தமிழ்நாடு வெள்ளக் காட்டில் மிதந்து கொண் டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கிறது.
மழைக்காக 60 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வந்து கொண்டுள்ளது.
கண்ணீரும், கம்பலையுமாகப் பொது மக்கள் பரிதவிக்கும் நிலையைத் தொலைக்காட்சிகளில் பார்க்கும் பொழுது - ரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டி யுள்ளது. குடியிருக்கும் வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன. குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துக் செல்லப் பட்டன. கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வெள்ளத்தால் அடித் துச் செல்லப்பட்ட கொடுமையை என்னவென்று சொல் லுவது! குறைந்தபட்சம் ஆற்றுக் கரையோரங்களில் வாழ்ந்த மக்களுக்காவது எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டாமா?
சென்னை மாநகரிலோ கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்து விட்டது. பாம்புகள், விஷப் பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்து விட்டன. 48 மணி நேரத்துக்குமேல் வீட்டுக்குள்ளும் இருக்க முடியாமல் ஒதுங்குவதற்கும் இடம் இல்லாமல் கொட்டும் மழையில் குழந்தைக் குட்டிகளுடன் மழை யில் நனைந்து கொண்டிருந்தனர் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்கவே கடினமாக உள்ளது.
மாற்றுத் துணிகள் இல்லை; அடுத்த வேளைக்கு உணவு இல்லை; கடு மழையால் வீட்டில் குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள் உடல் உபாதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு நடந்தும் நகராட்சி மாநகராட்சிப் பணியாளர்கள் போதிய நிவாரண உதவிக்கு முன்வரவில்லை; அரசு அதிகாரிகளைக் காணவில்லை. நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது என்று பொது மக்கள் குமுறிக் கொண்டுள்ளனர்.
அரசும் - உள்ளாட்சிகளும் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றே தெரியவில்லை. பொது மக்களின் மிகப் பெரிய அளவில் அதிருப்தியை அரசு தேடிக் கொண்டு விட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.
மழையின்போது ஆளுநரே (பட்வாரி) அனைத்துக் கட்சியைக் கூட்டி ஆலோசனை நடத்தியதுகூட உண்டே. (23.11.1979)
பல இடங்களில் விழுந்த மரங்கள் கூட அகற்றப் படாத நிலையில், போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. மட்டுமல்ல; மற்ற மற்ற கட்சிகளும் கூட அரசையும், நகராட்சி, மாநகராட்சிகளையும் குறை கூறியுள்ளனர் என்பதிலிருந்தே பாதிக்கப்பட்ட மக்கள் கூறுவது முற்றிலும் உண்மை என்பதை அறிய முடிகிறது. பொதுவாக நவம்பர், டிசம்பர் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்களாகும். அரசாங்கம் தொலைநோக்கோடு மழைக் காலங்களில் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் கணித்து தேவையான நடவடிக்கை களை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும்.
குறிப்பாக சென்னை மாநகராட்சியை எடுத்துக் கொண்டால் பொழியும் மழை போதிய அளவு வடிகால் இல்லாமல் தேங்கிய குட்டையாக ஆங்காங்கே காட்சி அளிக்கிறது.
நடைபாதைகளில் கடைகளும், அனுமதி பெறாத நடைபாதைக் கோயில்களும் தண்ணீர்ப் போகும் இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன.
வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, நடைபாதைக் கோயில்களை முற்றிலும் இடித்துத் தள்ளினார். ப.உ. சண்முகம் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போதும் சரி, அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோயில் களை இடிக்க ஆணை பிறப்பித்தார்.
இந்தியாவிலேயே அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கோயில்கள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான் என்று உச்சநீதிமன்றமே கூறியது: அவற்றை அகற்றிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதனைத் தமிழ்நாடு அரசு செய்யத் தவறிவிட்டது.
நடைபாதைக் கோயில்கள் மழைக் காலத்தையும் தாண்டி சாதாரண காலங்களில் நடைபாதைகளைப் பயன்படுத்தமுடியாமல் தடையாகத் தானிருந்து வரு கின்றன. இதனால் சாலை விபத்துகள் அதிகரிக்கும் நிலையும் உண்டு.
நடந்திருக்கும் அனுபவங்களைக் கொண்டாவது, எதிர் காலத்தில் மழை பெய்தால் வடிகால் தடையில் லாமல் இருப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
அன்னை மணியம்மையார் அவர்கள் ஒரு முறை எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு 24 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தால், தலைநகரமான சென்னை வாழ் மக்களின் அன்றாட வாழ்க்கை தத்தளிக்கும் நிலையில்தான் உள்ளது - இதுதான் தலைநகரின் தன்மை என்று எழுதினார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நிலையில்தான் இன்றும் தமிழ்நாட்டின் தலைநகரம் இருந்துவருகிறது.
மற்றொன்றும் கவனிக்கத்தக்கதாகும். கோடைக் காலங்களில் தலைநகர மக்கள் குடி தண்ணீருக்கே தவிக்கும் நிலைதான். அதே நேரத்தில் மழைக் காலத் தில் கொட்டும் மழை வீணாகக் கடலில் கலக்கும் நிலை தானே நிலவுகிறது.
வீணாகும் இந்த மழை நீரைச் சேகரிப்பதற்கு வளர்ந்த இந்த விஞ்ஞான காலத்தில் வாய்ப்புகள் கிடையாதா? மழைநீர் சேகரிக்கும் திட்டம் என்னாயிற்று?
பிரச்சினைகள் வரும் பொழுது மட்டும் லபோ திபோ என குதிப்பது, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதை பற்றிச் சிந்திப்பதில்லை என்பது ஆரோக்கிய மான நிலைதானா?
தற்போது தமிழ்நாடு அரசு - மக்கள் வெள்ளத்தில் தவிப்பதுபோல நிருவாகத்திலும் தத்தளித்துக் கொண்டு தானிருக்கிறது. இந்தத் தேக்க நிலை மாறினால்தான் செயல்பாடுகளும் நடக்க முடியும் என்பது பாலபாடம்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment