Friday, July 10, 2015

இந்திக்கு ஏன் முன்னுரிமை?


பத்திரிகை, தொலைக்காட்சிகள், பதாகைகள் என விளம் பரங்களுக்கு செலவிடும் மொத்தத் தொகையில் குறைந்த பட்சம் 50 சதவீதம் ஹிந்தி விளம்பரங்களுக்கு செலவிடப்பட வேண்டும் என அரசின் அனைத்துத் துறைகளையும் மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்துத் துறைகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை எழுதியுள்ள கடிதத்தில் விளம்பரங்களுக்குச் செலவிடும் தொகையில் 50 சதவீதத்தை ஹிந்தி விளம்பரங்களுக்குச் செலவிட வேண்டும். மீதமுள்ள 50 சதவீதத்தை ஆங்கிலம், பிராந்திய மொழி விளம்பரங்களுக்குச் செலவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி, இதர இந்திய மொழிகளைப் புறந்தள்ளிவிட்டு, ஆங்கில மொழி விளம்பரங்களுக்கு மத்திய அமைச்சகங்களும், துறைகளும் முக்கியத்துவம் அளிப்பதாக அலுவல் மொழிகளுக்கான நாடாளு மன்றக் குழுவின் கருத்தை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது என்று மத்திய உள்துறை வலியுறுத்தியுள்ளது.

மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பிஜேபி அரசு, அதிகாரத்திற்கு வந்த நாள் தொட்டே இந்தி, சமஸ்கிருதம் இரண்டையும் முன்னிலைப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டி வந்து கொண்டு தானிருக்கிறது.

கடுமையான எதிர்ப்புப் புயல்கள் சுழன்றடிக்கும்போது எதை எதையோ சமாதானங்களைச் சொல்லி, ஆமை தன் தலையை ஓட்டுக்குள் பதுக்கிக் கொள்வது போல நடந்து கொண்டு வருகிறது.!

தொடக்கத்தில் மத்திய அரசு அலுவலகக் கடிதங்கள் இனி இந்தியில் தான் இருக்க வேண்டும். சமூக இணைய தளங்களில் இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது. கண்டனங்கள் வெடித்துக்கிளம்பியுவுடன் இந்தி மொழி பேசும் மாநிலங் களுக்குத்தான் பொருந்தும், மற்ற மாநிலங்களுக்குப் பொருந்தாது என்று சொன்னார்கள்.

தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல; காஷ்மீர் முதல் அமைச்சராகவிருந்த உமர் அப்துல்லாவும், இந்தி பகுதியைச் சேர்ந்த முன்னாள் முதல் அமைச்சர் மாயாவதியும்கூட எதிர்ப்புக் குரலை ஓங்கிக் கொடுத்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் (விடுதலை 21.6.2014) ஒரு கேள்வியை எழுப்பினார்.

இந்தி பேசாத பகுதிகளில் தொடர்புக்கு இந்தி பயன்படுத் தப்படாது எனும்  உள்துறை அறிக்கையின் சாரம் உண்மையானால் இந்தியை அதிக அளவு பயன்படுத்துபவர்ளுக்குக் கூடுதல் சம்பளம் உயர்வு அளிக்கப்படும் என்பது எந்த வகையைச் சேர்ந்தது? என்று கேட்டாரே அதற்குப் பதிலே இல்லை. இவ்வளவு நிலைப்பாடுகள் இருந்தாலும், வட இந்தியர்கள் எப்பொழுதுமே இந்திக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை வாடிக்கையாகவே கொண்டவர்கள் - வாஜ்பேயி உட்பட; ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்திருந்தும் நாடாளுமன்றத்தில் இந்தியில் தான் பேசுவார். அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தபோது வாஜ்பேயிடம் கேட்டபோது, நாடாளுமன்றத்தில் நான் இந்தியில்தான் பேசுவேன் - உங்களுக்கு வேண்டுமானால் நான் பேசியதன் சுருக்கத்தை ஆங்கிலத்தில் கூறுகிறேன் என்றாராம்.

22 தேசிய மொழிகளை இந்திய அரசமைப்பு  சட்டம் அங்கீகரித்தாலும் இந்திக்கு மட்டும் ஏன் தனிச் சிம்மாசனம் என்பதுதான் இந்தி பேசாத பெரும்பாலான மக்களின் நியாயமான கேள்வியாகும்.

இவ்வளவுக்கும் இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 25 கோடியே. பெரும்பான்மையினர் பேசும் மொழி என்பதெல்லாம் சுத்தப் புரட்டே!

அரசு விளம்பரங்களைச் செய்யும்போது 50 சதவீதம் இந்திக்குத்தான் முன்னுரிமை என்று மத்திய அரசு சுற்றறிக்கை விடுவது சட்ட விரோதமானது, நியாய விரோதமானது, ஏன் நம் பிக்கைத் துரோகமுமாகும். எல்லா மொழிக்காரர்களும் செலுத்தும் வரிப் பணம் இந்தியின் வயிற்றில் மட்டும் அறுத்துக் கட்டப்பட வேண்டுமா?

ஒரு நாட்டின் நிதி வலிமைக்கும், அந்நாட்டு மொழியின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு நாடு பொருளாதாரரீதியாக முன்னேறும்போது, அந்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்வதன் அவசியம் மிக மிக முக்கியமாகிறது. இந்தியாவிலும் அது நடக்கும். இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும்போது, இந்தி மொழியின் முக்கியத் துவத்தை உணர்ந்து உலகம் முழுவதும் பலரும் அதை கற்க ஆர்வம் கொள்வார்கள்.

மக்களுக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்புதான், எந்த நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு அடிப்படை ஆகும். அதில், மொழியும், கலாசாரமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நான் வெளிநாட்டுக்குச் செல்லும்போதெல்லாம், அந்த நாட்டு மொழியில் சில வார்த்தைகள் பேசினால், அங்குள்ள மக்கள் உடனடி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

மொழி என்பது தண்ணீர் போன்றது. எதில் அதை ஊற்றுகிறோமோ, அந்த நிறத்தையே அது பெறுகிறது. அது காற்று போன்றது. எந்த தோட்டம் வழியாக வருகிறதோ, அந்த மணத்தையும் சுமந்து வருகிறது.

உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவுடன் இந்தி பாடல்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். அவர் ஒவ்வொரு இந்தி பாடலையும் தெரிந்து வைத்திருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தேன். இங்கு இந்திய படங்களும், இசையும் பிரபலமாக உள்ளன என்று  பேசியுள்ளார் ருசியாவில் பிரதமர் மோடி. ருசியாவில்கூட ருசிய மொழியை முன்னிறுத்திய காரணத்தால் தான் பிரிவினை எண்ணம் தலை தூக்கியது என்கிற பாடத்தை முதலாவதாக இந்தியப் பிரதமர் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தியாவிலேயே இந்தி மொழி மட்டும்தான் இருக்கிறது என்கிற கண்ணோட்டத்தில் பிரதமர் பேசி இருப்பது சற்றும் பொருத்தமற்றதே!

இந்தியாவில் செழுமை வாய்ந்த மொழிகள் ஏராளம்!  இன்னும் சொல்லப் போனால் இந்தத் திசையில் அடி மட்டமான வளமில்லாத மொழி இந்தியே!

பெங்காலி மொழி எட்டரைக் கோடி, தெலுங்கு ஏழரைக் கோடி, மராத்தி ஏழு கோடி, தமிழ் 7 கோடி, உருது 5 கோடி, குஜராத்தி 4.6 கோடி, கன்னடம் 4 கோடி, மலையாளம் மூன்றரைக் கோடி, ஒரியா 3.3 கோடி, சந்தாலி 64 லட்சம், காஷ்மீரி 55 லட்சம் மக்கள் பேசுகிறார்கள்.

இந்த மொழிகள் பேசுவோர் எல்லாம் இந்தியத் துணைக் கண்டத்துக்குள் தானே இருக்கிறார்கள். இந்தியாவிற்குள் கட்டுண்டு கிடக்கின்ற காரணத்தால் இந்த மொழியைப்பேசுவோர். இரண்டாந்தர குடிகளாக இருக்க வேண்டுமா? என்ற கேள்விகள் இந்தியா முழுவதும் வெடிக்கச் செய்யும் ஒரு நிலையை மத்திய பி.ஜே.பி. ஆட்சி தோற்றுவித்தால் - இந்த மொழிக்காரர்கள் தங்களின் தனித் தன்மையையும், பண்பாட்டையும் எப்படிக் காத்துக் கொள்வது என்ற திசையில் சிந்திக்க ஆரம்பிக்க மாட்டார்களா?

மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம்தான் என்பது ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கரின் கருத்து; சமஸ்கிருதத்தைத் திணிக்குமுன் - அதன் குட்டி மொழியான இந்தியை முன்னோட்டம் விட்டுப் பார்க்கிறார்கள் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லுவது சரியே! இந்தி பேசாத மக்களிடத்தில் எச்சரிக்கையும் - விழிப்புணர்வும் தேவை! தேவை!!   

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...