தமிழ்நாட்டில் சிவகங்கையைச் சேர்ந்த திவ்யா என்ற ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம் இனி யாருக்கும் ஏற்படக் கூடாது. 8ஆம் வகுப்பு மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தை நினைத்தால் 21ஆம் நூற்றாண்டில்தான் நாம் வாழ்கிறோமா? அல்லது கற்காலத்தில் காட்டு விலங்காண்டியாய்ச் சஞ்சரிக்கின் றோமா என்பதை உடலைக் கிள்ளிப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதுவும் தமிழ்நாட்டிலா இந்தக் கேவலம் என்று நினைக்கும்போது நெக்குருக வேண்டிய நிலைதான்.
சிவகங்கைக் காவல் நிலையத்தில் அந்தப் பெண் ஒரு புகாரைக் கொடுத்துள்ளார். எனது அப்பா, எனது அண்ணன், எனது அண்ணனின் நண்பர், அப்பாவின் நண்பர் என்று வன்முறையாக என்னை வலுக்கட்டாய மாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்,
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் அந்தப் பெண்ணின் தந்தையையும், அண்ணனையும் கைது செய்தனர். மாஜிஸ்ட்ரேட் மூலம் அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம்பெறப்பட்டது. அதன்பின் காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு மேலும் மேலும் ஏற்பட்ட அவமானமும், பாலியல்வன்முறையும் தொடர் கதையாகவே இருந்திருக்கிறது. அதில் அய்.பி.எஸ். அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது அதிர்ச்சிக்கு உரியது.
கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வின்சென்ட் என்பவர் திவ்யா சார்பில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பெண்ணின் தாயார் மரணம் அடைந்து விட்டார். அப்பா வேறு கல்யாணம் செய்து கொண்டு விட்டார். தன் தாத்தா வீட்டுக்கு அந்தப் பெண் சென்று விட்டார்.
அங்கு சென்ற இடத்திலும் அந்தப் பெண்ணின் தாத்தாவும் தன் பேத்தியிடம் தவறாக நடந்து கொண் டுள்ளார். இவை எல்லாம் நடக்கக் கூடியது தானா? என்று சந்தேகம்கூட ஏற்படலாம்;
உண்மை என்னவோ அந்தப் பெண்ணுக்கு வேறு எங்கும் கேள்விப்பட்டிராத இந்தக் கேவலமான வன்கொடுமை தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக இருமுறை கருக் கலைப்பும் செய்து கொள்ள வேண்டிய பரிதாப நிலை!
காவல்துறை அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட் டுள்ளதால் சி.பி.அய். விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது.
டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவுக்கு ஏற்பட்ட வன்கொடுமை - டில்லி தலைநகரத்தையே பற்றி எரியச் செய்தது. அதன் காரணமாக அரசியல் மாற்றம்கூட நிகழ்ந்திருக்கிறது.
அதைவிட பல மடங்கு இந்தப் பெண்ணுக்கு வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்டுவிலங்காண் டித்தனமான வெங் கொடுமை நடத்திருக்கிறதே! ஒன்றுமே நடக்காதது போல தமிழ்நாடு தூங்கி எழுந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமானதுதான்.
பெற்ற தந்தையிலிருந்து பெரிய காவல்துறை அதிகாரி வரை சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இந்த வழக்கினை சி.பி.அய். விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது நூற்றுக்கு நூறு நியாயமே!
தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளது - சென்னை உயர்நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர், தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரிய அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களும் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கின் தீர்ப்பு நாட்டு - மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பிட வேண்டும். அதிகார வர்க்கத்துக்குக் கொடுக்கப்படும் சாட்டையடியாகவும் இருக்க வேண்டும்.
காவல்துறை சம்பந்தப்பட்டவர்களும் சம்பந்தப் பட்டு இருக்கிறார்கள் என்பதற்காக இந்த வழக்கில் நேர்மை தவறுமேயானால் காவல்துறையின்மீது கொஞ்ச நஞ்சம் இருக்கும் நம்பிக்கையும், மதிப்பும் கரைந்து போய்விடும்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கை குடி மக்கள் மத்தியில் இருந்தால் தான், அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது சீர்மையாக இருக்க முடியும். இல்லாவிட்டால் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற தண்டல் நாயகம்தான் தலைவிரித்தாடும்.
இவற்றையெல்லாம்விட தந்தை, மகன், அண்ணன், தங்கை என்ற மதிக்கத் தகுந்த உறவை எல்லாம் தாண்டி மிருக உறவு தலை தூக்குகிறதே - இந்த நிலைக்கு என்ன காரணம்? தனி மனித ஒழுக்கக் குறைவு என்று இதை விட்டுவிட முடியுமா? இதற்கு முன்பும் கூட ஓரிரண்டு இடங்களில் இந்த அளவுக்கு இல்லை யென்றாலும் நடக்கத்தான் செய்திருக்கிறது.
சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இதுபற்றிய உரத்த சிந்தனைகளை எழுப்ப வேண்டும். கல்வித் திட்டத்தில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரலாம்?
பொழுதுபோக்கு ஊடகங்களை கலைத்துறையை எப்படி செழுமைப்படுத்தலாம் என்றெல்லாம் ஆக்க ரீதியாக சிந்திக்கப்பட வேண்டும்; ஏன்? மாநில அரசே கூட இதற்கான குழுவினை அமைத்து மக்களையும் சந்திக்கச் செய்து உடனடியாக இந்தக் கேவல நெருப் பினை அணைத்திட முன் வர வேண்டும். இல்லாவிட் டால் நாடே எரிந்து சாம்பலாக வேண்டியதுதான்!
நடைபெற்றுள்ள சம்பவத்துக்கு நாட்டு மக்கள் ஒரு முறை எழுந்து தலை தாழ்ந்து நிற்க வேண்டும்! வெட்கத்தால் கூனிக் குறுக வேண்டும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment