Wednesday, December 19, 2012

நேர்மையான பேட்டியல்ல


தமிழ்நாடு பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான கோவை இராதாகிருஷ்ணன் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
ஜாதிய அமைப்பு - மதவாத அமைப்புகளை அவர் கண்டிப்பதாகவும் கூறினார்.
என்ன காரணத்தாலோ பேட்டி கண்டவர் சில கேள்விகளை அவரிடத்தில் வைக்கத் தவறிவிட்டார்.
இந்து ராஷ்டிரம் அமைக்க இருப்பதாக அவர் களின் கட்சி வெளிப்படையாகக் கூறவில்லையா? மதச் சார்பின்மை பற்றி அக்கட்சியின் கொள்கை என்ன? என்ற வினாக்களைத் தொடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
சிறுபான்மையினர் பற்றிய அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற வினாவை நேரிடை யாகக் கேட்டிருக்க வேண்டாமா?
காதல்பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் தெளிவற்றவையாகவே உள்ளன. பெரும்பாலும் வன்னியர் சங்க நிறுவனர் கருத்தோடு உடன் கட்டை ஏறுவதாகவே இருந்தது.
குறிப்பிட்ட வயதில் காதல் வயப்படுவதுபற்றிக் குறை கூறியும் உள்ளார். குறிப்பிட்ட வயதில் வருவதுதான் காதல். இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் கருத்து போல கூறுவது நல்ல நகைச்சுவையே.
பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் காதல் திருமணங்கள் நடக்க வேண்டும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது.
ஜாதிய சமூக அமைப்பில் பெற்றோர்கள் அதனைக் கடந்து வந்து பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று பெரும்பாலும் எதிர்பார்க்க முடியுமா?
யதார்த்தமான உண்மைகளை மறந்து பேசுவது - உள்ளுக்குள் இந்தப் பிரச்சினையில் அவர்களுக் குள் இருக்கிற குரோத உணர்வைத்தான் வெளிப்படுத்தும்.
தருமபுரியில் நடைபெற்ற காதல் திருமணம் என்பது இருபால் இளைஞர்களும் ஒருவரை ஒருவர் விரும்பி ஏற்றுக் கொண்ட திருமணம் ஆகும். நீதிமன்றத்தில் கேட்கப்பட்டபோதுகூட அந்தப் பெண் உறுதியாக காதலனை ஏற்றுக் கொண் டதைக் கணக்கில் கொள்ள வேண்டாமா?
திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து மணமகளின் தந்தையார் தற்கொலை செய்து கொண்டது - பல்வேறு அய்ய வினாக்களை எழுப்பியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மணமகளின் தந்தையின் உடலை, மணமகன் வீட்டுக்குமுன் கொண்டு வந்து போட்டு வெறி உணர்ச்சியைத் தூண்டியது எந்த நோக்கத்தில் என்பதை எளிதிற் புரிந்துகொள்ளலாம்.
இன்னொன்றையும் இந்த இடத்தில் குறிப் பிட்டே தீர வேண்டும். நாமக்கல் வட்டாரத்தில் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த சில பிரமுகர்கள் கூறிவரும் கருத்தின் எதிரொலியையும், கோவை இராதாகிருஷ்ணன்  அவர்களின் குரலில் கேட்க முடிந்தது.
வன்முறையில் பி.ஜே.பி.க்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னது - அவரது பேட்டியிலேயே உச்சகட்டமான நகைச்சுவை!
1992 டிசம்பர் 6இல் அயோத்தியில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை இடித்த வர்கள் யார்?
பிஜேபியின் முக்கிய பெருந்தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர் களின் வழிகாட்டுதலில் அந்த வன்முறை அரங்கேற்றப்படவில்லையா?
அவர்கள்மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் பிரிவுகள் (இபிகோ) எத்தகையவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதிபதி லிபரான் குழுவின் விசாரணை ஆணை யம் வாஜ்பேயி உட்பட 68 பேர்களைக் கொண்ட குற்றவாளிகள் பட்டியலை வெளியிட்டுள்ளதே.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடை பெற்றுள்ள முக்கியமான - பிரபலமான வன்முறை களில் ஆர்.எஸ்.எஸ். சம்பந்தப்பட்டது. அதிகாரப் பூர்வமாகவே அறிவிக்கப்பட்டதே! இதுவரை மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர். எஸ்.எஸ். அல்லவா! அந்த ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்தானே பி.ஜே.பி.யின் பொதுச் செயலாள ராகவும் வர முடியும் என்பது கட்சியின் விதி.
இவற்றை எல்லாம் சாமர்த்தியமாக மூடி மறைக்கிறார் தமிழக முன்னாள் பி.ஜே.பி. தலைவர்.
பேட்டி கண்டவர் இன்னும் அழுத்தமான வினாக்களை எழுப்பி இருக்க வேண்டும்.

Comments 

#1 unmai sudum 2012-12-18 18:14
5 வருடம் இவர்களுடன் மத்ய அரசில்
இருந்து துவிட்டு இப்பொழுது உங்களுக்கு பாப்ரி மஸ்ஜித் ஞாபகம் வந்ததா? ரொம்ப தமாஷ் தான்.( இந்த கருத்து வெளிவருமா விடுதலையில்?)
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...