Wednesday, April 13, 2016

பீகார் தலைநகர் பாட்னாவில்,முதல்அமைச்சர் நிதிஷ்குமாருக்கு “சமூகநீதிக்கான வீரமணி விருது”

கி. வீரமணி, டி. ராஜா, இலக்குவன்தமிழ் பங்கேற்பு

பீகார் தலைநகர் பாட்னாவில்,முதல்அமைச்சர்
நிதிஷ்குமாருக்கு “சமூகநீதிக்கான வீரமணி விருது”

அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு

பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு 2015-ஆம் ஆண்டுக்கான ‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினையும்’, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்  இயக்குநர் இலக்குவன் தமிழ். தனக்கு வழங்கப்பட்ட காசோலையை பீகார் மாநில  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார். உடன் சிறப்பு விருந்தினர் தமிழர் தலைவர் கி. வீரமணி. (பாட்னா, 9.4.2016)
பாட்னா, ஏப்.9 பீகார் முதல் அமைச்சர்
நிதிஷ்குமார் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ‘சமூக நீதிக்கான வீரமணி விருது’ பலத்த ஆரவாரத்திற்கும், வாழ்த்துதலுக்குமிடையே வழங்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும்  சிறப்பான விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அவ்விருது இன்று வழங்கப்பட்டது.
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பெரியார் பன்னாட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான விருதினை சமூகத் தளத்தில் அரும்பணி ஆற்றும் சான்றோர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்கு முன்னர் சமூக நீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மத்திய அமைச்சர்கள் சீதாராம் கேசரி, சந்திரஜித் யாதவ், டாக்டர் கலைஞர், ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி, நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அமைப்பாளர் வி.அனுமந்தராவ் மற்றும் குவைத், மியான்மர், சிங்கப்பூர் நாடுகளில் உள்ள சிறப்புப் பிரமுகர்கள் இவ்விருதினைப் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
அந்த வகையில் 2015-ஆம் ஆண்டுக்கான விருது, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு இன்று பாட்னாவில் வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா, பாட்னாவில், பீகார் மாநில மேலவைக்கான வளாகத்தில் உள்ள சிறப்புமிகு அரங்கத்தில் இன்று 9.4.2016 (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு துவங்கியது.
விழாவிற்கு வருகைதந்த அனைவரையும், விழாக் குழுவின் சார்பில் பாட்னாவில் விழா ஏற்பாடுகளைக் கவனித்துவரும் பீகார் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் பொதுச்செயலாளர் ரவீந்திர ராம் வரவேற்றுப் பேசினார்.
முனைவர் இலக்குவன் தமிழ்
அடுத்து, பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநரும், விழாக்குழுவின் தலைவருமான டாக்டர் இலக்குவன் தமிழ், அமைப்பின் நோக்கத்தையும், சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினைப் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினை பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு வழங்குவதை அறிவித்தவுடன், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பினர். பின்னர் முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து, 2015-ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினையும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்  இயக்குநர் இலக்குவன் தமிழ். பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மிக்க மகிழ்ச்சியுடன் விருதினையும், சிறப்பினையும் ஏற்றுக் கொண்டார். பீகார் சட்டப் பேரவைத் தலைவர் விஜய்குமார் சவுத்திரி விழாவிற்கு தலைமை வகித்து உரையாற்றினார்.
பிரமுகர்கள் வாழ்த்து
அடுத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர், பீகார் சட்ட மேலவைத் தலைவர் அவதேஷ் நாராயண் சிங்,  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ராஜா, ஜனதா தளத்தின் அகில இந்திய பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கே.சி.தியாகி, சமாதானக் கட்சியின் தலைவரும் சட்டப் பேரவை உறுப்பினருமான டாக்டர் அய்யூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதல் அமைச்சர் நிதிஷ்குமார் ஏற்புரை
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விருதினைப் பெற்றுக் கொண்டு சிறப்பான ஏற்புரை நிகழ்த்தினார். நன்றியுரையினை, பீகார் சட்டமன்ற மேனாள் தலைவர் உதய் நாராயண் சவுத்திரி மற்றும் திராவிடர் கழக வெளியுறவுச் செயலர் வீ.குமரேசன் நிகழ்த்தினார்கள்.
விழா நிகழ்ச்சியினை, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி தொகுத்து வழங்கினார். மதியம் ஒன்றரை மணி அளவில் விழா சிறப்பாக நிறைவு பெற்றது. வருகை தந்த அனை வருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...