நீதியரசர் கர்ணன் தீர்ப்பு - பெரியார் கருத்து உலகமயமாகி வருகிறது என்பதற்கான அடையாளம்
பேரம் பேசும் ஆண்களின் அயோக்கியத்தனத்திற்கு முற்றுப்புள்ளி
பெண்களை அடிமைப்படுத்தும் கலாச்சாரத்திற்கு சவுக்கடி!
தமிழர் தலைவர் விடுத்துள்ள மிக முக்கிய அறிக்கை
நீதியரசர் கர்ணன் - பழைய புராண கர்ணன் அல்ல - அவர் அளித்துள்ள தீர்ப்பும் புரட்சிகரமானது; அதனைத் திராவிடர் கழகம் வரவேற்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை உயர்நீதிமன்றத்தின் அண்மைக்கால அதிரடி புரட்சிகரமான தீர்ப்புகளில் முக்கியமானதும், வரலாற்றில் இடமபெறவேண்டியதுமான தீர்ப்பு ஜஸ்டீஸ் திரு.கர்ணன் அவர்கள் சில நாள்களுக்குமுன் கொடுத்த தீர்ப்பாகும்.
புத்தாக்கச் சிந்தனையின் எதிரிகள்!
பழைய சிந்தனைகள் என்ற சிறைக்குள்ளேயிருந்து வெளியேறிட முடியாத பலர் இருக்கும் இன்றைய காலகட்டத்தில்கூட இத்தகைய புரட்சிகர, பெரும்பாலான மதவாதிகள், பழைமையாளர்கள், புரோகித வர்க்கத்தினர், சீர்திருத்தத்தை ஒரு பேஷனாகக் கருதிப் பேசுவோர் பலரானாலும்கூட இத்தீர்ப்பை செரிமானம் செய்து கொள்ள முடியாது. காரணம், புதிய கருவிகளை வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் பலரும் புதிய புத்தாக்கச் சிந்தனைகளைக் கண்டால் ஏற்றுக்கொள்ள அஞ்சும் மனப்பான்மையே!
திருமணம் என்பது நெருப்பைச் சுற்றி ஏழு அடி யெடுத்து வைத்தால்தான் செல்லும்; தாலி கட்டினால் தான் செல்லும்; சடங்கு, சம்பிரதாயங்களைச் செய்தால் தான் சட்டப்படி செல்லும் என்றெல்லாம் முந்தைய பல தீர்ப்புகள் வைதீகபுரியின் வக்கீல்களான நீதிபதிகளால் நமது உயர்நீதிமன்றங்களில் தரப்பட்டுள்ளன.
பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு முற்றுப்புள்ளி
யதார்த்தமாகவும், பெண்களிடம் ஆசைகாட்டி மோசம் செய்து, பிறகு அவர்கள் வாழ்க்கையையே நாசம் செய்து கைவிட்டு, புது செருப்புப் போட்டுக்கொள்ள பழைய செருப்பைக் கழற்றி எறிவது போன்ற அலட்சியத்துடன் மகளிரிடம் நடந்துகொண்டு அவர்கள் கருவுற்ற போதிலும்கூட, அதற்குப் பொறுப்பேற்க மறுத்து, பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணி அடிக்கும் தீர்ப்பேயாகும் இது!
இந்தத் தீர்ப்பு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும்; கடும் விமர்சனங்களுக்கு ஆளாகக்கூடும். அய்யோ, நமது பாரத கலாச்சாரம், மத ஆச்சார அனுஷ்டானங்களே குழி தோண்டிப் புதைப்பதாகிவிடும் என்று வைதீகபுரியினர் அலறக்கூடும்.
திராவிடர் கழகம் வரவேற்கிறது!
என்றாலும், அதுபற்றிக் கவலைப்படாத பெண்களுக் குப் பாதுகாப்பும், ஆண் களை ஒழுக்கநெறிகளையும், பொறுப்புணர்வைத் தட்டிக் கழிக்காதவர்களாக ஆக்க வும் பயன்படும் யதார்த்த மான தீர்ப்பு இத் தீர்ப்பு என் பதால் இதனை வரவேற்றுப் பாராட்டுகின்றனர் திராவிடர் கழகமும், தொண்டர்களும்.
கலாச்சாரம் பாழ் என்ற கூக்குரல்!
1. காலம் மாறுகிறது; தீர்ப்புகளின் பார்வையும் பழைமையிலிருந்து மாறுகிறது. இதில் தவறு என்ன?
இதனால் ஆகா, பண்பாடு, கலாச்சாரம் போய் விடு கிறதே என்று அலறலாமா? அலறுவதில் விமர்சிப்பதில் பொருள் உண்டா?
இளம் விதவைகளைக்கூட உயிருடன், கணவன் இறந்தவுடன் இணைத்து சதி என்ற உடன்கட்டை ஏற்றும் கொடிய காட்டுமிராண்டி வழக்கம் சட்டப்படி தடை செய்யப்படவில்லையா?
2. பால்ய விவாகம் என்பதன் தன்மை என்ன? சங்கராச்சாரியார்கள் முதல் சாதாரண சனாதனிகள்வரை இதனை ஆதரிப்பவர்களாயினும் இது சட்டப்படி இன்று குற்றமல்லவா?
3. விதவைகளுக்கு மறுமணம் சட்டப்படி அங்கீகரிக் கப்பட்டு, அவர்களை உண்மையான ஒழுக்கவாதிகளாக ஆக்கி - பழைய திருட்டு, விபச்சாரப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற முயற்சி வரவேற்கப் படவில்லையா?
பிரம்மா பேன் குத்திக்கொண்டு இருக்கிறாரா?
4. கருத்தடை (Birth Control) என்பது, பகவான் கொடுக்கிறான்; மனிதன் தடுப்பதா? என்று கேட்டதற்கு மாறாக, மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப் படுத்த, பெண்களுக்கான நலவாழ்வு சுதந்திரத்திற்கு ஒரு முக்கிய தேவையாக இன்று அரசுகளின் திட்டமாக, குடும்பநலம் (Family Planning) ஆகிவிட்டதே - இதனால் என்ன குடிமூழ்கிப் போய்விட்டது? பிரம்மா வேலை யில்லாத் திண்டாட்டத்தினால் அவதிப்பட்டு, அங்கே பிரம்மலோகத்தில் பேன் குத்திக்கொண்டு இருக் கிறாரா?
இதனால் எல்லாம் கெடாத கலாச்சாரம் - இத்தீர்ப்பினாலா கெட்டுப் போகப்போகிறது?
பெண்ணுரிமைபற்றி பெரியார் அளவிற்குச் சிந்தித்தது யார்?
தந்தை பெரியார் அளவுக்குப் பெண் சுதந்திரம், சமத்துவம்பற்றிச் சிந்தித்த புரட்சியாளர் உலகிலேயே இல்லை என்றே சொல்லவேண்டும்!
அவர்கள் தொலைநோக்குடன் சொன்னார்கள்; இனி வருங்காலத்தில் திருமணம் என்ற ஏற்பாடே மறையும்; ஏன் அடுத்த கட்டத்தில் அது கிரிமினல் குற்றமாகக்கூட ஆக்கப்படல் வேண்டும் என்றார். பலரால் இன்னமும்கூட இதை ஜீரணித்துக் கொள்ள முடியாது.
அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் தொடங்கி கீழை நாடுகள் சீனாவரைகூட, நண்பர்களாக வாழுதல் (Living Together - Living as Friends) என்பது நடைமுறைக்கு வந்து திருமணம் என்ற கருத்து மெல்ல மெல்ல விடைபெறவில்லையா?
ஏன், நமது உச்சநீதிமன்றத் தீர்ப்பேகூட இந்த நண்பர்களாக வாழுவதை சட்டபூர்வமாக அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கிறதே!
நீதிபதி முத்துசாமி அய்யர் என்ன சொன்னார்?
ஒரு காலத்தில், கணவன் மனைவியை அடித்து கை, கால்களை முறிப்பது சட்டப்படி தண்டனைக்குரியதல்ல என்று நீதியரசர் ஜஸ்டீஸ் முத்துசாமி அய்யர் தீர்ப்பு எழுதினார்.
அது இன்று காலாவதியான தீர்ப்பாக, இப்போதுள்ள பெண்ணுரிமைச் சட்டங்களுக்கு முரணாகிவிட வில்லையா?
எனவே, கூச்சல், கடும் விமர்சனங்கள் ஜஸ்டீஸ் கர்ணன் தீர்ப்புப்பற்றி எழுந்தாலும், இது வரவேற் கப்படவேண்டிய தீர்ப்பு, புராணகால கர்ணன்கள் அளித்ததைவிட இது நவீன கால நல்ல பெண்ணியப் பாதுகாப்புக்கென அருங்கொடையாகும்!
தாலி கட்டாத திருமணம் பல ஜாதியில் இன்னமும் உண்டு; குழந்தையை உட்கார வைத்துத் திருமணம் நடத்திக்கொள்ளும் ஜாதி வழக்கமும் உள்ளது. எனவே, பதறுவதில் ஏதும் பொருள் இல்லை. பெரியார் கருத்துகள் உலகமயமாகி வருவதற்கு இதுவும் ஓர் நல்ல எடுத்துக் காட்டாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.6.2013
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கடவுளைக் கும்பிட போன 71 ஆயிரம் பக்தர்கள் : அந்தோ பரிதாபம்!
- திருமணம் என்பது வெறும் தாலி கட்டுவதும், சடங்கும் அல்ல!
- தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட உயிரையும் கொடுக்கத் தயார்!
- சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துக!
- ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
No comments:
Post a Comment