பேரிடி போன்றதோர் செய்தி!
சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை மறந்தாரே!
திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!
சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை மறந்தாரே!
திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!
திருச்சிக்கு இன்று (9.11.2013) காலை சென்றபோது, திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள்பற்றி கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசிக் கொண்டிருந்தபோது, பேரிடி போன்ற செய்தி ஒன்று எங்களைத் தாக்கியது.
எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களும் என்னை நெருங்கி, தயங்கி நின்று சொன்னார்கள்.
கழகப் பொருளாளர் எனது அன்பு சகோதரர் கோ.சாமிதுரை அவர்கள் சற்றுமுன் சென்னையில் உள்ள (கோட்டூர்புரம் பகுதி) இல்லத்தில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் மிகவும் தாக்குண்டோம்!
சில காலம் உடல் நலிவுற்று இருந்த நிலையில், அவர் தேறி வந்தது ஆறுதலாக எங்களுக்கு - இயக்கத்திற்கு இருந்தது!
ஆனால், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவரது முடிவு ஏற்பட்டதை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதே தெரியவில்லை.
ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!
எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இச்செய்தி என்ற நிலையில், அவரது அன்புச் செல்வங்களான மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?
மாணவப் பருவம் தொட்டே சகோதரர் மானமிகு கோ.சாமிதுரை அவர்கள் எனக்கு நெருக்கமான இயக்கத்தவர். அரை நூற்றாண்டுக்குமேல் எங்கள் பாசமும், உறவும், நட்பும் மேலானதாக இருக்கும் ஒன்று.
அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., படித்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதே காலத்தில் படிப்பில் இருந்தவன்.
திராவிடர் மாணவர் கழகம் எங்களை இணைத்தது. சட்டக் கல்லூரியில் இருவரும் இணை பிரியாதவர்களாக இருந்தோம்.
சோதனைக் காலத்தில் துணையாக இருந்த இளைஞர்
இயக்கத்திற்கு சோதனை ஏற்பட்ட போதெல்லாம், சற்றும் சபலமோ, சலனமோ கொள்ளாத இளைஞர் அவர் அன்று.
எனவேதான், அருமை அய்யாவின், அம்மாவின் பெரும் நம்பிக்கை பாராட்டைப் பெற்ற எனது உற்ற தோழர் என்ற பெருமைக்கு ஆளாகி, கடைசிவரை காத்தவர்.
வழக்குரைஞர் தொழில் தொடங்கும்போது கடலூரில் நாங்கள் ஒன்றாக சேர்ந்தோம். அவர் கல்லக்குறிச்சியில் பிரபலமான நிலையில், வழக்குரைஞர் தொழிலைக்கூட கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் துறந்து, இயக்கத் தொண்டாற்ற பெரியார் திடலுக்கே தன்னை ஒப்படைத்துவிட்டு, சென்னைவாசியானார் என்னைப் போலவே!
அவரது வாழ்விணையர் மறைந்த சரோஜா அவர்களும், எனது வாழ்விணையரும் கடலூரில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.
இப்படி இரு குடும்ப உறவுகளும் என்றும் மறக்க முடியாதவை - பிரிக்க முடியாதவை!
பாழும் சாவு பிரித்துவிட்டதே!
பாழும் சாவு - எங்களைப் பிரித்துவிட்டதே!
வரும் (நவம்பர்) 26 ஆம் தேதி அவரது 81 ஆம் ஆண்டு பிறந்த நாள்; என்னைவிட ஒரு சில நாள்கள்தான் மூத்தவர் அவர்!
அவரது பிரிவு கழகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பள்ளமும், இழப்பும் எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒன்று!
என்றாலும், தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப, இயற்கையின் கோணல் புத்திக்குமுன் என்ன செய்ய இயலும்?
குளமான கண்களோடு பிரியாவிடை!
எனவே, நாம் அவருக்குப் பிரியாவிடையைக் குளமாகும் கண்களோடும், கனத்த இதய வலியோடும் தந்து வீர வணக்கத்தைத் தெரிவித்து, எங்களது பெரும் பெரியார் குடும்பமான அந்தக் குடும்பத்து செல்வங்களுக்கும் தேற்ற முடியாத எமது ஆறுதலை, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
9.11.2013
குறிப்பு: கழகக் கொடியை மூன்று நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கழகத் தோழர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment