Wednesday, February 12, 2014

மூன்றாவது அணிபற்றி நரேந்திர மோடி

பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடிக்கு இப்பொழுது மேலும் சில சிக்கல்கள் சிரங்காக உருவெடுத்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சி ஒருபுறம்; டில்லி தேர்தல் முடிவுகள்  மோடியையும் அவரது பரிவாரங்களையும் பாடாகப்படுத்தியுள்ளன. அந்த ஆத்திரம் அவர்களின் அலுவலகத் தைத் தாக்குவது வரை கொண்டு வந்து விட்டுள்ளது.

கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் ஆரம்பித்து விட்டனர்; இன்னொரு புறம் - மூன்றாவது அணி, அது குறித்தும் திருவாளர் மோடி மூன்றாந்தர அணி என்று மூர்க்கமாகத் தாக்க ஆரம்பித்து விட்டார்.

தொடக்க முதலே அய்க்கிய ஜனதாதளம் - அதன் தலைவர்களும், குறிப்பாக பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் பி.ஜே.பி.மீது கடுமையான விமர்சனத்தை வைத்து வருகின்றார். பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துக் கொண்டி ருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்துக்கு பீகாருக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி வந்துவிடக் கூடாது  என்பதிலே தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். கூட்டணியிலிருந்து பிஜேபி விலகியது குறித்து சிறிதும் அவர் அலட்டிக் கொள்ளவும் இல்லை. பிஜேபி என்பது மதவாதக் கோட்பாடுள்ள ஒரு நோய் என்கிற அளவுக்கு படம் பிடித்தும் காட்டி விட்டார்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கும்  பி.ஜே.பி.யின் முகத்திரையைக் கிழிக்க ஆரம்பித்துள்ளார். ராமன் கோவில் பிரச்சினையைத் தேர்தல் ஆதாயத்துக்காக பிஜேபி பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்துகிறார்.
இடதுசாரிகள் எப்பொழுதுமே பிஜேபியை விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தான்.

இந்த மூன்றாவது அணியின் முக்கிய பங்குதாரர் யார் என்றால் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. அதன் பொதுச் செயலாளர், செல்வி ஜெயலலிதா தான்; மூன்றாவது அணி வெற்றி பெற்றால், தான்தான் பிரதமர் என்ற கனவில் மிதக்கக் கூடியவர்; தேவேகவுடாவுக்கு அடித்ததுபோல லாட்டரி அடிக்காதா என்று கருதிக் கொண்டிருக்கக் கூடியவர்.

நியாயமாக பிஜேபியையும், அதன் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியையும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தானே கடுமையாகச் சாட வேண்டும்!  தோலுரித்துக்காட்டிட வேண்டும். அதுவும் மூன்றாவது அணி என்பது மூன்றாந்தர அணி என்று மோடி விமர்சித்த நிலையில், கடுமையாகச் சாடிய நிலையில், ஜெயலலிதா தரப்பிலிருந்து உக்கிரமான பதிலடிச் சம்மட்டி ஏன் புறப்படவில்லை?

தன்மீது ஒரு துரும்பு அளவு மற்றவர்கள் கிள்ளிப் போட்டால்கூட விட்டேனா பார்! என்று விடுபட்ட அம்புபோல அக்னி அம்புகளால் சரம் தொடுக்கும் பாணியைக் கொண்ட செல்வி ஜெயலலிதா   மவுன சாமியாராக இருப்பது - ஏன்?

ஜெயலலிதா பதவியேற்றால் தனி விமானத்தில் மோடி சென்னைக்கு வருவார்; மோடி பதவியேற்றால் தனி விமானத்தில் அகமதாபாத் போய் சேர்வார் ஜெயலலிதா. சென்னைக்கு வந்தால் நாற்பது வகை சிறப்பு விருந்து வைத்து, உபசரித்து திக்கு முக்காடச் செய்யக் கூடியவர்.

ஆனாலும் தனக்குப் போட்டி என்று வந்த நிலையில் நரேந்திர மோடி, ஜெயலலிதாவையும் சேர்த்துத்தான் மூன்றாவது அணியின் மீது மோதிடத் தயாராகி விட்டார்; மோசமான வார்த்தைக் கற்களால் கவண் வீசுகிறார். என்றாலும் தமிழ்நாடு முதல் அமைச்சர் 16ஆவது மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று டில்லிக் கோட்டையில் அமரத் துடிதுடித்துக் கொண்டு இருப்பவர், மோடிக்குப் பதிலடி கொடுக்க மறுப்பது ஏன்?

திருவாளர் சோ ராமசாமியின் அறிவுரையா - வழிகாட்டுதலா? மோடியைத் தாக்க ஆரம்பித்தால் ஊடகங்கள் திசை மாறிப் போய் விடும் என்ற அச்சமா?

தேர்தலுக்குப் பிறகு உருவாகும் - அரசியல் சூழல் (கற்பனையாகத்தான்) கெட்டுப் போய் விடக் கூடாது என்ற கெட்டிக்காரத்தனமான தொலை நோக்கா?
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் பரிதாப நிலையை எண்ணிப் பரிதாபப்படத் தான் வேண்டியுள்ளது. ஆனாலும், தேர்தலுக்கான நாள்கள் நெருங்க நெருங்க மூன்றாவது அணி - தேசிய ஜனநாயகக் கூட்டணி (மோடி)களுக்கிடையே கத்திகளை இறக்கை களில் கட்டிக் கொண்டு ஆவேசமாக போரிடும் சேவல் சண்டைகளை நாடு காணத்தான் போகிறது.


.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...