தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க உரிமை இல்லையாம்!
காங்கிரசை அசலாகப் பின்பற்றும் மத்திய பி.ஜே.பி. நீதிமன்றத்தில் பதில் மனு
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் கிளர்ச்சிகள் வெடிக்கும்
தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களுக்கு
மீன் பிடிக்கும் உரிமை கிடையாது என்று மத்திய பி.ஜே.பி. அரசு
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதுபற்றி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும்
மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொல்லுவதும், சிறைப் பிடிப்பதும்,
அவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும் சர்வ சாதாரணமாகிவிட்டன. எனவே,
கச்சத்தீவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்று சென்னை
உயர்நீதிமன்றத்தில் மீனவர் நல அமைப்பின் தலைவர் திரு.பீட்டர் ராயன்
என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் பதில் மனு
மத்திய அரசின் வெளியுறவுத் துறைத் துணைச்
செய லாளர் திரு.விஸ்வேஷ் நீகி நீதிமன்றத்திற்கு அளித்த பதில் மனுவில்
பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே காலம்
காலமாக பயன்படுத்தப்பட்ட கடல் பகுதி எல்லைகள் வரையறுக்கப்பட்டு கடந்த
1974ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்திய -
இலங்கை மீனவர்கள் அவர்களின் பாரம்பரிய உரிமை களைப் பயன்படுத்துவற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 1974 ஆம் ஆண்டு சட்டப் பிரிவு
6-ன்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கு
உரிமையில்லை. கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்த மானது.
கச்சத்தீவை பார்வையிடுவதற்கும்,
கச்சத்தீவில் உள்ள செயின்ட் ஆண்டனி கிறித்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும்
நடத்தப்படும் திருவிழாவில் பங்கேற்பதற்கும் மட்டுமே உரிமை
வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, இலங்கையிடம் பயணம் தொடர்பாக அனுமதி பெற
வேண்டியதில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
மேலும், இரு நாடுகளின் வெளியுறவுத்
துறைக்கு இடையேயான 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, இரு நாட்டு கடல் எல்லைப்
பகுதிக்குள் எதிர் நாட்டு மீனவர் களின் படகு மற்றும் மீனவர்கள் செல்லக்
கூடாது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களுக்குப்
பிறகு, கடல் எல்லைப் பகுதியில் 416 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 404 பேர்
காயமடைந்துள்ளனர். 109 மீனவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒப்பந்தத்தில் உள்ள உரிமைகள் குறித்து தான் மத்திய வெளியுறவுத் துறை
அமைச்சர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்தில்
பேசினார். எனவே, மனுவில் கூறப்பட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அதனால்
மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் தெரிய வருவது என்ன? கடந்தகால
காங்கிரஸ் ஆட்சி தமிழக மீனவர் பிரச்சினையில் எந்த நிலைப்பாட்டைக்
கொண்டிருந்ததோ, அதில் அட்சரம் பிறழாமல் இன்றைய பி.ஜே.பி. ஆட்சியும்
ஏறுநடைப் போடுகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது (கிட்டத்தட்ட
எல்லாப் பிரச்சினைகளிலும் இந்த நிலைதான்).
மனப்பால் குடித்தவர்கள் தலையைத் தொங்கப்போடும் பரிதாப நிலை!
காங்கிரஸ் ஆட்சி அகன்று பி.ஜே.பி. ஆட்சி
வந்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் என்று மனப்பால் குடித் தவர்கள்
தலையைத் தொங்கப்போடும் பரிதாப நிலைதானே இன்று?
மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்ததற்குப்
பிறகு இதுவரை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 229 பேர் -
அய்ந்து முறை இது நடந்திருக்கிறது.
பி.ஜே.பி. ஆட்சியில் இது ஒன்றும் புதிதல்ல.
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது
பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் (28.11.2000) தமிழக
மீனவர்கள் மீதான படுகொலை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று
குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிரதமர் ஏ.பி.வாஜ்பேயி பதிலும் எழுதினார்
(22.12.2000). இனி தமிழக மீனவர்கள் மீதான படுகொலை நடக்காமல் இருப்பதற்கு
நடவடிக்கை எடுப்பேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அடுத்த சில நாள்களிலேயே தமிழக மீனவர்கள் இருவர் சுட்டுக்
கொல்லப்பட்டனர் (29.1.2001).
வெளியுறவுத் துறை அமைச்சர் சுவராண்சிங் வாக்குறுதி என்னவாயிற்று?
பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பேற்ற விழாவுக்கு
வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவும், பிரதமர் நரேந்திர மோடியும் விழா
நிகழ்ச்சி முடிந்த பிறகு, தனியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக
மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படப் போகிறது என்றெல்லாம் அது
குறித்துச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், நடந்தது என்ன? ஒட்டக்கூத்தன்
பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற பாணியிலே அல்லவா அன்றாடம் தமிழக
மீனவர்கள் தாக் கப்படுவது தொடர்கிறது! சிறையிலிருந்து விடுவிக்கப்பட்
டாலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பிக் கொடுப்பதில்லை. இது
கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் கூட நடைபெறாத ஒன்று.
20.6.1974 அன்று பிரதமர் இந்திரா காந்தி
கையொப்ப மிட்ட ஒப்பந்தம் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் தி.மு.க., பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம்
லீக் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்து, அதிருப்தியைத் தெரிவிக்கும்
வகையில் வெளிநடப்பும் செய்தனர்.
அன்றைய வெளி யுறவுத் துறை அமைச்சர்
சுவரண்சிங், சர்வதேசக் கடல் எல்லையை நிர்ணயிக்கவேண்டிய அவசியத்தின் காரண
மாக, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்படவேண்டிய சூழல் ஏற்பட்டாலும், இரு
நாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்ற மீன் பிடிக்கும் உரிமையும், கோவில்
களுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் உரிமை யும் எதிர்காலத்திலும்
முழுமையாகக் காப்பாற்றப்படும் என்று உறுதியளித்தாரே! அது இப்பொழுது
என்னாயிற்று!
இந்திய மீனவர் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது முறையற்றதுதான்.
ஆனாலும், கடலுக்குப் புறப்படும் எந்த
மீனவரும், மீன் வளம் எங்கிருக்கிறதோ, அங்கேதான் போவர்! எனவே, இந்திய -
இலங்கை எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவரைத்
தடுக்க முடியுமா? அப்படி அவர்கள் சென்றால், அவர்களை இலங்கைக் கடற்படையினர்
துப்பாக்கியால் சுடலாமா? துப்பாக்கியால் சுடாதீர்கள், இந்திய மீனவர்களைக்
கொல்லாதீர்கள் என இலங்கை அரசிடம் கூறியுள்ளோம். ஒத்துழைப்பதாக இலங்கை
அரசும் உறுதி அளித்துள்ளது.
- இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியவைதான் இவை (31.5.2007).
அதுவும் காற்றோடு காற்றாகத்தான் போயிற்றா?
நாடுகளுக்கான எல்லைக் கோடுகள்
நாடுகளுக்கான எல்லைக் கோடுபற்றிய உண்மை என்ன?
கரையிலிருந்து 22 கி.மீட்டர் தூரம்தான்
உள்நாட்டு எல்லை; 44 கி.மீ.தூரம் வரை சுங்கவரி வசூலிக்கும் எல்லை; 320
கி.மீ. தூரம் பொருளாதார எல்லை; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேவிப்பட்டினத்
திலிருந்து தமிழக மீனவர்கள் 34 கடல் மைல்கள் சென்று மீன் பிடிக்க முடியும்.
ஆனால், தனுஷ்கோடி மீனவர்கள் 6 மைல் தூரம் சென்றாலே இலங்கை எல்லை
வந்துவிடும்.
கோடியக்கரை மீனவர்கள் இந்த வகையில் 13
மைல்கள் தான் மீன் பிடிக்கச் செல்ல முடியும் என்று கடைபிடிக்க வேண்டும்
என்பது அனைத்துலகக் கோட்பாடு என்றாலும், இதனையும் தாண்டி மீன்பிடிப்பது
என்பது பல நாடுகளிலும் நடைமுறையாக உள்ளது.
ஜப்பானும், கொரியாவும் தமக்கிடையேயுள்ள கடலில் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க ஏற்பாடு செய்துள்ளன.
நார்வே, சுவீடன், பின்லாந்து, ருசியா ஆகிய
நாடுகள் நமக்குப் பொதுவான கடலில் தத்தம் நாட்டு மீனவர்கள் அனைவரும் கடல்
எல்லைகளைத் தாண்டி மீன்பிடிக்கும் உரிமங்களை வழங்கியுள்ளன.
இரு கேரள மீனவர்களை இத்தாலி
கப்பற்படையினர் சுட்டுக்கொன்றனர் என்பதற்காக இந்திய அரசு அவர் களைக் கைது
செய்யவில்லையா? சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையா? 850 தமிழக
மீனவர்களை இதுவரை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளதே, இந்திய அரசு
மேற்கொண்ட நடவடிக் கைகள் என்ன?
தமிழன் என்றால் அவன் உயிர் மலிவுப் பொருளா? கேட்பாரற்ற இனமா தமிழினம்?
கிரிமினல் குற்றமல்ல!
அப்படியே எல்லை தாண்டிச் சென்றாலும்கூட
அய்.நா. சட்டத்தின்படி அது சிவில் குற்றமாகக் கருதப்பட வேண்டுமே தவிர,
கிரிமினல் குற்றமாகக் கருதப்பட முடியாது.
ஆனால், தமிழக மீனவர்கள் பிரச்சினையில்
எந்த சர்வதேச சட்டமும் பின்பற்றப்படுவதில்லை. இந்திய ஆட்சி யாளர்களும்
வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை.
பிரேசிலில் ரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்ற
ரியோ பிளஸ் 20 அய்.நா. மாநாட்டில் உரையாற்றிய சுண்டைக்காய் நாடான இலங்கைத்
தீவின் அதிபர் ராஜபக்சே,
தமிழ்நாட்டு மீனவர்கள் பாக். நீரிணையில்
மீன் பிடித்தால் அவர்களை 20 ஆண்டுகள் சிறைப் பிடிப்பேன் என்று இந்தியப்
பிரதமரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசினார் என்றால், மிகப்பெரிய நாடான
இந்தியாவைத் துச்சமாக மதிக்கிறார் என்றுதானே பொருள்!
தொடக்கமே கோளாறு. சட்டத்தையும், விதிமுறை
களையும் தூக்கி எறிந்து தானடித்த மூப்பாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். அது சட்டப்படியே
தவறானது.
தொடக்கமே கோளாறு. சட்டத்தையும், விதிமுறை
களையும் தூக்கி எறிந்து தானடித்த மூப்பாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். அது சட்டப்படியே
தவறானது.
நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட்டதா?
பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து
போர்ப்பாணி யூனியனையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாகிஸ்தானுக்கு
வழங்குவது தொடர்பான இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்கில், இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் மற்ற நாட்டிடம்
வழங்க அரசமைப்புச் சட்டத்தின் 368 ஆம் பிரிவின்கீழ் நாடாளுமன்றத்தில்
ஒப்புதல் பெறவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திராவிடர் கழகம் தொடுத்த வழக்கு!
26.7.1997 அன்று இராமேசுவரத்தில்
திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு
மீட்புரிமை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில் சென்னை
உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்று கூறி ரிட்
மனுவைத் தாக்கல் செய்தோம் (29.7.1997) அது நிலுவையில் உள்ளது.
கிளர்ச்சி வெடிக்கும்
தி.மு.க. சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், இன்றைய முதலமைச்சர் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளன.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பி.ஜே.பி.
ஆட்சிக்கும், காங்கிரஸ் ஆட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லாத
நிலையில், கச்சத்தீவை மீட்பது ஒன்றே நிரந்தரப் பரிகாரமாக இருக்க முடியும்
என்றாலும், இதற்கிடையில் தமிழக மீனவர்கள் அன்றாடம் சிறைபிடிக்கப்படும்
கொடுமைக்கு மத்திய அரசு முடிவு கட்டவில்லையானால், தமிழகம் ஒட்டுமொத்தமாகக்
கிளர்ந்து எழவேண்டிய தருணம் இதுவே! கட்சிகளை மறந்து தமிழர்கள்
ஒன்றுபடவேண்டும் - திராவிடர் கழகம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும்!
ஈடுபடும்!!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
2.7.2014
2.7.2014
No comments:
Post a Comment