Tuesday, September 17, 2013

எம் ஆசானின் 135ஆவது பிறந்த நாளில்....! நமது பயணங்கள் நிற்காது தொடரும்! தொடரும்!!

நம் மக்களின் மானமீட்பரான எங்கள் பகுத்தறிவு ஆசானே!
இருண்ட எமது வாழ்க்கையில் சிந்தனைச் சுடரைக் கொளுத்திய, எம் இனத்தின் திருவிளக்கே!
காலமெல்லாம் விதியென்றும், கர்மம், (குல) தர்மம் என்றும்   உழன்று கிடந்த உலுத்துப்போன வாழ்வைப் புறந்தள்ளி, புதுவாழ்வு தந்த புத்தொளியே, புரட்சியின் கர்த்தாவே உமது 135ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா இன்று!
அகிலமெங்கும் அவரது விழா - நன்றித் திரு விழாவாக
அறிவும் மானமும் பெற்றவர்களின் நன்றித்
திருவிழா கொண்டாட்டமாகக் காட்சியளிக்கிறது!
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை
புத்தருக்குப் பின் வீழ்த்தி, வெற்றி கண்ட புதுமைச் சித்தர்தான் நம் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்!
அவர்கள்தந்த தத்துவம்- சுயமரியாதை;  மனிதர் எவராலும் புறக்கணிக்க முடியாத மகத்தான தத்துவம்
எந்த ஒரு கட்டத்திலாவது, அதை மறந்தவர்கூட, மறுத்தவர்கள், மறைத்தவர்கள்கூட அதனைப் பயன்படுத்திடாமல் இருக்கவே முடியாது!
அவ்வளவு சக்தி வாய்ந்த மின் ஈர்ப்புச் சொல் அய்யா தந்த அந்த சுயமரியாதை என்ற சொரணை மீட்கும் அச்சொல்!
அந்தப் பகலவனின் கதிர்கள், உலகத்தை முன்னேற்றப் பாதையின் வெளிச்சங்களாகி இன்று நிலைத்து விட்டன!
அவர்தம் தொலைநோக்கு இன்றைய உலகின் தவிர்க்க இயலாததாக தழுவிக் கொள்ளப்படும் போக்காக,  ஆனதால் அவரது வாக்கு பொய்யாததாகி விட்டது!
பெரியாரைத் துணைக்கோடல் என்பதை ஏற்ற ஆட்சிகள் நிலைத்தன!
பெரியாரைப் பிழையாமையை ஏற்காத எகத்தாள ஆட்சிகள் நிலைக்கவில்லை.
- இது இன்று வரலாற்றுக் காட்சிகள்!
அரசியலுக்கு அவர் சென்றதில்லை; ஆனால் அரசியல் அவரிடம் சென்றே செயலுருக் கொண்டது!
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்                 (குறள் 892)
எரியாற் சுடப் படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்தொழுகுவார்    (குறள் 897)
பெரியார் பிழைத்தொழுகும் ஆட்சிகள் நிலைத்தது போன்ற விளம்பர வானவில் வண்ணங்கள் - ஒரு தற்காலிக வெளிச்சமே; நிலைத்து நிற்காது! நீடிக்காது!
பகலவன்தான் நிலையானது என்பது அறிவியல் உண்மை அல்லவா!
எம்மை பதவி, புகழ் வேட்டைக்கு உரியவர்களாக ஆக்காது, தொண்டு, கைம்மாறு கருதாத மான மீட்புப் பணி, எளிமை, சிக்கனம் நன்றி எதிர்பாராத தொண்டாற்றும் தூய்மை - இவைகளில் தோய்த்து எடுத்து, துலக்கி நிறுத்தியுள்ள எங்கள் ஆசானே, அறிவே, ஒளியே! உமது 135ஆம் ஆண்டு பிறந்த நாளில்
முடிக்க வேண்டிய களப்பணிகளை -
ஜாதி ஒழிப்பை,
மதவெறி மாய்ப்பை,
சமூகநீதி காப்பை,
மூடநம்பிக்கை அழிப்பை,
மனிதநேய பரப்புரையை
செய்ய உறுதியேற்று அன்னையைத் தொடர்ந்து எங்கள் பயணங்கள் தொடருகின்றன!
நிற்காது பயணமாக அது நடந்து கொண்டே இருக்கும் என்று சூளுரைக்கிறோம்.
பயணத்தைத் தொடர்கிறோம்
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை  
17.9.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...