நரேந்திரமோடியை பிரதமராக ஆக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் பார்ப்பனர்கள் நிற்பதற்குக் காரணம் இருக்கிறது.
பிஜேபியின் சார்பில் பார்ப்பனர் ஒருவரை பிரதமருக்கான வேட்பாளராக அறிவித்தால் அதில் பல சங்கடங்கள் உண்டு; ஒரே வரியில் அதன் பார்ப்பனத்தனம் பட்டாங்கமாக மக்கள் மத்தியில் தோலுரிந்து போகும்.
பார்ப்பனர் அல்லாதாரான மோடியை முன்னிறுத்தினால் அந்தப் பார்வை விழுவதற்கான வாய்ப்பே இல்லை. நிஜப் புலியைவிட வேடம் போட்ட புலி அதிகமாகக் குதிக்கும் என்பார் தந்தை பெரியார். மோடி இந்த வேடம் சூட்டிய புலி.
சிறுபான்மையினர் மீதான வெறுப்பு - காழ்ப்பு என்பது பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் உண்டு என்றாலும் நரேந்திரமோடி அளவுக்கு முஸ்லிம்களை நர வேட்டையாடுவதற்கு வேறு யாரால் முடியும்?
அதைக் குஜராத் மாநிலத்தில் நடத்திக் காட்டியதுடன் முஸ்லிம்கள் வாக்கு - முஸ்லிம் அல்லாதார் வாக்கு என்ற வாக்கு வங்கியைக் கோடு போட்டுக் காட்டி இரு அணிகளாகப் பிளவுப்படச் செய்து, பெரும்பாலான இந்துக்களின் வாக்குகளை எளிதாகத் தம் பைக்குள் போட்டுக் கொள்ளலாம் என்ற யுக்தியை குஜராத் மாநிலத்தில் கடைபிடித்துக் காட்டி, அதில் மோடி வெற்றி பெற்று இருப்பதாலும், இந்த அனுபவமும், தந்திரமும் யுக்தியும் இந்திய அளவுக்குப் பயன்படும் என்பது பார்ப்பனர் மனப் பாங்கு; அந்த நிலையை எட்டினால் அவர்கள் நெஞ்சுக்குள் பதுக்கி வைத்திருக்கும் இந்து ராஜ்ஜியத்தை எளிதாக அமைத்துக் கொள்ளலாம் என்ற மன நிலையில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.
மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மீது பொதுவாக மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது - மேலும் இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் அது ஆட்சியில் இருப்பதால் பொதுவாக மக்களின் எதிர்ப்பு வாக்குகள் (Anti Incumbency) கிடைக்கும் என்று பிஜேபி நம்பிக் கொண்டு இருக்கிறது.
இப்படி மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயே குழப்பமும், பிளவும் ஏற்பட்டு இருப்பதும், பிஜேபிக்குள்ளேயே அத்வானியின் தலைமையில் மோடிக்கு எதிர்ப்பு ஏற்பட்டு இருப்பதும் பார்ப்பனர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
கல்கி கதறுகிறது. குறிப்பாக இவ்வார இதழில் (30.6.2013) பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார்மீது விழுந்து குதறியுள்ளது.
பிஜேபி கூட்டணியிலிருந்து முறித்துக் கொண்டது பின்னடைவு என்று பொருமுகிறது. 2014ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அய்யோ என்று போய் விடுவார். மூன்றாவது அணி அமைத்தாலும் அது உருப்படாது என்று கல்கி மண்ணை வாரி இறைக்கிறது.
துக்ளக் இதழ் அத்வானி நடந்து கொள்ளும் போக்கைச் சற்றும் ஜீரணித்துக் கொள்ளாமல் இவ்வார (3.7.2013) கேள்வி பதில் பகுதியில் எட்டு கேள்வி பதில்களை அர்ப்பணம் செய்து தீர்த்து விட்டது (ஆம் திட்டித் தீர்த்து விட்டது!)
மோடியைப் பிரதமராக்கி மனுதர்மக் கொடியை நாடாளுமன்றக் கட்டடத்தில் ஏற்றிப் பார்க்கலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சோவுக்குப் பெரும் சோகமாகப் போய் விட்டது அத்வானியின் போக்குகள்!
நீங்கள் பெரிதும் மதிக்கும் அத்வானியின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு ஏற்புடைய தாக உள்ளதா என்ற கேள்விக்கு சோவின் பதில்:
இல்லை. ஏன் இவர் இப்படிச் செய்கிறார் என்கிற வியப்புதான் ஏற்படுகிறது என்று புலம்பியிருக்கிறார்.
மோடியின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் அத்வானி பதவி விலகியதாகக் கருதலாமா? என்ற இன்னொரு கேள்விக்கு சோவின் பதில்: அப்படி ஒரு கருத்து தோன்ற அவர் வழி செய்து விட்டார் என்று கருதலாம் என்றும் தன் மனப்புழுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒட்டு மொத்தமாக இந்த வார கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் பிஜேபி ஆட்சிக்கு வரும் என்ற தனது நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லி வெதும்பி இருக்கிறார்.
அத்வானியையும் மோடியையும் துக்ளக் ஆண்டு விழாவில் ஒரு சேர பங்கு ஏற்கச் செய்ததே மனதுக்குள் ஒரு திட்டம் போட்டுதான் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். அது வீணாகப் போனது பற்றி விலா நோக எழுதியுள்ளார்.
எப்படி இருந்தாலும் பார்ப்பனர்களின் மனப் போக்கு எந்த அடிப்படையில் உள்ளது என்பதற்கு இவ்வார கல்கி, துக்ளக் இதழ்களே எடுத்துக் காட்டாகும்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment