கடவுள் பக்தர்கள் இருக்கட்டும். இவர்கள் கடவுள் என்று சொல்லுகின்றவர்கள் இடத்திலாவது ஒழுக்கத்தை வைத்து இருக்கிறார்களா? ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறார்களா? என்பதுதான் அடிப்படையான கேள்வி.
தாருகாவனத்தில் இருந்த ரிஷி பத்தினிப் பெண்களைக் கற்பழித்தான் என்பதுதான் இவர்களின் முழுமுதற் கடவுளாகிய சிவனின் பிரசித்திப் பெற்ற சாதனை!
படைத்தல் - கடவுள் என்று இலாகா பிரித்து வைத்திருக்கும் பிர்மாவின் பெருஞ்செயல் என்ன தெரியுமா? தான் பெற்ற பெண்ணாகிய சரசுவதியின் கற்பைச் சூறையாடி கழிபேருவகை அடைந்தான் என்பதுதான்.
இந்தக் காலித்தனத்தைச் செய்ததோடு மட்டுமல்லாமல் புத்திரார்த்த நிமித்தம் தாய், தமக்கை, மகள், பிள்ளை-யாரோடாயினும் கூடலாம் என்கிற தர்ம வாக்கியத்தைக் கீர்த்தியுடன் புகன்று வேறு சென்று இருக்கின்றான்.
இவர்களின் மும்மூர்த்திகளுள் இன்னொரு கடவுளும் இருக்கின்றான். அவனுக்கு ஒதுக்கப்பட்ட இலாகா காத் தலாம்!
இவன் காமக் களியாட்டங்களுக்காகவே - ஓர் அவதாரமே (கிருஷ்ணாவதாரம்) எடுத்து ஆகாயத்துக்கும் பூமிக்கும் ஆட்டம் போட்டவன்! சின்ன வயதில் வெண்ணைய் திருடி பெரிய வயதில் பெண்ணைத் திருடியவன் என்று பக்த சிரோன்மணிகள் எச்சில் ஒழுக ஒழுகப் பேசும்போது பார்க்க வேண்டுமே!
இப்படிக் கடவுளைப் படைத்துக் கொண்டவர்கள் ஒழுக்கத்தைப்பற்றிக் கவலைப்படுவார்கள் என்று எதிர் பார்ப்பது பைத்தியக்காரத்தனமே!
இந்து மதத்தின் அமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பதே தப்பித் தவறிக் கூட மனிதன் ஒழுக்கமாக வாழ்ந்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதையான அஸ்திவாரத்தின் மீதுதான்!
எவ்வளவு பெரிய பாவங்களுக்கும், - ஏன் - பஞ்சமா பாதகங்களுக்கும் சுலபமான பிராயச்சித்தங்களை ஏற்படுத்தி வைத்திருப்பவர்களாயிற்றே இவர்கள்!
பெரிய பாவங்கள், சிறிய கழுவாய்கள் - இதுதான் இந்துமதம். பன்னிரெண்டு வருடம் எவ்வளவு பெரிய பாவங்களைச் செய்திருந்தாலும் கும்பகோணம் மகாமகத்தன்று அந்தக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் சகலவிதமான பாவ மூட்டைகளும் அக்கணமே கரைந்து ஓடி மோட்சக்கதவு முந்தித் திறந்து மேளவாத்தியங்களுடன் கூப்பிடும் என்றால், பாவம் செய்யப் பயப்படுகின்றவன் பைத்தியக்காரனாகத் தானே இருக்க முடியும்?
விஷ ஊசி போட்டுக் கொன்று பல லட்ச ரூபாய் கொள்ளை அடித்தவன் திருப்பதி உண்டியலிலே ஒரு சிறு காணிக்கையைக் கொடுத்தான் என்றால் அதில் அவனுக்கென்ன கஷ்டம், நஷ்டம்? பாப விமோசனம் கமிசன் அடிப்படையில் சுலபமாகக் கிடைத்துவிடுகிறதே!
விபசாரவிடுதி நடத்திப் பல கொள்கைகளைத் தொடர்ந்து செய்த ஆட்டோ சங்கர் திருவான்மியூரிலே கோயில் கட்டிக் கும்பாபிஷேகமும் நடத்திக் கொடுத்திருக்கின்றான் என்றால் அது இந்துமதம் காட்டிய வழிதானே?
திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலம் எந்தப் பாதையைக் காட்டுகின்றது! (40-ஆவது பாடலைக் காண்க).
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனச் சிறுவன், பசுவுக்கு அருகம்புல் போட்டு, கோயில் திருக்குளத் தீர்த்தத்திலே குளித்து எழுந்த மாத்திரத்திலேயே அம்மையுடன் அப்பனும் தோன்றி, மோட்ச சாம்ராஜ்யத்திற்கு அழைத்துக் கொண்டனர் என்றால் ஒழுக்கத்திற்கும் உதார குணங்களுக்கும், சங்கராச்சாரியார்களும் அவர்களின் இந்து மதமும் வைத்திருக்கிற கட்டளைக்கல் என்னவென்று தெரியவில்லையா?
No comments:
Post a Comment