Wednesday, November 11, 2015

சுயமரியாதைத் திருமணத்தை எதிர்த்து வழக்கா?



உலகத்தில் எங்கும் கேள்விப்பட்டு இருக்க முடியாத அதிசயமான தகவல் இது. 1968 ஜனவரி 17 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டது.
இதுவரை நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் சரி, இனி நடக்கப்போகும் திருமணங்களும் சரி (With retrospective Effect) செல்லுபடியாகும் என்று சட்டம் கூறியது.
இதற்கிடையே சுயமரியாதைத் திருமணம் தொடர்பான வழக்கு ஒன்றில் தந்தை பெரியாரே சாட்சியம் அளித்தார்.  அந்தச் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுண்டு.
ஆடையூர் ரெங்கம்மாள் - சிதம்பரம் திருமணம் (கழகத் தலைவரின் மாமனார் - மாமியார் திருமணம்) 1934 இல் தந்தை பெரியார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது- சுயமரியாதை முறையில், அதனை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம், அந்தத் திருமணம் அக்னியை வலம் வராமல், சப்தபதி எடுத்து வைக்காமல் நடைபெற்றதால் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.
‘‘இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் சட்டப்படி யான பிள்ளைகளாகக் கருத முடியாது; இந்து மதத்தில் வைப்பாட்டிகளாக இருப்பதற்கும், அவர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கும் அப்பிள்ளைகளுக்குத் தகப்பன் சொத்தில் பங்கு பெற உரிமை உண்டு என்பதால் இவர்களது பிள்ளைகளுக்குச் சொத்தில் பங்குண்டு; ஆனால், இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டிகளின் பிள்ளைகளாகவே கருதப்படுவார்கள்’’ என்று ஜஸ்டீஸ் ராஜகோபாலன் அய்.சி.எஸ்., ஜஸ்டிஸ் சத்தியநாராயண ராவ் என்ற இரு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.
இவ்வளவு நடந்ததற்குப் பிறகும்கூட சுயமரியாதைத் திருமணங்கள் நடந்து கொண்டுதானிருந்தன. அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்திற்கான சட்ட சம்மதத்தை அளித்தார்கள்.
இந்தத் திருமணம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில்கூட சட்ட சம்மதம் பெற்று விட்டது. இந்த நிலையில், சுயமரியாதைத் திருமணத்தை எதிர்த்து வழக்குரைஞர் ஒருவர் பொது நல வழக்கொன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்றால், இதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்று இருக்க முடியாது.
சுயமரியாதைத் திருமண முறையில் சடங்குகள் கிடையாது. மோதிரத்தை மாற்றிக் கொள்கிறார்கள் - இந்து மதத்தில் இந்த முறை கிடையாது. ஒரு மத நடவடிக்கையை மற்றொரு மதத்தின்மீது திணிப்பது விதி மீறல் ஆகும். இந்துத் திருமணச் சட்டத்தில் இதைப் புகுத்தி இந்துத் திருமண திருத்த சட்டம் என்று கூறுவது சட்ட விரோதம் என்று மனுதாரர் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் (தலைமை நீதிபதி), நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இந்த வழக்கு நடைபெற்றது.
சீர்திருத்த  சுயமரியாதைத் திருமணம் செய்யவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. விரும்பியவர்கள் விரும்பிய முறையில் திருமணம் செய்து கொள்ளலாம். எனவே, இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதைத் தவிர வேறு வகையில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்பது வேறு விடயம்.
ஆனாலும் பார்ப்பனப் பழைமையைக் கட்டிக் காப்பதிலும், இந்து மதச் சடங்குகளைக் காப்பாற்றுவதிலும் இன்னும் பார்ப்பனர்கள் குறியாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
2013 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சி.எஸ்.கர்ணன் அவர்கள் முன்னிலையில் ஒரு வழக்கு வந்தது. இரு குழந்தைகள் பிறந்ததற்குப் பிறகு - கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது.
திருமணம் ஆனதற்குச் சாட்சியமும், சடங்கு முறை களும் இல்லாததால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார்.
கணவன் - மனைவிக்கிடையே பாலுறவு நடந்திருக் கிறது என்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இரு வரும் திருமணம் செய்துகொள்வதற்கான வயதினையும் எட்டியுள்ளனர்.
திருமணத்திற்குச் சடங்குகள் முக்கியமல்ல; பாலியல் உறவு இருந்தாலே அது திருமணம்தான் என்று தீர்ப்பு வழங்கினார்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கத்தின் தாக்கம் எத்தகைய வீறுதன்மை கொண்டது - இந்த நிலை தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களிலும் நினைத்தே பார்க்க முடியாது.
ஆனால், அண்மைக் காலங்களில் சினிமாக்களில் புரோகித கல்யாணங்களுக்கு இடம் அளித்து வருவது வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கதும்கூட! சினிமாத் துறை பார்ப்பனீயத்துக்குக் குற்றேவல் செய்கிறதா?
திராவிட இயக்கப் பின்னணியில் நடத்தப்பட்டு வரும் ஒரு தொலைக்காட்சியில் கோவில் திருமணம்பற்றி சிலாகித்து, ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு அளிக்கப்பட்டது - வெட்கப்படத்தக்கது, கண்டிக்கத்தக்கதுமாகும்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...