Wednesday, February 26, 2014

ஏழைக் கடவுள்கள்


தமிழ்நாட்டில் 38481 இந்துக் கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 2000 வருவாய் உள்ள (அதாவது பசையுள்ள) கோயில்களாம். 7000 கோயில்களில் ஒரு கால பூஜை மட்டும் நடக்கிறது. இந்தக் கோயில்களைச் சீரமைத்து வழிபாடு நடத்த ஆவன செய்ய வேண்டும் என்று விசுவஹிந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடவுள் சக்தியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் இப்படி சொல்லுகிறார்கள். ஒரு வேளை பூஜை மட்டும் நடந்தக் கூடிய கோயில்கள் என்று பட்டியலிட்டுப் புலம்புகின்றனர்.

அப்படியென்றால் அந்தக் கடவுள் சக்தி  இவ்வளவு தானா? மனிதர்களாகப் பார்த்து ஏதாவது ஏற்பாடு செய்தால் தான் உண்டு என்ற நிலை இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. ஆக கடவுள் என்பது மனிதன் தயவில் தான் வாழ வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட கோயில்களுக்குச் சென்று தான் மனிதன் வழிபாடு செய்கிறான் கடவுளே, எனக்கு அது செய், இது செய்! என்று வேண்டுகோள் வைக்கிறான் - காணிக்கை செலுத்துகிறான்.

வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று சொல்லுவதுபோல கடவுளே, உன் சக்தி என்ன என்பதை நிரூபித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.கடவுளாவது மண்ணாங் கட்டியாவது அது வெறும் கல், அல்லது உலோகங்களால் ஆனது - சக்தியும் இல்லை - வெங்காயமும் இல்லை என்று நாம் சொல்லுவதைத்தான் வேறு வார்த்தைகளில் திருவாளர் வேதாந்தம் ஒரு வேளை பூஜை நடத்தப்படும் கோயில்களின் நிலைமைபற்றிப் புலம்புகிறார்.

கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் கருத்து எவ்வளவு உண்மையானது - சரியானது - உறுதியானது என்பது இப்பொழுது விளங்கி விட்டதா இல்லையா?

கடவுள்களிலும் பணக்காரக் கடவுள், ஏழைக் கடவுள் என்ற நிலையுள்ளதே - இதற்கு என்ன காரணம்? என்ன பதிலாம்? ஓ, கடவுளுக்குக்கூட தலையெழுத்து, கர்மா பலன் உண்டோ! அதன் காரணமாகத்தான் பணக்காரக் கடவுள் ஏழைக் கடவுள் என்கிற நிலையா?

சரி, அது இருக்கட்டும்; வேதாந்தம் ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது? 2000 பணக்கார கோயில்கள், கடவுள்கள் இருக்கின்றனவே, திருப்பதி கல் முதலாளியான ஏழுமலையானுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கிகளில் தூங்குகின்றனவே, அதனை எடுத்து ஏழைக் கடவள்களுக்கு மூன்று வேளை படையல் (சோறு) போட்டு அந்த யாசகம் எடுக்கும் கடவுள்களின் வயிற்றை நிரப்பக் கூடாதா?

இந்துமதம் என்பது இந்தியா முழுவதும் இருக்கத்தானே செய்கிறது! தேசீயம், தெய்வம் இரண்டும் தானே இருகண்கள் என்றும் கூறிக் கொள்கிறார்கள். அப்படி யானால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இல்லாத சொத்துக்களா? பணமா? தங்கமா?  நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி, கட்டடங்கள் ரூ.1500 கோடி, நகைகள் (கொள்ளையடித்தது போக) ரூ.30 ஆயிரம் கோடி பணமாக மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி, நாள் ஒன்றுக்கு உண்டியல் வசூல் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில்  பழனிக் கோயிலுக்கு ஆண்டு வருமானம் ரூ.72,15 கோடி, சமயபுரம் மாரியம்மன்  ரூ.33,55 கோடி, திருச்செந்தூர் ரூ.19.80 கோடி, திருத்தணி முருகன் ரூ.16.09 கோடி, திருவண்ணாமலை அருணாசலம் ரூ.13.54 கோடி, சிறீரங்கம் ரெங்கநாதன் - ரூ.12.21 கோடி, மதுரை மீனாட்சி - ரூ.11.65 கோடி, இராமேசுவரம் ராமநாதன் - ரூ.9.89 கோடி, சுசீந்திரம் - ரூ.5.87 கோடி, திருவேற்காடு மாரியம்மன் - ரூ.5.65 கோடி,

இவை எல்லாம் ஓர்ஆண்டுக்கான வருமானம்.

தேசியக் கண்ணோட்டத்தோடு திருப்பதி ஏழுமலை யான் கோயில் நிதியிலிருந்து ஏழைக் கடவுள்களுக்குத் தான தர்மம் செய்யவேண்டியதுதானே.

சைவக் கோயில்களுக்கு வைணவக் கோயில்களி லிருந்தோ அதுபோல வைணவக் கோயில்களுக்கு சைவக் கோயில்களின் நிதியிலிருந்தோ நிதி உதவிடச் செய்ய விரும்ப மாட்டார்கள். இந்த இரண்டு பிரிவுகளுக்கிடை யேயுள்ள பிணக்குகளும், சண்டைகளும் ஊர் சிரித்த கதைதான் என்பதாலும், அந்தந்தப் பிரிவு கோயில் களுக்குச் சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பணக்காரக் கோயில்களிலிருந்து நிதியைப் பயன்படுத்தலாமே, அதை விட்டு விட்டு அரசுக்கு மனு போடுவானேன்?

உண்மை என்னவென்றால் கோயிலிலிருந்து இன் னொரு கோயிலுக்கு நிதியளிக்க ஒப்பம் அளிக்க மாட்டார்கள். கோயில் காரியம் என்பதே வணிக நிறுவனமான பின்பு அந்த மனப்பான்மை எப்படி வரும் என்று எதிர்பார்க்க முடியும்?


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...