Monday, November 17, 2014

குதிக்கிறார்கள் குருமூர்த்திகள்!

மின்சாரம்
பார்ப்பனர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பம், இது ஒரு பொற்காலம் - மனுதர்மச் சிண்டை அவிழ்த்து விட்டு ஆகாயத்தில் பறக்கச் செய்யலாம், பூணூலைக் கூடக் கொஞ்சம் சட்டைக்கு வெளியில் தொங்க விட்டுப் பார்க்கலாம் என்ற ஆணவம் பீறிட்டுக் கிளம்பி யுள்ளது போல் தெரிகிறது; அவர்களின் நடவடிக்கைகளும், பேச்சுகளும், எழுத்துகளும் அடாவடித்தனமாகி விட்டன. திமிர் முறுக்கேறி - நல்ல பாம்பு பாட்டுக்காரனைத் தேடும்  என்பது போல நடந்து கொள்கின்றனர். கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை என்று பொதுவாகக் கூறப்படுபவரும் ஆர்.எஸ்.எஸின் ஆலோசகருமான திருவாளர் எஸ். குருமூர்த்தி எழுதிய தினமணி கட்டுரை (8.11.2014) இதனை அப்பட்டமாக அம்மணமாகத் தெரி விக்கிறது.

தமிழக அரசியலில் பெரிய மாறு தலைக் கொண்டு வந்தது - 1960களில் அரசியல் கட்சியாக ஹிந்து ஆன்மிக விரோத, தேசிய விரோத, திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

திராவிட இயக்கம் எல்லா மதங் களையும் எதிர்க்கக் கூடிய ஒட்டு மொத்த நாத்திக இயக்கம் அல்ல. அது ஹிந்து ஆத்திகத்தை மட்டும் குறி வைத்ததே தவிர, மற்ற மதங்களை எதிர்க்காதது மட்டுமல்லாமல் அவற் றைப் போற்றி அவற்றுடன் உறவாடியும் வந்தது என்று எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி.
திராவிட இயக்கம் மதத்தை மறுத்தது உண்மைதான். இந்துக் கடவுள்களைத் தாக்குவதும் உண்மைதான். இராமா யணத்தையும், மனு தர்மத்தையும் கொளுத்தியதும் உண்மையே! தேவைப் பட்டால் நாளைக்கும் அதனைச் செய் யும்! அதில் ஒன்றும் சந்தேகம் வேண் டாம். (அண்ணல் அம்பேத்கர்கூட அதைச் செய்தார் - அவர் என்ன திராவிட இயக்கமா?)
ஆனால், ஏன் அதனைச் செய்கிறோம்? அறிவார்ந்த முறையில் என் றைக்காவது குருமூர்த்தி கூட்டம் சிந்தித்ததுண்டா?

இந்த இந்து மதத்திலே தான் பிராமணன் பிர்மா நெற்றியிலிருந்து பிறக்கிறான் - சூத்திரன் பிர்மாவின் பாதங்களிலிருந்து பிறக்கிறான் - அப்படிப்பட்ட சூத்திரன் யார் தெ ரியுமா? விபச்சாரி மகன்! இது தானப்பா உங்கள் மனுதர்மம்?  (அத்தியாயம் 8 -சுலோகம்  415) மறுக்க முடியுமா? இதனைக் கொளுத்தா விட்டால் நாங்களும் மனிதர்கள்தான் என்று மார் தட்டிக் கொள்ள முடியுமா?
விபச்சாரி மகன் என்று ஒத்துக் கொள்ளாத ஒவ்வொருவனும் இதனைச் செய்துதானே தீர வேண்டும்.

எவ்வளவுக் கொழுப்பு மண்டைக்கு மேல் வழிகிறது என்றால், மனு தர்மத் திற்கு வக்காலத்துப் போட்டு சோ ராமசாமியின் துக்ளக்கில் இன்றைக்கும் கூட எழுதுவார்கள்?

அந்த மனு தர்மத்தை 1991 டிசம்பரில் பூனாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அலங்கரித்து  எடுத்துச் செல்லவில்லையா? (Economical and Political Weekly - 6.3.1992)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற திருக்குறள் எங்கே? பிறப் பிலேயே பேதம் பேசும் மனுதர்மம் எங்கே?

திருக்குறளும் மனுதர்மமும் ஒன்றே என்று கூறும் சங்கராச்சாரியாருக்கு எவ்வளவு ஆரியத் திமிர் இருக்க வேண்டும்?

சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்த வர்கள் என்று கூறும் கீதையின் தமி ழாக்கம்தான் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் (தினத்தந்தி 15.4.2004) என்று அவாள் உச்சி மோந்து தோளில் தூக்கி வைத்துக் கொஞ்சும் சந்திரசேக ரேந்திர சரஸ்வதியை திராவிட இயக் கத்தவர்கள் மட்டுமல்ல; அதற்கு அப்பாற்பட்டவர்களும் நார் நாராகக் கிழிக்க  தான் செய்வார்கள்.

இந்து மதத்தைப் பற்றி மட்டுமே தான் பேசுகிறார்கள் என்று வாயிலும் வயிற் றிலும் அடித்துக் கொள்கிறார்களே -

அந்த இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்டவரோ - ஏன், உயர் ஜாதி பார்ப்பனர் அல்லாதாரோ - சங்கர மடத் தில் சங்கராச்சாரியார் ஆக முடியுமா?
இந்து மதத்தைச் சேர்ந்த பார்ப்பனர் அல்லாத ஒருவன் இந்து மதக்கோயிலில் அர்ச்சகராக முடியுமா? அதற்கான சட்டத்தைக் கொண்டு வந்து அர்ச்சகப் பயிற்சியும் அளிக்கப்பட்டாலும், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று முடக்குபவர்கள் யார்? இந்தக் குருமூர்த்திக் கும்பல் தானே! இதன் பின்னணியில் சங்கராச்சாரியார் இருந்தாரே - இருக்கிறாரே - சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்தாரே!

சூத்திரன் அர்ச்சனை செய்தால் சாமி தீட்டாகி விடும் - தோஷம் படும் என்று இந்த 2014லும் கூறும் கூட்டத்திற்கு எவ்வளவு அசட்டுத் தைரியம் இருந் தால் திராவிடர் இயக்கத்தவர் இந்து மதத்தை மட்டும்தானே விமர்சிக் கின்றனர் என்று கூப்பாடு போடு வார்கள்?


மற்ற மதங்களை விமர்சிப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை பிரச்சாரமாக செய்து, இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் மூக்கைக் கொஞ்சம் சொறிந்து விட்டுப் பார்க்கிறார்கள்.

அதாவது உண்மையா? பெரியார் சிலைகளின்கீழ் கல்வெட்டாக செதுக்கி வைத்திருக்கிறோமே - அது தெரியாதா?

கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் - பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று பொறித்து வைத்துள் ளோமே - அது என்ன இந்து மதக் கடவுள்களுக்கு மட்டும்தானா?

நான் ஏன் கிறிஸ்துவனல்ல? (பெட் ரண்டு ரசல்) ஜீன் மெஸ்லியர் மரண சாசனம் (3 பாகங்கள்) இங்கர்சால் தீட்டிய கடவுள் போன்ற நூல்களை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளதே - அதனை வசதியாக மறைப்பானேன்?

அதே நேரத்தில் சிறுபான்மை மக்களான முசுலிம்களுக்கும், கிறித்தவர் களுக்கும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு தேவை என்று திராவிட இயக்கம் கூறுவது சமூகநீதி அடிப்படையில்தான்! கடவுள் மறுப்பையும் சமூக நீதியையும் ஒன் றோடு ஒன்று போட்டுக் குழப்ப முயலக் கூடாது.

1960களில் ஹிந்து ஆன்மிக விரோத திராவிட முன்னேற்றக் கழகம் என்று வருணிக்கிறாரே - திருவாளர் குருமூர்த்தி அய்யர்!

அந்த திமுகவைத் தானே 1967இல் கனம் ராஜாஜி விழுந்து விழுந்து ஆதரித்தார்? பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வைணவப் பெரு மாளாகிய கனம் ராஜாஜி பிரச்சாரப் பீரங்கியாய் முழங்கினாரே - அதற்கு என்ன பதில்?

அதே ஆச்சாரியார் 1971 சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. எதிர்ப்பு அணி அமைத்து, காமராசரோடு கூட்டணி வைத்து தேர்தலில் குதித்தாரே! ராமனை செருப்பாலடித்த திமுகவுக்கா ஒட்டு என்று பிரச்சாரம் செய்தாரே ஆச்சாரியார்!  பிரச்சாரம் செய்தனவே துக்ளக்குகளும், தினமணிகளும், பார்ப்பனப் பஞ்சக் கச்சங்களும்; முடிவு என்னாயிற்று?

திராவிடர் கழகம் ராமனைச் செருப் பால் அடிப்பதற்கு முன்பு திமுகவுக்கு சட்டப் பேரவையில் இடம் 138, செருப் பாலடித்தபிறகு கிடைத்த இடங்கள் 183.
அப்பொழுது கனம் ராஜாஜி கல்கியில் (4.4.1971) இந்த நாடு ஆஸ்திகர் வாழத் தகுதி இழந்து விட்டது என்று ஒப்புக் கொள்ளவில்லையா?

நாஸ்திகம் - ஆஸ்திகம் பற்றி யெல்லாம் எழுதிக் கிழிக்கும் கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளைக்கு ஒரே ஒரு கேள்வி.

இந்து மதத்தில் நாத்திகன் என்பான் யார்? ஆத்திகன் என்பான் யார்? வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான். (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் 11).

இதையேதான் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதிவாளும் திருவாய் மலர்ந் தருளியுள்ளார்.

நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீஸ்வரவாதம் என்றுதானே இப்பொழுது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே ஆஸ்திகர்களாக இருக்க முடியும்
அப்படிப்பட்ட பல பேர் இருந் திருக்கிறார்கள். இது என்ன வேடிக் கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது எனறுதான் அர்த்தம்



வைதிக வழக்கை ஆட்சேபிப்பது தான் நாஸ்திகம், நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கையாகவும், இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாம லிருப்பதால்கூட  அல்ல! (தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதி - பக்கம் 407-408).
இவற்றையெல்லாம் தெரிந்து கொள் ளாமல் படித்தறியாமல் தத்துப்பித்து என்று அம்பிகள் உளறலாமா?

பெரிய படிப்பு - ஆடிட்டர் உத்தி யோகம் - பெரிய  இடத்து சகவாசம்  எல் லாம் இருந்தென்ன? புத்தி மட்டும் பூணூலுக்குள் சிக்கிக் கொண்டால் இப்படித்தான் ஏறுமாறாக எழுதச் சொல்லும்!

1971 தேர்தலின்போது  தவத்திரு குன்றக்குடி அடிகளார் அழகாகச் சொன் னாரே!
இன்று ஆஸ்திகம் என்பது உயர் சாதியினரின் நலம். இன்று நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம் (19.2.1971) என்று சொன்னதையும்- இந்த இடத்தில் நினைவூட்டுவது சாலப் பொருத்தமானது.

ஆன்மிகம்பற்றி அடேயப்பா தாண்டிக் குதிக்கிறாரே திருவாளர் குருமூர்த்தி!  இவர்களின் ஆன்மிக யோக்கியதைக்குக் காஞ்சி சங்கராச் சாரியார் ஒருவர் போதாதா? கொலைக் குற்றத்தில் வேலூர் சிறையில் கம்பி எண்ணியவர்தானே!

பெண்கள் விஷயத்தில் அவர் எப்படி? அனுராதா ரமணன் என்பவர் அக்ரகாரத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அல்லவா? கண்ணீரும் கம்பலையுமாக தொலைக்காட்சியில் புலம்பித் தீர்க்கவில்லையா?

என்னவெல்லாம் சொன்னார் எழுத்தாளரான அந்த அக்ரகாரத்துப் பெண்மணி? பத்திரிகை ஒன்று மடத்தின் சார்பில் ஆரம்பிப்பதற்காக ஜெயேந்திரர் தன்னை மடத்துக்கு அழைத்ததாகவும், அப்படி நான் சென்ற பொழுது என் மார்பைப் பிடித்தார் சங்கராச்சாரியார் என்று சொன்னாரே! ...சே.. இப்படியும் ஒரு ஜென்மம்! இவாள்தான் அவாள் பாஷையில் ஜெகத் குரு - இதுதான் அவாள் போற்றும் ஆன்மிகத்தின் லட்சணம்!

மைதிலி என்னும் பெண்ணிடம் உடலுறவு கொண்டதை நேரில் பார்த்துத் திடுக்கிட்டேன் என்றும் - அம்மையார் அனுராதா சொன்னதற்குமேல் என்ன வேண்டும்?  ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு திருவரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியோடு சல்லாப மொழியில் பேசிய சங்கதிகளை யெல்லாம் அவிழ்த்துவிட வேண்டுமா?

காஞ்சிபுரம் மச்சேந்திர நாதன் கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் செய்த லீலைகள் என்ன சாதாரணமானதா? சாமி கும்பிட வந்த பெண்களை மயக்கி, கோயில் கரு வறையையே கருவை உண்டாக்கும் அறையாக மாற்றவில்லையா? அந்தக் காட்சியைக் கைப்பேசியில் படம் பிடித்து அதையே திருப்பித் திருப்பிக் காட்டி அச்சுறுத்தி (Black Mail) மீண்டும் பக்தைகளை தம் காமப் பசிக்கு இரையாக்கவில்லையா?

அந்த மச்சேந்திரநாதன் கடவுள் என்னதான் பண்ணினான்? இந்த லட்சணத்தில் உள்ள ஆன்மிகத் துக்குத்தான் விட்டேனா பார் என்று வக்காலத்து வாங்கி எகிறிக் குதிக்கிறது குருமூர்த்தி கும்பல்.

--------------
என்னே ஜெயலலிதாமீதான பாசம்?

இந்த நேரத்தில் அதிகாரத்தின் உச்சியிலிருக்கும் அ.தி.மு.க.வுக்கு அந்தக் கட்சியின் தன்னிகரில்லாத் தலைவி ஜெயலலிதா வழக்கில் சிக்கியிருப்பதால் அதிமுக மட்டுமல்லாமல் தமிழக அரசியலும் ஒரு முடுக்கில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து அ.தி.மு.க. விடுபட வேண்டுமானால் கர்நாடக மாநிலத்தின் தீர்ப்பு அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைய வேண்டும். அவருக்கெதிரான வழக்கில் சாரம் இல்லை அதனால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமையலாம் என்றும் சில நடுநிலை ஏடு நிபுணர்கள் கருதுகிறார்களாம் எழுதுகிறார் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி ஜெயலலிதா என்றவுடன் கொண்டை ஊசி போல வளைகிறார்கள் பாரத்தீர்களா!

ஊழல் வழக்கில் சிக்கித் தண்டனை பெற்றவர் தங்கள் இனத்தவர்களாக இருந்தால்... சில நடுநிலை நிபுணர்கள் முக்காட்டில் ஒளிந்து கொள்வார்கள். திராவிட இயக்கம் ஊழல் கட்சி என்று ஒரு பக்கத்தில் குற்றஞ்சாட்டி விட்டு, ஜெயலலிதா என்று வரும்போது மட்டும் வேறு குரலில் பேசும் வேதியக்குலத்தின் பூணூல் புத்தியைக் கவனிக்க வேண்டும். ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருக்கும் கட்சியில் திராவிட இயக்கத்தின் அடையாளம் இல்லையா? பேச நா இரண்டுடையாய் என்று ஆரியத்தை பற்றி அண்ணா சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
--------------
கோயில் கொள்ளை யாரால்?



தமிழக மக்கள் கோவில்களையும் தெய் வத்தையும் போற்றுபவர்கள்; இன்று ஹிந்து கோயில்கள் அரசாங்கத்தின் சொத்தாக மாறி, அரசியல்வாதிகள் கையில் சிலைகளிலிருந்து நகைகள், நிலங்கள் சிக்கிக் கொண்டு இருக் கின்றன என்று ரொம்பத்தான் விசனப்படுகிறார் ஆடிட்டர்.

ஒரு கோயிலைக்கூட சொந்த பணத்தில், சொந்த உழைப்பில் எந்தப் பார்ப்பானும் கட்டியதில்லை. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்த கதையாக தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்களில்  பார்ப் பனர்கள் புகுந்து கொள்ளை அடித்தனர். அதனைத் தடுக்க நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான் இந்த அறநிலையத் துறை. ஆனால் இதனைத் தலைகீழாக குருமூர்த்தி அய்யர் புரட்டிப் பேசுவதைக் கவனிக்க வேண்டும்.

ரொம்ப தூரம் போக வேண்டாம். சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்கள் கையில் இருந்த நேரத்தில் நீதி மன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை என்ன தெரியுமா?

எடுத்துக்காட்டாக 2007இல் சிதம்பரம் கோயிலுக்கு வந்த வருமானம் ரூ.37,199. செலவு ரூ.37,000. மீதி ரூ.199 என்று பேட்டா செருப்பு விலைபோல அறிக்கை கொடுத்தார்கள்.

அதே சிதம்பரம் கோயில் அரசு கைக்கு வந்தபோது நிலைமை என்ன?

அந்த இரண்டு ஆண்டுகளில் நடராஜன் கோயிலுக்குக் கிடைத்த வருமானம் ரூ.3 கோடியே 15 லட்சத்து 24 ஆயிரத்து 537 ரூபாய்; தங்கம் 332  கிராம் வெள்ளி 1458 கிராம் இத்தியாதி இத்தியாதி.

இப்பொழுது சொல்லுங்கள் குருமூர்த்தியாரே, கோயில் பார்ப்பான் கையில் இருந்தபோது கொள்ளை அடிக்கப் பட்டதா? அரசு கையில் இருந்தபோது கொள்ளை அடிக்கப் பட்டதா!

கோயில் சிலைகள் திருட்டில் பெரும்பாலும் கோயில் அர்ச்சகர்கள் சம்பந்தப்பட்ட சங்கதியும் தெரியுமா!

--------------
நாத்திகம் அழிந்து ஆத்திகம் வளர்வதாகக் கூறும் குருமூர்த்திகளே! இதற்குப் பதில் என்ன?

அரசியலில் எப்படி தேச விரோத திராவிடம் மறைந்ததோ, அது போலவே சமுதாயத்தில் ஹிந்து விரோத நாத்திகம் மறைந்தது. எந்தெந்த மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள் என்று தி.க., தி.மு.க. சாடியதோ - அது  தீமிதியாக இருக்கலாம்; அல்லது அலகு குத்துவதாக இருக்கலாம் - அவை எல்லாம் முன்னை விடப் பல மடங்கு வரவேற்புடன், சமுதாயத்தில் பரவி, அவற்றில் தி.மு.க. உள்பட திராவிட கட்சியினரே பங்கேற்கிற அளவுக்குப் பிரசித்தமாயின. 50 ஆண்டுகளுக்குமுன் எந்தளவுக்குத் தெய்வ நம்பிக்கை தமிழ்நாட்டில் இருந்ததோ, அதைவிட பல மடங்கு, இப்பொழுது வளர்ந்து வந்து இருக்கின்றது. மக்களை இப்படி மாற்றியது அரசியலோ, அரசியல்வாதிகளோ அல்ல. மக்கள் தாங்களாகவே நாத்திகத்தை வெறுக்க ஆரம்பித்தனர். ஆத்திகம் தழைத்தோங்க ஆரம்பித்தது. இதனால்தான் திராவிட அரசியல் சரிந்து திராவிட இயக்கங்கள் கலகலத்துப் போயின என்று நீட்டி முழங்கி இருக்கிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்.

இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? நாட்டில் நோய்கள் ஒழிய வில்லை என்பதால் மருத்துவத்துறை தோல்வி அடைந்து விட்டது என்று பொருளா? மருத்துவக் கல்லூரிகளை இழுத்து மூடிவிடலாம் என்று யாராவது சொல்லு வார்களா?

மூடநம்பிக்கை வெற்றி பெற்று விட்டது; பகுத்தறிவு தோற்று விட்டது என்று ஒரு பேர் வழி சந்தோஷப்படுவார் என்றால் அவரை எந்தப் பட்டியலில் வைப்பது?  மிருகத்தையும் மனிதனையும் பிரிப்பது அந்த  பகுத்தறிவுதானே? அந்தப் பகுத்தறிவைப் பழிப்பவரை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சரி.. அவர் கூறுகிற அந்தவிவாதத்துக்கே வருவோம்; அவாளின் லோகக் குருவான சங்கராச்சாரியாரையே சாட்சிக் கூண்டில் ஏற்றுவோம்.

மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிகப் பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோவில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாக (திணீலீவீஷீஸீ) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது

- இப்படி சொல்லியிருப்பவர் அவாளின் லோகக் குரு சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தான். அதுவும் எங்கே சொன்னார் தெரியுமா? காஞ்சி புரத்திலேயே சொன்னார்.  எந்த நிகழ்ச்சியில் சொன்னார்? 1976 மே மாதம் நடை பெற்ற அகில இந்திய ஹிந்து மாநாட்டில்தான் முழங்கினார்.

இன்னும்கூட தாராளமாக அவர் சொன்னதுண்டு.

பத்துப் பதினைந்து வருடங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென்படுகிறது; ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும் நிறைய இருக்கின்றன. இவை நிறைய வர வரப் பக்தியும் மேன்மேலும் வளருகிறது. இவ்விதப் பக்தி நம்மிடையே வளர்ந்தும்கூட துக்கங் களும் வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணங்கள் என்ன? ஓரளவுக்கு நமக்குக் கடவுள் பக்தி இருந்தபோதும் பேராசையும், ஒழுக்கமின்மையும் சுயநலமும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன இதுவும் காஞ்சியிலே கும்பாபிஷேக நிகழ்ச்சியிலே திருவாய் மலர்ந்தருளியதுதான் (ஆதாரம்: தினமணி 7.9.1976).
இப்படிப்பட்ட பக்தி வளர்ந்ததற்குப் பெருமைப்படுகிறார் ஆடிட்டர் அய்யர் குருமூர்த்தி.. பலே! பலே!!
கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ...?
பதில்: என் அனுபவத்துல சொல்றேன்.. பக்தி அதிகமா யிட்டிருக்கு.. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு?

பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டியலில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கொடியைத் தாண்டிடுது. ... பக்தி அதிகமாக இருக்கு... ஆனால் ஒழுக்கம்தான் குறைந்துப் போயிடுச்சு!

கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ளலாமே?

பதில்: ஊ... ஹூம்.. அப்படியில்லை.. பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை. ஆனந்த விகடனின் பேட்டியில் இந்தப் பதிலைச் சொன்னவர் யார் தெரியுமா? திருமுருக கிருபானந்தவாரியார் (ஆனந்தவிகடன் 22.12.1991).
தெய்வ நம்பிக்கை பல மடங்கு பெருகி விட்டதாக அரட்டை அடிக்கும் குருமூர்த்திகள் இதற்கெல்லாம் என்ன பதில் வைத்துள்ளனர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...