கலாச்சார விழா என்ற பெயரால் அரசின் ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு
பாபநாசத்தை விட்டு இரவோடு இரவாக ஓடிய ரவிசங்கரின் திருவிளையாடல்
குடியரசுத் தலைவர்புறக்கணிக்கிறார், பிரதமர்மோடிபங்கேற்கிறார்
சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்!
நாடாளுமன்றத்தில் போர்க் கொடி- அவை ஒத்தி வைப்பு!
புதுடில்லி, மார்ச் 9_ உலகக் கலாச்சார விழா என்று கூறி, வாழும் கலை என்ற பெயரால் ஆசிரமம் நடத்தி வரும் கார்ப்பரேட் சாமியார் ரவிசங்கர், ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை ஆக்ரமித்து விழா நடத்தவிருப்பதற்கு நாடெங்கும் கண்டனங்கள் வெடித்துள்ளன.
வாழும் கலை என்ற முதலீடு இல்லாத நிறுவனத்தை நடத்தி வருபவர் சிறீ ரவிசங்கர். இவர் .தன்னிடம் இருக்கும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி யாக வரலாற்றிலேயே முதல்முயற்சியாக ‘கின்னஸ் சாதனை’ செய்யுமளவிற்கு உலக கலாச்சார விழா ஒன்றை நடத்த உள்ளாராம்.
இவர் இந்த விழாவை நடத்த தேர்ந்தெடுத்த இடம் டில்லியில் உள்ள யமுனா நதிக்கரை ஆகும். இந்த நிகழ்ச்சிக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் பேர் வரை வருவார்கள் என்று விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மோடி மற்றும் அவருடைய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள் இணையமைச்சர்கள் உட்பட பல துறை செயலாளர்கள் என கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு வெறும் 27 ஏக்கர் நிலம் மட்டுமே பயன்படுத்துவோம் என்று கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் நாள் டில்லி அரசு மற்றும் மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சரவையில் அனுமதி வாங்கினர். ஆனால் 2016-ஜனவரி முதல் சுமார் 1000 ஏக்கர் பகுதிகளை ஆக்ரமித்துள்ளனர். அங்குள்ள விவசாயிகள், குடிசைவாழ்மக்கள் மற்றும் கால்நடைகள் அனைத்தும் விரட்டப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிக்காக குடிசைகள் எரிப்பு
நிகழ்ச்சி நடக்கவிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடிசைப்பகுதி 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, சுமார் 200 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இதில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு குடிசைவாசிகள் அனைவரும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பணக்காரர்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்க, ஏழைகளின் குடிசைகள் எரிக்கப்படுகின்றன.
நிலத்தை ஆக்ரமிக்க சமூகவிரோதிகள் இப்படி குடிசைகளை எரித்ததுண்டு. ஆனால் இந்த ஆட்சியில் மூன்று நாள் நிகழ்சிக்காக குடிசைகளை பார்ப்பன கார்ப்பரேட் சாமியார்கள் திட்டமிட்டு எரிக்கின்றனர்.
நிலத்தை ஆக்ரமிக்க சமூகவிரோதிகள் இப்படி குடிசைகளை எரித்ததுண்டு. ஆனால் இந்த ஆட்சியில் மூன்று நாள் நிகழ்சிக்காக குடிசைகளை பார்ப்பன கார்ப்பரேட் சாமியார்கள் திட்டமிட்டு எரிக்கின்றனர்.
பல ஏக்கர் கணக்கில் அழிக்கப்பட்ட தாவரங்கள்
யமுனை 1997 ஆம் ஆண்டில் இருந்து கடுமையாக மாசடைந்துள்ளது. இதன் காரணமாக ஹவார்ட் பல்கலைகழகம், டில்லி பல்கலைக்கழகம், மும்பை டாடா சமூகவியல் கல்வி நிறுவனம் போன்றவை 15 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுளை நடத்தி யமுனையைக் காப்பாற்ற கரைகளில் பல்வேறு தாவரங்கள், மற்றும் யமுனையில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க ஒருசெல் நீர்வாழ் தாவரங்களை வளர்த்து பாதுகாத்து வரும் நிலையில் தனது மூன்று நாள் நிகழ்ச்சிக்காக சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து யமுனையைப் பாதுகாத்து வரும் தாவரங்கள் அழிக்கப்பட்டன. அதுமட்டுமா? ஆற்றின் கரை ஓரம் உள்ள வயல்வெளிகள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நதிநீரை மண்ணில் தேக்கிவைக்கும் ஆற்றல் கொண்ட சதுப்பு நிலங்கள் என அனைத்தும் பல ஏக்கர் கணக்கில் அழிக்கப் பட்டன.
எதிர்த்தவர்கள் மிரட்டப்பட்டனர்
ஆரம்பத்தில் இருந்த யமுனா நதியை வாழவைப்போம்(லிவ் யமுனா) என்ற அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த அமைப்பின் மீது திடீரென வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றார்கள் என்று கூறிப் பொருளாதார குற்றப்பிரிவின் மூலம் மிரட்டல் விடுத்தனர்.
கார்ப்பரேட் சாமியாரின் இந்த மோசடி குறித்து அந்த அமைப்பை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா பேசும் போது, 3 நாட்கள் நடத்தும் நிகழ்ச்சிக்காக சுமார் 1000 ஏக்கருக்கும் மேலான நிலத்தில் தரைதளம் செயற்கையாக சமப்படுத்தப்பட்டுள்ளது,இங்கே தற்காலிக பிளாஸ்டிக் குடில்கள், மிகப்பெரிய அளவிலான வாகன நிறுத்துமிடம், பிளாஸ்டர் ஆப் பாரிசினால் செய்யப்பட்ட செயற்கை மலைகள் - விலங்கு பொம்மைகள் மற்றும் செயற்கைத் தரை விரிப்புகள் போன்றவை போர்க்கால அடிப்படையில் தயாராகி வருகின்றன. யமுனை ஆற்றை தூய்மை செய்வதற்காக சுமார் 15 ஆண்டுகளாக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சுமார் 300 ஏக்கர் சதுப்பு நிலம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. நகரத்திற்குள்ளேயே இவர்கள் இது போன்ற ஒரு சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கும் செயலைச் செய்கின்றனர். இதனால் டில்லியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும், யமுனை ஆற்றில் உயிரினங்கள் வாழத்தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் இப்பகுதியின் சுற்றுப்புறச் சூழலையும் கடுமையாக பாதிக்கும் என்று கூறினார்.
120 கோடி அபராதம்
இது மாபெரும் சுற்றுப்புறச்சூழல் அழிப்பாகும். இது தொடர்பாக யமுனா பாதுகாப்பு அமைப்பு உட்பட 13 அமைப்புகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தன. இவர்களின் புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அக்குழு நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு செய்தது. தங்களின் ஆய்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது. வாழும் கலை அமைப்பு அனைத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது, வெறும் 27 ஏக்கர் நிலத்தில் மட்டும் நாங்கள் நிகழ்ச்சி நடத்துவோம் என்று கூறியும், செயற்கையாக எந்த ஓர் அமைப்பையும் அங்கு ஏற்படுத்த மாட்டோம் என்றும் எளிதில் மக்காத எந்த ஒரு பொருளையும் நாங்கள் பயன்படுத்தமாட்டோம் என்றும் உத்தரவாதம் அளித்தது,ஆனால் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலங்கள் பாழடிக்கப்பட்டுள்ளன. சுமார் 300 ஏக்கர் பரப்பில் யமுனைப் பாதுகாப்பிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருபவைகளாகும். மேலும் விவசாய நிலங்கள், கால்நடை மேய்ச்சல் நிலம் மற்றும்சதுப்பு நிலம் என அனைத்தும் பாழடிக்கபப்ட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அழிவுகளை விரைவில் ஈடுகட்ட முடியாது என்றும் இதற்காக வாழும் கலை அமைப்பிற்கு ரூபாய் 120 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
மேலும் கரைகளின் இருமருங்கிலும் உள்ள 45 முதல் 50 ஏக்கர் வெள்ள சமவெளி முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இது வெள்ள காலங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
காவல்துறையினரிடம் அனுமதி பெறவில்லை
கார்ப்பரேட் சாமியார் சிறீசிறீ ரவிசங்கர் இது சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி பற்றி பேசும் போது இதுவும் ஒருவகை முதலீட்டுக்கான கூட்டம் போலத்தான், உலகம் முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகின்றனர். அவர்களின் பார்வையில் நவீனங்கள் பட்டால்தான் அவர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று கூறியிருந்தார். அவரின் பேச்சின் மூலமே தொழிலதிபர்கள் வருவார்கள் என்று தெரிந்து விட்டது, பிரணாப் முகர்ஜி, மோடி மற்றும் பல்வேறு முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அது உலகம் முழுவதிலுமுள்ள முக்கிய பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரங்களாக வந்துள்ளன. இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சிக்கு காவல்துறையினரிடம் அனுமதி பெறவில்லை, தீயணைப்புத்துறையினரின் அனுமதியையும் பெறவில்லை.
கேள்விக்குறியாக நாட்டின் பாதுகாப்பு
வெளிநாட்டு முக்கிய விருந்தினர்கள் ஒரு நிகழ்சிக்கு வருகிறார்கள் என்றால் அவர்களின் பெயர் பட்டியல், எத்தனை நாள் இங்கே தங்குவார்கள், யார் யாரைச் சந்திப்பார்கள் போன்ற விவரங்களை வெளியுறவுத் துறைக்குத் தரவேண்டும் என்பது விதி, ஆனால் கார்ப்பரேட் சாமியார் ரவிசங்கர் தரப்பில் இருந்து எந்த ஒரு விவரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. வெளிநாட்டில் இருந்து பல தீவிரவாதிகள் இந்தியாவில் புகுந்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் போது ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் எந்த ஒரு விவரமும் இன்றி இந்தியாவில் நுழைந்துகொண்டு இருக்கின்றனர். கார்ப்பரேட் சாமியார்களுக்காக இந்தியாவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது, மோடி தலைமையிலான காவிகளின் அரசு.
பாலம் கட்டுகிறது இந்திய ராணுவம்
11ஆம் தேதி துவங்கும் இந்த நிகழ்ச்சிக்கு அத்தனை விதிகளையும் மீறி, யமுனா நதியின் குறுக்கே இரண்டு மிதக்கும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பாலங்களை அமைக்கும் பணியில் 150 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அதிகமான மக்கள் மிதக்கும் பாலத்தை பயன்படுத்தினால் விபத்து ஏற்படலாம் என்று ராணுவம் எச்சரித்த போதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோள் படி மிதக்கும் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. பாலம் அமைக்கும் பணிக்காக இந்திய ராணுவ வீரர்களுக்கு வாழும் கலை அமைப்பு கட்டணம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.மேலும் பாலம் அமைத்த வீரர்களுக்கு நிகழ்ச்சியின் போது விருதுவழங்கி கவுரவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்கள்.
மோடி கலந்துகொள்வாரா?
இந்த நிகழ்விற்காக தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் அனைத்து விதிகளை மீறியுள்ளதால் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ளமாட்டார் என்று குடியரசுத்தலைவர் அலுவலகம் கூறிவிட்டது. இந்த நிலையில் இந்த மோசடிக்கூட்டம் நடத்தும் வியாபார நிகழ்ச்சியில் மோடி கலந்துகொள்வார் என்றும் இது அவரது தனிப்பட்ட சொந்த நிகழ்வு என்றும், இதை அரசியலாக்கக் கூடாது என்றும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது, மேலும் தூய்மை இந்தியா மற்றும் கங்கைத் தூய்மை அமைப்பிற்கு நிதிவழங்க உள்ளதாகக் காரணம் காட்டி தூண்டில் போட்டு மோடி கட்டாயம் கலந்துகொள்ளும் வாய்ப்பு நிறையவே உள்ளதாகத் தெரிகிறது.
யாரிந்த ரவிசங்கர்
இவர் பாபநாசத்தைச் சேர்ந்த பார்ப்பனர், திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு இரவோடு இரவாக ஓடிப் போனவர் என்பதை அந்தப் பகுதியில் இப்பொழுது கேட்டாலும் பொது மக்கள் சொல்லுவார்களே.
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- ஜவகர்லால் நேருபல்கலைக் கழக மாணவர்களால் மனுதர்மம் எரிப்பு!
- மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த மர்மமும், பின்னணியும் என்ன?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- இன்றைய காலகட்டத்தில் சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு ஆபத்து! இதனை மாற்றியமைக்க காங்கிரசோடு அணி சேர்வது காலத்தின் கட்டாயம்
- உலக மகளிர் நாள் - உரிமை நாளாக அமைய உடனே விழியுங்கள் தோழியர்களே!
- சிறுபான்மையின மக்கள் மீது வெறுப்பைக் கக்குவதா? முன்னாள் நீதிபதிகள் கண்டனம்
- வெறுப்புணர்வைத் தூண்டுவோரை மோடி கட்டுப்படுத்த வேண்டும் அமீர்கான் வலியுறுத்தல்
- வளர்ச்சித் திட்ட ஆட்சியா? விஷத்தைப் பரப்பும் ஆட்சியா?
No comments:
Post a Comment