Saturday, October 24, 2015

பா.ஜ.க. ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் படுகொலைகள்



அரியானா மாநிலம் பிஜேபி ஆட்சியின்கீழ் இருந்து வருகிறது. அம்மாநிலம் சோனேபட் மாவட்டத்தில் கோசுனா பகுதியைச் சேர்ந்த கோவிந்த் 15 வயதுடைய தாழ்த்தப்பட்ட சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். (22.10.2015) வீடு புகுந்து புறா ஒன்றைத் திருடினான் என்று அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறையிடம் சிறுவனின் தாயார் கண்ணீரோடு முறையிட, அவரிடம் ரூபாய் 10 ஆயிரம் பெற்றுக் கொண்டபோதிலும் தாயாரிடம் அந்தச் சிறுவனை உயிரோடு ஒப்படைக்கவில்லை என்பது எத்தகைய கொடூரம்! 
வீட்டுப் புழக்கடையில் தூக்கில் தொங்க விடப்பட்ட அந்தச் சிறுவனின் உடல் முழுவதும் காயங்கள் - ரத்தக் கட்டுகள்! காவல்துறை  சிறுவனின் உடலைப் பதம் பார்த்து விட்டது என்பதுதான் உண்மை. சிறுவனின் உடலை வாங்க மறுத்து உற்றார், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேர சமரசத்துக்குப் பிறகு இரண்டு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தக் கொடூரம்  நிகழ்வதற்கு  இரண்டு நாட்களுக்கு முன் (20.10.2015) தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரு பச்சிளம் சிசுக்கள் எரிக்கப்பட்ட கொடுமை - அரியானாவில் மட்டுமல்ல; இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் கொழுந்து விட்டு எரிகிறது.
அரியானா மாநிலம் அதே பரிதாபாத் மாவட்டத்தில் சோன்பேத் கிராமத்தில் உயர்ஜாதி வெறியர்களான ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.  இரண்டரை வயது பெண் குழந்தையும், ஒன்பது மாத ஆண் குழந்தையும் தீயில் கருகிப் பலியானார்கள். பெற்றோர்களும், உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். அதே அரியானா மாநிலத்தில் யமுனா நகர் தவ்லத்பூரில் தாழ்த்தப்பட்ட சமூக வாலிபன் ரஜத் (வயது 21) கொளுத்தப்பட்டுள்ளார் (21.10.2015).
தொடர்ந்து அப்பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதானது பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு குழந்தைகள் படுகொலைப் பின்னணியைப் பற்றி விசாரிக்கும்போது - அது 1994ஆம் ஆண்டுக்கு நம்மை இட்டுச் செல்லுகிறது. 1994ஆம் ஆண்டு அந்தக் கிராமம் தாழ்த்தப்பட்டோருக்கான ஊராட்சித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அது முதற்கொண்டே தாழ்த்தப்பட் டோர் மீதான வன்மத்திற்குக் கொம்பு சீவப்பட்டு விட்டது.
2010ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில்   தீ வைத்துக் கொளுத்தப்பட்ட குழந்தைகளின் பெரியப்பா வெற்றி பெற்று ஊராட்சித் தலைவர் ஆனார் என்றாலும் அவர் ஒரு முறைகூட ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் செல்ல முடியாத அளவு நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன. ஊரை விட்டே அவர் சென்றுவிட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டார்; காவல்துறையிடம் புகார் கொடுத்தும் பயன் இல்லை. உள்ளூரில் நடைபெற்ற சண்டையில் மூவர் கொல்லப்பட்டனர். போலிப் புகாரின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவரும் அவரின் உறவினர்கள் இருவரும் சிறையில் அடைக்கப் பட்டனர்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வீட்டில் இரு குழந்தைகள் இப்பொழுது தீயூட்டி எரிக்கப்பட்டனர்.
படுகொலையைவிட மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், அந்தக் குழந்தைகளை வெளியார் யாரும் கொன்றுவிடவில்லை. குழந்தைகளின் பெற் றோர்களே தீயிட்டு எரித்துள்ளனர் என்று அபாண்டமாக குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு ஜாதிச் சாயம் பூச வேண்டாம் என்று செய்தியாளர் களிடமும் தெரிவித்துள்ளார் முதலமைச்சர்.
முதலில் பாதிக்கப்பட்ட அந்தக் கிராமத்துக்குச் சென்றிட முதல் அமைச்சர் திட்டமிட்டிருந்தார். கடைசி நேரத்தில் அதனை ரத்து செய்து விட்டார். அதற்குக் காரணம் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த உயர் ஜாதிக்காரர்கள் 12 பேர் முதல் அமைச்சரைச் சந்தித்ததுதான்.
இதற்கிடையே எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல மத்திய பிஜேபி அமைச்சர் வி.கே. சிங் திருவாய் திறந்தார்.
மாநிலங்களில் நடக்கும் சட்ட ஒழுங்குப் பிரச்சினைக்கு அந்தந்த மாநில அரசுகளே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை கூறித் திரியக் கூடாது; யாராவது நாய்மீது கல் எறிந்தால் எங்களை குற்றஞ் சாட்டுவதா? என்று ஆணவத் திமிரோடு கருத்துக் கூறியுள்ளார்.
தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் இந்த உயர்ஜாதி இந்து; கும்பலுக்கு அவ்வளவு இளக்காரம். ஒருகால கட்டத்தில் சென்னையில் ஜார்ஜ் டவுன் அன்றைய மவுண்ட் ரோடுகளில் இருந்த பார்ப்பன உணவு விடுதிகளில் தொங்க விடப்பட்ட விளம்பரப் பலகைகளில் என்ன வாசகம் எழுதப்பட்டிருந்தது தெரியுமா?
நாய்களும், குஷ்டரோகிகளும், பறையர்களும் உள்ளே நுழையக்கூடாது என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. தந்தை பெரியார் தோன்றி, சுயமரியாதை இயக்கம் கண்டு புரட்சித் தீயை மூட்டியதன் காரணமாக அந்தக் கொடுமை ஒழிக்கப்பட்டது. 75 ஆண்டுகள் கழிந்த பிறகும் வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நாய்களுக்கு ஒப்பிடப் படுகிறார்கள் என்றால் இந்த இந்துத்துவக் கொடுமையை என்னென்று சொல்லுவது! சிறுபான்மை முசுலிம்களை மோடி நாய்க்குட்டிகளோடு ஒப்பிடவில்லையா!
மத்திய அமைச்சர்களும் சங்பரிவார்க் கும்பலும் அதிகாரம் தங்கள் கைகளில் குவிந்து விட்டது என்ற வெறியில் மதவெறி, ஜாதி வெறி ஆட்டங்களைப் போட ஆரம்பித்துள்ளனர்.
சிறுபான்மையினர்மீதும் தாழ்த்தப்பட் டோர் மீதும் வன்முறை என்னும் வெறி நாயை ஏவுகிறார்கள். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம். மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து ஒரே குரலில்  எதிர்ப்புப் புயலை சுழன்றடிக்கச் செய்வோம்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...