Thursday, May 23, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!


இட ஒதுக்கீட்டைக் குழி தோண்டிப் புதைப்பதா?
ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!

சென்னை, மே 23- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.
ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி யதில் 10397 இடைநிலை ஆசிரியர் களும், 8,849 பட்டதாரி ஆசிரியர் களும் தேர்ச்சி பெற்றனர். இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக் காததால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.
எனவே, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப் போது நடத்தப்படும்? என்று இடை நிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர் பார்த்து வந்தனர். இந்த நிலையில், தகுதித்தேர்வுக் கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுநாளும் (ஆகஸ்ட் 18) நடத்தப்பட உள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தகுதித்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த தால் அதிலும் குறிப்பாக ஆதி திராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தகுதித்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. அனைவருக்கும் ஒரே அளவுகோலா?
நடந்து முடிந்த தகுதித் தேர்வின் அடிப்படையில் 19 ஆயிரம் ஆசிரியர் கள் பணி நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.
இந்தத் தகுதித் தேர்வின் அடிப் படையில் சமூகநீதிக்கு - இடஒதுக்கீட் டுக்குக்  குந்தகம்  ஏற்படுத்தும் வகையில் அடிப்படையான தவறினை தமிழக அரசு செய்துள்ளது.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் - உயர் ஜாதியினர் அனை வருக்கும் தகுதி மதிப்பெண் 60 என்று நிர்ணயிக்கப்பட்டது.
தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழிகாட்டுதலுக்கு விரோத மானது இது.
தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆந்திராவில் உயர்ஜாதியினருக்கு 60, பிற்படுத்தப் பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 மதிப்பெண்கள் என்றும் அஸ்ஸாமில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55, ஒரிசாவில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப் பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,  தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலில் அதிமுக அரசு இறங்கி விட்டது. தகுதி மதிப் பெண்கள் 60 ஆக நிர்ணயிக்கப் பட்டதால் தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்பட முடியாத நிலையும்  ஏற்பட்டுள்ளது. இது குறித்து சட்டப் பேரவையில் கேள் விகள் எழுப்பப்பட்ட போது கல்வி அமைச்சர் இது அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்தார்.
தாழ்த்தப்பட்டவர்களையும், உயர் ஜாதியினரையும் சகட்டுமேனிக்கு சம நிலையில் வைத்து மதிப்பெண்களை நிர்ணயிப்பதுதான் அதிமுக அரசின் கொள்கை முடிவா?
ஏற்கெனவே செய்த அதே தவறை மறுபடியும் மறுபடியும் அதிமுக அரசு செய்யத் தொடங்கி விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு ஆணையை நிர்ண யித்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 1980 மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வினார் என்பதை நினைவூட்டுகிறோம். 7 லட்சம் பேர் தேர்வு எழுதும் மிக முக்கிய பிரச் சினையில் அதிமுக அரசு மாபெரும் அநீதியை இழைத்துள்ளது.
அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிவிக் கப்பட்டுள்ள இந்தக் கொள்கை முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்து நடத்தவிருக்கும் தகுதித் தேர்வும்  தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதல்படி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யுமா?


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...