற் போது மாநிலங்களின் தனி கலாச்சாரம், சமூகநீதி முன்னேற்றம் - இவைகளைப் பறிக்கும் மறைமுகமானதொரு அபாயத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்!

இது ஏற்கனவே நெருக்கடி நிலை காலத்தில், மாநிலப் பட்டியலில் இருந்த கல் வியை பொதுப்பட்டியலுக்கு (Concurrent list)
கொண்டு செல்லப் பட்டதை மேலும் ஆழப்படுத்தும் வகையில் மத்திய அரசின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரத் திட்டமிடப்படுகிறது!
இதன் மூலம் ஹிந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிப்பதை மேலும் எளிதாக்கிடவே மறைமுகமாக ஆழ்ந்த உள்நோக்கத்துடன் இதை பரிந்துரைத்துள்ளதற்கு மாநில அரசுகள் ஒரு போதும் தம் இசைவைத் தரக் கூடாது என்றும், இதனை எதிர்த்து கல்வி ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7: 

மத்திய பி.ஜே.பி. அரசின் இரண்டாண்டு கால செயல்பாடுகள் முற்றிலும் தோல்வி மயமே!
மத்திய பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது இரண்டாண்டு கால பயணத்தை முடித்துள்ளது.
கடந்த இரண்டாண்டுகளில் எந்த விதமான மக்கள் வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. பல அறிவிப்பு களும் ஏட்டளவில்தான் உள்ளன.

(அ)    தொழிற்சாலைகள் தொடக்கமோ, புதிய வேலைவாய்ப்புகளோ இல்லை.

(ஆ)    பிரதமரின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களாலும் எந்தவித பலனும் நாட்டுக்குக் கிடைக்கவில்லை.

(இ)    மாறாக, இந்துத்துவா அஜண் டாவை செயல்படுத்துவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக, இந்துக்களின் புனித நதி என்று கூறிக்கொள்ளும் கங்கை நதி சுத்திகரிப்பு என்ற, மக்கள் நல வளர்ச்சிக்கு சம்பந்தமில்லாத ஒரு காரியத் திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொட்டி அழப்படுகிறது.

(ஈ)    கறுப்புப் பணத்தை மீட்டு, தலா ரூ.15 லட்சம் அளிக்கப்படும் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது. மாறாக, மோடி ஆட் சியில் வெளிநாட்டில் கறுப்புப் பணப் பதுக்கல் ரூ.50 லட்சம் கோடி!

(உ)    கல்வி காவி மயம், சமஸ்கிருதத் திணிப்பு, இந்தித் திணிப்பு இவற்றில் அக்கறை காட்டுகிறது.

(ஊ)    சமூகநீதிக்கு மாறான நடவடிக் கைகள்.

(எ)    பசு பாதுகாப்பு - மாட்டிறைச்சிக்குத் தடை.

(ஏ)    சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய வர்களும், சங் பரிவார்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் - அச்சுறுத்தும் வகை யிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும், ஆபாசமாகப் பேசுவது, வசைபாடுவது.

மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதான வழக்குகளில் தலையிட்டு அவர்களை விடுவிக்கும் வேலையை ஒரு பக்கத்தில் செய்துகொண்டே பயங்கர வாதத்தை எதிர்ப்பதாக வாய்ஜாலம் காட்டுவது போன்ற மக்கள் நல அரசு என்ற (Welfare State) தன்மைக்கு முற்றிலும் எதிராகத்தான் மத்தியில் உள்ள பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருவதால், இந்த இரண்டாண்டு கால ஆட்சியானது முற்றிலும் தோல்வி கண்ட ஆட்சி என்பதை இச்செயற்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...