Friday, January 4, 2013

நாராயணகுருபற்றி அத்வானியின் புரிதல்?


கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வர்காலாவில், ஸ்ரீநாராயண குருவால் அமைக்கப்பட்ட சிவகிரி மடம் உள்ளது. இங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பேசியதாவது:-
இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டிய உயரிய கடமையை செய்யும் கல்வி நிறுவனங்கள், தங்களின் பாடத் திட்டங்களில் போர் கர்த்தாக் களையும், ஆட்சியாளர்களையும் பற்றிய வரலாறு களை மட்டும் கற்பித்தால் போதாது. நாராயண குருவின் ஆன்மிக வரலாற்றை மாநில பாடத் திட்டத்தில் இணைத்துள்ள கேரள அரசை நான் மனமார பாராட்டுகின்றேன்.
கல்வியின் தரத்தை முன்னேற்றும் இதுபோன்ற பாடத்திட்டத்தை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். நமது நாட்டில் வாழ்ந்து மறைந்த ஆன்மிக முனிவர்களைப் பற்றியும், குருக்களைப் பற்றியும் நமது இளைய சமுதாயத்திற்கு நாம் போதிக்க வேண்டும். மனித நேயத்தையும், நல்லொழுக்கத்தையும் போதிக்க மதத்தையோ, இனத்தையோ காரணம் காட்டி முட்டுக்கட்டை போடக்கூடாது.
மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும், பள்ளிப் பாடத்திட்டத்தில், நாராயண குரு, ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிக தத்துவவாதிகளின் போதனை களைப் பாடமாக இணைக்க வேண்டும் - இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
அத்வானி நாராயண குருவைப் பற்றி சரியாகத் தெரிந்து கொண்டு இந்தக் கருத்தைச் சொல்லி யிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அப்படி தெரிந்திருந்தால் இந்தக் கருத்தை அவர் கூறி இருக்கவும் மாட்டார்.
நாராயண குருவை பொறுத்தவரை ஒரே கடவுள், ஒரே குலம், ஒரே மதம் என்ற போதனைக்குச் சொந்தக்காரர். அத்வானிகள் நம்பும் இந்துத்வா என்பது இதற்கு நேர்மாறானது; வருணாசிரமம் இருக்க வேண்டும் என்ற கொள்கையை உடையது. அவர்களின் குருநாதரான கோல்வாக்கரும் அவ்வாறுதான் எழுதி இருக்கிறார்.
ஆனால் ஜாதிபற்றி நாராயணகுரு என்ன சொல்லுகிறார்? மனிதனின் மானிடத் தன்மை எப்படி விளக்க முடிகிறது? அவன் மானிடனாகப் பிறந்திருப்பதனாலேயே. மாடாகப் பிறந்துள்ளதன் மூலம் ஒரு பசுவின் மாட்டுத் தன்மை எப்படி வெளிப்படுகிறதோ அதே போல இதுவும். ஆனால் பார்ப்பனத் தன்மை என்பது இப்படிப்பட்டதாக இருக்கவில்லையே! அந்தோ! இந்த உண்மையை யாரும் காண்பதில்லையே என்று நாராயண குரு கூறும் இந்தக் கருத்துக்கு என்ன பதில்?
அவருடைய இன்னொரு கவிதை என்ன கூறுகிறது? மனித இனத்தில்தான் பார்ப்பானும் பிறக்கிறான். பறையன் பிறப்பதும் அதே மனித இனத் தில் தான். அப்படியானால் மனிதர்களுக்கிடையே ஜாதியில் வேறுபாடு ஏனிருக்க வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு திரு எல்.கே. அத்வானி நாராயண குருவைப் பற்றிச் சிலாகித்தால் சரியானதாக இருக்கும்.
ஒரே கடவுள் என்று நாராயணகுரு கூறும்போது கூட நான் கூறும் சிவன் வேறு; மற்றவர்கள் கூறும் சிவன் வேறு என்கிறார். இது ஈழவர்களுக்கான சிவன் என்கிறார்.
கடவுள் மறுப்புக் கூறி தம் மக்களை ஒன்று சேர்ப்பது கடினமான ஒன்று என்று கருதிய அவர், தங்கள் மக்களுக்கென்று ஒரு சிவனை அடையாளம் காட்டுகிறார்.
கடவுள் பல அவதாரங்கள் எடுத்தார் என்று நம்பும் இந்துத்துவாவாதிகள், ராமன் பாலம் என்று பேசும் மத வெறியர்கள், ஒரே கடவுள் என்று பேசும் நாராயண குருவைப் பற்றிப் பேச உரிமைப் படைத்தவர்கள் தானா?
ஆன்மீகம் பற்றியும் பேசுகிறார் - என்ன அந்த ஆன்மீகம்? ஆன்மீகத்தை நம்ப வேண்டும் என்றால் ஆத்மாவை நம்ப வேண்டும். ஆத்மாவை நம்பினால் கர்ம பலனை, தலை எழுத்தை நம்ப வேண்டும்.
கர்ம பலனையும், தலையெழுத்தையும் நம்பினால், வெந்ததைச் சாப்பிட்டுவிட்டு விதி வந்தால் சாக வேண்டும் வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லாத, சுயமரி யாதைக்கு இடம் இல்லாத, பிறவியிலேயே அடிமைப் பட்ட வாழ்க்கையை மேற்கொள்வது தானே அவர்கள் கூறும் ஆன்மீகம்?
தன் மலத்தையே தின்ற மன நோயாளியான ராம கிருஷ்ண பரமஹம்சர் பற்றி எல்லாம் பாடத் திட்டத்தில் சேர்த்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது எல்லாம் அசல் பிற்போக்குத்தனமே!
ஏதோ சென்ற இடத்தில் அறிவுரை கூறுவது என்ற போர்வையில் சில வார்த்தைகளை அத்வானி அள்ளி விடுகிறார் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதில் ஒன்றும் பொருள் இல்லை என்பதுதான் உண்மை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...