Monday, November 16, 2015

டாக்டர்களைப் பார்க்கும் போது...!



டாக்டர்களிடம் நம் உடம்பைக் காட்டி, மருத்துவ ஆலோசனை கேட் கும்போது, அவர்கள் கேட்கும் ஒவ் வொரு கேள்விக்கும் உரிய பதிலைக் கூறுவதோடு, அவர்கள் எழுதிக் கொடுத்தபடி, காலாவதி ஆகாத மருந் துகளை வாங்கி வேளை தவறாமல், முறைப்படி எடுத்துக் கொள்ளுதல் நமக்குச் சரியான அணுகுமுறை.
அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில், டாக்டர்களிடம் நோயா ளிகள் எடுத்துக் கொள்ளும் உரிமை - நம் நாட்டு டாக்டர்களைப் பார்க்கும் போது மிக அதிகம் எனலாம்.
அங்கே டாக்டர்களேகூட Ask Questions ‘ கேள்வி கேளுங்கள் என்றே நம் சந்தேகங்களை - அவை சரியான தாகவும் இருக்கலாம் அல்லது மாறான தாகவும் கூட இருக்கலாம் -அவை எப்படி இருப்பினும்கூட, பொறுமையாக பதில் கூறுவார்கள்.
சில டாக்டர்கள் நம் நாட்டில் நோயாளிகளுடன் அதிக நேரம் செல வழிக்க முடியாதவர்களாக, பொறுமை உள்ளவர்களாகவும்கூட இருப்பதில்லை.
மாறாக, மற்ற பலர், விளக்கமாக நோயாளிகளுக்கு எதனால்    இது வந்தது; எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை படம் வரைந்துகூட விளக்கிடத் தவறுவதில்லை. அத்தகை யோரிடம் வந்த நோயாளிகள் மிகவும் மன நிறைவோடு திரும்புவார்கள்.
படித்த நோயாளிகள் பலர், டாக்டர் களையே நோக்கி ஏன் அந்த மருந்து கொடுக்கக் கூடாது? இந்த மருந்து மாற்றம் செய்யலாமே என்று சற்று அதிகப் பிரசங்கித்தனமாக கேட்பதும் உண்டு.
சாதாரணமாக உள்ள எளிய கிராமத் துவாசிகளாக அதிகம் படிக்காதவர் களாகவும் உள்ள நோயாளிகள்கூட இப்போதெல்லாம் - ஏன் டாக்டர் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்து விடு கிறீர்களா? என்று கேட்பது சகஜமாகி விட்டது!
டாக்டர் வைக்காத செலவைக்கூட நோயாளிகள் வலியச் சென்று செல வழிக்கத் தயாராகவிருக்கும் விசித்திர யுகத்தில் நாம் வாழ்கிறோம்!
இதுபோலவே மருந்து மாத் திரைகளைத் தரும் டாக்டரிடம் ஏன் டாக்டர் ஊசி போட மாட்டீங்களா? என்று நச்சரிக்கும் நல்லவர்களும் உண்டு.
அதுபற்றி நரம்பியல் மற்றும் தோல் சிகிச்சை மருத்துவ நிபுணரான டாக்டர் வே. பாஸ்கரன் அவர்கள் வண்ணக் கதிர் (15.11.2015) இதழில் எழுதியுள்ள ஒரு அனுபவக் கட்டுரை இதோ: படியுங்கள்
ஜுரம், தலைவலி, உடம்பெல்லாம் வலி  மெடிக்கல்ல மாத்திரை வாங்கிப் போட்டுக்கிட்டேன். இரண்டு நாளாகுது, இன்னும் சரியாகலை டாக்டர் -  அய்ம்பது வயது மதிக்கத்தக்க அந்த பேஷன்டு என் முன் அமர்ந்தபடியே, முக்கலுடன் சொன்னார்.
விரைவாகத் தொண்டை, கண்கள், நாக்கு, வயிற்றுப் பகுதி, மார்பு எல்லாம் பார்த்து,  இது வைரஸ் ஜுரம். மூன்று முதல் அய்ந்து நாள் வரை இருக்கும். மாத்திரை, மருந்து எழுதித் தருகிறேன்  சரியாகிடும்  என்றேன். ஊசி கிடையாதா, டாக்டர்? என்னை எப்போதும் அயர் வடையச் செய்யும் கேள்வி இது. என்ன ஊசி வேணும், சொல்லுங்க, போட்டுறலாம் என்றேன் புன்னகைத் தவாறே.
ஒரு மிரட்சியான பார்வையுடன் என்னைப் பார்த்தார். ஜுரத்தைவிட கண்களில் வெப்பம் அதிகமாகத் தெரிந்தது.
எனக்கெப்படித் தெரியும் - நீங்க தானே டாக்டர் ? -  என்றார்! அப்படின்னா, நான் சொன்ன மருந்துகளை எடுத்துக்கோங்க  இரண்டு நாள் ரெஸ்ட் எடுங்க; நிறைய தண்ணீர் குடிங்க! இந்த வியாதிக்கு ஊசி கிடையாது.  அதில்லை டாக்டர்  ஊசி போட்டா சீக்கிரம் குணமாயிடும் இல்லே, அதுக்குத்தான் கேட்டேன் யார் சொன்னாங்க ? இது ஒரு தவறான எண்ணம். ஊசிபோட்டாலும், போடலைன்னாலும் மூன்று நாளைக்கு இந்த ஜுரம் இருக்கும்  எல்லா டாக்டர்களும் முதலில் ஊசிதான் போடுகிறார்கள். நீங்க மட்டும்தான்..  என்று குற்றம் சாட்டினார்!
நான் இந்த பேஷண்டை இழப்பது உறுதி ! வேறு ஒரு நல்ல டாக்டரிடம் போய்விடுவார்! ஒரு வேளைக்கு ஊசி, இரண்டு வேளைகளுக்கு மாத்திரைகள் வாங்கிக் கொண்டு, மூன்று நாட்கள் மருத்துவரைத் தொடர்ந்து சந்திப்பார். இதுதான் ராசி என்னும்  மாயை!
போலியோ ஜுரமாக இருந்து, ஊசிபோட்ட மறுநாள் குழந்தைகளுக்கு கால் விழுந்து விடுகின்ற அவலத்தை நான் பார்த்திருக்கிறேன். ஊசி வலியின் தீவிரத்தில், டாக்டரைப் பார்க்கப் போன வலிகள் மறைந்து கொள்வதும் உண்டு ! ஊசி போட்ட இடத்தில் சீழ்க்கட்டி உரு வாகி, எட்டிப் பார்ப்பதும் சாத்தியமே!
மருத்துவராய் என் முப்பது வருட அனுபவத்தில்  அவசியமின்றி  ஊசி போடும் பழக்கத்தைத் தவிர்த்து வந்திருக்கிறேன். நிறைய பேஷண்ட்ஸ் என்னை விட்டுப் போயிருக்கலாம். எனக்கு இழப்பில்லை என்றாலும் இதில் எனக்கு வருத்தம்தான்.
படித்த அறிவு ஜீவிகள் கூட, அசட்டுச் சிரிப்புடன்  ஊசி  கேட்பதைப் பார்த்து சலிப்படைந்திருக்கிறேன். ஜெனரல் பிராக்டிசில், ஒரு ஊசி (வெறும் பி காம்ப்ளக்ஸாகக் கூட இருக்கலாம்!), மூன்று வேளை மாத்திரை (அ) மருந்து, வெளிக்கடையில் ஒரு மாத்திரை/மருந்து எழுதிக் கொடுப்பது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.
அதுபோலவேதான்  டிரிப்ஸ்  எனப்படும், சலைன்/ குளுகோஸ் ஏற்று வதும்  வாயில் வெற்றிலை, புகை யிலைக்க றையுடன்,  வீக்கா இருக்குது டாக்டர், இரண்டு பாட்டில்சலைன் ஏத்திக்கிட்டுப் போகலாம்னு வந்தேன்  என்று வருபவர்களும் இந்த ஊசி ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்!
இவர்களுக்கு யார் சொன்னது எல்லாவற்றுக்கும் ஊசியும், டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டால் உடனடி நிவாரணம் என்று? அப்போ ஊசியே கிடையாதா ? என்னா டாக்டர் நீங்க? உண்டு அதற்கென்ற சந்தர்ப்பங் களும் உண்டு - மருந்து விழுங்கத் தெரியாத, முடியாத குழந்தை
- வாந்தியெடுக்கும் நோயாளி (மருந்து வெளியேவந்து விடும்)
- மயக்கம், கோமா நிலையில் இருக்கும் நோயாளி,
- வாய்வழி மருந்தாக  இல்லாத சில மருந்துகள்
இப்படி சில தருணங்களில் ஊசிதான் சரி !
சில மருந்துகள் (உதாரணமாக: ஆண்டிபயாட்டிக்ஸ்) இரண்டு வேளையும் ஊசி வழியாகச் செலுத்த வேண்டியிருக்கும்  அப்போது மருத்துவ மனையில் சேர்வது அவசியம்.
இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு மட்டுமே நிவாரணம் அளிக்கும் மருந்து களை வலி, ஜுரம் போன்றவைகளுக்கு  ஊசியாகக் கேட்கும் நோயாளிகளை நான் கூடிய வரையில் தவிர்க்கிறேன்.
அவசர நிலையில் அலர்ஜி, வாந்தி, ஆஸ்துமா போன்றவை தவிர, சாதாரண ஜுரம், தலைவலி, உடல்வலி போன்ற வைகளுக்கு ஏதோ ஒரு ஊசியைப் போடுவது  நோயாளியே விரும்பி னாலும்  எனக்கு உடன்பாடல்ல.
எனவே, மருத்துவர்களிடம் சென்று, ஊசி போடச் சொல்லி வற்புறுத்தா தீர்கள்;  நல்ல மருத்துவராகவே தொடர விடுங்கள். உங்கள் விருப்பத்திற்கு சிகிச்சை செய்வதைவிட, வியாதியின் தன்மை பொறுத்து மருத்துவர் சொல்லும் சிகிச்சை செய்து கொள்வது எல்லோ ருக்கும் நல்லது!
முக்கியமாக ஒன்று - இதிலிருந்து மாறுபடும் மருத்துவர்கள் நோயாளிகள், நண்பர்கள் பலர் இருக்கக் கூடும். அவர்கள் இந்தக் கட்டுரையைப் புறக் கணித்து விடலாம் - நல்ல சிகிச்சை யைப் போல!
(கட்டுரையாளர்: நரம்பியல்  மற்றும் தோல் சிகிச்சை மருத்துவர்)
(நன்றி:  வண்ணக்கதிர் 15.11.2015)


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...