கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்
10ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகள் வெளி வந்தன. ஊர் எங்கும் குதூகலம்! ஏழை, எளிய மக்கள், குக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பிள்ளைகள் எல்லாம் மதிப்பெண்களைப் பெரும் அளவில் பெற்று மகிழ்ச்சித் திருவிழா நடத்தினர்.
குடிசைகளிலும் கொள்ளை மகிழ்ச்சி. நடைபாதையில் குடியிருந்த மக்களின் வீட்டுப் பிள்ளைகளும் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவுக்குப் பெரு வெற்றி பெற்றனர். 89 விழுக்காடு வெற்றி, கடந்தாண்டைவிட இது 2.8 விழுக்காடு கூடுதல் வெற்றி! மாணவர்கள் 86, மாண விகள் 92 விழுக்காடு தேர்ச்சி பெற் றுள்ளனர்.
ஒன்பது பேர் 500_-க்கு 498 மதிப் பெண்கள் பெற்றுச் சாதனை படைத்துள் ளனர். 497 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 52 பேர்! 496 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 137 பேர்கள்.
சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலை யிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளியான குருவித்யா 480 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அவரின் வேதனைக் கண்ணீர் இதோ:
அய்ந்து வயது இருக்கும் போது வீட்டில் மிகவும் கஷ்டம். ஒரு வேளை சாப்பாட்டுக்குக்கூட வழி இருக்காது, நான்காவது படிக்கும்போது, படிப்பைப் பாதியில் விட்டு, சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். 10 வயது இருக்கும்போது என்னைப் பள்ளியில் சேர்த்தனர். மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன். 480 மார்க் வாங்கியுள்ளேன். மேல் படிப்புக்கு வழியில்லை யாராவது உதவி செய்தால் படிப்பேன்.
திருச்சிராப்பள்ளியில் வீட்டு வேலை யிலிருந்து மீட்கப்பட்ட மகாலட்சுமியின் மனதை உருக வைக்கும் அவலம் இதோ:
சின்ன வயதில் அப்பா இறந்து விட்டார். தாய் கட்டட வேலை செய்கிறார். என்னுடன் பிறந்தவர்கள் 2 பேர். அப்பா இல்லாததால் மூன்று பேரும் குடும்பப் பாரத்தைத் தாங்க வேலைக்கு வந்து விட்டோம். நானும் என் தங்கை யும் வீட்டு வேலைக்குச் சென்றோம். எங்களை மீட்ட அதிகாரிகள் பள்ளியில் சேர்த்தனர். 475 மார்க்குகள் வாங்கி யுள்ளேன். மேற்படிப்பில் தொடர அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமச்சீர் கல்வியை செயல்படுத்தியதால் கல்வியில் மகத்தான புரட்சி ஏற்பட் டுள்ளது என்பதை மறுக்கவே முடியாது.
ஆனால் பார்ப்பனக் கூட்டம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள் கிறது! தரம் கெட்டு விட்டது என்று தகர டப்பா சத்தம் போடுகிறது.
தினமணியின் தலையங்கம் (4.6.2013) ஒன்று போதும். இப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு விஜயபாரதம் வார இதழ் இரண்டாம் பட்சம்தான்.
திருவாளர் வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்த நாள் தொட்டு, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கூடாரத்துக்கு அதிகாரபூர்வமான நாளேடாக தினமணி ஆகிவிட்டது.
இவை கொடுக்கப்பட்ட மதிப்பெண் களே தவிர மதிப்பீடுகள் அல்ல; அள்ளித் தரப்பட்ட மதிப்பெண்களால் மகிழ்ச்சி அடைவது பேதைமை! என்று எழுதி முடித்து விட்டது. ஆம், தினமணி தீர்ப்பே வழங்கி விட்டது. (தலையங்கம் தனியே காண்க).
அவாள் மட்டுமே அதிக மதிப் பெண்கள் பெற்று அவாள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற போது _ கல்வி தரமாக இருந்தது. தீப் பெட்டி தொழிற்சாலையிலும், வீட்டு வேலையிலும் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றால் தினமணி பார்ப்பன வகையறாக்களின் பார்வையில் கல்வியின் தரம் கெட்டு விட்டதாகப் பொருள், தராசு -சாய்ந்த தராசாக ஆகி விடுகிறது.
தேர்வு எழுதாமலேயே அனை வரையும் தேர்ச்சி செய்து விடலாமே என்று அடி வயிற்றில் குத்திக் கொள்கிறது. சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்கவே கூடாது என்று சாத்திரம் எழுதி வைத்து அதன்படி அரசர்களை ஆட்டி வைத்த பரம்பரையல்லவா -_ புத்திமாறி விடுமா என்ன!
சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்களுக்குப் பலனில்லை என்று எட்டுப் பத்தி தலைப்பிட்டு தினமலர் தன் குடுமியைத் தட்டி விட்டுக் கொண்டு செய்தி வெளியிடுகிறது.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்கு பெரிய அளவில், எவ்வித பலனும் கிடைக்க வில்லை என்பது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெட்ட வெளிச்சமாக்கியது. மாறாக, தனியார் பள்ளி மாணவர்களே மாநில அளவில், அனைத்து இடங்களை யும் வாரி சுருட்டினர் என்று செய்தி வெளி யிடுகிறது தினமலர் (1.6.2013 பக்கம் 2).
முதல் மூன்று இடங்களைப் பிடித்த வர்கள் அதிகம் தனியார் பள்ளிகள் தான் என்று ஆதாரம் காட்டுகிறது.
சமச்சீர் கல்வி வருவதற்கு முன்பும் இந்த நிலைதானே? புதிதாகக் கூறி குற்றப்படுத்துவதன் நோக்கம் என்ன?
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சமச்சீர் கல்வி அமலுக்குப் பின் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனவா இல்லையா என்பதுதான் முக்கியமே தவிர மாநில அளவில் அதிக மதிப் பெண்கள் பெற்றவர்கள் யார் என்ற பிரச்சினையை வேறு இடத்திற்குத் தள்ளிக் கொண்டு போகப் பார்ப்பது அசல் பார்ப்பனத்தனமே!
சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பலன் அடையவில்லையாதலால் சமச்சீர் கல்வி திட்டத்தால் பலனில்லை என்று தினமலரும் தீர்ப்பு எழுதி விட்டது. இதில் வயிறு குலுங்க சிரிக்கும் இடம் உண்டு; அதே தினமலர்தான் அதே நாளில் 2ஆம் பக்கத்தில் தலைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் அபாரம்! முதல் முறையாக 90 சதவீதத்தை கடந்து தேர்ச்சி விகிதம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. பாவம் சமச்சீர் கல்வி பார்ப்பனர்களைப் பாடாகத்தான் படுத்திக் கொண்டிருக்கிறது.
பார்ப்பனர்கள் இப்படிப் புலம்புவது ஒன்றே சமச்சீர் கல்விக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான் என்பதற்கான அளவுகோல்.
அதிக மதிப்பெண்கள் எங்களால்தான் பெற முடியும். அதிக அளவு தேர்ச்சி எங்களால் தான் ஈட்ட முடியும் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த அக்கிரகார மமதை மனப்பான்மையில் சமச்சீர் கல்வி என்னும் இடி விழுந்து விட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.
சமச்சீர் கல்விப் பிரச்சினையில் தொடக்க முதலே பார்ப்பன சக்திகள் எந்த கருத்தைக் கொண்டிருந்தன என்பதைத் தெரிந்து கொண்டால் தான். சமச்சீர் கல்வியால் தேர்ச்சி விகிதம் எகிறியிருப்பதன் மீது பார்ப்பனர்கள் விழுந்து பிடுங்குவதன் இரகசியம் - _ மர்மம் புரியும்.
2006இல் ஆட்சிக்கு வந்த திமுகதான் சமச்சீர் கல்வி திட்டத்தை அறிவித்தது. கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத் தது. 109 பரிந்துரைகளுடன் கூடிய சிறப்பான அறிக்கையை அந்தக் குழு அளித்தது (4.7.2006)
2010_-11 கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புகளிலும் 2011_-12 கல்வி ஆண்டில் 2 முதல் 5 மற்றும் 7 முதல் 10ஆம் வகுப்பு வரை செயல்படுத்தவும் சட்டம் இயற்றப்பட்டது (30.11.2009).
இதனைக் கடுமையாக எதிர்த்தவர் _- விமர்சித்தவர் துக்ளக் ஆசிரியர். திருவாளர் சோ ராமசாமிதான். அனைத்துக் கல்வி முறைகளையும் கீழே இறக்கி சமன் செய்யும் சமத்தாழ்வு கல்வித் திட்டம் என்று புலம்பினார். ஒரு சிலர் உயர் கல்வி பெறுவதைத் தடுப்பதற்குத்தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்படுவதாக புரண்டு புரண்டு கண்ணீர் வடித்தார் (துக்ளக் 15.6.2011) சிலர் நீதிமன்றமும் சென்றனர். இந்தச் சட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பும் கூறியது (30.4.2010) மேல் முறையீட்டுக்காக உச்சநீதிமன்றமும் சென்றனர் அங்கும் தோல்வியைத் தான் கட்டித் தழுவினர்.
சமஸ்கிருதத்தை மய்யப்பாடமாகக் கொண்டு செயல்படும் ஓரியண்டல் பள்ளிகளின் நிருவாகிகள் தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விட்டது என்று அலறினர்.
தமிழ்நாட்டில் ஓரியண்டல் பள்ளிகளின் எண்ணிக்கை 27 தான்; எங்களுக்குச் சமச்சீர் கல்வி வேண்டவே வேண்டாம் என்று ஓரியண்டல் பள்ளி களின் செயலாளர் வாசுதேவாச்சாரியார் 2011இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கான காரணத்தை அவர் மறைக்கவும் இல்லை சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான கருவி; எனவே சமச்சீர் கல்வி திட்டத்தை ஏற்றால் சமஸ்கிருதம் ஓரம் கட்டப்பட்டு விடும்; ஆகவே அந்தக் கல்வி திட்டம் கூடாது என்றார் வாசுதேவாச்சாரியார்.
ஜெயலலிதா மட்டும் இத்தகைய உணர்வில் பின்வாங்கக் கூடியவரா?
சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வராது என்று கறாராக தெரிவித்தார். முதல் வரவேற்பு இந்து முன்னணி நிறுவனர் அமைப்பாளர் திருவாளர் இராம கோபாலனிடமிருந்துதான்.
ஜெயலலிதா தலைமையிலான அமைச் சரவையின் முதல் கூட்டத்திலேயே (22.5.2011) சமச்சீர் கல்வி திட்டம் நிரா கரிக்கப்பட்டது. இதற்காக அமைச்சரவை எடுத்துக் கொண்ட நேரம் முழுவதுமாக ஒரு மணி நேரம்கூட இல்லை. அவ்வளவு ஆத்திரம்! இந்த வகையில் சட்டமன்றத்தில் மசோதாவும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது (7.6.2011).
சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள் பேன் குத்திக் கொண்டு இருக்கவில்லை. உயர்நீதிமன்றம் சென்றனர். விளைவு புதிய அரசின் முடிவு நிராகரிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் -_ டி.எஸ். சிவஞானம் அடங்கிய அமர்வு சமச்சீர் கல்வி திட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டியது.
அடங்கி போய் விடுமா ஆரியம்? விடயம் அடிமட்ட மக்களும் கல்வி ஏணியில் உயரே ஏறும் திட்டமாயிற்றே!
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளையும் வேக வேகமாக மிதித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக்வர்மா பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய அமர்வு நறுக்குக் குட்டு வைத்தது. 25 காரணங்களை அடுக்கிக் காட்டி சமச்சீர் கல்வியைத் தொடர ஆணை வழங்கியது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கல்வியாளர் குழு ஒன்றினை அதிமுக அரசு நியமித்தது.
அந்தக் குழுவின் உறுப்பினர்கள் யார் _ யார் தெரியுமா? சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்; அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள் _ பார்ப்பனர்களே!
1) தேவேந்திரநாத் சாரங்கி (தமிழக அரசு தலைமைச் செயலாளர்) பார்ப்பனர்.
2) ஜி. பாலசுப்பிரமணியன் (மத்திய இடைநிலைக் கல்வி வாரிய முன்னாள் இயக்குநர்) பார்ப்பனர்.
3) விஜயலட்சுமி சீனிவாசன் (முன்னாள் முதல்வர், லேடி ஆண்டாள் மெட்ரிகுலேசன் பள்ளி சென்னை மற்றும் ஆலோசகர்) பார்ப்பனர்.
இரு கல்வியாளர்கள்:
4) சி. ஜெயதேவ் (நிறுவனர் மற்றும் செயலாளர் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமம் கோபாலபுரம், சென்னை) பார்ப்பனர் (குறிப்பு: இவர் பள்ளியின் நிர்வாகியே தவிர கல்வியாளர் அல்லர்).
5) திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி (இயக்குநர், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை) பார்ப்பனர்
இவர் கல்விக்கூடம் ஒன்றின் உரிமையாளரே தவிர கல்வியாளர் அல்ல. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) இரு பிரதிநிதிகள்.
6) பேராசிரியர் பி.கே. திரிபாதி (அறி வியல் மற்றும் கணிதவியல், கல்வித்துறை -_ டில்லி) பார்ப்பனர்
7) பேராசிரியர் அனில் சேத்தி (சமூக அறிவியல் துறை, புதுடில்லி, பஞ்சாபி).
8) டி. சபீதா (பள்ளிக் கல்வித்துறை செயலாளர்).
9) வசுந்தராதேவி (பள்ளிக்கல்வி இயக்குநர்) இவர்கள் இருவரும் அதி காரிகள் ஆதலால்
பார்ப்பனர்களாகப் பார்த்துப் போட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
ஒன்பதுபோர் கொண்ட குழுவில் ஆறு பேர் பார்ப்பனர்களாகப் பார்த்துப் பொறுக்கி எடுத்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகவும், மிகவும் கவனிக்கத்தக்கது.
மூவர் தனியார் பள்ளிகளை நடத்தக் கூடியவர்கள். சமச்சீர் கல்வியே கூடாது என்று அரட்டை அடிப்பவர்கள் _ ஆக நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத் தாயிற்று.
இதில் ஒரு வேடிக்கை என்ன தெரி யுமா? அமைச்சரவை கூடி, சமச்சீர் கல்வியைத் தள்ளுபடி செய்வதற்கு முதல் நாளே - பழைய கல்வி திட்டப்படி பாடங் களை நடத்த புத்தகங்களை அச்சிட தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஆணையை வழங்கி விட்டது. ஆகா! எவ்வளவு பெரிய வேகம்!
பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் பாடத்தில் தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் எனும் தலைப்பில் வெளிவந்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பிட்டி தியாகராயர், டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் தருமாம்பாள் போன்றோர் பற்றிய குறிப்புகள் மட்டுமல்ல; அந்தத் தலைப்பில் உள்ள அனைத்தும் கிழிக்கப்பட்டன.
இதுதான் அண்ணா பெயரையும் திராவிடப் பெயரையும் தாங்கியுள்ள திராவிடர் கட்சியா..? வெட்கக் கேடு! சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படாத நிலையில் பல மாதங்கள் யோகா பயிற்சி போன்றவற்றை அளித்து மாணவர்களை வெட்டிப் பொழுது கழிக்கச் செய்தனர்.
வேறு வழியின்றி சமச்சீர் கல்வி திட்டத்தைச் செயல்படுத்திய அதிமுக அரசு, ஏற்கெனவே கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த திமுக ஆட்சியில் கல்வியாளர் குழுவால் தயாரிக்கப்பட்டு இருந்த பாடங்களைப் பக்கம் பக்கமாகப் புரட்டி பல பகுதிகளை அடித்துத் தீர்த்தது. திருவள்ளுவர் உருவமும்கூடத் தப்ப வில்லை. சூரியன் பற்றிய பாடம் கூடச் சொல்லிக் கொடுக்கப்படக் கூடா தாம்.
காரணம் சூரியன் திமுகவின் தேர்தல் சின்னமாம். என்னே கோமாளிக் கூத்து.
இதில் இன் னொன்றை என்றைக்கும் என்றைக்கும் நினைத்து நினைத்து விலா வொடிய விலாவொடிய சிரித்து சிரித்து மகிழலாம். ஏன், அரட்டையும்கூட அடிக்கலாம்.
உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பி.பி.ராவ் தெரிவித்த கருத்துக் கருவூலங்கள் தான் அந்தத் தமாஷ்!
இதோ பி.பி.ராவ் பேசுகிறார் _ உச்சநீதி மன்றத்தில் கேண்மின்! கேண்மின்!!
தமிழக அரசுக்குக் கல்வி, சட்டம் ஆகிய துறைகளில் அறிவுரை கூறுவ தற்குச் சரியான ஆட்கள் இல்லை. அத்தகைய ஆட்கள் இருந்திருந்தால், தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்திருக்கத் தேவையில்லை என்று கால் பந்தை தன் பக்கம் அடித்துக் கோலாக்கி விட்டார் (Sameside Goal).
இந்தப் பின்னணி வரலாறுகளை, தகவல்களைத் தெரிந்து கொண்டால்தான் 2013 _ பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆண் டாண்டு காலமாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் பகுதியிலிருந்து ஏராளமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றதையும் அதிக மதிப்பெண்கள் குவித்ததையும் கண்டு அக்கிரகாரம் ஆத்திர அம்மண ஆட்டம் போடுவதன் சூட்சமம் சூரிய வெளிச்சமாகப் புலப்படும்.
விடுதலை விரிவாக எழுதிக் கொண்டே இருந்தது. பிரபல அரசியல் விமர்சகர் சோலை அவர்கள் நக்கீரனில் எழுதிய சிறப்புக் கட்டுரையில் (9.7.2011) பின் வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
எதனையும் வர்க்கக் கண்ணோட்டத் தோடு பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இவர்கள் எதிர்ப்பதன் பின்னணி தெரிய வில்லை. அய்யா, எதிர்ப்பவர்கள் வர்ணா ஸ்ரம கண்ணோட்டத்தில் எதிர்க்கிறார்கள். இது சோலைக்குத் தெரியவில்லையா? என்று ஒரு வாசகர் நமக்குக் குட்டு வைத்தார்.
சமச்சீர் கல்வி திட்ட எதிர்ப்பும், அன்று ராஜாஜி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த குலக்கல்வி திட்டமும் ஒன்றுதான் என்று அவர் நமக்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதன் பின்னர்தான் நமது சிந்தனைச் சாளரம் திறந்தது. விடுதலையில் தோழர் மின்சாரம் தொகுத்துத் தந்துள்ள கருத்துகள் மண்டையில் உறைத்தன - என்று சோலை அவர்கள் எழுதினாரே!
பறையனுக்கும், பார்ப்பானுக்கும் ஒரே கல்வி திட்டத்தைத் தருகின்ற சமச்சீர் கல்வியை இங்கே நடை முறைப்படுத்தி விடக் கூடாது. அதனை அழித்தே தீருவேன் என்ற கருத்துப் போர் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர். எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் (தமிழ்மண் - ஜூன் 2011) எழுதியதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
அது உண்மையாகி விட்டதே! குப்பன் வீட்டுப் பிள்ளையும், சுப்பன் வீட்டுப் பிள்ளையும் பார்ப்பனன் வீட்டுப் பிள்ளையும் சம மதிப்பெண் பெறும் நிலை வந்து விட்டதே என்று எண்ணும் போது அவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் தான் தினமணி தலையங்கமே தீட்டுகிறது இது கொடுக்கப்பட்ட மதிப்பெண்களே தவிர, மதிப்பீடுகள் அல்ல என்று எழுதுகிறது.
தமிழ்நாட்டில் அய்ந்து வகை கல்வி இருந்து வந்தது. 1) மாநிலக்கல்வி வாரியம் 2) மெட்ரிகுலேசன் 3. ஆங்கிலோ - இந்தியன் கல்வி முறை 4) கீழ்த்திசைப் பாடத் திட்டம் 5) நர்சரி பள்ளிக் கல்வி முறை. இவையெல்லாம் ஒழிக்கப்பட்டு ஒரே சீரான கல்வி என்பதுதான் சமச்சீர் கல்வி. பொதுவாக சமம் என்ற சொல்லைக் கேட்டாலே குமட்டிக் கொண்டு வரும் குல்லூகப் பரம்பரைக் கூட்டத்துக்கு; சமச்சீர் கல்வியிலும் இதுதான் இழை யோடுகிறது.
பார்ப்பனர் அல்லாத மக்களை அவதூறாக நினைக்கும் துவேஷம் என்ற நெருப்பால் நெஞ்சுக்குள் சுட்டுக் கொண் டிருக்கும் பார்ப்பனர்கள் _- அவர்களின் ஊடகங்கள் தங்களின் புத்தியைச் சுத்திகரித்துக் கொள்ளப் போவதில்லை.
தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு எழுதினார் -_ இந்தப் பிரச்சினையில் ஊடகங்களே! ஊமையன் கனவு கண்டதுபோல் மென்று விழுங்காமல் உள்ளதை உள்ளபடி எழுதி, ஊராள்வோருக்குத் தக்க அறிவுரை கூறி, உங்கள் மதிப்பை, மரியாதையை உயர்த்திக் கொள்ளுங்கள் என்பதும்கூட நமது வேண்டுகோள் (விடுதலை 9.8.2011) என்று எழுதினாரே!
அவர்கள் திருந்தவில்லை திருந்த மாட்டார்கள் என்பதற்கு அடையாளம் தான் தினமணியின் தலையங்கம் _- தினமலரின் செய்தி வெளியிடும் முறை!
சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான்!
-_- டாக்டர் டி.எம். நாயர்
-_- டாக்டர் டி.எம். நாயர்
மதிப்பெண்கள்.. மதிப்பீடல்ல..!
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளி யானதில், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இன்ப அதிர்ச்சி! அவர்களே எதிர்பாராத அளவுக்கு பலரும் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளி யானதில், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இன்ப அதிர்ச்சி! அவர்களே எதிர்பாராத அளவுக்கு பலரும் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்தத் தேர்வில் 9 பேர் 498 மதிபெண்கள் பெற்று முதலிடம் வகித்தனர். 52 பேர் இரண்டாம் இடம். 137 பேர் மூன்றா மிடம். இதுதவிர, தமிழ்ப்பாடம் அல்லாமல் சம்ஸ்கிருதம் படித்து 499 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருபுறம். சில பெற்றோர்கள் வெளிப்படை யாகவே, "என் பையன் இந்த அளவுக்கு மதிப்பெண் பெறுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை' என்று வியந்தார்கள்.
பிள்ளைகளைக் குறைத்து மதிப்பிடுவதுதான் பல பெற்றோரின் குணம். ஆனால், மாணவர்களே, தங்களுக்குள் பாராட் டிக்கொள்ளும்போது, "எப்படிடா? எனக்கே தெரியவில்லை!' என்று பூரிப்பார்கள் என்றால், எங்கேயோ பிழை இருக்கிறது என்பதைத்தான் உணர முடிகிறது. வினாத்தாள் மிக எளிதாக இருந்தது என்பது ஒரு வாதம். சமச்சீர் கல்வி முறையால் தான் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல மதிப்பெண் கிடைத்தது என்பது இன்னொரு வாதம். விடைத் தாள் திருத்தும் நடைமுறைகள், மாணவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளி வழங்கச் சொல்கின்றன என்பது ஒரு சிலருடைய வாதம்.
கடைசி ஒரு மாதத்தில், மாதிரி வினாத்தாள் மூலம் தொடர்ச்சியாகத் தேர்வு நடத்தியதும், மாதிரி வினாத்தாள்களில் இருந்த கேள்வி களே பொதுத்தேர்விலும் இடம் பெற்றதும் இந்த அளவுக்கு அனைத்து மாணவர்களும் மதிப்பெண் பெறக் காரணம் என்றும் சொல்கிறார்கள். இந்த வாதங்கள் அனைத்துமே உண்மையாக இருக்கலாம். இருப்பினும், இந்த உண்மைகள் தமிழகத்தின் நலன் கருதும் கல்வியாளர்களுக்குக் கசப்பான வையாகவே இருக்கும்.
ஏனென்றால், அடுத்த தலைமுறைக்கு இந்த வரலாற்றுச் சாதனைகளால் எந்தவித நன்மையும் விளையப்போவதில்லை. அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், இதைவிடக் கூடுதலான மாணவர்கள் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறுவார்கள். டி.வி. தொடர் நாடகத்துக்குக் கிடைக் கும் "ரேட்டிங்' போல, பொதுத் தேர்வுகளுக்கும் ஆண்டுதோறும், ஆட்சிதோறும் "ரேட்டிங்'கா தர முடியும்?
ஆண்டு நிறைவில் நடத்தப்படும் தேர்வு என்பது, ஒரு மாணவரின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காகவும், அடுத்த படிநிலையில் அவரை உயர்த்துவதற் காகவும்தான். ஒரு பத்தாம் வகுப்பு மாணவர் ஒரு பாடப்புத்தகத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடங்களி லும் புரிதல் கொண்டவராக இருக் கிறாரா என்பதைச் சோதிப்பதுதான் தேர்வு. ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் கற்றல் திறனும் ஒன்று போல இருக்காது.
சில மாணவர்கள் முழுமையாகப் படித்து அறிந்திருக்கலாம். சிலர், சில பாடங்களில் சிறப்பாகவும், சில பாடங்களில் புரிதல் இல்லாமலும் இருக்கலாம். எல்லா பாடங்கள் தொடர்பாகவும் கேள்விகளைப் பல படிநிலைகளில் அமைத்து, அதன் மூலம் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் திறனை அளவிடுவதுதான் தேர்வு. இந்த அடிப்படையில்தான் வினாத்தாள் தயாரிக்கப்பட வேண்டும்.
எல்லா மாணவர்களும் தேர்ச்சிபெற வேண்டும், எல்லாரும் அதிக மதிப் பெண் பெற வேண்டும் என்பதற்காக வினாத்தாளை மிக எளிமையாக அமைப்பதும், மாதிரி வினாத்தாளில் பயிற்சி கொடுத்துவிட்டு அதையே மீண்டும் பொதுத்தேர்வில் எழுதச் சொல்வதும், மாணவர்களின் மதிப்பெண்களை 90 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்த வேண்டுமானால் உதவலாமே தவிர, மாணவரின் அறிவுத் திறனை அறிய உதவாது.
இப்படி ஒரு தேர்வை நடத்துவதைக் காட்டிலும் தேர்வு நடத்தாமலேயே அனைவருக்கும் தேர்ச்சி அளித்துவிடலாம். கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெறுவதுகூட சில மாணவர்களால்தான் முடியும் என்றிருந்த காலம் ஒன்று உண்டு. விடை சரியாக இருந்தால்கூட முழு மதிப்பெண் வழங்கமாட்டார்கள். ஒரு கணக்கை எவ்வாறு, படிப்படியாக அணுகி, மாணவனால் விடை காணப்படுகிறது என்பது முக்கியம். சில படிகள் தாவி, விடையைச் சரியாக எழுதினாலும் அடித்து விடுவார்கள். "ஒரு சிக்கலை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கும் மனப்பயிற்சிதான் கணிதம். விடையைவிட, அதற்கான வழிதான் முக்கியம்' என்று மதிப்பெண் தர மறுத்த ஆசிரியர்களும் இதே தமிழ்நாட்டில் இருந்தார்கள்.
ஆங்கிலம், தமிழ் விடைத்தாள் என்றால் திருத்தல் இன்னும் கடுமையாக இருக்கும். ஆங்கிலம், தமிழ் இரண்டாம் தாளில் கட்டுரைக்கு 10 மதிப்பெண் உண்டு. அதில் ஒரு தலைப்பின் கீழ் எழுதப்படும் கட்டுரையில் இன்னின்ன விவரங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று 7 மதிப்பெண் வகுத்துக்கொள்வார்கள். மீதி 3 மதிப்பெண் அந்தக் கட்டு ரையில் மாணவர் கையாளும் சொந்த மொழிநடை, கருத்தை எடுத்துச் சொல்வதில் தெளிவு, எழுத்துப் பிழையில்லாமல் இருத்தல் ஆகிய வற்றுக்குத்தான்.
ஆகவே மொழிப்பாடத்தில் "நூற்றுக்கு நூறு' என்பது சாத்தியமே இல்லாமல் இருந்தது. அறிவியல் பாடத்தில் 38,154 பேர் நூற்றுக்கு நூறு! கணிதத்தில் 29,905 பேர் நூற்றுக்கு நூறு! சமூக அறிவியலில் 19,680 பேர் நூற்றுக்கு நூறு! ஆங்கிலத்திலும்கூட பல மாண வர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்கள். வினாத்தாள் மட்டும் எளிமையாகவில்லை, விடைத்தாள் திருத்துவதும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. அள்ளித் தரப்பட்ட மதிப்பெண் களால் மகிழ்ச்சி அடைவது பேதைமை! கல்வி இலவசமாக இருக் கலாம்; இருக்க வேண்டும். ஆனால் தேர்ச்சி என்பது கடுமையாகத்தான் இருந்தாக வேண்டும்.
தேசிய அளவில் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அதிக மதிப்பெண்கள் உதவலாமே தவிர தேர்வுபெற உதவாது. தரம் குறைந்த கல்வியால் தங்கள் குழந் தைகளுக்கும் தமிழ்ச் சமுதாயத் துக்கும் தலைகுனிவுதான் ஏற்படும் என்பதை ஏனோ யாரும் உணர் வதாகவே தெரியவில்லை.
ஒவ்வொரு மாணவரும், பெற்றோரும், ஆசிரி யர்களும், தமிழக அரசும் சுயமதிப்பீடு செய்தால் புரியும் - இவை கொடுக் கப்பட்ட மதிப்பெண்களே தவிர, மதிப்பீடுகள் அல்ல என்பது!
(தினமணி 4.6.2013)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment