Tuesday, October 6, 2015

இந்தியாமீது அய்.நா.வில் நேபாளம் புகார்


அண்டை நாடுகளான எல்லைப் பகுதிகளில் உள்ள சீனா, பாகிஸ்தான், வங்காளதேசம் இவற்றுடன் இந்தி யாவுக்கு இருக்கும் மோதல் போதாது என்று, இப் பொழுது நேபாளத்தையும் பகைத்துக் கொண்டிருக் கிறது இந்திய அரசு.
மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு மோசமானது என்பதற்கு இது ஒன்றே போதுமானதாகும்.
உலகிலேயே ஒரே ஒரு இந்து நாடு நேபாளத்தில் இருக்கிறது என்ற பெருமை போய் விட்டதே என்ற ஆத்திரத்தில், யாரோ சில தனி நபர்கள் வயிற்றில் குத்திக் கொண்டு, மாரடித்து அழலாம். ஆனால் ஒரு நாட்டின் அரசு - இத்தகு செயலில் ஈடுபடலாமா? அதனால் ஏற்படும் விளைவு என்னவென்று பார்க்க வேண்டாமா?
நேபாளத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யின் உருவப் பொம்மைகளைக் கொளுத்துகிறார்கள் - இந்தியாவை எதிர்த்து ஆத்திரத்துடன் குரல் கொடுக் கின்றனர்.
ஏனிந்த நிலை? நேபாளத்தில் மன்னர் ஆட்சியை அந்நாட்டு மக்கள் ஜனநாயக முறையில் தூக்கி எறிந்து விட்டனர். பிரகாஷ் மான்சிங் தலைமையில் அங்கு ஒரு ஜனநாயக ஆட்சி மலர்ந்து விட்டது. மன்னர் ஆட்சிக் காலத்தில் இருந்த அரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொள்ள முடியாது என்பதை எவரும் ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள்.
இந்து  ஆட்சி என்பதை எடுத்து விட்டு, மதச் சார்பற்ற அரசு என்ற புரட்சிகரமான அம்சம் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பிடித்து விட்டது. நேபாளம் ஏழு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப அரசமைப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இன்னொரு நாடு - அதன் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறும் மோடி அரசாங்கத்தின் மூக்குக்கு - நேபாளத்திலும் நுழைய உரிமை கிடையாது அல்லவா? காரணம் நேபாளம் இன்னொரு நாடல்லவா?
நேபாள நாட்டில் அரசமைப்புச் சட்டம் மாற்றி அமைக்கப்பட்டதிலிருந்து, இந்திய அரசு நேபாளத்துக் குப் பல்வேறு முட்டுக்கட்டைகளையும், சங்கடங்களை யும் செயற்கையாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறது.
பெரும்பாலான பொருள்கள் நேபாளத்திற்கு இந்தியாவிலிருந்துதான் போகும்; இப்பொழுது இந்திய அரசு அவற்றில் கை வைத்து நேபாள அரசை மூச்சுத் திணற வைத்துள்ளது. இப்படி ஒரு நெருக்கடியைக் கொடுத்து, நேபாளத்தை மறுபடியும் தாங்கள் இழுத்த இழுப்புக்குக் கொண்டு வந்து விடலாம்; மறுபடியும் இந்து நாடாக்கி மகிழலாம் என்ற மனப்பால் குடித்து, இப்படியெல்லாம் காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டது இந்தியா.
உச்சக் கட்டமாக பெட்ரோல் , டீசல் ஆகிய அத்தி யாவசியப் பொருள்கள் அங்கு செல்ல முடியாதவாறு ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி விட்டது. அதற்காக நேபாளப் பிரதமர் மிரண்டு விடாமல், நீங்கள் கொடுக்கா விட்டால் சீனாவிலிருந்து நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என்று கறாராகக் கூறி விட்டார். பூனை கண் மூடினால் பூலோகம் இருண்டா போகும்?
ஏற்கெனவே சீனா, இலங்கையைத் தன் பக்கம் வளைத்துப் போட்டு விட்ட நிலையில், இப்பொழுது கிட்டதட்ட ஒரு மெல்லிய நிலக் கோடு அளவில் மட்டும் இந்தியாவோடு விலகி நிற்கும் நேபாளத்தை சீனா பக்கம் தள்ளி விட்டால், அதன் பாரதூர விளைவுகள் எத் தகையது என்பதுபற்றி ஒரு கடுகளாவது கருத வேண் டாமா? ஆத்திரக்காரர்களுக்கு அறிவு மட்டு என்பதற்கு இந்த விடயத்தில் இந்திய அரசு நடந்து கொள்ளும் போக்கே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அடுத்த கட்டமாக நேபாள அரசு இந்தியாவின் செயல் பாடுகள் குறித்து அய்.நா.விடமும் புகார் கொடுத்திருக்கிறது.
பிரதமர் பிரகாஷ்மான்சிங் தலைமையில் ஒரு குழுவே அய்.நா சென்று, அய்.நா. செயலாளர் பான்-கீ-மூனிடம் இந்தியாவின் சட்ட விரோத அத்துமீறல்களை அதிகார பூர்வமாகப் புகாராகப் பதிவு செய்து விட்டது என்பது சாதாரணமானதல்ல.
நில எல்லைகள் கொண்ட நாடுகளுக்கிடையே அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி சுதந்திரமாக எடுத்துச் செல்லுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் உள்ள வர்த்தக முனையில் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது என்று இந்தியாமீது நேபாள அரசு புகார் கூறியுள்ளது. இதற்கு இந்திய அரசு ஏதோ சாக்குப் போக்குகளைக் கூறிச் சமாளிக்கப் பார்க்கிறது.
இத்தனை ஆண்டுகள் இல்லாத பிரச்சினை இப் பொழுது வெடிப்பானேன்? இந்தக் கேள்விக்கு இந்தியா பதில் சொல்ல வேண்டாமா? ஒரு சின்னஞ்சிறு நாட்டை, தான் ஒரு பெரிய நாடு என்ற பெரியண்ணன் மனப் பான்மையோடு நடத்த ஆசைப்படலாமா?
இத்தகைய செயல் சர்வதேச அளவில் இந்தியா வைப் பற்றி எத்தகைய மதிப்பீட்டை ஏற்படுத்தும் என்பது முக்கியமானதல்லவா?
இந்தியாவையே இந்து நாடாக ஆக்குவோம் என்று மார் தட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சியாக - இருந்த ஒரே ஒரு இந்து நாடும் பொய்த்து விட்டதே  என்கிற ஆத்திரம்தான் மோடி தலைமையிலான அரசுக்குக் கடும் கோபம்!
என்ன செய்வது? இந்துக் கடவுள்களான சிவனை யும், விஷ்ணுவையும், பிர்மாவையும் பிரார்த்தனை செய்ய வேண்டியதுதானே? அதனைவிட்டு சிறிய நாட்டின் மக்களின் வாழ்வோடு விளையாடப் பார்ப்பது, பண்பாடானது அல்ல மனிதத் தன்மை உள்ளதும் அல்ல!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...