புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 5.2.2013 இரவு 9 மணிக்கு ஈழத் தமிழர் பிரச்சினை - ராஜபக்சே வருகையையொட்டி விவாத அரங்கு ஒன்று இடம் பெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செய லாளர் தோழர் தா. பாண்டியன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலூர் திரு. ஞானசேகரன் முதலியோர் இதில் பங்கு கொண்டனர்.
இதில் விவாத அரங்கைத் தொடங்கி வைத்த திராவிடர் கழகத் தலைவர், கடந்த காலத்தில் நடை பெற்றவைப்பற்றிக் கிளறிப் பேச ஆரம்பித்தால் பிரச்சினைகள் வேறு திசைக்குச் சென்றுவிடும், மேலும் எதிரியான ராஜபக்சேவுக்கு அது பலத்தைக் கொடுப்ப தாகிவிடும் - எனவே, நடக்கவேண்டிய - நாம் அழுத்தம் கொடுக்கவேண்டிய பிரச்சினைகளை நோக்கிக் கருத்தைச் செலுத்துவோம் என்று மிகுந்த பொறுப் புணர்ச்சியுடனும், பிரச்சினையின்மீது கவலையுணர் வுடனும் கருத்தினை முன்வைத்தார்.
கழகத் தலைவரின் இந்தக் கடைசி வரியை, கருத்தினை ஏற்றுக்கொள்வதாகப் பேச ஆரம்பித்த தோழர் தா.பாண்டியன் கடைசிவரை தடம் மாறிச் சென்றதை சுவைக்க முடியவில்லை.
இந்த விவாதத்தை தி.மு.க.வையும், அதன் தலை வரையும் நோக்கிக் கல்லெறிவதற்கே பயன்படுத்தியதன் மூலம் நிகழ்கால, எதிர்காலப் பிரச்சினைகளின்மீதான அக்கறையின்மையை தனக்குத்தானே வெளிப்படுத்திக் கொண்டு விட்டது வருந்தத்தக்கது!
பொதுவாக சில பிரச்சினைகளை அரசியல்படுத் தாதீர்கள் என்று சொல்லுவதுண்டு. அத்தகைய பொது நோக்குச் சிலரின் காதுகளில் ஏறுவதில்லை என்கிற பட்டியலில் தோழர் தா.பா. இடம்பெற்றுவிட்டாரே!
ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்துக்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு - தொடர்ச்சியும் உண்டு.
ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்துக்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு - தொடர்ச்சியும் உண்டு.
1939 ஆம் ஆண்டு முதற்கொண்டே நீதிக்கட்சி காலந்தொட்டு இந்தப் பிரச்சினையில் நெருக்கமும் உண்டு.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிக்கிறது. ஈ.வெ.ராம சாமி, சாமியப்ப முத லியார், ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர் இலங் கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டு மாய் இக்கமிட்டி கேட்டுக்கொள்கிறது.(விடுதலை, 11.3.1939, பக்கம் 3).
1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாற்றில் இத்தகைய பதிவுகள் ஏதேனும் இருந்தால் தாராளமாக எடுத்துக்காட்டலாம்.
அவ்வளவுக் காலத்திற்கு முன்புகூடப் போகவேண் டாம்; ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியக் கம்யூ னிஸ்டுக் கட்சியின் நிலைப்பாடு என்ன?
வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழகத்தைவிடக் கூடுதல் அதிகாரம் படைத்த ஒரு மாநிலமாக தமிழர் மிகுந்து வாழும் பகுதிகள் இலங்கைக்குச் சுயாட்சி அதிகாரம் படைத்ததாக வடிவெடுக்க வழிகோலும் இலங்கையின் சந்திரிகா குமாரதுங்கா அரசின் யோசனைகளை ஏறெடுத்துப் பார்க்க மறுக்கின்றனர். அந்த ஆலோசனையை அமலாக்கினால், ஈழத் தமிழர் கை ஓங்கிவிடுமென்று சிங்களப் பேரினவாதிகளும், பவுத்த மத சந்நியாசிகளும், சீடர்களும், இதர பிற்போக்காளர்களும் குரலிடுகின் றனர். இவர்களின் ஆதரவு பெற்ற அரசியல் எதிர்க் கட்சியினருக்கு இருதரப்பினரும் ஆயுதமேந்திய போரில் முனைந்திருப்பதால், எப்படி தேசமே நாசமாகிறதென் பதை சந்திரிகா எடுத்துரைத்து சமாதானப் பாதைக்கு, அவர்களது அரைகுறை சம்மதத்தையும் வென்றெடுத் துள்ளார். இந்த அனுகூலமான சூழ் நிலையை, தக்க விதத்தில் பயன்படுத்தி இலங்கையில் இன நல் லிணக்கத்தை உண்டாக்குவதில் அமைதி மீளச் செய் வதில் புலிகளிடம் மனமாற்றமில்லாதது வேதனை யளிக்கிறது. இலங்கைத் தமிழர்களின் துக்கம் தொடர்கதையாவதற்கு இலங்கையில் இன்றைய அரசு மட்டும் காரணமல்ல. பிரபாகரன் வகையறாவும்தான் என்பதை, தமிழ் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் போலித் தீவிரங்கள் ஏற்றுக் கொள் ளாமல் ஏமாறுகின்றனர் அல்லது ஏமாற்றுகின் றனர். (ஜனசக்தி, 20.6.1997).
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ ஏடுதான் இவ்வாறு எழுதியது.
சந்திரிகா அம்மையாருக்கு ஒரு பூச்செண்டு - விடுதலைப்புலிகளுக்கு ஒரு சாட்டையடி - ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்போருக்கோ வசைமாரி.
சமாதான வெண்புறாவைப் பறக்கவிட்டு வழிமேல் விழி வைத்து சந்திரிகா காத்திருந்தாராம்.
அதனைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார் களாம் விடுதலைப்புலிகள்.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த, போராடிய தமிழ்நாட்டுத் தமிழர்கள் - அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தோழர் தா.பா.வின் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பார்வையில் தமிழ் ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்ட போலித் தீவிரவாதிகளாம்.
எப்படி? திருவாளர் சோ ராமசாமியின் வாடை வீசுகிறதா - இல்லையா?
அவ்வளவுத் தூரம் கூடப் போகவேண்டாம். கடந்த மக்களவைத் தேர்தலின்போது தோழர் தா. பாண்டியன் மதுரையில் அளித்த பேட்டி ஒன்று புதினம் இணையப் பதிப்பில் (5.2.2009) என்ன சொன்னார்?
இலங்கைப் பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன்வைக்கமாட்டோம் என்று சொன்னவர்தான் தோழர் தா.பா.
இலங்கைப் பிரச்சினைக்காக எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைப் பிரச்சினையை முன்வைக்கமாட்டோம் என்று சொன்னவர்தான் தோழர் தா.பா.
ஒரு எரியும் பிரச்சினை; ஈழத் தமிழர்களை மட்டுமல்ல - அவர்களின் தொப்புள்கொடி உறவுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுப் பிரச்சினை; இவர்கள் தமிழ்நாட்டில்தான் போட்டியிடப் போகிறார்கள்.
ஆனால், இலங்கைப் பிரச்சினையை தேர்தலில் முன்வைக்க மாட்டார்களாம்.
தேர்தலில் முன்வைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லாத பிரச்சினையாக முடிவு செய்துவிட்டார்களா?
காரணம் என்ன தெரியுமா? ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் செல்வி ஜெயலலிதா எண்ணம் என்ன என்பது உலகறிந்த ஒன்று. அந்த நிலையில், ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைக்க முடியுமா?
இரண்டு சீட்டுகளுக்காக மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையைக்கூடப் பின் தள்ளுபவர்கள்தான் இப் பொழுது முஷ்டியைத் தூக்குகிறார்கள். தனி ஈழம்தான் ஒரே வழி என்ற நிலையை நாம் எடுப்பதுகூட முக்கியமல்ல, ஈழத் தமிழர்களின் முடிந்த முடிவு அது. ஆனால், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நிலைப்பாடு என்ன?
இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை அங்கு தனி நாடு அமைக்கப்படுவதை நாங்கள் ஏற்கவில்லை. அங்குள்ள தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து கிடைக்கவேண்டும் என்றுதான் கோருகி றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சி உரிமையுடன் அமைக்கப்படவேண்டும்! (ஜனசக்தி, 9.5.2009, பக்கம் 5).
சிங்கள இனவெறி ஆட்சியின் நுகத்தடியின் கீழ் ஏதோ ஒரு வகையில் கட்டிப் போடுவதல்லாமல் இதற்கு வேறு பொருள் என்ன?
ஈழத் தமிழர் பிரச்சினைக்காக ஒருமுறை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி பட்டினிப் போராட்டத்தை நடத்தியது. அதில் அ.இ.அ.தி.மு.க. சார் பில் கலந்துகொள்ளப்படும் என்று அறிவிப்பு கொடுக்கப் பட்டும், கடைசிவரை அ.இ. அ.தி.மு.க. சார்பில் யாருமே பங்கேற்காத பரிதாப நிலை.
பரிதாபமான நிலையில் நமது அருமைத் தோழர் தா.பா. அவர்கள் போயஸ் தோட்டத்திற்கு நேரில் சென்று விவாதிப்பேன் என்று அப்போதைக்குச் சொன்னதைத் தவிர, அது பற்றி எந்தத் தகவலும் இல்லை... மூச்.... முடியுமா அங்கே?
இன்றைக்கு இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட்டிருக்கவேண்டும். அதை செய்யத் தவறி விட்டது தி.மு.க. என்றெல்லாம் குற்றப்பத்திரிகை படிக்கும் இவர்கள், இந்தப் பிரச்சினையில் இவர்களின் கூட்டணித் தலைவரான செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர் மானத்தைப் பார்த்தால், விடுதலைப்புலி களுக்கு ஆதரவாக கருணாநிதி செயல் படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந் தையாக உள்ளது. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட் டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத் தில் அண்டை நாடுகள் தலையிடுவதற் கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்ப தாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.
(அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 16.10.2008)
- இப்படி சொன்ன கட்சியுடன் கூட்டணி வைத்த வர்கள் தானே இந்த இடதுசாரிகள்.
இந்தியா ஏன் தலையிடவில்லை - அதற்கு ஏன் தி.மு.க. தலைவர் அழுத்தம் கொடுக்கவில்லை என்று அரட்டை அடிப்பவர் - அன்று ஜெயலலிதாவின் இந்தக் கூற்றுக்கு ஒரே ஒரு வரி மறுப்பு சொன்னதுண்டா?
சொல்லாதது மட்டுமல்ல, அம்மம்மா ஆளைவிடு, இலங்கைப் பிரச்சினையையே தேர்தலில் நாங்கள் தொடப் போவதில்லை என்று முழுக்குப் போட்டவர்கள் இன்று முண்டா தட்டுவதுதான் கொழுத்த தமாஷ்!
இதில் இன்னொன்று இடித்துச் சொல்லவேண்டியது - இலங்கை சிங்கள இனவாத அரசுக்குப் பெருஞ் சக்தியாகத் தோன்றாத் துணையாக இருக்கக் கூடிய நாடு சீனாதான் - பக்கபலமாக இருப்பது ருசியாவும்கூட! கியூபாவும் விதிவிலக்கல்ல!
மனித உரிமைகளின் பக்கம் நின்று, மனிதநேயத்தின் மறுபதிப்பாக மலர்ந்து, இலங்கையில் பாதிக்கப்படும் ஈழத் தமிழர்கள் பக்கம் நிற்கவேண்டிய இந்தக் கம்யூனிஸ்டு நாடுகள் இனவெறியன் - பேரினவாத ஆட்சியாளன் ராஜபக்சேவுக்குத் தோள் கொடுத்து நிற்கிறார்களே - வெட்கப்படவேண்டாமா?
இந்தத் திசையில் ஒரே ஒரு வார்த்தையை உதிர்த் திருப்பார்களா இந்த இடதுசாரிகள்?
இந்தத் திசையில் ஒரே ஒரு வார்த்தையை உதிர்த் திருப்பார்களா இந்த இடதுசாரிகள்?
ஊருக்கு இளைத்தவர் கருணாநிதிதானா?
நமக்கு இப்பொழுது ஒரே இலக்கு எதிரியான ராஜபக் சேதான் - திசை திருப்பவேண்டாம் - அது ராஜபக் சேவுக்கு வேறொரு வகையில் துணை போனதாகிவிடும் என்று திருப்பித் திருப்பி மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் திராவிடர் கழகத் தலைவர் புதிய தலைமுறை விவா தத்தில் வேண்டுகோள் விடுத்தும், நடந்துபோனவற்றை யெல்லாம் தனது போக்கில் திசை திருப்பும் ஒரு பணி யில் தோழர் தா.பா. அவர்கள் ஈடுபட்டதால், மக்களுக்கு விளங்க வைப்பதற்காக நாமும் அவர்களின் பழசு களைக் கொஞ்சம் புரட்டிப் போட நேரிட்டது - அவ் வளவுதான்!
விடுதலைப் புலிகள் பிரச்சினையில் தி.மு.க.வுக்கும், திராவிடர் கழகத்துக்கும்கூட மாறுபாடான மதிப்பீடுகள் உண்டு. அதற்காக அதையே பிடித்துக்கொண்டு நமக் குள் கலாம் விளைவித்துக் கொண்டால், அதனால் பலன் என்ன? பிரச்சினையின்மீது கவலை உள்ளவர்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள் - செயல்படுவார்கள்.
கூடுதல் தகவல்கள் (Tail Pieces)
தேசிய கட்சியான இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இந்தப் பிரச்சினையில் என்ன திட்டம் வைத்துள்ளது? நாடாளுமன்றத்தில் கட்சியின் சார்பில் இந்தியாவைப் பணிய வைக்க எடுத்த நடவடிக்கை என்ன? சீனா, ருசியா போன்ற நாடுகள் ராஜபக்சேவுக்குத் துணை போவதைத் தடுக்க இந்தியக் கம்யூனிஸ்டுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஆம் என்றால் அதில் வெற்றி பெறவில்லையா? அதற்கான விளக்கத்தை மக்கள் மத்தியில் வெளியிட்டதுண்டா?
இலங்கையில் உள்ள ஜெ.வி.பி. என்ற கம்யூனிஸ்டுக் கட்சி ராஜபக்சேவைத் தாண்டிய இனவெறி அமைப்பு அல்லவா?
அந்தக் கட்சியின் பொறுப்பாளர்களை கம்யூனிஸ்டு கள் இந்தியாவில் (சி.பி.எம்.) தங்கள் மாநாட்டுக்கு அழைத்துப் பாராட்டுகிறார்களே - அது சரியா?
ராஜபக்சே இந்திய வருகை குற்றமே! அதே கண் ணோட்டம் சிங்கள வெறி பிடித்த ஜெ.வி.பி.க்குப் பொருந்தாதா?
இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சியின் இனவெறியை எதிர்த்து எப்பொழுதாவது கருத்து வெளியிட்டதுண்டா?
திருத்துறைப் பூண்டியையடுத்த ஆதிச்சபுரம் கிரா மத்தில் பிரகாஷ் என்ற பச்சிளம் பாலகன் பட்டினியால் மடிந்த கோரக் கொடுமை நடந்த அந்நிகழ்வை சட்டப் பேரவை உறுப்பினர் பழனிச்சாமி (சி.பி.அய்.) எடுத்து வைத்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு மாண்புமிகு உறுப்பினர் திரும்பத் திரும்பச் சொல்லி எனது அரசுக்குக் களங்கம் கற்பிக்க முயலுகிறார். நான் மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமியைக் கேட்கிறேன், பிரகாஷ் செத்தது உண்மை என்று சொன்னால், மற்ற மூன்று குழந்தைகள் எப்படி உயிரோடு இருக்கின்றன? என்று கேள்விக்கணை தொடுத்ததை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள் - மன்னிக்கவும் மாட்டார்கள்.
குழந்தை இறந்ததற்கு எனது அனுதாபத்தைத் தெரி வித்துக் கொள்கிறேன். இனி பட்டினிச் சாவு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் குறிப் பிட்டு இருப்பாரேயானால், அவரது பெருந்தன்மையைப் பாராட்டலாம் - போற்றலாம்.
மாறாக, மற்ற மூன்று குழந்தைகள் ஏன் இன்னும் உயிரோடு இருக்கின்றன என்று கேட்ட மனிதாபி மானற்ற பேயாட்சியினை இனியும் அனுமதிக்க முடியுமா? என்று ஜனசக்தி (19.3.2006) எழுதியதே!
அந்த ஒரு குழந்தை பட்டினியால் செத்ததற்கே அவ்வளவு ஆத்திரம் பொங்க எழுதிய ஜனசக்தி இப்பொழுது விவசாயிகள் பத்து பேர்களுக்குமேல் தற்கொலைகள் செய்து கொண்டார்களே - எவ்வளவுக் கடுமையாக விமர்சித்திருக்கவேண்டும்?
இவ்வளவுக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் - அமைச்சர வையில் பங்கு பெறும் கட்சியல்ல சி.பி.அய். கடந்த சட்டப் பேரவையில் கூட்டணிக் கட்சி அவ்வளவுதான். நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டார் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா. இந்த நிலையில்கூட முதலமைச்சரை - அவர் சார்ந்த கட்சியை விமர்சிக்கத் துணிவு இல்லை.
இவர்கள்தான் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற தி.மு.க.வைப் பார்த்து ஏன் அது செய்யவில்லை. இது செய்யவில்லை? அழுத்தம் கொடுக்கவில்லை, பதவி விலகவில்லை - என்று குற்றம் சுமத்துகிறார்கள்?
அரசியல் கட்சி என்று வரும்போது பத்தோடு பதினொன்றாகத்தான் இவர்களும் இருக்கிறார்களே தவிர தனித்தன்மை பேசுவதற்கு என்ன இருக்கிறது?
ஓ, ஈழத் தமிழர்களுக்காக விலாப்புடைத்துப் பேச ஆரம்பித்துள்ளார்களே - இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இப்பொழுது ரத்தக் கொதிப்பு ஏற்பட்டுவிட்டதோ!
- மின்சாரம் -
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தமிழர் தலைவரின் சங்கநாதம்! காந்தியார் படுகொலைபற்றி கடல் அளவு தகவல்கள்!
- கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லையா? வீரசவர்க்கார் உண்மையில் வீரனா? (3) - விளக்குகிறார் தமிழர் தலைவர்
- தமிழர் தலைவர் பேசுகிறார்: சுடப்பட்டவர் சுயமரியாதைக்காரர் காந்தியார் (2)
- அன்று கலைஞர் எழுதியது.... இன்றும்!
- அன்றும் - இன்றும் - என்றும் பார்ப்பனர்கள்!
No comments:
Post a Comment