Wednesday, September 30, 2015

பெரியாருடைய சிக்கனத்தையும், சேமிப்பையும் என்னுடைய கொள்கையாகக் கொண்டேன்!

பெரியாருடைய சிக்கனத்தையும், சேமிப்பையும் என்னுடைய கொள்கையாகக் கொண்டேன்!
ஜெயங்கொண்டம் மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதி திறப்பு விழாவில் ஹார்விபட்டி கோ.ராமசாமி உரை
ஜெயங்கொண்டம், செப். 29- தந்தை பெரியாருடைய சிக்கனத்தையும், சேமிப்பையும் என்னுடைய கொள்கையாகக் கொண்டேன் என்று மதுரை ஹார்விபட்டியைச் சேர்ந்த கோ.ராமசாமி உரையாற்றினார்.
22.9.2015 அன்று ஜெயங்கொண்டம் கல்விக் கிராமத்தில் உள்ள  பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் விடுதி திறப்பு விழாவில் மதுரை ஹார்விபட்டியைச் சேர்ந்த கோ.ராமசாமி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
கடுகளவு செய்த என்னை மலையளவு புகழும்படி செய்துவிட்டார்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லத்திற்குச் சென்று நான் பார்த்தபொழுது, ஆசிரியர் அவர்கள் தனி மனிதராக இருந்து அவ்வளவு பெரிய காரியத்தைச் செய்திருந்ததை சுற்றிப் பார்த்து, மகிழ்ச்சியடைந்து, ஏதாவது இந்த அமைப்புக்குச் செய்யவேண்டும் என்கிற நோக்கத்தோடு, அங்கே நடந்த ஒரு சிறப்புக் கூட்டத்தில், அய்யா அவர்களுடைய கையில் ஒரு தொகையைக் கொடுத்தேன். ஆனால், இங்கே எனக்கு இவ்வளவு பெரிய ஒரு சிறப்பை செய்து, கடுகளவு செய்த என்னை மலையளவு புகழும்படி செய்துவிட்டார்கள். அதற்கு நான் எப்பொழுதும் நன்றியுடையவனாவேன்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. பெரியாருடைய சிக்கனத்தையும், சேமிப்பையும் என்னுடைய கொள்கையாகக் கொண்டேன்
நான் கொடுத்தது தொகையாக இருந்தாலும், அது நீங்கள் எல்லாம் பாராட்டும்படியாக, பல தலைமுறைகளுக்குப் பயன்படக் கூடிய அளவிற்குப் பணிகளைச் செய்திருக்கிறார்கள். நான் எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோருக்குப் பிறந்தவன்.  ஒரு சாதாரண தொழிலாளியின் வீட்டுப் பிள்ளை. மதுரை மில்லில் பணியாற்றி, எங்கள் தாயாருடைய பராமரிப்பில் வளர்ந்து, ஓரளவிற்குப் படித்து, பெரியாருடைய சிக்கனத் தையும், சேமிப்பையும் என்னுடைய கொள்கையாகக் கொண்டு, சேமித்த பணத்தை அய்யா ஆசிரியர் அவர்களிடம் கொடுத்தேன். அவர் இவ்வளவு பெரிய மகத்தான காரியத்தை செய்துவிட்டார்கள். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
என்னுடைய வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்
எனக்கும், இயக்கத்திற்கும் நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும்கூட, நான் பல ஆண்டுகளாக இயக்க வெளி யீடுகளைப் படித்துக் கொண்டிருக்கக் கூடியவன்; அண்மையில் சு.அறிவுக்கரசு அவர்களுடைய நூல்களைக் கேட்டு வாங்கி, திருச்சி நண்பர் அண்ணா ராமச்சந்திரா மூலமாகப் பெற்று, அந்த நூல்களைப் படித்தேன்.  மிகச் சிறந்த அறிவாளிகள் எல்லாம் இந்த இயக்கத்தில் இருக்கின்றார்கள்.
அவர்களையெல்லாம் பின்பற்றி, நான் நல்ல காரியத்தைச் செய்யவேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இந்தக் காரியத்தைச் செய்தேன். அதற்காக அய்யா ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
ஆசிரியர் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து, தமிழ்நாட் டையும், தமிழ் மக்களையும் இன்னும் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று நான் உங்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுடைய பாராட்டு என்னை திக்குமுக்காடச் செய்து விட்டது
பல ஆண்டுகளுக்கு முன்பு,  அனுமந்தபட்டியில் உள்ள கந்தசாமி பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.  அந் விழாவில், தந்தை பெரியார் அவர்கள் பங்கேற்றார். அந்தப் பள்ளியில் என்னுடைய நண்பர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது, அய்யா தந்தை பெரியார் அவர்கள் எங்களுடைய பள்ளிக்கு வருகிறார்கள். நீங்கள் அவருடைய கொள்கையை விரும்பக்கூடியவர். ஆகவே, நாடகம் ஒன்றை எழுதிக் கொடுங்கள் என்று சொன்னார்கள். இப்பொழுது எனக்கு அவையெல்லாம் நினைவிற்கு வருகிறது. சென்ற முறை வந்தபொழுது, நான் எதையும் பேச முடியவில்லை. உங்களுடைய பாராட்டு என்னை திக்குமுக்காடச் செய்து விட்டது.  ஆகவே, நான் மெய்மறந்த நிலையில், நான் ஒன்றும் சொல்ல முடியாமல் போய்விட்டது. அதற்காக மீண்டும் உங்களுக்கு நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன், ஆசிரியர் பெருமக்கள் உள்பட.
வாழ்நாளில் நீங்கள் உயரும்போது இதுபோன்ற உதவிகளைச் செய்யுங்கள்!
அந்த நாடகத்திற்குப் பெயர், மூன்று சபதங்கள். நான் அவசரத்தில் கிளம்பி வந்ததினால், அது எங்கே இருக்கிறது என்று தேட முடியவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் நான் வளர்ந்து வந்ததினால்தான், இந்தக் காரியத்தைச் செய்தேன். இப்பொழுதும் இந்தப் பள்ளியினுடைய வளர்ச்சிக்கு அய்யா அவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்துவிட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் எல்லோரும் பயன்படுத்தி, தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், என்னைப் போன்று நீங்களும் உங்களுடைய வாழ்நாளில் உயர்ந்திருக் கின்ற காலத்தில், இதுபோன்ற உதவிகளை முடிந்தளவு செய்யும்படி கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்!
- இவ்வாறு அய்யா ராமசாமி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...