- நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடாது என்று சொன்ன நோபல் அறிஞர் அமர்த்தியாசென்னைப் பழி தூற்றுவதா?
- பாரத ரத்னாவைப் பறிக்கவேண்டும்என்று பி.ஜே.பி. கூறுவதா?
- பி.ஜே.பி.யின் ஜனநாயகக் கோட்பாடு இதுதானா?
- மன்னிப்புக் கேட்கவேண்டும் பா.ஜ.க.!
தமிழர் தலைவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை
மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரான நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வரக்கூடாது என்று கூறிய நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியாசென்னைக் கடுமையாக விமர்சித்தும், அவருக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா பட்டத்தைப் பறிக்கவேண்டும் என்றும் ஆவேசமாகக் கூறும் பா.ஜ.க. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:
மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரான நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வரக்கூடாது என்று கூறிய நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியாசென்னைக் கடுமையாக விமர்சித்தும், அவருக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா பட்டத்தைப் பறிக்கவேண்டும் என்றும் ஆவேசமாகக் கூறும் பா.ஜ.க. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:
குஜராத் மதக் கலவரத்திற்கும், பல வகையான சிறு பான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமிய மக்களைக் குறி வைத்தும் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கும் (Pogrom)ப் பின்னணியாக இருந்த ஆட்சி, பா.ஜ.க. மோடியின் ஆட்சியாகும்.
சர்வதேச அளவில் மோடியின் மோசடிகள்!
போலித்தனமான என்கவுண்டர்களைத் திட்டமிட்டு ஆணையிட்டு நிறைவேற்றியதுபற்றியெல்லாம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டுள்ளது; தலைமைக் காவல்துறை அதிகாரிகளே, குற்றம் சுமத்தும் அளவுக்குப் பல்வேறு தகவல்களும், இந்தக் கலவரங்கள்பற்றி பல்வேறு நடுநிலையாளர்களும் ஆதாரங்களைத் திரட்டி எழுதியுள்ள புத்தகங்களும் சர்வதேச அரங்கில் பரவி உள்ளன!
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆணை யைத் தலைமேல் ஏற்று, பா.ஜ.க. என்ற அதன் அரசியல் பிரிவு (சங்பரிவாரத்தில் உள்ள அரசியல் கட்சி இதுவே) மோடியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முதற்கட்டமாக - முன்னுரைபோல் - பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராகப் போட்டு முன்னோட்டம் நடத்துகிறது!
பா.ஜ.க.வுக்கு உள்ளேயே மோடிக்கு எதிர்ப்பு!
ஆனால், இதற்கு பா.ஜ.க.விற்குள்ளேயே பலத்த எதிர்ப்பு இருக்கிறது; இங்குள்ள ஊடகங்கள் - பார்ப்பன மேல்ஜாதியினரின் கைப்பாவையானபடியால் மோடியைத் தூக்கி வைத்து விளம்பர சடகோபம், சாத்தி, சைவ ஓநாய் இது என்று காட்டிப் பிரச்சாரம் செய்கின்றனர்!
மோடியின் ராஜ்ய பரிபாலனம் ஏதோ மோட்ச சாம் ராஜ்யத்தையே (அவர்கள் நம்பும்) மக்களுக்குக் கொண்டு வருவது போன்று மோடி மஸ்தான் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்!
குஜராத்தில் கல்வி வளர்ச்சி உண்டா?
நிர்வாகத்தில் கல்வி வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி முதல் பலவற்றில், மற்ற மாநிலங்களைவிட மோடியின் குஜராத் ஓங்கி நிற்கவில்லை என்ற உண்மையை முழுப் பூசணிக்காயை கைச் சோற்றில் மறைத்ததுபோல மறைத்து மகிழ்கின்றனர் - இந்தக் காவிகளின் ஏவுகணை களான பிரச்சார இயந்திரங்கள்!
அத்வானி, ஜஸ்வந்த்சிங், ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் போன்ற பல பா.ஜ.க. முன்னணித் தலைவர்கள் மோடியைப் பிரதமராக்குதல் கூடாது என்று உள்ளேயே போர்க் கொடி உயர்த்தியது - உலகெலாம் அறிந்த செய்தியாகிவிட்டது!
பொருளாதார அறிஞரின் அபாய அறிவிப்பு!
இந்திய நாடு பெருமைப்படும் வகையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர், பேராசிரியர் அமர்த்தியா சென் அவர்கள், மோடி பிரதமராக வந்தால் நாடு அதை ஏற்காது என்று அண்மையில் ஒரு ஏட்டிற்குப் பேட்டி கொடுத்தார்!
இந்தியாவின் நடுநிலையாளர்கள், மதச்சார்பின்மை யில் நம்பிக்கை உள்ள பெருமக்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்களும் இதே கருத்தைத்தான் கொண் டுள்ளனர்!
குஜராத் கலவரங்கள்பற்றி குஷ்வந்த் சிங் போன்ற பலரும் இவர்கள் கை ஓங்கினால் இந்தியா என்பதே காணாமற்போய்விடும்; வெறும் யதேச்சாதிகார ஹிந்து நாடுதான் இருக்கும் என்று கவலை தெரிவித்து நூலே வெளியிட்டுள்ளனர்.
அமர்த்தியா சென்னின் பாரத ரத்னாவைப் பறிக்கவேண்டுமாம்!
பிரபல பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் அவரது கருத்தை வெளியிட்டார்; அது அவரது பேச் சுரிமை; அடிப்படை உரிமை. அதைக் கண்டு, பா.ஜ.க.வினர் ஆவேசத்துடன் அவர்மீது பாய்ந்து, பிய்த்துப் பிராண்டு கின்றனர்!
அவருக்குக் கொடுத்த பாரத ரத்னா பட்டத்தையே பறித்துவிடவேண்டுமாம்! என்னே அற்பத்தனம்!
இவர்களது ஆட்சியில் முன்பு இதுபோன்ற பட்டங்களை பல கிரிமினல் பேர்வழிகளுக்குத் தந்து, நாடே சிரிப்பாய் சிரித்த கதை மறந்துவிட்டதுபோலும்! காந்தியார் படுகொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட சாவர்க்கார் படத்தையே நாடாளுமன்றத்தில் மாட்டி ஆண்டுதோறும் அதற்கு வீரவணக்கம் செலுத்திட ஏற்பாடு செய்த கூட்டமா தனக்கிருக்கும் கருத்துரிமையைப் பயன்படுத்திய பொருளாதார மேதையைக் கண்டிப்பது?
அமர்த்தியாசென் என்ன குற்றம் செய்தார்? மோடி பிரதமராக வரக்கூடாது என்று அவரது கருத்தைக் கூறியதற்காக அவரது பாரத ரத்னா பட்டத்தைப் பறிக்கவேண்டும் என்கிறார்!
பா.ஜ.க.வின் எம்.பி. - மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மித்ரா என்ற பேர் வழி; இவர் பயோனீர் என்ற பத்திரிகையின் முதலாளி, பிரதான ஆசிரியராம்! மகாவெட்கக்கேடு!! என்னே இவர்களின் பேச்சுரிமை, கருத்துரிமை லட்சணம்!
இவர்கள் ஜனநாயகவாதிகளா?
நாலாவது தூண் என்ற பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இப்படிக் கூறுவது பச்சை ஏதேச்சாதிகார கருத்து அல்லாமல் வேறு என்ன?
ஹிட்லர் மொழிதானே இது? அதுவும் அடுத்து வரவிருக்கும் (NDA) தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி யில் அந்தப் பாரத ரத்னாவைப் பறித்துவிடவேண்டுமாம்! (அடுத்து வருவது பகற்கனவு).
எத்தகைய தலைசிறந்த ஜனநாயகவாதிகள் இவர்கள்? இவர்களிடம் தேசியமும் இல்லை; ஜனநாயகமும், எந்தப் புடலங்காயும் இல்லை!
இதே கருத்தைக் கூறிய, கூறும் அத்வானிகளை, ஜஸ்வந்த்சிங்குகளை, யஷ்வந்த் சின்காக்களை என்ன செய்யப் போகிறது ஆர்.எஸ்.எஸ். அவதாரமாகிய பா.ஜ.க. தலைமை?
கட்காரியின் மிரட்டல்!
முன்பு கட்காரி என்ற பா.ஜ.க. தலைவர் கம்பெனிகளில் வருமான வரி ஏய்ப்பு ரெய்ட் நடந்து ஆவணங்களைக் கைப்பற்றி ஆராய்ந்த வருமான வரி அதிகாரிகளை, அந்த ஆர்.எஸ்.எஸ். கட்காரி (அய்யர்) நாங்கள் ஆட்சிக்கு அடுத்து வருவோம்; அப்போது பார்த்துக் கொள்ளுவோம் உங்களை! என்று உறுமவில்லையா?
நாடே கண்டித்த பிறகு மன்னிப்புக் கேட்கவில்லையா?
ஆட்சிக்கு வருமுன்னேயே இப்படிப்பட்ட மனப் பான்மை - பாசிசக் குரல் என்றால்; ஆட்சி இவர்களிடம் சென்றால், நாடே மறுபடியும் ஹிட்லரை மிஞ்சுவதாகத் தானே ஆகிவிடும்?
மன்னிப்புக் கேட்கவேண்டும் பா.ஜ.க.
அமர்த்தியா சென் அறிவு - பாரத ரத்னா பட்டத்தில் தொங்கவில்லை; அவரது மூளையில் உள்ளது; அதை எவராலும் பறிக்க முடியாது. நோபல் பரிசு பெற்ற அறிஞர் பாரத ரத்னா அமர்த்தியா சென்னைக் கொச்சைப் படுத்தும் பா.ஜ.க. மன்னிப்புக் கேட்கவேண்டும்!
கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை
25.7.2013
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தமிழ்நாட்டு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது!
- நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு தேவை என்ற, புதிய தலைமை நீதிபதியின் சிறப்பான கருத்து செயல்படுவது அவசியம்!
- தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு ஒரு திறந்த மடல்
- காவிரி மேலாண்மை வாரியம்-காவிரி ஒழுங்குமுறை ஆணையங்களை உடனடியாக ஏற்படுத்துக!
- சமூகநீதியாளர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய காலம் இது! தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய சமூக நீதிக்கான அறிக்கை
No comments:
Post a Comment