Thursday, July 9, 2015

ஜாதிவாரி கணக்கெடுப்பும் சங்பரிவார்களும்


ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட பிஜேபி தலைமையிலான மத்திய அரசு தயங்கும் நிலையில், கருநாடக மாநில காங்கிரஸ் அரசு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை அரசின் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

அதே நேரத்தில் அம்மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டு சிலர் இதனை எதிர்க்க ஆரம்பித்துள்ளனராம். இதனால் ஜாதி உணர்வும், தீண்டாமை உணர்வும் மிகுமாம்!

இந்த பிரச்சினையில் ஓருண்மையை உணர வேண்டும். உண்மையிலேயே ஜாதி ஒழிய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஜாதி ஒழிக்கப்படல் கூடாது என்று நெஞ்சத்தின் ஆழத்தில் உணர்ச்சியைக் கூர்மையாக தேக்கி வைத்துக் கொண்டு இருப்பவர்கள் ஜாதிக் கணக்கெடுப்பு கூடாது - கூடவே கூடாது என்று கூக்குரல் போடுகிறார்கள்.

ஜாதி ஒழிப்புக் கொள்கை உடையவர்கள் ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கின்றனர் - ஜாதி மறுப்புத் திருமணங்களையும் செய்து கொண்டும் வருகிறார்கள்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிபற்றிய புள்ளி விவரத்தை வெளியிடக் கூடாது; அதனால் ஜாதி உணர்ச்சிப் பீறிட்டுக் கிளம்பும் என்று சொல்லுபவர்கள் யார்? உண்மையிலேயே அன்றாடம் நொடி தோறும் ஜாதி உணர்வில் திளைத்துக் கிடப்பவர்கள்   - ஜாதிய சிந்தனையோடே எல்லாவற்றையும் அணுகக் கூடியவர்கள். திருமணங்களை ஜாதிகளுக்குள் - அதுவும் உட்ஜாதிக் குள்ளேயே திருமணத்தை நடத்தி முடிக்க ஆண்டுக் கணக்கில் அலைந்து கொண்டிருப்பவர்கள்! பார்ப்பனர் களைப் பொறுத்தவரை ஜாதி சின்னமான பூணூலை அணிந்து கொண்டு திரிபவர்கள். ஒவ்வொரு ஆண்டும் பூணூலைப் புதுப்பிப்பதற்கென்றே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) ஏற்பாடு செய்து, அதற்கான சடங்குகளைச் செய்து கொண்டு இருப்பவர்கள். பார்ப்பான் வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தைக்குக் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பூணூல் கல்யாணம் என்று பத்திரிகை அடித்துக்கூட விழாவாகக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; இந்த பூணூல் அணிவிக்கப்பட்ட பிறகுதான் அவன் பிராமணனாக துவி ஜாதியாளனாக (இரு பிறப்பாளனாக!) ஆகிறான் என்று சாத்திரம் எழுதி வைத்துக் கொள்ளு பவர்கள்.

கோயில் கருவறைக்குள் பூணூல் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக வேண்டும் என்பதிலே குறியாக இருப்பவர்கள், இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிக் கொண்டு இருப்பவர்கள்.

சங்கர மடத்திலே இந்து மதத்தைச் சேர்ந்த எந்த ஒரு ஜாதியாரும் சங்கராச்சாரியார் ஆகலாம் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஜாதியின் விளைவான தீண்டாமையை ஷேமகரமானது என்று சொன்னவர்தான், பார்ப்பனர்களின் லோகக் குரு என்று துதிக்கப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுடுகாடு - இடுகாடுகளில்கூட ஜாதிபேதம் இருக்க வேண்டும்; காரணம் ஒவ்வொரு ஜாதிக்கும் வெவ்வேறு சம்பிரதாயங்கள் உண்டு. நியாயம் கற்பிப்பவர்தான் இன்றைய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி.

இந்தச் சூழ்நிலை தெளிவாக  சூரிய வெளிச்சம் போல் நடைமுறையில் பளிச் பளிச் சென்று கண்ணுக்கு எதிரே நடமாடிக் கொண்டிருக்க - இந்தப் பூனையும் பால் குடிக்குமோ என்பதுபோல இந்தக் கூட்டம் ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல முண்டா தட்டுவது என்பது அசல் மோசடி நாடகமே!

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்பவர்கள் யார்? சமூகநீதி - இட ஒதுக்கீடு அவசியம் தேவை என்று சொல்லுபவர்கள், அதற்காகப் போராடுபவர்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக் கூடாது என்பவர்கள் யார்? சமூகநீதி, இடஒதுக்கீடு கூடவே கூடாது என்று கூறுபவர்கள்.

இப்பொழுது விவரம் தெரிந்திருக்க வேண்டுமே இதற்குள்ளிருக்கும் சூட்சுமம் என்ன என்று. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வெளியில் வந்தால் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருந் தாலும், தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் எந்த அளவு வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அநீதி இழைக்கப் பட்டுள்ளனர் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும்; மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் எந்த அளவு தங்கள் எண் ணிக்கைக்கும் பல மடங்கு விகிதாசாரத்தில் கொழுத்துக் கிடக்கிறார்கள்; ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருக் கிறார்கள் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்து விடும்.

தங்கள் ஆதிக்கம் பறி போய் விடுமே என்ற பதற்றத்தில் தான் ஜாதிவாரி கணக்கெடுப்புக் கூடாது கூடவே கூடாது என்று கூக்குரல் போடுகிறார்கள்.

இந்த உண்மையின் வெளிச்சத்தில் தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரும் தங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டின் விகிதாசாரம் போதுமானதல்ல - எங்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அது அதிகரிக்கப்பட வேண்டும் என்று போராட முன் வருவார்கள் என்ற  அச்சத்திலேயே தான் எதிர்க் கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அறிவித்த நிலையில், அதுவரை வெளியிலிருந்து அவ்வாட்சிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த பிஜேபி ஆதரவை விலக்கிக் கொண்டதால் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் இந்த பிஜேபி சங்பரிவார் வட்டாரம் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளுதல் மிகவும் பொருத்தமானது.

ஜாதி ஒழிப்பாளர்கள் போல கூச்சல் போடுபவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் - மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி விவரம் தேவை என்பவர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! வாழ்க பெரியார்! வளர்க சமூகநீதி!!  

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...