Saturday, November 21, 2015

தேவை ராம் ராஜ்ஜியம் அல்ல - பீம் (அம்பேத்கர்) ராஜ்ஜியமே! - பேராசிரியர் கே. எஸ். பகவான்



பெரியார் வழியில் நம்மை வழி நடத்த தலைவர் வீரமணி இருக்கிறார்!

பேராசிரியர் கே. எஸ். பகவான் எழுச்சியுரை
சென்னை, நவ.21 தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்கள் தமிழ் நாட்டையும் தாண்டி கருநாடகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது- தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு நம்மை வழி நடத்த தலைவர் வீரமணி இருக்கிறார் என் றார் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பகுத்தறிவு - முற்போக்கு எழுத்தாளர் ஆங்கில பேராசிரியர் கே.எஸ். பகவான்.
சென்னை பெரியார் திடலில் நேற்று (20.11.2015) நடைபெற்ற சுயமரியாதை இயக்க 90, நீதிக் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழாவில் உரை யாற்றுகையில் அவர் பேசியதாவது:
குஜராத் உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன் அவர்களே, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களே, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,  இங்கே என்னை அறிமுகப்படுத்தியுள்ளவரான பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,  நீதிக்கட்சி நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் 90 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
கருநாடகத்தில் தந்தை பெரியாரின் தாக்கம்!
தந்தை பெரியார் வாழ்க்கை மற்றும் தத்துவங் களால் ஈர்க்கப்பட்டவர்கள் நாங்கள். கருநாடகாவில் கடந்த 30, 35 ஆண்டுகளாக தந்தை பெரியார் தத்துவங்களை பரப்பி வருகிறேன்.  கருநாடக மாநிலத் தில் இயங்கிவருகின்ற மாபெரும் இரண்டு அமைப்பு களானதாழ்த்தப்பட்டவர்கள் அமைப்பு (தலித்த சங்கர்த சமிதி),  கருநாடக மாநில எழுத்தாளர்கள் சங்கம்  ஆகியவற்றுடன்  இணைந்து பணியாற்றி வருகிறேன். இந்த இரு அமைப்புகளும் தந்தை பெரியார்  தத்துவங்களின் தாக்கத்துடன் இயங்கி வருகின்றன. தந்தை பெரியார் உங்களைப்போலவே நாங்களும் பின் பற்றக்கூடிய மாபெரும் தலைவராவார். அகவேதான் இங்கு நான் வந்துள்ளேன். உங்கள் முன்பாக பேசு கின்றேன். சகோதரர் வீரமணி அவர்களுக்கு நினைவிருக் கிறதோ இல்லையோ, ஏற்கெனவே 20, 25 ஆண்டு களுக்கு முன்பாக இங்கே திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசியுள்ளேன்.
டாக்டர் வீரமணி அவர்களை எப்போதுமே என் னுடைய மூத்த சகோதரராகவே கருதி மதித்து வந் துள்ளேன். அவர்மீது எனக்கு அதிக மரியாதை உண்டு. உங்களைப்போன்ற பெரியாரின் தொண்டர்களுடன் இணைந்து இவ்வளவு காலமும் தந்தை பெரியார் தத்துவங்களை உயிர்ப்புடன் வைத்துள்ளார்.
பார்ப்பனீயத்தைக் காந்தியார் எதிர்க்கவில்லை
நான் இங்கே ஒரு கருத்தை சொல்ல விழைகின்றேன். மகாத்மா காந்தியை நாம் தேசத்தின் தந்தை என்று கூறிவருகிறோம். அவர் பிரிட்டி ஷாரிடம்  இருந்து அடிமைத்தனத்திலிருந்து இந்த நாட்டை விடுதலை பெற்றிட அவர் தம் வாழ்வை ஒப்படைத்துக்கொண்டார்.  ஆனால், நான் கருதுவது என்னவென்றால், இதைத் யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். ஆழமாக சிந்திக்க வேண்டு கிறேன்.  காந்தி பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலையைப் பெற்றுத்தந்ததுபோல், பார்ப்பனீயத்திலிருந்து விடுதலை பெற்றுத்தர முயற்சிக்கவில்லை. இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதே நேரத்தில் தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதையும் அதற்காக ஒப்படைத்துக்கொண்டார். ஆகவேதான், கருநாடக மாநிலத்தில் பெரியாரை நாங்கள் கருநாடகத்துக்கும் சேர்த்து விடுதலைக்காகப் போராடியவர் பெரியார் என்று மதிக்கின்றோம். நீதிக் கட்சியின் தாக்கம் கருநாடக மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீதிக்கட்சியின் தாக்கத்தால்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் கருநாடகத்திலும் தோன்றியது. அது இன்றும் தொடருகிறது.
கருநாடகத்தில் நல்வாடி கிருஷ்ண ராஜ உடையார் அளித்த இடஒதுக்கீடு
இங்கிலாந்து ஆட்சிக்காலத்தில் கருநாடகத்தில் மன்னராகத் திகழ்ந்தவர் நல்வாடி கிருஷ்ணராஜ உடையார். அவர் இடஒதுக்கீட்டுக் கொள்கையை கொண்டு வந்தார். இன்றும் யாராலும் அதை ஒழிக்க முடியவில்லை.
நீதிக்கட்சிக்கு முன்னர், திராவிடர் கழகத்துக்கு முன்பாக தமிழ்நாட்டில் எப்படியெல்லாம் ஜாதி பாகுபாடுகள் சீரழித்தன என்பதை சில பேச்சாளர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். இந்த மாபெரும் இயக்கங்கள் ஆற்றிய பணிகளால் அரசியல் கட்சிகளிலும் அதன் தாக்கம் விரிவாக்கப் பட்டன. அரசுகளின் நல்லாட்சிக்கு வழிவகுத்தன. அதேபோன்று கருநாடக மக்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன. அதன்மூலமாகவே கிருஷ்ணராஜ உடையார் இட ஒதக்கீட்டை கொண்டு வந்தார். அதன்மூலமே கல்வி, அரசுப்பணிகள் அனை வருக்கும் கிடைத்தன. வகுப்புகள், ஜாதிகள், மதங்களைக் கடந்து அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தியா முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்வில் தந்தை பெரியார் தத்தவங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. உ.பி. லக்னோவில் பெரியார் மேளாவும் கொண்டாடி உள்ளார்கள். மாயாவதியின் ஊக்கம், துணிவைக்கண்டு நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். அற்புதமான பணிகளை செய்துள்ளார். முசுலீம்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் அவரை வேறுபாடுகளை பார்க்காமல் நடந்துகொண்ட முதலமைச்சர் என்று பாராட்டியுள்ளனர்.
சனாதனத்தைப் பரப்பப் போகிறார்களாம்!
நான் கேரளாவுக்குச் சென்று திரும்பும்போது, கொச்சி விமான நிலையத்தில் டெக்கான் கிரானிக்கிள் ஏட்டில் ஒரு செய்தியைப் பார்த்தேன். சனாதன் சங் என்கிற அமைப்பு  சதுர்வர்ணா (நான்கு வருணங்கள்) என்று மக்களிடையே மறுபடியும் நான்கு வருண முறையை திணிக்க உள்ளதாக கூறியுள்ளது. இது மிகவும் அபாயகரமானது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் நான்கு வருண முறைக்கு எதிராக போராட்டம் நடந்துள்ளது. சனாதன் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்புச் செய்தி இதழை நான் திரும்பிச் செல்லும்போது சகோதரர் வீரமணியிடம் அளித்துவிடுகிறேன்.
வால்மீகி இராமாயணத்தின்படி ராமன் கடவுள் இல்லை. வால்மீகி இராமாயணத்தைப் படித்துப் பார்த்தீர்கள் என்றால், ராமனை கடவுள் என்று வால்மீகி எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லை. அவன் மனிதன்தான் என்று தெளிவாகவே வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
வால்மீகி இராமாயணத்தில் ராமன் கடவுள் இல்லை
வால்மீகி இராமாயணத்தில் ராமன்குறித்து குறிப்பிடும்போது, நாரதனே, அந்த மனிதனின் பண்புநலன்கள்குறித்து கூறு என்று கூறுகிறார். அப்படித்தான் இராமாயணம்குறித்து 100 கதைகளை நாரதன் கூறுவதாக வால்மீகி எழுதியுள்ளார்.
இராமாயணத்தில் இராமன் நான்குவர்ணங்களைப் பாதுகாப்பவன் என்றே குறிப்பிட்டுள்ளது. இராமன் (சாதுர் வர்ண ரக்ஷகா) வருணமுறையை காப்பவன் என்றே குறிப்பிட்டுள்ளது.
இங்கே பெரியார் நினைவிடத்தில் கல்வெட்டை நான் கண்டேன். பெரியார் சொல்கிறார், சூத்திரன் என்பவன் பார்ப்பனருக்கு அடிமை என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இராமன் பார்ப்பனர்களுக்கு உதவிகரமாக இருந்துவருகிறான். இராமனைக் கடவுளாக ஏற்காதவர்கள், இராமன் கோயிலுக்குப் போகாதவர்கள் என்று அனைவரையுமே வருணமுறையை ஏற்கச்செய்திட இராமாயணத்தின்மூலம் திணிக்கிறார்கள். சம்பூகன் கதையின்மூலமாக வருண முறையைத் திணிக்கிறார்கள். நம்புவதாக சொல்லப்பட்ட சொர்க்கத்தை அடைவதற்காக சம்பூகன் சூத்திரன். அவன் தவம் செய்கிறான். சில பார்ப்பனர்கள் ராமனிடம்சென்று சம்பூகன் தவம்குறித்து புகார் கூறுகிறார்கள். மன்னனாக உள்ள இராமன் சம்பூகனிடம் சென்று நீ எந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்று கேட்கிறான். நீ பார்ப்பனனா? சத்திரியனா? வைசியனா? சூத்திரனா? என்று நான்கு ஜாதிப் பிரிவுகளை குறிப்பிட்டு கேட்கிறான். சூத்திர னாகத்தான் பிறந்தேன் என் பெயர் சம்பூகன் என்று கூறிய உடனே இராமன் அவன் தலையை வெட்டி விட்டான். சம்பூகன்மீது எந்த தவறும் கிடையாது. இராமனை எப்படி  நல்ல அரசன் என்று ஏற்பீர்கள்? இராம ராஜ்யம் என்று கூறுவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?
ராம்ராஜ்ஜியமல்ல - தேவை பீம் (அம்பேத்கர்) ராஜ்ஜியம்
ஆகவேதான், நாங்கள் கூறுகிறோம். நாங்கள் இராம ராஜ்யத்தை விரும்பவில்லை. பீம் ராஜ்யத்தையே விரும்புகிறோம். பீம் ராஜ்யம் என்பது இப்போதுள்ள அரசமைப்புச்சட்டம். அனைவருக்கும் பொதுவானது. ஜாதிப்பிரிவுகள், பாலியல் வேறுபாடுகள் கிடையாது. அம்பேத்கர் அளித்த அரசமைப்பு சட்டம் அதைத்தான் கூறுகிறது.
அம்பேத்கர் இந்து சட்ட வரைவு என்பதை அறிமுகப்படுத்தினார். சட்டமாக்கிட முயன்றார்.  பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.  காங்கிரசு உள்பட அத்தனைக் கட்சியினரும் எதிர்த்தார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்குப்பின்னர் அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு சொத்துரிமை பரிந்துரைத்த அம்பேத்கர் சட்டம் கொண்டுவரப்பட்டுவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களும் சொத்துரிமை பெற்றார்கள்.
ஆகவே, இராமராஜ்யம் என்பதை எப்படி கூறமுடியும்? காந்தி தன்னுடைய இராமன் தசரதன் மகன் இராமன் அல்ல. அப்படி என்றால், எந்த இராமன் அவன்?
நமக்கு வீரமணி என்ற தலைவர் இருக்கிறார்
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கிறார்கள். திராவிடர் கழகம் என்ற மாபெரும் அமைப்பு உள்ளது. தந்தை பெரியார், அம்பேத்கர் தத்துவங்களுடன் மாபெரும் தலைவராக டாக்டர் கி.வீரமணி இருக்கிறார். இதுபோன்றதொரு நிலை மற்ற மாநிலங்களில் கிடையாது. தந்தைபெரியார் தத்துவங்களை டாக்டர் கி.வீரமணி நாடுமுழுவதம் பரப்பிவருகிறார். நாங்கள் அவரைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறோம்.
உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றி. என்னை இங்கே அழைத்த டாக்டர் கி.வீரமணிக்கு மிகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு பேராசிரியர் கே.எஸ்.பகவான் பேசினார்.
கே.எஸ்.பகவான் அவர்களின் ஆங்கில உரையின் சுருக்கத்தை பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் தமிழில் சிறப்பாக இறுதியாகச் சொன்னார்.


சமூகத் தத்துவங்களைக் கொண்ட தனித்துவமான இயக்கம் திராவிடர் கழகம்
சமூக தத்துவங்களைக் கொண்டுள்ள தனித்துவமான அமைப்பாக திராவிடர் கழகம் மட்டுமே உள்ளது. சமூக இயக்கமாக உள்ளது. அரசியல் என்பது மேலோட்டமான வாழ்க்கை முறையைமட்டும் கொண்டுள்ளது. கலாச்சார ரீதியிலான வாழ்க்கை முறையே மக்களின் வாழ்வில் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன என்பதை  நான் உணர்கிறேன். அரசியல்வாதிகள் வருவார்கள், போவார்கள். முதலமைச்சர்கள் வருவார்கள் போவார்கள். பிரதமர்கள்கூட வருவார்கள், போவார்கள். அதுபோன்றவர்களை மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்களை எப்போதும் மறந்துவிட முடியாது. கலாச்சாரம் எப்போதும் மகத்தானது. கலாச்சாரம் எப்போதும் மக்களை ஒன்று சேர்ப்பது. கலாச்சாரம்தான் மக்களை வாழ்விக்கிறது.
தந்தைபெரியார், கேரளாவில் நாராயணகுரு தேவ், மகாராட்டிரத்தில் மகாத்மா புலே, டாக்டர் அம்பேத்கர்,  அனைத்திந்திய அளவில் இந்த நான்கு மாபெரும் தலைவர்கள் சிங்கங்களாக உள்ளனர். இந்த நான்கு தலைவர்களும்தான் பொதுமக்களின் வாழ்வில் பிணைக்கப்பட்டவர்கள். ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள் என்று அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களின் உரிமை களுக்காக வாழ்நாள்முழுவதும் பாடுபட்டவர்கள்.  ஆகவே, எப்போதும் அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டியவர்கள். இதுவரை இந்த நான்கு தலைவர்களின் தத்துவங்கள் நாடுமுழுவதும் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...