Tuesday, November 10, 2015

சிங்கப்பூரில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனின் சேதுகாப்பியம் 6 காண்டங்களின் நூலை வெளியிட்டு தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்




நிகழ்ச்சியை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் சமூக சேவை மன்றம், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் சங்கம், தமிழ்மொழி பண்பாட்டுக்கழகம், சிங்கைத்தமிழ் இலக்கியக் களம் ஆகிய அய்ந்து அமைப்புகள் கூட்டு ஏற்பாட்டாளராக இணைந்து சிறப்பாக நடத்தியது.
காப்பிய நூலை பற்றி கருத்துரை வழங்கிய பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன் காப்பிய நூலுக்கு சேது என்று பெயர் வைப்பதற்கு காரணமாக நூல் ஆசிரியரின் பெயராகவோ, அவரின் மனைவியின் பெயராகவோ, இராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதனால் சேது நாட்டை குறிக்கும் வகையிலோ இருக்கலாம் என்று குறிப்பிட்டார். மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பாக உள்ளதை எடுத்து சொல்லி இவ்வளவு கவிதைகளை இந்த புதுகவிதை காலத்தில் யார் படிப்பார்கள் என்ற வினாவை நூல் ஆசிரியர் வா.மு. சேதுராமணிடம் கேட்டபோது யார் படிக்கிறார்களோ இல்லையோ நான் எழுதுவேன் அது யாரேனும் ஒருவருக்கு பயன்படும் என்று கூறி நூல் ஆசிரியரின் தமிழ்இலக்கிய உணர்வை பாராட்டினார். மேலும் பல சமுதாயக் கவிதைகளும் உள்ளே இடம்பெற்றுள்ளன. பகுத்தறிவு சார்ந்து நிறைய எழுதியுள்ளார். தன்னை ஒரு இடத்தில் பகுத்தறிவு பக்தர் என்று குறிப்பிட்டுள்ளதை கூறி அவரின் கவிப் புலமையையும் பாராட்டினார்.

முனைவர்இரத்தினவேங்கடேசன் கருத்துரையில் காப்பிய நூலை பற்றி முன்னுரையில் தெளிவாக காப்பியத்தின் கதையை எழுதியுள்ளார். அதனை படித்துவிட்டு நூலின் உள்ளே உள்ள கவிதைகளை படித்தால் பெருங்கவிக்கோ-வின் கவிப்புலமையும், எழுத்தில் கையாண்ட சிறப்புகளையும் தெரிந்துக் கொள் ளலாம் என்று சுவைபட சுருக்கமாக விளக்கி கூறினார். மேலும் பெரியார் அண்ணா போன்ற அறிஞர்களை பற்றியும் எழுதியுள்ளார், இறை மறுப்பு உடையவரா? ஏற்றவரா? என்பதை நூல் ஆசிரியர் தான் அவரின் ஏற்புரையில் கூற வேண்டும் என்று கூறி  முடித்தார்.
வாழ்த்துரை வழங்கிய மு.அ.மசூது, மு.ஹரிகிருஷ் ணன், வீ. கலைச்செல்வம்ஆகியோர் பெருங்கவிக்கோவை பாராட்டி தங்களுக்கும் அவருக்கும் உள்ள நீண்டகால தொடர்பை  நினைவுக்கூர்ந்தார்கள்.
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ஏற்புரையில் சிங்கப்பூரில் அவரின் நூல்கள்தமிழர்தலைவர்ஆசிரியர்கி. வீரமணி அவர்களால் வெளியிடப்படுவதை மகிழ்ச்சியாக குறிப்பிட்டு அதற்கு ஏற்பாடு செய்த சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கழகத்தின் தலைவர் நா.ஆண்டியப்பன் அவர்களுக்கும் ஆதரவளிக்கும் மற்ற மன்றங்களுக்கும் நன்றி கூறினார். தந்தை பெரியார் இல்லையென்றால் தமிழர்கள் யாரும் உயர்ந்திருக்க முடியாது, நானும் இந்த அளவுக்கு பாரட்டப்படும் அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது  என்று நன்றியோடு நினைவுக்கூர்ந்தார். மேலும் அந்த நன்றியை மறந்த சில தமிழர்கள் இன்று பெரியாரையே குறைக்கூறுகிறார்கள் என்று கூறி வருத்தப்பட்டவும் செய்தார். சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளதாகவும் குறிப் பிட்டார். பெரியாரின் கொள்கையை பரப்பி வரும் தமிழர் தலைவர்ஆசிரியர்கி. வீரமணி அவர்களை பாராட்டி வாழ்த்துக் கவிதையை வாசித்து ஏற்புரையை முடித்தார்.
சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தன்மான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் திராவிட இயக்கத்தின் அசையும், அசையா சொத்து என்று குறிப்பிட்டு அவரின் துணைவியாரின் சிறப்பை பற்றியும் அவரின் தம்பியை பற்றியும் கூறினார். (அப்போது பெருங்கவிக்கோ கண்ணீர் விட்டார்). தமிழ் இலக்கியத்தின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக நூல்களாக எழுதிகொண்டு உள்ளார். அவரை பாராட்டி வழங்கப்பட்ட 10 லட்சத்தையும் வங்கியில் போட்டு லட்சாதிபதி ஆகாமல் இப்படி காப்பியங்களாக எழுதி வருகிறார் என்ற செய்தியை கூறி பாராட்டும் போது அவையில் இருந்தவர்களுக்கு பெருங்கவிக்கோ மேல் உள்ள அன்பை மேலும் பல மடங்கு உயர்த்தியது.
 தந்தை பெரியார் அவர்கள் தமிழ் மொழியின் வளர்ச்சியின் மீது கொண்ட அக்கறையை கூறி நீசபாசை என்றிருந்த நிலையை மாற்றி இன்று செம்மொழி என்று அனைவராலும் போற்றப்படுகிற நிலைக்கு அடித்தள மிட்டு உழைத்தார். பெரியார் எப்போதுமே வள்ளுவர் கூறுகிறார் அதனால் நான் கூறுகிறேன் என்று கூற மாட்டார். நான் கூறுவது திருக்குறளில் உள்ளது அதனால் கூறுகிறேன் என்று கூறுவார். காரணம் வள்ளுவருக்கு மேல் யாரும் கூறிடமுடியாது, கூறக்கூடாது என்றிருந்தால் ஒரு மொழி வளர்ச்சியடைய முடியாது.  
அது பகுத்தறிவுக்கும் முரண்பாடான ஒன்றாகும் என்று குறிபிட்டது சிந்திக்க வைத்த செய்தியாக இருந்தது. மேலை நாட்டு அறிஞர்பெர்ண்ட்ஷா துணிச்சலுடன் குறிப்பிடுகிறார் நான்  தாண்டி பெருமையாக எழுதுக் கூடியவன் (better than Shakespeare)  என்று தன்னம் பிக்கையுடன் எழுதினார். அந்த தன்னம்பிக்கை  நம் இலக்கியவாதிகளுக்கு வரவேண்டும், அந்த முயற்ச்சியில் செய்லாற்ற வேண்டும். அந்த வகையில் பெருங்கவிக்கோ தன்னம்பிக்கையுடன் விடா-முயற்ச்சியுடன் பல காப்பியங்களை எழுதி வருகிறார்என்று பாராட்டினார். மேலும் புரட்சிகவி பாரதிதாசன் பற்றியும், பெரியார் பற்றியும் பல சுவையான செய்திகளை கூறி முடித்தார். (முழு உரை பின்னர் வெளியிடப்படும் தனியாக வரும்)
பெருங்கவிக்கோவா.மு. சேதுராமன்இயற்றிய சேது காப்பியம் 6 காண்டங்களின்நூல்களை தமிழர்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட முதல் நூல் தொகுதியை தமிழ்வள்ளல்நாகைதங்கராசு பெற்றுக் கொண்டார். தொடர்ந்து விழாவுக்கு வந்திருந்த தலைவர்கள் அனைவரும் ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி அவர்களிடம் பெற்றுக்கொண்டு ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் சுப. அருணாசலம் நெறிப்படுத்தி வழங்கினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...