Thursday, July 3, 2014

வாஸ்து பூமி பூஜையை இனியும் நம்பலாமா?

11 மாடிக் கட்டடம் - இறந்தவர்களுக்கு இரங்கல்!

வாஸ்து பூமி பூஜையை இனியும் நம்பலாமா?

தமிழர் தலைவர் கேள்வி



சென்னை போரூர் - மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து, சுமார் 59 உயிர்கள் பலி யானதாக இதுவரை வந்த தகவல்கள் கூறுகின்றன; இடிபாடுகளில் சிக்கி புதைந்துள்ள சடலங்கள்பற்றி, பணி முடிவுற்ற பிறகே முழுத் தகவல்கள் வெளி வரக் கூடும்.

நெஞ்சம் பதைபதைக்கும் இந்த வேதனையும் துயரம் மிக்க பேரிடருக்கு யார் மூல காரணம்? எதனால் இப்படி ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது? நீதி விசாரணை தேவை.

ஆய்வுகள் சரியாக செய்யப்பட்டனவா?

சதுப்பு நிலம், போரூர் ஏரித் தண்ணீர் போன பாதை ஒரு காலத்தில் - காலப் போக்கில் அது தூர்ந்துள்ள நிலையில் அப்படியே வெட்ட வெளியாகி மண் மூடிப் போன இடத்தை வாங்கி, கட்டடம் கட்டுமுன்  சரியான மண் வாகுபற்றிய பரிசோதனை (Soil Testing) செய்தனரா?

அனுமதி அளித்தவர்கள் அரசு ஆணை மூலம் சரியான ஆய்வு செய்தனரா? அப்படி அனுமதி கொடுத்தவர்கள் - அதி காரிகளா? வேறு யார்? எதனால் இப்படி சலுகை காட்டினர்? இது மட்டுமன்று; தமிழ்நாட்டில் பலர் ஏரி குளங்களையெல்லாம் வளைத்து  வீட்டு மனை வியாபாரத் தொழில் செய்வோரின் பேராசையால்  (Real Estate) இப்படிப்பட்ட அவலங்கள் நிகழ் கின்றனவா?

இதனைக் கண்டு பரிதாபப்பட்டால் மட்டும் போதுமா?  இறந்தவர்களுக்காக உதவுவது போன்ற உதவிகள் விரும்பத்தக்கதாயினும் - போதாது.

குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுவது போல் இப்போது வீராவேச விமர்சனங்கள் அந்தந்த நேரத்தில் எழுந்தால் மட்டும் போதாது.

ஆக்கபூர்வ நிரந்தர பாதுகாப்பு தடுப்பு முறை ஏற்பாட்டு அமைப்பு தேவை.

பேரிடர் மேலாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் பலன் இது தானா?

மற்றொரு முக்கிய செய்தி.

வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்த்துக் கட்டப்பட்டுள்ளது தான் இந்த இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடம். பூமி பூஜை பலமாகப் போடப்பட்ட பிறகே, நாள் நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து அடிக்கல் நாட்டப் பட்டது; பின் ஏன் இந்த அவலம் நடந்தது?

இதிலிருந்து வாஸ்து, பூமி பூஜை என்ற மூட நம்பிக்கைகள் மனிதர்களைக் காப்பாற்றாது. புரோகிதர் பிழைக்க, ஜோசியர்கள் பிழைக்க வழிதான் அவை என்பதையாவது புரிந்து கொள்ள வேண்டாமா?

இறந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் எந்த மாநிலத்தவர் என்பது முக்கியமல்ல; அவர்கள் மனிதர்கள் என்பதால் மனிதநேயத்துடன் அவர்தம் குடும்பங்களுக்கு - பாட்டாளிகளின் சொந்தங்களுக்கு நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி   
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
3.7.2014

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...