Thursday, January 10, 2013

கணினி வைத்துத் தொழில் செய்யும் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள்


ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனாலும், உண்மைதான். எங்கே? என்றும் பதினாறு வயது வரம் பெற்றானாமே மார்க்கண்டேயன் - அந்தத் திருக்கடையூரில்தான் இந்தத் தொழில் ஓகோவென்று நடைபெறுகிறது.
ஆயுள் நீட்டிப்புக்காக 60 வயது அடைந்த கணவன் - மனைவியர் அங்கு சென்று மணிவிழா கொண்டாடுவர்.
30 ஆண்டு சராசரியாக வாழ்ந்து வந்த இந்தியக் குடிகள் இப்பொழுது சராசரியாக 70 அய் (ஆண்கள் 68; பெண்கள் 71) தாண்டிவிட்டனர். இதற்குக் காரணம் விஞ்ஞான ரீதியான மருத்துவ வளர்ச்சியா? கடவுள் பக்தியா? சக்தியா? சராசரி வயது 30 என்ற காலத்தில் கடவுள் சக்தி எங்கே போச்சு?
எல்லாம் இரட்டைப் புத்திதான்; சரி சங்கதிக்கு வருவோம் - ஒவ்வொரு மணிவிழாவுக்கும் அடிக்கும் கொள்ளை கொஞ்ச நஞ்சமன்று. ஒரு கால பூஜைக்கு ரேட் ரூ.8,000; 64 கலசம் வைத்து இருகால பூஜைக்கு ருத்ராபிஷேகம் வகையறாக்களுக்கு ஒரு லட்சம் ரூபாயாம்.
நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 300 மணிவிழாக்களாம் - கணக்குப் போட்டுப் பாருங்கள்.
அர்ச்சகர்கள் கணினியுடன் கூடிய தனி அலுவலகம் வைத்துத் தொழில் நடத்துகிறார்கள் என்றால் தெரிந்துகொள்ளலாமே! இந்து சமய அறநிலையத் துறை -வருமான வரித்துறை என்ன செய்கின்றன என்று தெரியவில்லை.
ஒரு டெயில் பீஸ்: பாம்பைக் கயிறாக்கி, மலையை மத்தாக்கி திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்த கலசத்திலிருந்து தோன்றிய கடவுளான அமிர்தகடேசுவரர் அங்குக் குடிகொண் டுள்ளானாம்.
16 வயதுடைய மார்க்கண்டேயர் எனும் பக்தனின் உயிருக்கு வலை வீச, எமதர்மன் அங்கு வந்தபோது, அந்தப் பதினாறு வயது பொடியன் கடவுளைக் கட்டிப் பிடித்துக் கொண்டானாம். எமன் பாசக் கயிறை வீசியபோது, அந்தக் கயிறு அமிர்தகடேசுவரரையும் சுற்றி வளைத்ததாம்.
அடப் பயலே, எனக்குமா பாசக் கயிறு? என்று கோபங்கொண்டு சூலத்தினால் எமனைக் குத்தி சம்ஹாரம் செய்தானாம். அத்தோடு நின்றானா அந்த அமிர்தகடேசன்? தன்னிடம் சரணடைந்த அந்தப் பக்தன் மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 வயது என்று நிரந்தரமாக வாழும் வரமும் கொடுத்தானாம்.
பக்த கே()டிகளுக்கு ஒரு விண்ணப்பம், என்றும் 16 வயது வரம் பெற்றதால், அந்தப் பொடியன் எப்படியும் அங்குதான் சுற்றித் திரிந்து கொண்டிருப்பான். அவனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தால் பத்து லட்சம் ரூபாய் பரிசு!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...