- தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு விழா!
- பல்வேறு கலை நிகழ்ச்சிகள் - தமிழ்ப் பெரு மக்களுக்கு
பெரியார் விருது - பொங்கல் வழங்கி மகிழ்ச்சி!
எங்களின் சாதனைத் தமிழர்களை எங்கள் தோளில் தூக்கி உயர்த்துவோம்! - தமிழர் தலைவர்
பெரியார் விருது நோபல் பரிசைவிட உயர்ந்தது!
- விருது பெற்றோர் பெருமிதம்
- விருது பெற்றோர் பெருமிதம்
சென்னை, ஜன.26- தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் - பெரியார் நூலக வாசகர் வட்டம் இணைந்து திராவிடர் திருநாளாம் பொங்கல் விழா சிறப்பாக சென்னை பெரியார் திடலில் நேற்று (25.1.2013) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழர்கள் எவ்வளவு உயரமாக இருந்தாலும் அவர்களை எங்கள் தோள்மீது ஏற்றி இன்னமும் உயர மாகக் காட்டுவதுதான் பெரியார் திடலின் பணி என்று பெரியார் விருது வழங்கிய நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
சென்னை பெரியார் திடலில் ஜனவரி 25,26,27 ஆகிய மூன்று நாட்களும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில், தமிழ்ப் புத் தாண்டு மற்றும் பொங்கல் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டைப் போலவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக பெரியார் திடலே விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல் நாள் விழா 25.1.2013 வெள்ளியன்று மாலை சரியாக 5 மணிக்கு கோலாகல மாகத் தொடங்கியது.
பெரியார் நெடுஞ்சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு முன்பாக பொது மக்களும், இயக்கத் தோழர்களும் ஏராளமானவர்கள் கூடியிருக்க, பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் பறையடித்து கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் பறையடித்துத் தொடங்கிய போது, உணர்வு பொங்கிட தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் வாழ்க! அன்னை மணி யம்மையார் வாழ்க! என்று முழக்க மிட்டனர்.
களைகட்டிய தமிழ்ப் புத்தாண்டு
புத்தர் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் அன்னை மணியம்மை யாரின் சிலையிலிருந்து தாரை தப்பட்டை துந்துபி முழக்கங்களோடு மக்கள் திரளினூடே ஊர்வலமாக பெரியார் திடலுக்குள் வந்தது. தொடக்க நிகழ்ச்சியில் சென்னை மண்டல செயலாளர் நெய்வேலி ஞானசேகரன், ஆவடி மாவட்டச் செயலாளர் தென்னரசு, மாநில கலைத்துறைச் செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன் வீதி நாடக வித்தகர் பெரியார் நேசன். மாநில இலக்கியச் செயலாளர் மஞ்சை வசந்தன், சத்திய நாராயண சிங், உமா செல்வராஜ் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆவலைத் தூண்டிய கரும்பு வீடு
தமிழ்ப் புத்தாண்டு பொங்கலை யொட்டி, பெரியார் திடலின் நுழைவு வாயிலில் கரும்புகளை மட்டுமே கொண்டு கட்டப்பட்ட வீடு பார்ப்பவர் களின் உள்ளத்தில் ஆவலைத் தூண்டியது. பார்த்த உடனேயே எப்போது கரும்பு சாப்பிடுவது என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை என்று பலரும் குறிப்பிட்டனர். அவர்களுக்காகவே தனியே கரும்பு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
பொங்கலோ பொங்கல்
கரும்பு வீட்டின் முன்பு பொருத்த மாக இனிப்பான பொங்கல் தயாரிக் கும் பணி அனைவரையும் ஈர்த்தது. பொங்கல் பொங்குவதற்காக ஏராள மான பேர் காத்திருத்தனர். பொங்கல் தயாரான உடன் தமிழர் தலைவர் தன் கையிலேயே பொங்கலைக் கிண்டி பிறகு அனைவருக்கும் கொடுத்து தானும் உண்டார். கரும்பின் சுவையை யும் மிஞ்சிவிட்டது
பொங்கல் சுவை.
வெற்றிச்செல்வி, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் திருமகள் இறையன், மீரா ஜெகதீசன், கனகா ஆகியோர் பொங்கல் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பொங்கல் பொங் கியவுடன் தமிழர் தலைவர் கூடியிருந்தவர்களுக்குப் பொங்கல் வழங்குவதைத் தொடங்கி வைத்தார்.
உறியடித்ததில் சில்லுசில்லாக சிதறிய ஜாதி
ஒரு பக்கம் பொங்கல் சுவையில் தோழர்களும், பொது மக்களும் திளைத் திருக்க அதற்கு பக்கத்திலேயே உறியடிக்கும் நிகழ்ச்சியில் ஏராள மானோர் கலந்து கொண்டு உறி யடிப்பதில் முனைந்து கொண்டி ருந்தனர். அந்த உறியில் இந்த ஆண்டு புதுமையாக ஜாதீ என்று எழுதியிருந்தது. அறிவிப்பு கொடுக் கும் போதே ஜாதியை உடைக்கப் போவது யார் - என்றே சொல்லப் பட்டது. தோழர்கள் போட்ட, போட்டா போட்டியில் ஆரவாரம் அளவில்லாமல் போய்விட்டது.
இறுதியில் சட்டக் கல்லூரி மாணவி கவிநிலவு, சஞ்சய் ஆகிய இருவரும் தனித்தனியாக அந்த ஜாதியை சுக்கல் சுக்கலாக உடைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர். இந்த நிகழ்ச்சியை சித்தார்த்தன், பெரியார்நேசன் ஆகிய இருவரும் ஒருங்கிணைத்தனர்.
உணவுத் திருவிழா
ஒரு பக்கம் புத்தர் கலைக் குழுவின் ஆட்டம் பாட்டம் கொண் டாட்டம், மற்றொரு பக்கம் சுவையான பொங்கலில் மயங்கி மீண்டும் மீண்டும் பெற்று உண்ட இனிப்பான காட்சி, மற்றொரு பக்கம் ஜாதீ என்கிற உறியைத் தகர்க்கும் ஆரவாரம். இவையெல்லாம் போதாதென்று வகை வகையான உணவுகள் அடங்கிய அங்காடித் தெரு மக்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றது. தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருவிழா நடந்தால் கிராமங்களில் எப்படிப்பட்ட மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுமோ, அப்படி பெரியார் திடலிலும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
கவனத்தை ஈர்த்த கவனக நிகழ்ச்சி
பொங்கல் திருவிழாவில் அறிவுத் திருவிழாவாக திருக்குறள் திலீபனின், கவனக நிகழ்ச்சி - மிகச் சிறப்பான கவனத்தைப் பெற்றது. தமிழர் தலைவரும் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு திலீபனிடம் கேள்விகள் கேட் டார் தமிழர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பெரியார் செல்வி, கண்ணப்பன், திவாரி, தொண்டறம் ஆகியோரும் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அனைத் துக்கும் திலீபன் சரியாக பதில் கொடுத்து அசத்தினார்.
ஆசியாவின் நோபல் பரிசு பெரியார் விருது
தமிழ்ப் புத்தாண்டு கொண் டாட்டத்தின் முக்கிய நிகழ்வான பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சி இரவு 7 மணியளவில் தொடங்கியது. திராவிடர் கழகத்தின் மாநில இலக்கிய அணிச் செயலாளர் மஞ்சை வசந்தன் அறிமுக உரை வழங்கினார். அவர் தனது அறிமுக உரையை ஓர் ஆய்வுரையைப் போல வழங்கியது அனைவரின் கருத் தையும் ஈர்த்தது.
முன்னதாக, வை. கலையரசன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து பொறியாளர் அ. முருகானந் தத்திற்கு பெரியார் விருது வழங்கப் படுகிறது என்று இணைப்புரை வழங்கிக் கொண்டிருந்த தமிழ் சாக்ரடீஸ் அறி வித்தார். அ. முருகானந்தம், அவர்களின் தன் விளக்கக் குறிப்பை பெரியார் செல்வி வாசித்தார். அரங்கத்தில் திரண்டிருந்த வர்களின் பெருத்த கரவொலிக்கிடையில் தமிழர் தலைவர் அவருக்கு பெரியார் விருது வழங்கி சால்வை அணிவித்து சிறப்பித்தார்.
ஏற்புரையை ரத்தினச் சுருக்கமாக வழங்கிய, பொறியாளர் அ. முருகானந்தம், தான் இதுவரையில் எத்தனையோ பரிசுகளை பாராட்டினையும் பெற்றிருக் கிறேன். ஆனால், இந்த மேடையில், தமிழர் தலைவர் அவர்களின் கைகளில் பெற்ற இந்த விருது உன்னதமான ஒன்று. ஏனெனில், ஆசியாவின் நோபல் பரிசு பெரியார் விருது என்று சொல்லி அமர்ந்துவிட்டார். ஆனால், அரங்கத்தில் கையொலி அவர் அமர்ந்த பிறகும் எழுந்து கொண்டிருந்தது.
நமது அறிவும், ஆற்றலும் யாருக்கும் குறைந்ததல்ல
தொடர்ந்து அ. முருகானந்தத்தைப் பாராட்டிப் பேசும்போது தமிழர் தலைவர் நமது அறிவும், ஆற்றலும் யாருக்கும் குறைந்ததல்ல. இன்னமும் ஆயிரம் முருகானந்தங்கள் இருக்கிறார்கள்.
அவர்களும் இப்படி வர வேண்டும். இவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பெரியார் திடலின் பணி என்பது இவர்களை தமிழர்களை எங்கள் தோள்மீது ஏற்றி இன்னமும் உயரமாகக் காட்டுவதுதான் என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார். அதைத் தொடர்ந்து தமிழ் சாக்ரடீஸ் அறிவிக்க, மனுஷ்ய புத்திரனின் தன் விளக்கக் குறிப்பை இறைவியும், கவிஞர் நந்தலாலாவின் தன் விடைக் குறிப்பை - தெற்கு நத்தம் சித்தார்த்தனும், சீனுராமசாமியின் குறிப்பை புருனோவும், ஏ.எல். கண்ணனின் தன் விளக்கக் குறிப்பை இசையின்பம், நர்த்தகி நடராஜ் அவர்களின் குறிப்பை கோவி. கோபாலும் வாசித்தனர். தமிழர் தலைவர் அனைவருக்கும் பெரியார் விருது வழங்கி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். பெரியார் விருது பெற்ற அனைவருக்கும் இயக்க நூல்களும் அளிக்கப்பட்டன. இவர்கள்பற்றிய படக்காட்சியும் காட்டப் பட்டது.
இதற்கிடையில், திருக்குறள் திலீபன், கபடி ஜெகன்சாமிநாதன் குழுவினர் கவிநிலவு, சஞ்சய் ஆகியோருக்கு தமிழர் தலைவர் சிறப்பு செய்தார்.
நான் தனியாக இல்லை மனுஷ்ய புத்திரனின் பிரகடனம்
விருது வழங்கிய பிறகு, விருது பெற்ற பெருமக்களின் ஏற்புரை தொடங்கியது. முதலில் ஏற்புரை வழங்கிய எழுத்தாளர், கவிஞர், பதிப்பாளர், மனுஷ்யபுத்திரன், என்னுடைய அறிவுலக ஆசானின் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது என்றே தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது, சன் தொலைக்காட்சியில், என்னிடம், உங்கள் சிந்தனைகளின் அடித்தளமாக இருப்பது எது? என்று கேட்டனர். நான் ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன். அந்த வார்த்தை, தந்தை பெரியார் பெரியாரின் தனித் தன்மை அச்சமின்மை, அதனால்தான் மதவாதிகளின் எதிர்ப்பு எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. காரணம், பெரியார் சந்திக்காத எதிர்ப்பா? இந்த விருது பெற்றது நான் தனியாக இல்லை. எனக்குப் பின்னால் பெரியார் திடல் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இது எனக்கு மிகப் பெரிய ஊக்கமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது என்று பேசி அமர்ந்தார்.
எதற்காக இந்த விருது!
தொடர்ந்து ஏற்புரை வழங்கிய கவிஞர் நந்தலாலா, தமிழர் தலைவர் இப்படிப் பட்ட பெரு மக்களுக்கு ஏன் விருது வழங் குகிறார் என்று என்னைக் கேட்டால், இப்படிச் சொல்லத் தோன்றுகிறது என்று பட்டுக்கோட்டையாரின் பொல்லாத மனிதன் சொல்லாமல் திருந்த நல்லோர் எல்லாரையும் கொண்டாடுங்கள் என்ற பாடலைச் சொன்னார். தொடர்ந்து அவர் தனது உரையில் திராவிடர் இயக்கத்தின் சாதனைகளை தன் தாத்தா, தந்தை ஆகியோரின் வாழ்க்கையில் இடம் பெற்ற சம்பவத்தை சுட்டிக் காட்டி தன்மான இயக்கத்தின் பெருமையை சிகரத்தில் ஏற்றி வைத்து அமர்ந்தார்.
அநீதி நடந்தால் தட்டிக் கேட்டும், நீதி நடந்தால் தட்டிக் கொடுப்பதும் தமிழர் தலைவரின் வழமை
கவிஞர் நந்தலாலாவைத் தொடர்ந்து பெரியார் விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி ஏற்புரை வழங்கினார். அவர் தனது உரையில், என் தாயின் தந்தை பெயர் ராமசாமி, என் அறிவுலக ஆசானின் பெயர் ராமசாமி, என் பெயரும் சீனு ராமசாமி என்று கலகலப்பாகத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், சமூகத்தில் அநீதி நடக்கும் போது தட்டிக் கேட்டும், நீதி நடக்கும் போது கை கொடுத்து தூக்கிவிடும் பணியைத்தான் தமிழர் தலைவர் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறிவிட்டு, முத்தாய்ப்பாக அவர், நான் பெற்ற தேசிய விருதைவிட சிறப் பான இந்த பெரியார் விருது. ஏனெனில், தேசிய விருது பகுத்தறிவாளர்களால் வழங்கப்படுவதில்லை என்று பலத்த ஆரவாரத்திற்கிடையே பேசி அமர்ந்தார்.
பெரியாரைக் கேட்டும் படித்தும் வளர்ந்தவன் நான்
தொடர்ந்து, பிரபலங்களை பதற்ற மடைய வைக்கும் கேள்விக் கணை களுக்குச் சொந்தக்காரரான மக்களுக் காக ஏ.எல்.கண்ணன் அவர்களும் ரத்தினச் சுருக்கமாக, நான் பெரியாரின் கருத்துக்களை கேட்டும், அவரின் புத்தகங்களைப் படித்தும் வளர்ந்தவன். நான் மதிக்கின்ற ஆசிரியரின் கையால், பெரியார் விருது பெற்றதை மிகவும் பெருமையானதாகக் கருதுகிறேன். நான் இந்த விருதுக்கு தகுதியுடையவனா என்று தெரியாது. ஆனால், இனிமேல் தகுதி உடையவனாக ஆக்கிக் கொள் வேன் என்று கூறி அமர்ந்தார்.
தன்மானத்திற்கும், சுயகவுரவத்திற்கும் கிடைத்த விருது
ஏ.எல்.கண்ணனைத் தொடர்ந்து, ஏற்புரை வழங்க வந்த நடனக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்கள் மிகவும் உணர்வு வயப்பட்டு பேசினார். தான், உலக அளவில் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறேன். ஆனால், இந்த விருது, எனது தன்மானத்திற்கு, சுய கவுரவத்திற்கு கிடைத்த அங்கீகார மாகவே கருதுகிறேன். நான் பல முகமூடிகள் அணிந்து கொண்டு பல மேடைகளில் ஏறியிருக்கிறேன். இங்கு தான் உள்ளத்தைத் திறந்து உண்மையைச் பேசுகிறேன் என்று அவர் உணர்வு வயப்பட்டதை, உண்மை வயப்பட்டதைப் பார்த்து அரங்கத்திலிருந்தவர்களும் உணர்வு வயப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பாராட்டுரை வழங்கவிருக்கும் திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவுக்கும், முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தலைமையுரையாற்றிய வரியியல் அறிஞர் இராஜரத்தினம் ஆகியோருக்கும் தமிழர் தலைவர் சிறப்பு செய்தார். அதைத் தொடர்ந்து, க.திருநாவுக்கரசு பெரியார் விருது பெற்ற பெருமக்களைப் பாராட்டிப் பேசினார்.
மனுஷ்ய புத்திரன் மட்டுமல்ல மனுஷ்ய புத்திரிகளும் வரவேண்டும்
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பரிசு பெற்ற பெரு மக்களைப் பற்றி பேசும்போது, இந்த இடம் உண்மையை பேசக் கூடிய இடம். பல பேருடைய முகமூடிகளை கழட்டுகிற இடம் என்று சிந்திக்கவும் சிரிக்கும் விதமாகத் தொடங்கினார். தொடர்ந்து, ஏ.எல்.கண்ணன், கவிஞர் நந்தலாலா, மனுஷ்ய புத்திரன், சீனு இராமசாமி, நர்த்தகி நடராஜ் ஆகியோரின் சிறப்பு களைத் தனித்தனியாக குறிப்பிட்டு விட்டு, பெரியாரின் அச்சமின்மையையும், தன் னுடைய கருத்தை எந்தவித எதிர்ப்பு வந்தாலும் சொல்கிற பாங்கையும், 45 ஆண்டுகளுக்கு முன்னால், சென்னை எஸ்.எஸ்.அய். மைதானத்தில் ஜி.டி.நாயுடு, தன் கண்டுபிடிப்புகளை அடித்து நொறுக் கிய நிகழ்ச்சியில் தலைமையேற்ற தந்தை பெரியார் பேசிய துணிச்சலான சம்பவங் களை படம் பிடித்துக் காட்டியும், கோபி செட்டிபாளையத்தில் கைவல்யம் சாமியார் உணவு உண்ணும் நேரத்தில் சூத்திரன் என்று அழைத்த பார்ப்பனரை உணவு உண்ட கையாலேயே அறைந்ததைச் சுட்டிக்காட்டியும், 60 ஆண்டுகள் தமிழ்ப் புத்தாண்டு எப்படி ஆபாசக் களஞ்சியமாக இருக்கின்றது என்பதையும் தந்தை பெரியார், தமிழ் அறிஞர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் முயற்சியில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் ஆனதையும், எடுத்துக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், அப்படி, பண்பாட்டு மீட்டுருவாக்கத்தில் ஈடுபட்டு வெற்றி கண்ட சிறந்த தமிழர்களுக்குத் தான் இங்கு பெரியார் விருது அளிக்கப் பட்டிருக்கிறது என்று உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து புத்தர் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள்
புத்தர் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன, இடையில் தமிழர் தலைவர் கலைக் குழுவினர் அனை வரையும் தனித்தனியாக சிறப்பித்தார். அதன் பிறகும், கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை கிருட்டிணன், திருமகள் இறையன், மாவட்ட பொறுப் பாளர்கள், தோழர்கள், ஊடகவியலாளர் கோவி.லெனின் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மு. சென்னியப்பன் நன்றியுரை ஆற்றினார்.
பெரியார் திடல் விழாக்கோலத்தில் திணறியது
திராவிடர் திருநாளையொட்டி பெரியார் திடலில் ஆங்காங்கே பனை மரங்கள், விவசாயிகள் உழவுக்கு பயன்படுத்தும் பொருள்கள், ஏர்கலப்பை, மந்திக்கலப்பை, மண்வெட்டி, மரக்கால் போன்றவை திடலெங்கும் தென்னை மர ஓலைகளின் வரவேற்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன.
அய்வகை நிலங்களின் குறிப்புகள் படங்களோடு இடம் பெற்றிருந்தன. கரைமாநகர் சதானந்தபுரம் அம்பேத்கர் கபடிக் குழு பார்வையாளர்களோடு ஆடிய சடுகுடு ஆட்டம்.
பெரியார் சிலை அருகே கரும்புகளால் வேயப்பட்ட குடிசை வீடு. கரும்பு வீட்டின் வாசலில் தமிழர் தலைவர் தலைமையில் மகளிரணி யினர் பொங்கல் வைத்தனர் தமிழர் தலைவருடன் நந்தலாலா, ச.இராசரத்தினம், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
சட்டக்கல்லூரி மாணவி கவிநிலவு, வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 8 வயது மாணவன் சஞ்சய் ஆகியோர் உறியடித்து வெற்றி பெற்றனர் (ஜாதீ என்று எழுதப்பட்ட பானை).
புத்தர் கலைக்குழு பறை இசை மணியம்மையார் சிலையிலிருந்து ஊர்வலமாக வந்தது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- வல்லம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
- டெசோ கூட்டத்தில் முக்கிய முடிவு-திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
- பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை: மரண தண்டனை இல்லை நீதிபதி வர்மா குழு பரிந்துரை
- நண்பர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சினை:
- ஷிண்டேமீது குதறுபவர்கள், இதற்கென்ன பதில் சொல்வார்கள்?
No comments:
Post a Comment