திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது.
தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை!
கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் - அலை அலையான செயற்பாடுகள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் குறுக்குச்சால் ஓட்டி காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறது.
இனியும் பொறுத்திருக்க நியாயம் இல்லை. அறப்போராட்டத் துக்குத் தேதி கொடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.
ஆகஸ்டு முதல் தேதி போர்! போர்!! போர்!!!
பல கட்டப் போராட்டங்களுக்குக் கறுஞ்சட்டைச் சிறுத்தைகளே தயாராவீர்! தயாராவீர்!! என்று சங்கநாதம் செய்துவிட்டார்.
இப்பொழுதே பட்டியல்கள் குவிய ஆரம்பித்துவிட்டன; இளைஞர்கள் இரத்தக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர் (பகுத்தறிவுச் சிங்கங்களே, இந்த முறை தேவையில்லை என்று ராஜபாளையம் மாநாட்டில் நமது தலைவர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார்).
மதுரையை நோக்கி தென்மாவட்டங்களிலிருந்து இரு பிரச்சாரப் படைகள் ஜூலை முதல் வாரத்தில் புறப்பட உள்ளன. நிறைவு விழாவில் (ஜூலை 8) தமிழர் தலைவர் மதுரை மாநகரில் பங்கேற்க இருக்கிறார்.
அதற்கு முன்னதாக இன இழிவு ஒழிப்புப் போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?
தமிழன் கட்டிய கோவில்களில் தமிழுக்கு ஏன் இடமில்லை? தமிழர்கள் ஏன் அர்ச்சகராக முடியவில்லை?
தந்தை பெரியார் இந்தக் குரலை எப்பொழுது முதல் கொடுத்து வருகிறார்? அதன் வரலாறு என்ன?
இந்த இலட்சியத்தை ஈடேற்ற நாம் கடந்து வந்த பாதைகள் யாவை?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றப்பட்டது - உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் படையெடுப்பு - உச்சீநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைகள் - இன்னோரன்ன அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் அடங்கிய கையடக்க ஆவணமாக சிறு கையேடு தயாரிக்கப்பட்டு வெளிவந்துவிட்டது.
32 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டின் நன்கொடை ரூபாய் அய்ந்தே, அய்ந்துதான்.
ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும் - அதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்களே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே, தொழிலாளரணி, மகளிரணி செல்வங்களே, பகுத்தறிவாளர் கழக அன்பர்களே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை இந்த வெளியீட்டைக் கொண்டு சேர்ப்பீர்! சேர்ப்பீர்!!
காரணாக் காரியங்களை எடுத்துக் கூறி களத்தில் இறங்கும் பண்பாட்டைக் கொண்டது கறுஞ்சட்டைப் பாசறை.
ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரில் இந்த வெளியீடு முதற்கட்டப் பாய்ச்சல்.
ஒவ்வொரு கழகத் தோழரின் கைப்பையிலும் குறைந்தபட்சம் 25 நூல்களாவது தயாராக இருக்கவேண்டும். யார் யாரை எல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் கை இந்த வெளியீட்டைத் தாங்கி நீளவேண்டும்.
இந்த முதற்கட்டப் பணியை முடித்தால்தான் வெற்றிச் சங்கை ஊதும் வாய்ப்பு விரைவில் கிட்டும்!
புறப்படுக! புறப்படுக!! புறப்படுக!!! பூம் பூம் பூம்...!
- கருஞ்சட்டை
No comments:
Post a Comment