கொலைக் குற்ற வழக்கில் சிக்கிப் பிணையில் நடமாடிக் கொண்டிருக்கும் திருவாளர் ஜெயேந்திர சரசுவதி - ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எத்தனையோ முறை ஆதாரங்களுடன் விடுதலை எடுத்துக்காட்டிய துண்டு; திராவிடர் கழகம் அடையாளம் காட்டியதுண்டு. அவற்றை நம்பாதவர்கள் எவரேனும் இருந்தால் நேற்று ஏடுகளில் அவர் வெளியிட்ட கருத்துகளைப் படித்த வர்களுக்குச் சந்தேகம் தீர்ந்திருக்கும்
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக பாரதீய ஜனதா முன் நிறுத்தினால் அது வர வேற்கத்தக்கது. நரேந்திரமோடி தகுதியான வேட்பாளர். நிர்வாகத் திறமை மிக்கவர். அவருக்கு கடவுள் அருளாசி உண்டு. எனது வாழ்த்துக்கள்!
ஆனால் சோனியாகாந்தி வெளிநாட்டுக்காரர் என்பதால் அவரது மகன் ராகுல் காந்திக்கு இந்தியா வுக்குத் தலைமை தாங்கும் தகுதி கிடையாது என்றே கருத வேண்டியுள்ளது.
நரேந்திரமோடி - ராகுல்காந்தி இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நரேந்திர மோடிக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நிர்வாகத் திறமை ஆற்றல் படைத்த மனிதர். மிகப்பெரிய சாதனையாளர். குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். மதச்சார்பற்ற ஆட்சியை அவர் தருவது நிச்சயம். - இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார்(?) ஜெயேந்திரர் கூறியுள்ளார்.
மேற்கண்டதைப் படிப்போர் தெளிவாகவே ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். மோடியை பி.ஜே.பி. சார்பில் பிரதமராக நிறுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸே முக்கிய காரணமாகும்.
மோடி, தன்னை ஒரு இந்துத் தேசியவாதி என்று சில நாள்களுக்கு முன்புதான் வெளிப்படையாகப் பேட்டி ஒன்றில் கூறினார்.
நரேந்திர மோடி மதச் சார்பற்ற கொள்கைக்கு எதிரானவர் என்று பி.ஜே.பி.யைத் தவிர அனேகமாக எல்லாத் தரப்பினரும் எடுத்துக் கூறிவிட்டனர். மதச் சார்பற்ற தன்மைக்கு தம் வசதிக்கு விளக்கம் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்.
குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை இன் றளவும் நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அடித்துக் கூறுகிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட இதே மோடி என்ன சொன்னார்? இந்துக்கள் ஆண் மக்கள், பேடிகள் அல்லர் என்பதை நிரூபித்துவிட்டனர்! என்று கருத்துக் கூறிய பேர்வழிதான் இந்த மோடி.
அத்தகைய ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று ஒருவர் சொல்லுகிறார் என்றால், அவர் இன்னொரு மோடியாகத்தானிருக்க முடியும்.
மோடியை ஆதரிப்பதோடு அவர் நிற்கவில்லை. மிகவும் பச்சையாக காங்கிரஸ் சார்பில் பிரதமருக்கு முன்னிறுத்தப்படுபவரைப்பற்றியும் விமர்சனம் செய்கிறார் என்பதையும் கவனிக்கவேண்டும்.
பி.ஜே.பி.யின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்; மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்குத் தனிப் பிரிவை ஏற்படுத்தி அதற்கு இந்த ஜெயேந்திரரை பிரச் சாரக் குழுத் தலைவராக அறிவிப்பதுபற்றி பி.ஜே.பி.யோ, சங் பரிவாரமோ ஆழமாகவே யோசிக்கலாம்.
நெருக்கடிநிலை காலத்தில் தலைமறைவான ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இவர் உதவி புரிந்ததை நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம் எனும் நூலில் இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திருவாளர் இராம.கோபாலன் 222 ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருநாடகத்தில் ஸ்ரீபேஜாவார் சுவாமிகள், நெருக்கடி வந்த முதல் வாரத்திலேயே ரூ.1001 கொடுத்ததுடன், செல்லும் இடமெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்காகப் பிரச்சாரம் செய்து வந்தார்; காஞ்சி காமகோடிப் பீடம் ஸ்ரீஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் தலைமறைவு இயக்கத்திற்குப் பல விதங்களில் உதவியுள்ளார். தலைமறைவு இயக்கத்தவர்கள் அவரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர் என்று திருவாளர் இராம. கோபாலன் குறிப்பிட்டுள்ளார் என்றால், ஜெயேந்திரர் காவி உடையில் திரியும் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது விளங்கவில்லையா?
அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை (தினமணி, 27.11.2000) என்று சொன்னவரும் இந்த சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்தான்.
ஒரு வகையில் ஜெயேந்திர சரசுவதி, நரேந்திர மோடியை வெளிப்படையாக ஆதரித்ததும் நல்லதாகவே போய்விட்டது.
கொஞ்ச நஞ்சம் அரசல்புரசலாக இருப்பவர்கள்கூட, நாட்டை மதத்தின் பெயரால் அமளிக்காடாக மாற்றத் துடிக்கும் ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது என்பதை வெகுமக்கள் தெரிந்துகொள்ள, புரிந்துகொண்டு செயல்படப் பெரும் உதவியாகவே போய்விட்டது - அந்த வகையில் வரவேற்கவும் செய்யலாம்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment