Wednesday, January 16, 2013

அருவி கூவம் ஆகலாமா?


அண்ணா சாலைக்கு இந்தப்புறம் பெரியார் திடல் இருக்கிறது. ஏராளமான சொத்து இருக்கிறது. அந்தப் புதையலைக் காக்கும் பூதமாக இன்றைக்குத் திராவிடர் கழகத்தின் பெயரில் வீரமணி இருப்பது போல், அண்ணா சாலையின் அந்தப் பக்கத்தில் உள்ள அறிவாலயத்தின் கோடிக்கணக்கான சொத்துக்ககளைப் பாதுகாப்பதற்காக ஸ்டாலின் இருப்பார். பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் வெகு மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எப்படி சரிந்து விழுந்ததோ அதே நிலைதான் திமுகவுக்கும். (குமுதம் ரிப்போர்ட்டர், 17.1.2013 பக்கம் 14)
இப்படி பேனாவை ஓட்டி இருப்பவர் ஒரு தமிழர் தான். பெரியார் திடலில் சொத்து இருப்பதாகக் கூறிப் பார்ப்பனர்கள் பதற்றம் அடையலாம் - புரிந்து கொள்ள முடியும் - ஆனால் தமிழருவி மணியன்கள் பதற்றம் அடைகிறார்களே ஏன்?
தந்தை பெரியார் முக்கால் நூற்றாண்டுக் காலம் பாடுபட்டும் தமிழர்கள் பார்ப்பனர்கள் இடத்தில் நின்று கொண்டு, பார்ப்பனர் அல்லாத மக்களுக்காக, ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக் காக, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்காக அரசியல், பதவி நாற்காலிகள் பற்றி எண்ணிப் பார்க்காமல், பிரச்சாரம் - போராட்டம் என்கிற கடிகாரப் பெண்டுலத்தின் அசைவு போல கண் துஞ்சாப் பணியைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் புரட்சி இயக்கத்தை நோக்கி கொஞ்சம் கூடப் பொறுப்புணர்ச்சி இல்லாமலும், எந்தத் தகவலையும் தெரிந்து கொள்ளாமலும் தெரிந்து கொள்ளும் பொறுப்புணர்ச்சி இல்லாமலும் பார்ப்பனர்களும் அவாளின் ஊடகங்களும் மடியில் தூக்கிக் கொஞ்சும் என்ற எதிர்பார்ப்புடன் நம்மவர்களில் படித்த தமிழன்கள் கூட இப்படிக் குடை சாய்ந்து குப்புற வீழ்கிறார்களே என்று எண்ணிப் பார்த்தால் ஒரு புறம் வேதனை - இன்னொரு புறம் தந்தை பெரியார் அவர்கள் நமக்குச் சொல்லிச் சென்றுள்ளார்களே - நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு! என்று சொல்லி வைத்துச் சென்றுள்ளார்களே (பெரியார் கணிப்புப் பொய்த்துப் போகக் கூடா தல்லவா!) - இப்படிப்பட்ட தமிழினத்துக்காகத்தான் நாம் பாடுபட வேண்டும் - மனம் தளராத நன்றியை எதிர்பாராதே என்று எச்சரித்துள்ளார்களே, பாடம் சொல்லிக் கொடுத்துள்ளார்களே அதை எண்ணித் தான் ஆறுதல் பட வேண்டியுள்ளது.
திராவிடர் கழகத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று சொல்லுவது இருக்கட்டும். எந்த அடிப்படையில் எழுதுகிறார்? ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்று பொத்தாம் பொது பேச்சா? எனக்குத் தெரியாதா என்ன என்கிற ஆணவச் செருக்கா? அல்லது மண்ணை வாரித்தூற்ற வேண்டும் என்கிற அற்பத்தனமா?
திமுக தலைவர் கலைஞர் அவர்களையோ, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றியோ விமர்சிக்க வந்தபோது எதற்காகத் திராவிடர் கழகத்தின் மீது தினவெடுக்கும் வெட்டித்தனமான உரசல்?
கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு கல்லை எடுத்து வீசும் வெறித்தனத்தில், அவர்களோடு அனுசரணையாக இருப்பவர்களையும் விழுந்து கடிக்க வேண்டும் என்ற வெறித்தனம்தான் இதற்குக் காரணமா?
என்பேனா முனை எப்படிப்பட்டது தெரியுமா? கண்ணில்பட்டவர்களையெல்லாம் குதறும் - ஆமாம் நான் அவ்வளவு பெரிய விமர்சனக் க(ல்)ர்த்தா என்ற நினைப்பா?
சரி, பெரியார் சேர்த்து வைத்த சொத்தை பாதுகாப்பதாகவே இருக்கட்டும். அது என்ன குற்றச் செயலா? அது என்ன புதையலைக்காக்கும் பூதம்? டிரஸ்டியின் கடமையை செய்தால் அது இந்த மேதாவியின் கணக்கில் தவறு போலும்?
பூதம், பிசாசு, ஆவி போன்ற மூடநம்பிக்கைச் சகதிகளில் விழுந்து புரள்பவர்களிடத்தில் வேறு எந்த விதப் பகுத்தறிவுச் சிந்தனையை எதிர்பார்க்க முடியும்?
பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் வெகு மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து விழுந்ததாமே...
ஓ, திராவிடர் கழகத்தின் அன்றாடப் பணிகளை அணு அணுவாக அலசி ஆய்வு செய்து அந்த ஒட்டு மொத்தமான ஆய்வின் அடிப்படையில் கணிப்புத் தராசுத் தட்டில் எடைபோட்டுத் துல்லியமாகச் சொல்லுகிறாரோ!
திராவிடர் கழகத்தின் பணியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் அந்த இயக்கத்தின் ஏடுகளைப் படிக்க வேண்டும்.
தினமலரையும், தினமணியையும், இந்துவை யும் படித்துப் பார்த்துத் திராவிடர் கழகத்தின் பணிகளை மக்கள் உறவுகளை அறிந்து கொள்ள ஆசைப்படலாமா?
பெரியார் மறைவுக்குத் தலையங்கம் எழுதாத ஒரே ஏடு இந்து. அதில் பெரியார் இயக்கச் செய்தி களை சலித்துப் பார்க்க முடியுமா? பாலக்காட்டு மணி அய்யர் மறைவு என்றால் முதல் பக்கத்தில் இடம் பெறும் இந்துவில். ஆதித்தனாரும், அன்னை மணியம்மையாரும், புரட்சிக் கவிஞரும் OBITUARY பகுதியில் தள்ளப் பட்டு விடுவார்களே தெரியாதா மணியனாருக்கு?
ஊடகங்கள் எல்லாம் யார் கையில் இருக்கின்றன? தமிழன் கையில் ஊடகங்கள் இல்லவே இல்லையா என்று கூடக் கேட்கலாம். அந்தத் தமிழன்களோ தமிழருவி மணியன்கள் போல் இருக்கின்றனரே என்ன செய்வது!
அதிகம் வேண்டாம்; ஒரே ஒரு மாதம் விடுதலையைத் தொடர்ந்து படிக்கட்டும் தோழர் மணியன் - அதற்குப்பின் அவ்வாறு எழுதமுடியுமா என்று எங்களால் சவால்விட்டே கேட்க முடியுமே!
சரி... திராவிடர் கழகம் மற்றும் அதன் தலைவர் பற்றி எழுதுகிறாரே - பெரியாருக்குப்பின் சரிந்து விழுந்தததாக நிதானமாகவே (?) எழுதுகிறாரே - அப்படி இப்பொழுதும் எழுதும் இந்த எழுத்தாளர் 2004ஆம் ஆண்டில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (5.12.2004) எப்படியெல்லாம் முழங்கினார்?
தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்கள், காமராசர், ஜீவா இவர்கள்தான் பொது வாழ்க்கை யில் தமக்கென ஒரு செப்புக் காசுக் கூட சேர்த்துக் கொள்ளாத தன்னலத்தைத் துறந்தவர்கள் என்று சொன்னவரும் இந்தச் சாட்சாத் மணியன்தான்!
இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். அதை ஆசிரியர் வீரமணி அவர்கள் எதிர்த்தார்.
ஆசிரியர் வீரமணி அவர்கள் செய்த பிரச்சாரத் தால் போராட்டத்தால் எம்.ஜி.ஆர். தோல்வி கண்டார். அதன் பிறகு தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தினார்.
இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு வர பெரிதும் போராடியவர் ஆசிரியர் வீரமணி ஆவார்கள்.
இன்றைக்கு தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை ஏற்காதவர்களே இல்லை. அவருடைய அடிச்சுட்டைப் பின்பற்றி செயலாற்றி வரும் 72ஆம் ஆண்டு காணும் நம் ஆசிரியர் அவர்களை உளமாறப் பாராட்டுகிறோம் - என்று பேசியவர் நமது அறிவு ஜீவி மணியன்தான்.
தந்தை பெரியார் மறைந்த 31 ஆண்டுகளுக்குப் பிறகு - தந்தை பெரியார் பணிகளை - தந்தை பெரியார் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஆசிரியர் வீரமணி செயலாற்றி வருவதாக நற்சான்றுப் பத்திரம் வழங்கியவர்தான் நமது அன்புக்குரிய தமிழருவி மணியன் அவர்கள்.
பெரியார் மறைந்த 31 ஆண்டுகள் வரை ஆசிரியர் வீரமணி மிகச் சரியாகத்தான் பணியாற்றினார் - மக்கள் தொடர்போடுதானிருந்தார் - அதற்குப்பிறகு தான் இந்த எட்டு ஆண்டுகளாகத்தான் சரியாகப் பணியாற்றவில்லை, சரிந்து விழுந்து விட்டார் என்று சொல்லப் போகிறாரா?
அந்த 69 விழுக்காட்டுக்கு ஆபத்து வரவில் லையா? 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீட்டின் அளவு விஞ்சக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியதுண்டே!
அந்த நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டம் 31(சி) பிரிவின்கீழ் மாநில அரசே சட்டம் இயற்றி, அதன் பிறகு நாடாளுமன்றத்தில் ஒப்புதலும் பெற்று - ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு விட்டால் நீதிமன்றம் குறுக்கிட முடியாது என்ற கருத்தைக் கூறியதோடு அல்லாமல் அதற்கான மாதிரி மசோதாவையும் தயாரித்துக் கொடுத்தவர் யார் திருவாளர் மணியனார் அவர்களே!
ஆசிரியர் அவர்கள் வழிகாட்டியபடியே எல்லாம் நடந்து, 76ஆவது சட்டத்திருத்தமும் செய்யப் பட்டதே! இந்தியாவிலேயே இடஒதுக்கீடு என்பது சட்டரீதியாக (By ACT) ஆக்கப்பட்டு இருக்கிறதே தமிழ்நாட்டில்தான்.
இந்த இடத்தில் தமிழருவியாரின் அறிவு நாணயத்தினைக் கொஞ்சம் இடித்துக்காட்டியே தீரவேண்டும்.
ஜூனியர் விகடன் இதழில் (9.5.2010 பக்கம் 18) அவர் எழுதி வந்த தொடரில் (31ஆவது) ஒதுக்கீடு பற்றி அதன் வரலாற்றை எழுதினார். ஆசிரியர் அவர் களின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மிகப்பெரும் செயற்கரிய பணியை - செயலை அப்படியே இருட்டடிப்புச் செய்துவிட்டாரே! (அறிவு நாணயம் என்பது இதுதானோ! இப்படிப்பட்ட வர்கள்தான் அக்மார்க் முத்திரை விமர்சகர்களோ!)
மண்டல்குழுப் பரிந்துரைகளின்படி இன்றைக்கு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறதே - அதற்கு யார் காரணம்? எந்தத் தலைவர். அதற்காக யார் முழு மூச்சாகப் பாடுபட்டார்கள்? போராடினார்கள்?
42 மாநாடுகளை அதற்காக நடத்தியது திராவிடர் கழகம்தானே! 16 போராட்டங்கள் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடத்தப்படவில்லையா?
கருஞ்சட்டைத் தோழர்கள் டில்லி சிறை வரை சென்று வந்திருக்கிறார்களே!
உண்மைகள், சாதனைகள் எல்லாம் குலை குலையாகக் குலுங்கும் நிலையில், வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று பொறுப்பு இல்லாமல் புளுகலாமா?
அடுத்தவர்களைப் பற்றி எழுதுமுன் முதலில் அவரவர் முகத்தைக் கண்ணாடியில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது பார்த்துக் கொள்ளவேண்டாமா?
இன்னொரு முக்கிய குறிப்பு உண்டு.
22.11.2006 நாளிட்டு நமது அன்புக்குரிய தமிழருவி மணியன் அவர்கள் நமக்கு எழுதிய கடிதமாகும். அது ஒன்றும் தனிப்பட்ட கடிதமல்ல இயக்கத் தொடர்புடைய ஒன்றே!
பெறுநர்
திரு.கலி.பூங்குன்றன் அவர்கள்
பொதுச் செயலாளர்
திராவிடர் கழகம்
அன்பிற்கினியவருக்கு...
வணக்கம். வளர்க நலம். பெரியார் திராவிடர் கழக மாநாட்டில் பங்கேற்று நான் உரை நிகழ்த்தியபோது, தந்தை பெரியார் வளர்த்தெடுத்த தாய்க்கழகமாகிய திராவிடர் கழகத்தைத் தேவையின்றி விமர்சித்த தாக நண்பர் கோபண்ணாவிடம் தாங்கள் சொல்லி வருந்தியதாக அறிந்தேன். ............................ என்று தொடங்கி எழுதப்பட்ட கடிதத்தின் முக்கியமான பகுதி இதோ:
பணபலமின்றி வீதியில் நின்றாலும் பெரியாரின் பெயர் சொல்லும் உங்கள் அனைவருக்கும் அந்த ஈரோட்டுப் பகுத்தறிவுப் பகலவன் தந்த இலட் சியங்களே மிகப்பெரிய பலமாக என்றும் இருக்கும் என்றுதான் நான் அந்த மேடையில் பேசினேன்.
அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. பேராசிரியர் வீரமணி அவர்களுடைய பேச்சையும், எழுத்தையும் கடந்த நாற்பதாண்டுகளாகக் கேட்டும், படித்தும் பயன்பெற்ற தமிழர்களுள் நானும் ஒருவன் திராவிட இயக்க வரலாற்றில் அவருடைய பங்களிப்பை முற்றாக நானறிவேன் என்று எழுதினாரா இல்லையா!
இது எழுதியது 2006 நவம்பர் 22இல்;
ஆக பெரியார் மறைந்து 33 ஆண்டுகள் வரை கூட திராவிடர் கழகத் தலைவர் சிறப்பாகவே பணிபுரிந் திருக்கிறார். திராவிடர் இயக்க வரலாற்றில் ஆசிரியர் தாக்கம் இருந்ததை மிக நன்றாகவே அறிந்திருக் கிறார் திருவாளர் மணியன். அவர் கணக்குப்படிப் பார்த்தால் கடந்த ஆறு ஆண்டுகளில் தான் ஆசிரியர் சரிந்து விழுந்துவிட்டார் - அப்படித்தானே!
ஆனால், குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரையில் பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் வெகு மக்களிடமிருந்து சரிந்து விழுந்து விட்டதாக எழுதி இருப்பது எப்படி?
ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒன்பது வயதில் மேடை ஏறி 80 ஆண்டைக் கடக்கும் இதுவரை ஒரே இயக்கம், ஒரே கொள்கை, ஒரே தலைவர், 40 முறை சிறைவாசம் - கைது - என்கிற நேரிய பாட்டையில் அவர் ஏற்ற கொள்கைகளை ஏற்காத எதிரிகள் கூட அவர் நாணயத்தை, கொள்கை உறுதியை பழுதாகச் சொன்னதில்லை.
இன்னும் சொல்லப்போனால் பழனியில் பார்ப்பனர் கள் அவரைப் போல் உருவம் செய்து பாடை கட்டித் தூக்கும் அளவுக்குப் பார்ப்பனர் அல்லாதாருக்குத் தொண்டு செய்துள்ளார்.
தமிழருவி எங்கெங்கெல்லாம் பாய்ந்து இப் பொழுது ஒரு தேக்கநிலையை அடைந்து கொசுக்கள் உற்பத்தியாகும் அளவுக்கு ஆகிவிட்டது. அருவி கூவமாகிவிடக் கூடாது!
திருவாளர் ராமகிருஷ்ண ஹெக்டே ஆரம்பித்த கட்சி வரை ஓடிச் சென்று மூச்சுமுட்டி வந்தாகி விட்டது. இந்த வயதுக்குள் ஏ, அப்பா! இப்படி ஒரு சாதனையா? கேட்பவர்கள் மூக்கில் வைத்த விரலை எடுக்கவே மாட்டார்கள்.
யார் யாரையோ பேனாவால் குத்திப் பார்த்திருக் கலாம். கருஞ்சட்டைக்காரர்களிடம் வேண்டாம் இந்த விஷப் பரிட்சை!
பெரியாரைப் புரிந்தவரோ
துன்பநீக்கமும் இன்ப ஆக்கமும்தான் தீபாவளியாம்!
பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான் என்று சொல்லும் கதைகளை எல்லாம் நம்பக் கூடியவர் இவர் என்று இதன்மூலம் தெரியவில்லையா!
தீபாவளியைப் பற்றி தந்தை பெரியாரின் கருத்தென்ன அறிவாரா மணியனார்? இவர் எல்லாம் அறிவுஜீவிகள் என்று சொல்வாரும் உளர்.
கலைஞரைக் கண்டு வியந்தவர்தான்!
கேள்வி: முதல்வர் கலைஞரிடம் நீங்கள் மிகவும் வியப்பது எது?
தமிழருவி மணியன் பதில்: அவருடைய அபூர்வமான மூளையின் ஆற்றல்; இதயத்தின் இளமை; பேனாவின் வலிமை; பேச்சின் வேகம்; உழைக்கும் தாகம்; அரசியல் ஆளுமை; தீராத தமிழ்க்காதல்; அறிவை ஆராதிக்கும் பண்பு; வாழ்க்கை முழுவதும் வெற்றிகரமாக அவர் நடத்தும் எதிர்நீச்சல் கலைஞரிடம் வியப்பதற்கு ஒன்றா? இரண்டா? (ராணி - 13.7.2008)
இப்படி தளுக்காகப் பேசியவர் இன்று எப்படிப் பேசுகிறார்?
எப்படிப்பட்ட சிந்தனை!
பாரதியாரையும், விவேகானந்தரையும் உணர்ந்து பாருங்கள் என்பதைத்தான் இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். காரணம், அவர்கள் இருவரும் தன்னம்பிக்கையின் அவசியத்தை உணர்த்தியர்கள் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், தன்மீது நம்பிக்கை இல்லாதவன் நாத்திகன் என்று முழங்கினார் விவேகானந்தர். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில்தான் லட்சியம் இருக்கும். லட்சியம் - இருக்கும்போது அங்கே வளர்ச்சி நிச்சயமாக இருக்கும்.
(நம்பு தம்பி நம்மால் முடியும், ஆகஸ்டு 2008)
இப்படி ஒரு பேட்டி இவரது வழிகாட்டிகள் இவர்கள்தான் என்றால் இவரைப்பற்றித் தெரிந்து கொள்ளலாமே!
லெனினைப் பரம மூடன் என்று சொன்னவர் தான் பாரதி. மக்கள் புரட்சியால் வெடித்த ருசியப் புரட்சியை மாகாளி கடைக்கண் காட்டி விட்டால் ஆகா என்று எழுந்ததது பார் யுகப்புரட்சி என்றவர் பாரதி! அடுத்து யார் வழிகாட்டியாம்? தன் மீது நம்பிக்கை இல்லாதவன் நாத்திகனாம். விவேகானந்தர் சொல்லி விட்டாராம்.
உண்மையைச் சொல்லப்போனால் தன்மீது நம்பிக்கை இருப்பதால்தான் நாத்திகன் கடவுளை நம்புவதில்லை. தன்மீது நம்பிக்கை இல்லாதவன்தான். எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நினைக்கிறான். இதனைக் கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்தான் அறிவு ஜீவியோ.
பெரியார் திடலில் பேசினால் பெரியார் கொள்கையை ஏற்காதவர்கள் இல்லை என்பார் (5.12.2004).
இன்னொரு ஏட்டிலே - தன்னம்பிக்கை இல்லா தவன்தான் நாத்திகன் என்று விவேகானந்தர் சொல்கிறார் - அவர்தான் தன் வழி காட்டி என்கிறார் ஏனிந்த முரண்பாடு? குழப்பம்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...