மதமானது கடவுளுக்கும் நமக்கும் இடையில் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எந்தவித அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத்தைவிட மேலானதாக நினைக்கிறது. அன்றியும் மதமானது பணச் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும், பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங் களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்ப தாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யவும், செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகின்றது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கிறது என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.
- (குடிஅரசு 11.8.1929)
இதனை அப்படியே இப்பொழுது நடந்த நடந்து கொண்டு இருக்கிற நிகழ்வுக்கும் பொருத்திப் பார்த்தால் தந்தை பெரியார் இன்றைக்கு 84 ஆண்டுகளுக்கு முன் சொன்னது எந்த அளவுக்குத் துல்லியமாகப் பொருந்து கிறது என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாம்.
அய்.பி.எல். கிரிக்கெட்டை மறந்து விடத்தான் முடியுமா? அதை மறந்தாலும் அதில்கூட இடம் பெற்ற சந்தர்ப்பத்தைத் தான் மறக்க முடியுமா?
சூத்தாட்டத்தையே மறந்தாலும் ஸ்ரீசாந்த், ஸ்ரீசாந்த் எனப்பட்ட கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட்காரரைத் தான் மறக்க முடியுமா?
எப்படி எப்படி எல்லாம் சூதாடினார்? விளையாட்டு மைதானத்தில் இந்த மைனர் எந்தெந்த சைகைகளைக் காட்டிப் பந்துகளை வீசினார்! அப்படி வீசப்பட்ட ஒவ்வொரு பந்துக்கும் எவ்வளவுக் கோடி ரூபாய் புரண்டது?
பக்கம் பக்கமாக ஏடுகள், ஊடகங்கள் செய்திகளை அள்ளி அள்ளிக் கொட்டவில்லையா?
ஸ்ரீசாந்த் தங்கி இருந்த அறையில் கைப்பற்றப்பட்ட பணம் ஆவணங்கள், சி.டி.கள் இத்தியாதி.. இத்தியாதி சாட்சிகள் ஸ்ரீசாந்தை விளையாட்டுச் சூதாடி கில்லாடி என்பதை நிரூபித்ததே - ஆசாமி கையும் களவுமாகப் பிடிபட்டார்.
அத்தோடு முடிந்ததா? காவல்துறையினர் அவர் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் நுழைந்தபோது அங்கு அழகிகள் இருந்தனர் என்றெல்லாம் படத்துடன் வெளி வரவில்லையா?
அதன்பின் கைது செய்யப்பட்டு சிறைக் குள் நெட்டித் தள்ளப் படவில்லையா?
இவ்வளவுப் பெரிய குற்றவாளி இப்பொ ழுது எங்கே? ஜாமீனில் வெளிவந்து அவசர அவசரமாக எங்கு சென்றார் தெரியுமா?
சபரிமலைக்குச் சென்றுள்ளார்? எதற் காகவாம்? எல்லாம் பிரார்த்தனைக்காகத் தான். என்னை அய்யப்பன் காப்பாற்றுவான் நான் குற்ற மற்றவன் என்று வெளியில் வருவேன் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன் என்று கூறியிருக்கிறாரே!
இப்பொழுது தந்தை பெரியார் கூறிய அந்தத் திருவாசகத்தைக் கொஞ்சம் பொருத்திப் பாருங்கள் பளிச்சென்று புரியும்!
பணச்செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருக்கிறது; எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின்மூலம் மன்னிப்பு இருக்கிறது. என்று நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யத் தூண்டுகிறது என்று தந்தை பெரியார் சொன்னதுதான் எவ்வளவு துல்லியமானது! - உண்மையானது!
இது ஒன்றும் புதிதல்ல! மஸ்தான் - மஸ்தான் என்ற கடத்தல் மன்னனைக் கேள்விப்பட்டதில்லையா?
அன்றாடம் அய்ந்து வேளை தொழுபவர்தான் ஒவ்வொரு வருடமும் ரம்ஜானையொட்டி ஒரு மாதம் நோன்பு இருப்பவர்தான்! மெக்காவுக்குச் செல்ல இருந்தோம் - அதற்குள் கைது செய்துவிட்டார்கள் என்று மஸ்தான் மனைவி சொன்னாரே!
பிரபல கடத்தல் புள்ளி வரதன் முனிசாமி மும்பையில் கோளிவாடா என்னும் பகுதியில் சிவன் கோயிலையே கட்டியவர் தானே!
சிங்கம்பட்டி கொலை வழக்கு, லட்சுமி காந்தன் கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு என்பதுபோல விஷ ஊசி கொலை வழக்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டில் பிரபலம்!
வைத்தீஸ்வரனும் அவனது கூட்டாளிகளும் சுங்க இலாகா அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு பணக்காரர்களைக் கடத்திச் சென்று விஷ ஊசி போட்டுக் கொன்று விட்டு, பணத்தைக் கொள்ளையடித்துக் குபேரர்களாக வாழ்ந்தனரே!
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்ட கதையாய் அந்தக் கும்பல் பிடிபட்டது.
அடித்து உதைத்துக் கேட்ட வுடன் உண்மைகளைக் கக்கினார்களே! கொள்ளை யடித்த பணத்தில் திருப்பதி, பழனி உள்ளிட்ட கோயில் களில் உண்டியலில் போட்டது வரை கணக்குக் கொடுத்தனரே!
தந்தை பெரியார் சொன்னதை இன்னொரு முறை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள். புத்தியைச் செலவழித்தால் இதற்குள்ளிருக்கும் உண்மை புலப்படும்!
கூடுதல் தகவல்: (Tail Piece:) கொலை வழக்கில் சிக்கியுள்ள காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் - ஜெயேந்திர சரஸ்வதியைக் கொஞ்சம் இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள்.
நாள்தோறும் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று பூஜை நடத்திக் கொண்டுதானே இருக்கிறார். பூஜை புனஷ்காரங்களுக்கு பஞ்சமா என்ன?
இவ்வளவையும் செய்யக் கூடிய லோகக் குரு சங்கராச்சாரியார்தான் கொலை வழக்கில் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார். ஆக கடவுள், பக்தி, பிரார்த்தனை, பிராயச்சித்தம் என்றால் என்ன என்பது இப்பொழுது புரிந்திருக்குமே!
No comments:
Post a Comment