Tuesday, February 18, 2014

நீதியரசர்களைப் பாராட்டுகிறோம்- பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!

சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்குத் தண்டனை ரத்து!

உச்சநீதிமன்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட மனிதநேய மரகதக்கல் தீர்ப்பு இது!

நீதியரசர்களைப் பாராட்டுகிறோம்- பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!

23 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்களை உடனே விடுதலை செய்க!



 
ராஜீவ்காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் குற்றவாளிகளாக ஆக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்திருப்பது - வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்பு என்றும் உச்சநீதிமன்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட மரகதக்கல் என்றும் கூறி, மூவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் (போதிய சட்ட நியாய முறைகளைக் கடைப்பிடிக்காத நிலையில்) சாந்தன், முருகன், பேரறிவாளன் என்ற மூவரின் தூக்குத் தண்டனையை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் திரு. ப. சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பின் மூலம் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது; இது மிகப் பெரிய வரலாற்றுப் புகழ் பெறக் கூடிய நியாயத் தீர்ப்புகளில் முதன்மையானது ஆகும்! நீதி வழங்குவதில் தாமதிக்கப்பட்ட நீதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியாகி விடும் கொடுமை உண்டு என்பது அரிய நீதித் தத்துவங்களுள் மிகவும் முக்கியமானதாகும்.

அந்த அடிப்படையிலும், மனிதநேயம் பூத்துக் குலுங்கும் வகையிலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் சக நீதிபதிகளும் அளித்த இத்தீர்ப்பை நாடே பாராட்டி வரவேற்கும் என்பது உறுதி! உறுதி!! நீதியரசர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செய்துள்ள இந்த நீதித் தீர்ப்பு நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட நேர்மை கொழிக்கும் சிறப்புக்குரியதாகும். பாதிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறையில் வதியும் அந்த காளைப் பருவத்தினர்கள், ஏதோ மகிழ்ச்சியாக உல்லாசமாகத்தான் அங்கே இருக்கிறார்கள்; எனவே அவர்களது சிறைத் தண்டனையைக் குறைக்கவே கூடாது! என்று மத்திய அரசின் சார்பில் வாதிட்ட மத்திய அரசு வழக்குரைஞரின் வாதம் வேதனையூட்டிய வெட்கப்பட வேண்டிய - உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருந்த வாதங்களாகும். அவைகளைப் புறந்தள்ளி, நாடே போற்றும் நல்ல தீர்ப்பை அளித்த அந்த நீதி அரசர்கள் இருக்கும் திக்கு நோக்கி வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்! உச்சநீதிமன்றத்தின் மகுடத்தில் பதிக்கப்பட்ட மனிதநேய மரகதக்கல் இது!

இத்தனை ஆண்டுகள் சிறையில் தண்டிக்கப்பட்டு காலத்தைக் கழித்த அவரவர்களின் விசாரணைபற்றி பல புதிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்யவும் நீதித்துறை - உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்பது நமது வேண்டுகோளாகும்.

தமிழ்நாடு அரசும் இப்பிரச்சினையில் முக்கியக் கவனம் செலுத்தி, அவர்களை முற்றிலும் விடுதலை செய்ய முயற்சிக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

18.2.2014

சென்னை

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...